Saturday, December 27, 2008

வரலாற்று கேள்வி-பதில்கள்

என்னுடைய சிறு முயற்சிக்கு முதல் ஆதரவுக்கரம் நீட்டி ஆதரித்த அன்பு அண்ணன் ஆதவன் அவர்களுக்கும், அன்பு அண்ணன் நாஞ்சில் பிரதாப் அவர்களுக்கும் முதற்கண் நன்றி கலந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். (கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன் !)

இப்போது கேள்வி பதில்கள்

நான்-ஆதவன்
1. பிருத்திவிராஜ் மற்றும் சம்யுக்தா இவர்கள் காதல் கதையை கேட்டிருந்தாலும் எந்தளவிற்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. அவர்கள் காதல் கதையைப் பற்றி விளக்கவும். அவர்கள் கல்யாணம் செய்திருந்தால் ,அதற்கு பிறகு அவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸியமான சம்பவம் இருந்தாலும் தெரியப்படுத்தவும். (ஹி ஹி இது முதல் கேள்வியா, அதான் கொஞ்சம் ரொமாண்டிக்கா இருக்கட்டுமேன்னு :-)

ரொமான்டிக்காவே ஸ்டார்ட் பண்ணுவோம் சார். இவர்கள் காதல் கதை உண்மைதான். பெரும்பாலும் காணாமலே காதல் தான். ஆனால் வரைபடம் பார்த்து காதல். பிறகு களவுவழி காதல் (திருட்டுத்தனமாக சந்திப்பது). இது எப்படியோ சம்யுக்தாவின் தந்தைக்குத் தெரிந்து போய், சுயம்வரம் வைத்தவர் பிரிதிவிராஜுக்கு மட்டும் அழைப்பு அனுப்பவில்லை. ஆனால் அவனைப் போல் சிலை ஒன்றை மண்டபத்தில் வைத்துவிடுகிறான். சிலைக்கு மாலையிடச் சென்ற சம்யுக்தா சிலைக்குப் பின் நின்ற பிரிதிவிராஜுக்கு மாலையிடுகிறாள். அவன் அப்படியே அவளைக் கவர்ந்து சென்றுவிடுகிறான். இவ்வாறு கூறுகிறது 'ப்ரிதிவிராஜ் ரஸோ' என்ற பிரிதிவிராஜன் சரித்திரம்.

இவனது அவைப் புலவனும் நெருங்கிய நண்பனுமான சந்த் பர்தாய் என்பவன்தான்'ப்ரித்விராஜ் ரஸோ' என்ற இலக்கியத்தைப் படைத்தவன். இதை நம்மூர் கலிங்கத்துப் பரணி போன்று எடுத்துக் கொள்ளலாம். சம்யுக்தாவின் தந்தை ஜெய்சந்த். ஜெய்சந்தை டில்லிக்கு அரசனாக்காமல் பிரிதிவிராஜை அரசனாக்கியதில் ஜெய்சந்துக்கு முதலிலேயே ஏகப்பட்ட கடுப்பு. இப்போது மகளைக் கவர்ந்துவிட்டதில் அது இரட்டிப்பாகிவிட்டது.

வெறும் 24 வயது வரையே வாழ்ந்து மறைந்த காவியத் தலைவன் ப்ரிதிவிராஜ் சவுகான் என்னும் ப்ரிதிவிராஜ். ராஜ்புதன அரசர்களிலேயே இவனும் ராணா ப்ரதாப் சிங்கும் மிகப் பிரபலமானவர்கள். ப்ரிதிவிராஜ் டில்லியின் கடைசி வெற்றிகரமான ஹிந்து அரசன் என்று சொல்லலாம். இவனது தலை நகரம் டில்லி மற்றும் அஜ்மீர்.

பிரிதிவிராஜ் டில்லியை ஆண்ட போது பலப்பல தொல்லைகள் இருந்து வந்திருக்கின்றன. போரிடவே நேரம் சரியாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. திருமணத்திற்குப் பின் காதல் என்னவாயிற்று என்பதற்கான குறிப்புகள் குறைவே:((



2. காஷ்மீர் மக்களின் வரலாறு. முக்கியமாக எப்போது இருந்து அங்கு முஸ்ஸீம் இனத்தவர் வாழ்க்கின்றனர். அதற்கு முன் இருந்த மக்களை ஆண்டது யார். காஷ்மீர் பண்டித்துக்கள் இப்போது என்ன செய்கிறார்கள் என்பதையும் உங்களுக்கு தெரிந்தவற்றை விளக்கவும். (இந்த கேள்வி உண்மையில் எனக்கு காஷ்மீர் வரலாறு தெரியாத்தால் கேட்கப்பட்டது. தற்போதைய காசுமீர் நிலவரம் எனக்கு தெரியும் ஆனால் அதன் வரலாறு தெரியாது, பாடபுத்தகங்களில் படித்ததாகவும் ஞாபகம் இல்லை )

காஷ்மீர் பற்றிய முதல் குறிப்பு கல்ஹணர் என்பவர் எழுதிய 'ராஜதரங்கிணி' என்னும் சமஸ்கிருத வரலாற்று நூலில் கிடைக்கிறது. மவுரிய வம்சத்து அசோகர் ஆண்டபகுதியாக இருந்தது பின்னர் குஷாண வம்சத்திற்கு மாறியது. கனிஷ்கர் மிகப்ரபலமானவர். கி.பி.12ம் நூற்றாண்டுவரை தொடர்ந்த ஹிந்து அரசுகள் மற்ற இந்திய அரசுகளைப் போல் வீழ்ந்துவிட்டன.

பதினெட்டாம் நூற்றாண்டு வரை தொடர்ந்த முஸ்லீம் அரசுகள் பெரும்பாலும் ஆஃப்கன், துருக்கிய, முகலாய அரசுகள்தான். மக்கள் முஸ்லீம்களாக மாறினர். பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தப் பகுதி சீக்கியர் வசமானது. லாஹூரிலிருந்து மஹாராஜா ரஞ்சித் சிங் இந்தப் பகுதியைக் கைப்பற்றினார். பிறகு ஆங்கிலேயர்களுக்கும் சீக்கியர்களுக்கும் நடந்த போரில் இது ஆங்கிலேயர் வசமாகிவிட குலாப் சிங் என்பவர் ராவி நதிக்கு மேற்கிலுள்ள பகுதிகளையும் சிந்து நதிக்குக் கிழக்கிலுள்ள பகுதிகளையும் 1847ல் ரூ.75 லட்சத்திற்கு அவர்களிடமிருந்து வாங்கினார். பிறகு இவரது மகன் ரன்வீர் சிங் கில்கிட், ஹுன்ஸா, நகர் முதலிய பகுதிகளை இணைத்தார். இப்படியாக லடாக்கில் பௌத்தர்கள், காஷ்மீரில் முஸ்லீம்கள், ஜம்முவில் ஹிந்துக்கள் என காக்டெயில் நாடாக விளங்கியது காஷ்மீர். 1857க்குப் பிறகு ப்ரின்ஸ்லி ஸ்டேட் ஆக மாறியது. மொத்தத்தில் மக்கள் பெரும்பாலும் முஸ்லீம்கள். அந்தந்தப் பகுதியில் மற்றவர்கள் மெஜாரிடி. காஷ்மீரில் பண்டிட்டுகள் இருந்திருந்தாலும் அவர்கள் மைனாரிடிதான்.

இப்போது பண்டிட்டுகள் பெரும்பாலும் ஜம்முவிலும், டில்லியிலும் வாழ்வதாகத் தெரிகிறது. இதைப் பற்றி பல்வேறு கருத்துகள் இருந்தாலும் உள் நாட்டில் புலம்பெயர்ந்தோர் என்பதை மறுக்க முடியாது. 1989க்குப் பிறகு கடந்த சில வருடங்களாக காஷ்மீரிலுள்ள சரஸ்வதி கோவிலுக்கு யாத்திரை சென்று வருகிறார்கள். மற்றபடி பண்டிட்டுகளுக்கும் முஸ்லீம்களுக்கும் 'சர் நேம்' பெரும்பாலும் ஒன்றாக இருக்கும்.

தற்போதைய காஷ்மீர் நிலவரம் பற்றியும் இதன் பின்புலம் பற்றியும் ஏதும் குறிப்பிடவில்லை. தேவையெனில் அதைப் பற்றி தனிப் பதிவாகவோ கேள்விபதிலாகவோ போடலாம்.

===

நாஞ்சில் பிரதாப்
3.அக்பருக்கு ஆயிரம் பொண்டாட்டியாம்ல...உண்மையா???எப்படிங்க???


என்னங்க அக்பர் சக்ரவர்த்திய குறைவா மதிப்பிட்டுட்டீங்க!?. பொதுவா பாதுஷாக்கள்லாம் இதுல கணக்கே வச்சிக்கறதில்லையே. அதுவும் அக்பர் இதை ஒரு தந்திரமாகவே கையாண்டவராச்சே. கணக்கு சொல்றவங்க 300லருந்து 5000 வரைக்கும் சொல்றாங்க.

ஜலாலுதீன் அக்பர், மொகலாயப் பேரரசர்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தவர். பல்வேறு கலைகள் தெரிந்தவர். ஒன்றைத் தவிர. அதாவது படிப்பு. எழுதப்படிக்கத் தெரியாதவர்.

ஹிந்துக்களைக் கவர நிறைய ராஜபுதன இளவரசிகளை மணந்தவர். எம்மதமும் சம்மதம் என்று மதத்திற்கு ஒரு முக்கிய அரசியை வைத்திருந்தார். இவையல்லாது போகும் போது வரும்போது பார்ப்பதையெல்லாம் அந்தப்புரத்தில் சேர்ப்பது பாதுஷாவுக்கு பொழுது போக்கு.

ஆகவே கணக்கு கேக்காதீங்க. உங்களுக்கு தோணின ஃபிகர (அதாவது நம்பர்) வச்சுக்கங்க ;-))


இவைதான் இந்த வார கேள்விகள். அடுத்த வார கேள்விகளுக்குக் காத்திருக்கிறேன்.

9 comments:

நசரேயன் said...

நானும் விடை தெரிய ஆவலாய் இருக்கேன்

☀நான் ஆதவன்☀ said...

//என்னுடைய சிறு முயற்சிக்கு முதல் ஆதரவுக்கரம் நீட்டி ஆதரித்த அன்பு அண்ணன் ஆதவன் அவர்களுக்கும்//
என்னது அண்ணனா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஏனுங்கண்ணா இந்த கொலவெறி...என்னோட ப்ரொபைல் பார்த்துட்டு அப்புறமா அண்ணனா தம்பியான்னு முடிவு பண்ணுங்க

//(கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன் !)//

ச்சீ ச்சீ என்னது இது சின்ன புள்ளையாட்டம்.. அழகூடாது..கண்ண துடச்சுக்கோ...ம்ம்ம் இப்ப சிரி பார்க்கலாம்...good :-)

☀நான் ஆதவன்☀ said...

பதில்களுக்கு நன்றி பல்லவன். இன்னும் கேள்விகள் இருக்கின்றன...தொகுத்து பின்பு கேட்கிறேன்

CA Venkatesh Krishnan said...

//
நசரேயன் கூறியது...
நானும் விடை தெரிய ஆவலாய் இருக்கேன்
//

அப்படின்னா ஏதாவது கேளுங்க (வரலாறு சம்பந்தமா!)

CA Venkatesh Krishnan said...

//
நான் ஆதவன் கூறியது...

என்னது அண்ணனா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஏனுங்கண்ணா இந்த கொலவெறி...என்னோட ப்ரொபைல் பார்த்துட்டு அப்புறமா அண்ணனா தம்பியான்னு முடிவு பண்ணுங்க
//

உங்கள விட வயசு கொறஞ்சவங்களுக்கு நீங்க அண்ணன். அப்ப உங்கள அண்ணன்னு கூப்டா தப்பில்லையே
[எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு..:(( ]

//
ச்சீ ச்சீ என்னது இது சின்ன புள்ளையாட்டம்.. அழகூடாது..கண்ண துடச்சுக்கோ...ம்ம்ம் இப்ப சிரி பார்க்கலாம்...good :-)
//

:-))))))))

போதுமா?

CA Venkatesh Krishnan said...

//
நான் ஆதவன் கூறியது...
பதில்களுக்கு நன்றி பல்லவன். இன்னும் கேள்விகள் இருக்கின்றன...தொகுத்து பின்பு கேட்கிறேன்
//

நானும் ஆவலாய் இருக்கேன் !

Anonymous said...

Good initiative. continue

புருனோ Bruno said...

அடுத்த கேள்வி பதிலுக்கான கேள்விகள்

1. பார்த்திபன் கனவு கதைக்கு ஆதாரம் வரலாற்றில் இருக்கிறது ??

2. வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முன்னர் ஆங்கிலேயரை எதிர்த்த மன்னர்கள் பற்றி குறிப்புகள் ஏதாவது இருந்தால் கூறவும்

3. கிரேக்க இஸ்லாமிய படையெடுக்கள் தமிழகம் வரை வராததன் காரணம் என்ன் (என்னென்ன)

4. கிருஷ்ணதேவராயர் காலத்திற்கு பிறகு ஆதிக்கம் செலுத்திய தெலுங்கு அரசர்கள் / நாயக்கர்கள் (கட்டபொம்மன் உட்பட) ஆட்சியில் தமிழ் தப்பி பிழைத்தது எப்படி. அந்த நேரம் வேறு குறுநில தமிழ் மன்னர்கள் இருந்தார்களா

5. சாளுக்கியர்கள், ராஷ்டிரகுடர்களின் மொழி எது

CA Venkatesh Krishnan said...

நல்ல கேள்விகள்.

நன்றி ப்ரூனோ