Wednesday, December 24, 2008

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர்...11

அத்தியாயம் 11 - மதுரை

பாண்டியர்கள் சங்கம் வைத்து தமிழை வளர்த்த மாநகர் மதுரையில் நாம் இருக்கிறோம். கருக்கலிலேயே வந்து விட்டதால் அவ்வளவு தெளிவாகக் காட்சிகள் தெரியவில்லை. சற்று நேரம் பொறுத்தால் விடிந்து விடுகிறது. வைகை சலசலத்தோடும் ஓசை மட்டுமே கேட்கிறது. கருக்கலாதலால் புள்ளினங்களும் உறங்கச் சென்றுவிட்டன. மரங்கள் அசையும் ஓசை கூட இல்லாதது அவையும் ஓய்வெடுக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இவ்வளவிலும் காவற்காரர்களின் நடமாட்டம் இருந்து கொண்டுதான் இருந்தது. இயற்கை ஓய்ந்தாலும் மனிதனின் ஆசை ஓட்டம் ஓயாது என்பது போல் வைகையின் சலசலப்பும், காவற்காரர்களின் ஓசையும் காலைக் கருக்கலின் அந்தகாரத்தை அதிகப் படுத்திக் கொண்டிருந்தன. பெரும்பாலான மாளிகைகளிலும், இல்லங்களிலும் விளக்குகள் அணைக்கப் பட்டிருந்தாலும், ஆங்காங்கே தெரிந்த ஒரு சில விளக்குகளின் வெளிச்சம் இருளை அதிகப்படுத்துவது போலிருந்தது.

அதோ கீழ்வானில் சுக்கிரன் தோன்றிவிட்டான். இனி வானம் சிவத்தால் வெளிச்சம் வந்துவிடும். வானத்தில் விடிவெள்ளி முளைத்து விட்டது. மதுரைக்கு?...

சற்றுத் தூரத்தில் இரண்டு பேர் நடந்து வருகிறார்ப்போல் தெரிகிறது. அவர்கள் அருகில் வர வர ஒருவர் ஆணென்றும் மற்றவர் பெண்ணென்றும் தெளிவாகிறது. ஆம். சந்தேகமே இல்லை. அவர்கள் வீரபாண்டியனும் கயல்விழியும். அட.. மதுரைக்கும் விடிவெள்ளியோ...

====

'கயல் விழி, இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். விடியலுக்குள் மதுரைக்குள் சென்று உன்னை என் மாமனின் இல்லத்தில் சேர்ப்பித்து விடுகிறேன். பிறகு நான் மீண்டும் நேர் வழியில் மதுரைக்கு வர வேண்டும்.'

'அன்பரே, இவ்வளவு தூரம் தங்களுடன் வந்தவள் இப்போது பிரிய வேண்டுமே என்று நினைக்கையில் மிகவும் வேதனையாக இருக்கிறது'

'இரண்டு நாட்கள்தான் சேர்ந்திருந்தார்கள். அதற்குள்ளாகவே அவர்களின் தொடர்பு யுகயுகாந்திரமாய் தொடர்வதாய்ப் பட்டது. இடையே வீரபாண்டியன் நாம் இப்படியே எங்காவது சென்று விடலாமென்றும் அவளை அவன் காப்பாற்றுவதாகவும் தேசமே தேவையில்லை என்றும் உளறினான். அவள் தெளிவாக அவனை மதுரைக்கு அழைத்துவந்தாள். இங்கு அவன் தெளிவு பெற அவளிடத்தில் கலக்கம்.

அவளது வேதனையை அந்த இருட்டிலும் அவனால் பார்க்க முடிந்தது. உணர முடிந்தது. நெகிழ்ச்சியுடன், கரம் பற்றி அவளை அணைத்தான் ஆதரவாக.

'கயல்விழி, என்னை இங்கு அழைத்து வந்ததே நீதான். இப்போது நீ இப்படி சொன்னால் நான் தெளிவாக இருக்க முடியுமா? மிஞ்சிப் போனால் இரண்டு அல்லது மூன்று நாட்கள். நாம் மீண்டும் சந்திக்கப் போகிறோம். ஆகவே கவலையை விடு' என்றான்.

ஒருவழியாக அவளை சமாதானப் படுத்தி அவனது மாமன் விக்ரம பாண்டியன் மாளிகையில் சேர்ப்பித்ததுடன் மற்ற விஷயங்களைப் பற்றி அவள் சொல்வாளென்றும் அவளை அரண்மனைக்குள் எப்படியாவது சேர்த்துவிட வேண்டுமென்றும் மாமனிடம் கூறிவிட்டு வேகமாக மீண்டும் மதுரையை விட்டு வெளியேறினான்.

====

விடியலும் வந்தது. பொழுதும் புலர்ந்தது. புள்ளினங்கள் ஆர்ப்பரித்தன. மரத்திலிருந்து வெளிப்பட்டு மீண்டும் மரத்திற்குத் திரும்பியது உடற்பயிற்சி செய்தனவோ என்று எண்ணுமாறு இருந்தது. மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர் ஆலய ஆலாட்சிமணி, காலைப் பூசைகள் துவங்கியதற்கான அறிகுறியாக ஒலித்தது. மக்களின் ஆரவாரமும் துவங்கியது.

இப்போது மதுரையை நன்றாகப் பார்க்க முடிகிறதே. வைகை ஒரு புறம் மதிலாக அமைந்த மதுரை மாநகர் வெகு தூரத்திற்கு வெகு தூரம் பரவியிருந்தது. தமிழகத்தின் தற்போதைய பேரரசின் தலை நகருக்குரிய அனைத்து லக்ஷணங்களும் பொருந்தியிருந்தது மதுரை நகரில். ஊரைக் கடந்து கோட்டையை அடைவதற்கே அரை நாழிகை பிடித்தது. வழியில் மக்களும், பொதி சுமந்த வாகனங்களும் பல்வேறு திக்குகளிலிருந்து வந்திருந்தன. கோட்டைக்கு வெளியே சந்தையும், பிற வியாபாரத் தலங்களும் இருந்தன. கோட்டையில் முத்தங்காடிகளும், பொற்கொல்லர்களும் இருந்தார்கள்.

ஒவ்வொரு நூறடிக்கும் வீரர்கள் அந்த அதிகாலையிலும் நின்று கொண்டிருந்தனர். மக்களை ப்ரதான வாயிலுக்குள் செல்ல விடாமல் வேறு வழியாகத் திருப்பி விட்டுக் கொண்டிருந்தனர். என்னேரத்திலும் பிடி இறுகும் வகையில் படை நிறுத்தப் பட்டிருந்தது. வேகமாக அரண்மனைக்குச் செல்லவேண்டுமென்ற அவாவில், வீர பாண்டியன் காலையில் கடைப்பிடித்த கவனத்தைத் தவறவிட்டான். நகரின் காவல் நிலையில் ஏற்பட்டிருந்த மாற்றத்தை கவனிக்க வில்லை.

ப்ரதான வாயிலை அடைந்தவுடன் தன் முகத்தில் பாதி மறைத்திருந்த மேலங்கியை நீக்கியபடி நின்றான். நடந்து வந்த அவனைக் கண்டதும் ஆச்சரியப் பட்ட கோட்டைக்காவலர்கள் வேகமாக வாயிலைத் திறக்க முற்பட்டனர். அங்கே ஒரு குதிரையை எடுத்துக் கொண்டு வேகமாக அரண்மனை நோக்கிச் சென்றான்.

அரண்மனையின் கம்பீரம் சொல்லமுடியாததாகவிருந்தது. பல்வேறு அடுக்குகளும் கட்டங்களுமாக அரண்மனை பிரிக்கப் பட்டிருந்தது. நன்கு அறிந்தவர்களே அந்த அரண்மனையில் துணையின்றி உலாவ முடியும். அரண்மனையின் அமைப்பைப் பற்றி விரிவாக பிறகு பார்ப்போம். இப்போது வீர பாண்டியன் நோய்வாய்ப்பட்டிருந்த குலசேகர பாண்டியனின் அறைக்கு விரைந்து சென்றான்.


குலசேகரர் சற்று தெளிவுடனே இருந்தார். மருத்துவர்கள் அந்தக் காலை நேரத்திலும் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். மகனைக் கண்டதும் வியப்பு மேலிட,

'வா வீரா. வருவதாகக் தகவலே இல்லையே. உன் படிப்பு முடிந்ததா?'

வீரபாண்டியனால் தந்தையின் நிலை கண்டு பேசவும் முடியவில்லை. அப்படியே அமர்ந்து விட்டான். சிறிது நேரம் கழித்தே அவர் கேட்டது அவனுக்கு உறைத்தது.

'தந்தையே இது என்ன? தங்கள் உடல் நிலை பற்றி ஒன்றுமே தெரிவிக்கவில்லையே. என்னை ஒதுக்கிவிட்டீர்களா? இல்லை மறந்துவிட்டீர்களா?' என்று ஆவேசமாகவும் துக்கத்துடனும் கேட்டான்.

'வீரா, உன் கோபம் புரிகிறது. ஆனால் அதற்கு இது சமயமல்ல. நீ நேரடியாக இங்கு வந்திருக்கிறாய். என் நிலை ஒன்றும் அவ்வளவு க்ஷீணித்து விடவில்லை. ஆகவே ஸ்னான பானங்களை முடித்துக் கொண்டு இங்கு வா. உன் மாமன் விக்ரமனையும் வரச் சொல். சுந்தரனையும் வரச் சொல்லிவிடுகிறேன்.'

சுந்தரன் பெயரைக் கேட்டதுமே வீரனுக்கு இருப்புக் கொள்ள வில்லை. 'அவன் எதற்கு. அவனை சந்திக்க ....' என்று இழுத்தான்

'வீரா. நான் நோய்வாய்ப்பட்டாலும் சிலவிஷயங்கள் தெரிந்திருக்கக்கூடிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கிறேன். உனக்கும் அவனுக்கும் இருக்கும் பகையில் பாண்டிய நாடு அழிந்து படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். என் தந்தையும் உன் பாட்டனாரும் இந்த் ராஜ்ஜியத்தை ஸ்தாபிப்பதற்கு பட்ட கஷ்டங்கள் வீணாகி விடக்கூடாது. ஆகவே அவற்றை மறந்து விடு. இதை அறிவுரையாக ஏற்காவிட்டால் என் ஆணையாகக் கொள்ளலாம். இனி நீ செல்லலாம்' என்றார்

ஏதோ சொல்ல வாயெடுத்த வீரன், குலசேகரரின் கண்ணசைவைக் கண்டு, தலையசைத்தான் பவ்யமாக. களமும் காலமும் கனிவாக இல்லை என்பதைக் கண்டுகொண்டான் அவர் கண்ணசைவில்.

====

குலசேகரரின் அந்தரங்க அறையில் அவர் படுக்கையருகே மூவர் அமர்ந்திருந்தனர். மருத்துவர்கள் அவரை அமரக்கூடாது என்று திட்டம் செய்து விட்டதால் அவர் படுக்கையிலேயே சாய்ந்த நிலையில் இருக்க வேண்டியதாகிவிட்டது. மற்றவர்கள் சுந்தர பாண்டியனும், வீர பாண்டியனும் அவர்கள் மாமன் விக்ரம பாண்டியனும்தான் என்பதைத் தெரிந்து கொள்ள அதிக நேரம் தேவையில்லை.

அரசரே விவாதத்தைத் தொடங்குதல் மரபு என்பதால் அனைவரும் குலசேகரரின் குறிப்பறிந்து காத்திருந்தனர். ஒருவரை ஒருவர் பார்ப்பதையும் தவிர்த்தனர். இதில் விக்ரம பாண்டியன் மத்திம வயதுடையவனாகக் காணப்பட்டான். பாண்டியர்களில் அரசுரிமையில்லாதோர் சிறு நில மன்னர்களாக இருந்து வந்துள்ளனர். அவ்வாறு தென் தமிழகத்தின் ஒரு பகுதியை விக்ரம பாண்டியன் ஆண்டு வந்தான். குல சேகரர் மற்ற உறவினர்களை விட விக்ரமன் மீதே அதிக நம்பிக்கை வைத்திருந்தார். அவனும் அந்த நம்பிக்கைக்குப் பாத்திரனாகவே நடந்து கொண்டிருந்தான்.

அனைவரையும் ஒரு முறை ஆழமாகப் பார்த்த பின்,' விக்ரமா, வீரா, சுந்தரா. உங்களை இங்கு அழைத்ததன் நோக்கத்தை நான் விளக்க விரும்பவில்லை. அது உங்களுக்குத் தேவையும் இல்லை. இன்றைய நிலையில் பாண்டிய நாடு நசிந்து விடக்கூடாது என்பதுதான் என்னுடைய ஆசை. இது நிறைவேற உங்கள் உதவியை எதிர்ப்பார்ப்பதில் தவறில்லை என்று எண்ணுகிறேன்'

'உதவி என்ற பெரிய வார்த்தைகளெல்லாம் வேண்டாம் அரசே, ஆணையிடுங்கள் நிறைவேற்றக் காத்திருக்கிறோம்.' என்றான் விக்ரமன். மற்றவர்கள் மௌனம் காத்தார்கள்.

'நீ சொல்லிவிட்டாய். இவர்கள் வாயே திறக்கவில்லையே'

அப்போதும் இருவரின் மவுனமும் கலையவில்லை. குலசேகரரிடமிருந்து பெருமூச்சொன்று வெளிவந்தது.

'அரசே, இவர்களை விடுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன். முதலில் நீங்கள் பழைய நிலைக்கு வரவேண்டும் என்பதே எங்கள் ப்ரார்த்தனை. ஆகவே மனதைக் குழப்பிக் கொள்ள வேண்டாம். இன்றுதான் வீர பாண்டியன் வந்திருக்கிறான். உங்கள் முன் விவாதிக்க இருவருமே தயங்குவது தெரிகிறது. இதுவே அவர்களைப் பற்றிய நல்ல அபிப்ராயத்தைக் கொடுக்கிறது. ஆகவே பழமையான பாண்டிய வம்சத்திற்கு எந்தவொரு குறைவும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது என் கடமை' என்று தைரியப் படுத்தினான் விக்ரமன்.

உண்மையிலேயே இருவரின் மனமும் அவ்வாறுதான் இருந்தது. என்ன இருந்தாலும் தந்தை இருக்கும் போதே அரியாசனத்திற்கான போட்டி என்பது இருவராலுமே சகித்துக் கொள்ள முடியவில்லை. சுந்தரனின் மன நிலை மதுரைக்கு வந்து தந்தையை மீண்டும் பார்த்தவுடன் ஓரளவு மாறிவிட்டிருந்தது.

'ஆம் தந்தையே' என்றனர் இருவரும் ஒரே சமயத்தில். இது ஒருவித மகிழ்ச்சியை அளித்தது குலசேகரருக்கு.

(தொடரும்)

12 comments:

Bhuvanesh said...

நல்ல இருந்துச்சு சார்!! இளவழுதி அங்கேயே விட்டுட்டு வந்துடீங்களே? எப்பவும் போல் அடுத்த பாகதுக்கு Waiting !!

நான் ஆதவன் said...

மதுரை வர்ணனை அருமை பல்லவன்.

நான் ஆதவன் said...

அது இப்போது இருக்கும் திருமலைநாயக்கர் அரண்மனை இருந்த இடமா???

நசரேயன் said...

ம்ம்ம்.. நல்லா இருக்கு, அடுத்து

SUREஷ் said...

//'அன்பரே, இவ்வளவு தூரம் தங்களுடன் வந்தவள் இப்போது பிரிய வேண்டுமே என்று நினைக்கையில் மிகவும் வேதனையாக இருக்கிறது' //கொசுத்தொல்லையை ஒழித்தால் மட்டுமே நம் நாயகர்கள் செயல் படுவார்கள்

SUREஷ் said...

//மரத்திலிருந்து வெளிப்பட்டு மீண்டும் மரத்திற்குத் திரும்பியது உடற்பயிற்சி செய்தனவோ என்று எண்ணுமாறு இருந்தது//


.................

வெங்கட்ராமன் said...

நல்லா போகுது கதை, அருமை.

எப்பவும் போல் அடுத்த பாகதுக்கு Waiting !!

இளைய பல்லவன் said...

//
Bhuvanesh கூறியது...
நல்ல இருந்துச்சு சார்!! இளவழுதி அங்கேயே விட்டுட்டு வந்துடீங்களே?
//

நன்றி புவனேஷ்,
அதுக்கு காரணம் இல்லாம இருக்குமா?!!

இளைய பல்லவன் said...

//
நான் ஆதவன் கூறியது...
மதுரை வர்ணனை அருமை பல்லவன்.

அது இப்போது இருக்கும் திருமலைநாயக்கர் அரண்மனை இருந்த இடமா???
//

நன்றி ஆதவன்,

இருக்கலாம்!!. இவை புனைவுகள்தான்.

இளைய பல்லவன் said...

//
நசரேயன் கூறியது...
ம்ம்ம்.. நல்லா இருக்கு, அடுத்து
//

நன்றி நசரேயன்

இளைய பல்லவன் said...

//
SUREஷ் கூறியது...

கொசுத்தொல்லையை ஒழித்தால் மட்டுமே நம் நாயகர்கள் செயல் படுவார்கள்.................
//

சுரேஷ்,

நீங்க பின் நவீனத்துவமா பின்னூட்டமிடறீங்களோன்னு தோணுது. இதுக்கு அருஞ்சொற்பொருள் நீங்கதான் சொல்லணும்:))

இளைய பல்லவன் said...

நன்றி வெங்கட் ராமன்