Saturday, December 27, 2008

கொ(நெ)டுஞ்சாலைகள்

நீங்கள் சென்னையிலிருந்து வடக்கில் ஆந்திரா செல்கிறவரா? வடமேற்கில் பெங்களூரு செல்கிறவரா? தெற்கில் திண்டிவனம் வரை செல்கிறவரா? இவற்றிற்கெல்லாம் ஆம் என்று பதில் சொன்னால் கையைக் கொடுங்கள். நீங்கள்தான் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. தின்டிவனத்திற்குத் தெற்கே பயணப் பட்டவர்கள் சென்ற பிறப்பில் கழுதையைத் துன்புறுத்தியிருக்க வேண்டும். அவ்வளவு பாவத்தையும் சுமந்து கொண்டு கஷ்டப்படுவதைப் போன்ற கொடுமை நமது நெடுஞ்சாலைகளில் பயணிப்பது.

தங்க நாற்கரம் என்கிறார்கள். வடக்கு தெற்கு சிறப்புச்சாலை என்கிறார்கள். தேசிய நெடுஞ்சாலைகளை நான்குவழிப் பாதைகளாக்குகிறோம் என்கிறார்கள். ஆனால் நடப்பதெல்லாம் ஒன்றுதான். அது வாகனங்கள்தான்.

ஆம். வாகனங்கள் நமது நெடுஞ்சாலைகளில் நடக்கின்றன. ஓடவில்லை.

திருச்சி - சென்னை 330 கி.மீ. இதைக் கடக்க பேருந்துகள் எடுத்துக் கொள்ளும் நேரம் சர்வசாதாரணமாக பத்து முதல் பனிரெண்டு மணி நேரங்கள். அதாவது ஒரு மணிக்கு 30 கி.மீக்கும் குறைவான வேகம். இதுவும் அரசு விரைவுப் பேருந்தில்!.

கடந்த வியாழனன்று திருச்சியிலிருந்து தஞ்சை வழியாக வைத்தீஸ்வரன் கோவில் செல்ல நேரிட்டது. வழக்கமாக திருச்சியிலிருந்து கிளம்பினால் 45 நிமிடங்களில் சிற்றுந்தில் தஞ்சையை அடைந்துவிடலாம். ஆனால் அந்தோ பரிதாபம். இந்த முறை சற்றேறக்குறைய 2 மணி நேரங்களாயின. வழியெங்கும் நான்குவழிப்பாதையாக்குகிறோம் என்று சொல்லி 'லிடரல்லி' சாலையைக் குதறி வைத்திருந்தார்கள்.

இதே நிலைதான் மதுரை, திண்டுக்கல், கரூர் சாலைகளுக்கும். சேலம் சாலை இப்போதைக்கு நான்கு வழி அல்ல என்றாலும் அதுவும் குண்டும் குழியுமாகத் தான் இருக்கிறது.

மிகமிக அவலமான நிலையில் இருக்கின்றன தமிழகத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலைகள். ஆனால் தமிழக மாநில நெடுஞ்சாலைகள் பரவாயில்லை. நன்றாக போடப்பட்டுள்ளன. புதுப்புது அரசுப் பேருந்துகள் சிறப்பாக இயங்கும் நிலையில் இந்த மோசமான நெடுஞ்சாலைகளால் விரைவில் பணிமனை சேரும் அபாயம் உள்ளது.

அய்யா நெடுஞ்சாலைத் துறையினரே, நீங்கள் நான்கு வழிப்பாதை அமைப்பதைத் தடுக்கவில்லை. ஆனால் மக்கள் போக்குவரத்திற்கான பாதையை நன்றாகப் பராமரிக்கலாம் அல்லவா? அதற்கு வரி வேறு செலுத்துகிறோமே. பாதை சரியில்லாததால் எவ்வளவு சிக்கல்கள். நட்டங்கள். எரிபொருள் வீணாக்கம். இவையெல்லாம் உங்களுக்குத் தெரியவில்லையா?

என்றுதான் மக்களுக்கு விடிவு காலம் பிறக்குமோ?

எல்லாம் வல்ல இணையத்தின் கடவுளர்களான தென் திருப்பேரை மகர நெடுங்குழைக் காதனையும், பாடிகாட் முனீஸ்வரரையும், மலைக்கோட்டை மாணிக்க வினாயகரையும் வணங்கி வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லை.

6 comments:

இளைய பல்லவன் said...

1

நான் ஆதவன் said...

நான் 2

நான் ஆதவன் said...

வாழ்க்கைன்னா மேடு பள்ளம் இருக்கத்தான் செய்யும். இதுக்கெல்லாம் மனச தளரவிடக்கூடாது

சகாதேவன் said...

தப்பு. சாலைகளில் வாகனங்கள் நடக்கவில்லை. ஊர்கின்றன. முந்தைய வளைந்த நெளிந்த சாலைகளிலேயே நெல்லையிலிருந்து தூத்துக்குடிக்கு 50 நிமிடங்களில் செல்வேன். இப்போ 80 நிமி. ஆகிறது. சாலைகள் அகலமாவது தேவைதான். சாலை விதிகள் தெரிந்து கொள்ளாமல் வண்டி ஓட்ட மட்டும் கற்றுக்கொண்டு 100 கிமீ வேகம் தாண்டி ஒட்டுகிறார்கள். 80 அல்லது 90 கிமீ வேகம்தான் என்று கட்டுப்படுத்தி மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து ஒழுங்கு படுத்தினால்தான் விபத்துக்கள் குறையும். சாலை காண்ட்ராக்டர்களுக்கு சரிவர பணம் தரப்படாததால் வேலை நிற்கிறது. இவை எல்லாம் முடிந்துவிட்டால் பயண நேரம் குறையும். ஆனால் விபத்துகள்?
அரசுக்கு அடுத்த தேர்தல் பற்றித்தான் கவலை.
சகாதேவன்

இளைய பல்லவன் said...

நன்றி இளைய பல்லவன் !! (நானும் கமென்ட் போட்டேனே)


எண்ணிக்கைக்கு நன்றி ஆதவன்.

வாழ்க்கையில மேடு பள்ளம் இருக்கலாம். வாழ்க்கையே மேடு பள்ளமா இருக்கலாமா? (நன்றி: தங்கப் பதக்கம்)

நீங்க ஜாலியா அமீரகத்துல போய் உக்காந்து இருக்கீங்க. இங்க இருக்கற நெலவரத்த சகாதேவன் சொல்லிட்டாரு பாருங்க.

இளைய பல்லவன் said...

//
சகாதேவன் கூறியது...
//

நன்றி சகாதேவன். உங்கள் கருத்து ஒவ்வொன்றையும் வழிமொழிகிறேன்.