Tuesday, December 23, 2008

ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?

தமிழக வரலாற்றில் ஒரு அழியாத கறையை அளித்துச் சென்றுவிட்ட நிகழ்வு ஆதித்த கரிகாலன் கொலை. தமிழக வரலாற்றில் அதற்கு முன் முற்காலச் சோழர்களில் கரிகாலனின் தந்தையான இளஞ்சேட்சென்னியும் கொலை செய்யப்பட்டதாக சங்க காலப் பாடல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஆதித்த கரிகாலன் கொலையைப் போன்ற நிகழ்வாக அது அமையவில்லை. இந்த நிகழ்வு இத்துணை பிரபலமானதற்கு மற்றுமொரு முக்கிய காரணம் கல்கியின் பொன்னியின் செல்வன் என்று கூறலாம்.

இப்போது இந்தக் கொலையைச் செய்தவர் யார் என்பது பற்றிய ஒரு அலசல். நண்பர் சுரேஷ் குந்தவை கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார். சரியான ஆதாரங்கள் இல்லாத நிலையில் பலவித சந்தேகங்கள் எழும்புவது இயல்பே.

நம் பங்கிற்கு, நமக்குத் தெரிந்த வரையில் இதைப் பற்றிய விரிவான அலசல் ஒன்றை ஏற்கனவே செய்துள்ளோம். அது பொன்னியின் செல்வன் யாஹூ க்ரூப்பில் வெளிவந்துள்ளது. அதனடிப்படையில் அமைந்த ஒரு அனலிசிஸ் கீழே தரப்பட்டுள்ளது. இந்த அலசல் கீழ்கண்ட பிரிவுகளாக உள்ளது.

1. நிகழ்வு (The Incident)
2. நிகழ்வு நடந்த காலத்தின் பின்னணி (Backdrop of the Incident)
3. குற்றம் சாட்டப் பட்டோரும் அவர்களது குறிக்கோள்களும் (The Accused and motiffs)
4. குந்தவை கூட்டாளிகள்
5. உத்தம சோழன் கூட்டாளிகள்
6. பாண்டிய ஆபத்துதவிகள்
7. கிடைத்த ஆதாரங்கள் (Evidences available)
8. அனுமானமும் முடிவும் (Inference and Conclusion)
9. மீதமிருக்கும் கேள்விகள் (Unanswered Questions)





1. நிகழ்வு (The Incident)

ஆதித்த கரிகாலன் அதாவது சோழ அரசின் பட்டத்து இளவரசன் மர்மமான முறையில் இறந்ததுதான் நிகழ்வு. அவன் கொலை செய்யப்பட்டானா, தற்கொலையா, இயற்கையான மரணமா? என்ற கேள்விகள் எழுகின்றன. தற்கொலை செய்துகொள்ள வேண்டிய சூழலும், இயற்கையான மரணம் ஏற்படக்கூடிய வயதும் காரணமும் இல்லாத நிலையில் கொலை செய்யப்பட்டான் என்றே முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.



2. நிகழ்வு நடந்த காலத்தின் பின்னணி (Backdrop of the Incident)


சங்க காலத்தில் இருந்த சேர சோழ பாண்டியர்கள் மறைந்த பிறகு களப்பிரர்கள் தலையெடுத்தார்கள். சற்றொப்ப முன்னூறு ஆண்டுகால களப்பிரர் ஆட்சிக்குப் பின் தலையெடுத்தது பாண்டியர்களும் பல்லவர்களும். சோழர்கள் கோழி என்றழைக்கப்படும் உறையூரிலேயே முடங்கியிருந்தனர். பின்னர் விஜயாலய சோழன் காலத்தில் தலையெடுத்தார்களேயொழிய, இந்தக் கொலை நிகழ்ந்த சுந்தர சோழன் காலம் வரை அவர்களால் ஒரு பேரரசை நிறுவ முடியவில்லை. உண்மையில் பேரரசாக மாறத் துவங்கியது உத்தம சோழன் காலத்தில்தான்.

இந்தக் காலகட்டத்தில் வடக்கே ராஷ்டிரகூடர்களின் தொல்லை இருந்து வந்தது. ஆகவேதான் காஞ்சியில் ஆதித்த கரிகாலன் படைவீடமைத்தான். அங்கே ராஷ்டிரகூடர்களைத் தடுத்து நிறுத்த முடிந்ததே ஒழிய அதற்கு வடக்கே அவனால் செல்ல இயலவில்லை. தெற்கே வீர பாண்டியனை அழித்துவிட்டாலும், பாண்டியர்களின் எழுச்சி என்னும் அச்சம் இருந்து வந்தது. பாண்டியர்களுக்கு உதவிய இலங்கை அரசை எதிர்த்துப் போரிட வேண்டியிருந்தது. சேரர்களுடன் கொள்வினை இருந்ததால் அந்த சமயத்தில் நேரடித் தொல்லை இல்லை.

இவ்வாறாக பாண்டிய பல்லவர்கள் இல்லையாயினும் உதயமாகும் ஒரு அரசிற்குத் தேவையான அனைத்துத் தலைவலிகளும் சோழர்களுக்கு இருந்தன. நண்பர்களை விட பகைவர்களே அதிகமிருந்தனர்.

அரச குடும்பத்தை நோக்குங்கால், சுந்தர சோழர் நேரடியாக போர்களில் பங்கேற்கவில்லை. அருள்மொழிவர்மன் இளைஞன். மதுராந்தகனான உத்தமனும் போர்களில் பங்கெடுக்க வில்லை. வீரத்தைக் காட்டி எதிரிகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய ஒரே அரச வாரிசு ஆதித்த கரிகாலன் மட்டுமே. வீர பாண்டியனைக் கொன்றதுடன் ராஷ்டிர கூடர்களைத் தடுத்து நிறுத்தும் தன்மையும் பெற்றிருந்தான். மேலும் யுவராஜனாக பட்டமேற்றுக்கொண்டதால் சுந்தர சோழனுக்குப் பிறகு அவன் ஆட்சியில் எதிரிகள் நிலை மேலும் மோசமாகலாம் என்ற நிலை இருந்தது.


இவைதான் பின்னணி. இந்தப் பின்னணியில் பார்க்கும் போது சோழர்களின் வளர்ச்சியை விரும்பாதவர்களுக்கு முதல் குறி ஆதித்த கரிகாலன் தான் என்பது தெள்ளத் தெளிவாக விளங்கும்.

3. குற்றம் சாட்டப் பட்டோரும் அவர்களது குறிக்கோள்களும் (The Accused and motiffs)

குற்றம் சாட்டப்பட்டோரை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. குந்தவை, அருள்மொழிவர்மன், வந்தியத்தேவன்
2.உத்தம சோழன் மற்றும் சிற்றரசர்கள்
3. பாண்டிய ஆபத்துதவிகள்

ராஷ்டிரகூடர்கள் வலிமையாக இருந்ததால் ஆதித்த கரிகாலனே ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆகவே அவர்கள் விலக்கப் படுகிறார்கள். இப்போது ஒவ்வொருவராகப் பார்ப்போம்.


4. குந்தவை கூட்டாளிகள்

குந்தவை சோழ நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்ற எண்ணத்தில் இருக்கிறாள். தன் சொல் படி நடக்கும் தம்பி அருள்மொழிவர்மனைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறாள். தன் காதலர் வந்தியத்தேவனை உன்னதப் பொறுப்பில் நிறுத்தி ஆட்சி அதிகாரத்தைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறாள். தன்னுடைய தோழியை தன் தம்பிக்கு மணமுடிக்கிறாள். இவற்றால் சோழ தேசத்தின் அரியணையை ஆட்டுவிக்க எண்ணுகிறாள். இவையனைத்தும் பொ.செ.வில் கூறப்பட்டவைகள்.

உண்மையில் நடந்தது என்ன? குந்தவை மிகப் பெரிய செல்வாக்குடன் விளங்கியிருக்கிறாள் என்பது தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டொன்றைப் பார்த்தால் தெரியவரும். கோவில் கட்ட நிதியளித்தவர்கள் பட்டியலைப் பற்றி ராஜராஜன் எழுதியிருக்கும் கல்வெட்டில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது,

'நாம் குடுத்தனவும், நம் அக்கன் குடுத்தனவும்...' என்று ஆரம்பித்து அனைவரது பெயரும் இடம்பெறும். இதிலிருந்து தமக்கு அடுத்தபடியாக தமக்கையின் பெயரைச் செதுக்கியிருக்கிறார் ராஜராஜர். அது கூட தான் அரசர் என்பதால் முதலில் தன் பெயரை எழுதியிருக்கிறார். இல்லையென்றால் முதலில் தமக்கையின் பெயரைத்தான் எழுதியிருப்பார்.

ஆகவே அவள் ராஜராஜன் காலத்தில் மிகப்பிரசித்தி பெற்றிருந்தாள் என்பது உண்மை. ஆனால் தன் தமையனைக் கொலை செய்ய முன் வந்தாளா? தமையனை எதற்காகக் கொலை செய்யவேண்டும்? அவன் வீரத்தில் சிறந்தவன். சோழப் பேரரசை நிறுவ அனைத்து விதத்திலும் தகுதியானவன். தமக்கை சொல் கேளாதவன் என்ற நிலை பொ.செ.வில் எடுக்கப்பட்டதே ஒழிய உண்மை நாமறியோம். வந்தியத் தேவனுக்கும் ஆதித்தனுக்கும் மோதல் ஏற்படக்கூடிய சூழல் இருந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் வந்தியத் தேவன் ஆதித்தன் இருந்த தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தவன். மேலும் அதுவரையிலோ, அதற்குப் பிறகோ சகோதரக் கொலை என்பது தமிழரசர்களின் வரலாற்றில் இல்லாதவொன்றாக இருக்கிறது.

அருள்மொழிவர்மன் இலங்கை சென்றதற்கான ஆதாரங்கள் இல்லை. அது பொ.செ.வில் கூறப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு, அதாவது உத்தம சோழன் ஆட்சிக்காலத்தில் தான் அருள்மொழிவர்மனின் படையெடுப்புகள் நிகழ்ந்துள்ளன. உத்தமன் சந்ததியில்லாமல் இறந்தபிறகே அருள்மொழி ஆட்சிக்கட்டில் ஏறியுள்ளான்.



5. உத்தம சோழன் கூட்டாளிகள்

'தி ஹிஸ்டரி ஆஃப் சவுத் இந்தியா'வில், திரு.கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார், 'Uthama conspired the assasination of Athitha' என்று சொல்கிறார். ஏனெனில் வாரிசுரிமைப் படி அவன் தந்தை கண்டராதித்தனுக்குப் பிறகு முடி சூட வேண்டிய உத்தமன் யுவராஜனாகக் கூட தெரிவு செய்யப் படவில்லை. பொ.செ.வில் சுந்தர சோழன் எவ்வாறு அரியணை ஏறினான் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. கண்டராதித்தன் இறந்துவிட, அவருடைய தம்பி அரிஞ்சயனும் இறந்து விட அவரது மகன் சுந்தர சோழன் அரியணை ஏறுகிறான். ஆனால் பொ.செ.வில் குறிப்பிட்டுள்ளது போல் சுந்தர சோழனும் அவன் சந்ததியருமே அரசாள வேண்டும் என்ற எந்தவொரு திட்டமும் இல்லை. இது கதையை நகர்த்துவதற்காக கல்கி கையாண்ட முறை.

ஆகவே, உத்தமனுக்கு வழமையாகச் சேரவேண்டிய அரசுரிமை அவன் வயதிற்கு வந்த பின்பும் அவனிடம் சேர்க்கப்படாமல் ஆதித்தனை யுவராஜனாக முடிசூட்டியது கண்டிப்பாக கோபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இது நடு நிலையான சிற்றரசர்கள் மத்தியில் கூட சலசலப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.

அதுவரை போரைச் சந்தித்திருக்காத ஒரு நபர். போரில் பல வெற்றிகளைக் குவித்து ராஷ்டிரகூடர்களைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கும் மற்றொரு நபர். எதிரிகள் முழுமையாக முறியடிக்கப்படாத நிலையில், இவ்விருவரில் உரிமைப் போர் என்ற பெயரில் முதல் நபரைத் தேர்ந்தெடுத்தால் எதிரிகளின் தொல்லையை அனுபவிக்கப்போவது உத்தமனல்ல இந்தச் சிற்றரசர்கள்தான்.


6. பாண்டிய ஆபத்துதவிகள்

வீரபாண்டியன் காலத்தில் பாண்டியர்கள் தலையெடுக்க ஆரம்பித்தார்கள். இலங்கை அரசனின் உதவியும் இருந்தது. ஆனால் ஆதித்த கரிகாலனால் வீரபாண்டியன் கொல்லப்பட்டவுடன் பாண்டியத் தலையெடுப்பில் ஒரு தொய்வு ஏற்பட்டது. ஆபத்துதவிகளும், வேளக்காரர்களும் அரச மெய்க்காப்பாளர்கள் என்ற செய்தி உறுதி படுத்தப்பட்டிருக்கிறது. தாங்கள் இருந்தும் தங்கள் தலைவர் மரணமடைந்ததை எந்தவொரு ஆபத்துதவியாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எதிரியே இல்லாத நிலையை விட பலமில்லாத எதிரி என்பவன் உபயோகமானவன். ஆகவே மொத்த சோழகுலத்தை அழிப்பதற்குப் பதில் ஆணிவேராக உருவெடுத்துக் கொண்டிருக்கும் ஆதித்தனை அழித்துவிட்டால் ஆட்டம் கண்டுவிடும் என்பதே ஆபத்துதவிகளின் கணக்கு. அவர்களின் எண்ணத்தில் எவ்விதத்தவறுமில்லை.


7. கிடைத்த ஆதாரங்கள் (Evidences available)

இந்த ஆதித்தன் கொலைவழக்கில் கிடைத்த ஒரே ஒரு ஆதாரம் உடையாளூர் கல்வெட்டுக்கள். இந்தக் கல்வெட்டுகள், ஆதித்தனைக் கொன்ற குற்றத்திற்காக ரவிதாசன் ஆகியோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப் படுவதுடன் அவர்கள் உறவினர்கள் உட்பட அனைவரையும் தேசப்ப்ரஷ்டம் செய்வதாகவும் உத்தரவு உள்ளது.

இது நேர்மையான விசாரணையின் முடிவாக இருக்குமா என்ற கேள்வி எழலாம். ஆனால் சோழ தேசத்தின் நிர்வாகச் சீர்திருத்தங்கள், வழக்கு விசாரணை அமைப்புகள் ஆகியவற்றைக் குறித்த கல்வெட்டுகளை வைத்துப் பார்க்கும் போது நீதி நியாயமான முறையில் வழங்கப் பட்டிருப்பதைக் காணலாம்.


8. அனுமானமும் முடிவும் (Inference and Conclusion)

சகோதரக் கொலை செய்யுமளவிற்குத் தமிழரசகுலத்தில் எந்த நிகழ்வுகளும் இல்லை, அவர்களின் தரம் தாழ்ந்துவிடவில்லை என்ற அடிப்படையில் குந்தவையும் மற்றவர்களும் இந்தக் கொலையில் சம்பந்தப் பட்டிருக்க வாய்ப்பில்லை.

உத்தம சோழனுக்கும், சிற்றரசர்களுக்கும் ஆதித்தனின் மறைவால் ஏற்படும் இழப்பு மிக அதிகம். அப்போதுதான் வளர்ந்து கொண்டிருக்கின்ற ஒரு பேரரசின் கீழ் இருக்க விரும்பும் சிற்றரசர்கள் நல்ல தலைமையையே விரும்புவார்கள். மேலும், ஆதித்தன் இறந்தவுடன் உத்தமன் 'Stop Gap arrangement' முறையில் அரசாண்டிருக்கிறான். ஆகவே உத்தமனுக்கும் இதில் சம்பந்தமிருக்க வாய்ப்பில்லை.

ஆபத்துதவிகளின் நோக்கமும் செயலும் இயல்பானவை மற்றும் காலத்துடன் இயைந்தவை. தன் மன்னனைக் கொன்றவனைக் கொல்வது இயல்பேயன்றி வேறில்லை. ஆகவே ஆபத்துதவிகள் கொன்றிருப்பார்கள் என்பதுடன் அவர்களுக்கு உதவிய சோழதேசத்தினனான ரவிதாசன் மற்றும் கூட்டாளிகளும் தண்டிக்கப் பட்டுள்ளார்கள் என்பது நேரியல் முடிவிற்கு வர ஏதுவாக இருக்கிறது.

எனவே ஆதித்தனைக் கொன்றது பாண்டிய ஆபத்துதவிகள்தான் என்பதை மறுதளிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை.


9. மீதமிருக்கும் கேள்விகள் (Unanswered Questions)

1. உத்தமன் அரியணை ஏறிய பின் சந்ததியின்றி போகக் காரணமென்ன?
2.வந்தியத் தேவனின் 'லோ ப்ரொஃபைல்' ஏன்?
3. குந்தவையின் 'சுப்ரீமசி' ஏன்?
4. ராஜராஜனுக்குப் பிறகு ராஜேந்திரன் தஞ்சையை விட்டு கங்கை கொண்ட சோழபுரம் சென்றது ஏன்?

மேலும் பல கேள்விகளும், உங்கள் கருத்துகளும் வரவேற்கப் படுகின்றன.

63 comments:

☀நான் ஆதவன்☀ said...

நல்ல அலசல் பல்லவன். ஆனால் சந்தேகத்திற்கிடமான பழுவேட்டையரை பற்றி இதில் கூறவில்லை.

//சகோதரக் கொலை செய்யுமளவிற்குத் தமிழரசகுலத்தில் எந்த நிகழ்வுகளும் இல்லை, அவர்களின் தரம் தாழ்ந்துவிடவில்லை என்ற அடிப்படையில் குந்தவையும் மற்றவர்களும் இந்தக் கொலையில் சம்பந்தப் பட்டிருக்க வாய்ப்பில்லை.//

இதையும் இவ்வாறு ஆதாரம் இல்லாமல் ஓரேயடியாக எடுக்க முடியாது. பின்பு ஏன் அருள்மொழிவர்மன் ஆட்சியில் அமரவேண்டும் என்று ஆசைபடவேண்டும்?

பொ.செ.ல் கல்கி வந்தயத்தேவனை கதாநாயகனாகவும், குந்தவையை கதாநாயகியாகவும் சித்தரித்ததால் அவர்களைப் பற்றி ஒரு நல்ல பிம்பத்தையே கதை முழுதும் ஏற்படுத்தியிருக்கிறார் என்பது என் எண்ணம்

CA Venkatesh Krishnan said...

ஆதவன்,
//
ஆனால் சந்தேகத்திற்கிடமான பழுவேட்டையரை பற்றி இதில் கூறவில்லை.
//
உத்தம சோழனின் கூட்டாளிகளாக சிற்றரசர்கள் இருந்திருக்கிறார்கள். பழுவேட்டரையரை சந்தேகிப்பது எல்லாம் கல்கியின் மாயாஜாலம்.

//
இதையும் இவ்வாறு ஆதாரம் இல்லாமல் ஓரேயடியாக எடுக்க முடியாது.
பின்பு ஏன் அருள்மொழிவர்மன் ஆட்சியில் அமரவேண்டும் என்று ஆசைபடவேண்டும்?
//

அருள்மொழிவர்மன் ஆசைப்படவில்லை. உத்தமனுக்குப் பின் அவன் சந்ததியில்லாத காரணத்தால் அருள்மொழி ராஜராஜனாகப் பதவியேற்கிறான். ஆனால் இங்கு உத்தமசோழனுக்கு சந்ததியில்லாமல் போனது ஏன் என்ற கேள்வி இயற்கையாக எழும்.

//
ஒரு நல்ல பிம்பத்தையே கதை முழுதும் ஏற்படுத்தியிருக்கிறார் என்பது என் எண்ணம்

//

நானும் ஒப்புக்கொள்கிறேன். அது தவறாகாது என்பது என் எண்ணம்.

பூங்குழலி said...

நல்ல ஆய்வு.குந்தவையின் மீது சந்தேகம் ஏன் எழ வேண்டும் ?அவர் நடத்தையில் சந்தேகத்திற்கு இடமாக எதுவும் இருப்பதாக தெரியவில்லை .கதையின் படி தன் சுற்றத்தையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டும் என்ற தவிப்பு தான் தெரிகிறது எனக்கு .

KarthigaVasudevan said...

ஆதித்த சோழன் கடம்பூரில் மர்மமான முறையில் கொல்லப் பட்டான் என்பதற்கு கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன,உண்மையில் அங்கே என்ன தான் நிகழ்ந்திருக்கக் கூடும் என்பதை கல்கியைப் போலவே நாமும் ஒரு வகையில் அனுமானம் தான் செய்ய முடியுமே தவிர வலுவான அத்தாட்சிகள் எதுவும் இன்றளவிலும் காணக் கிடைக்கவில்லை.
குந்தவை தன் தமையனைக் கொல்ல வேண்டிய அவஷியமோ...காரணங்களோ அவளிடத்தில் இல்லை.சோழ ராஜ வம்சத்து ஒரே பெண் வாரிசு என்ற முறையில் அவள் பலமான அதிகாரங்களைப் பெற்றிருந்தாலே ஒழிய தானே ஆட்சி செய்ய நினைத்தாள் என்பதற்கு சான்றுகள் இல்லை. அப்படி அவள் நினைத்திருந்தாளானால் தன்னை முழுதாக நம்பும் தன் தம்பியை அவளால் மிக எளிதாக அழித்து விட்டு அரியணையைக் கைப்பற்றி இருக்க முடியும்!
மாறாக சோழர் குலம் நீடூழி நிலைக்கவே விரும்பும் வண்ணம் அவளது செயல்கள் சுட்டிக் காட்டப் படுகின்றன.குந்தவை பிறந்த வீட்டுப் பெருமை பேசும் பெண்ணாகத்தான் தோன்றுகிராலே தவிர எவ்விடத்திலும் சகோதரனைக் கொல்லும் அரக்கியாக தோன்றவில்லை.உதாரணம் வந்தியத் தேவனை மணந்த பின்னும் கூட அவள் தன் பிறந்தகத்தில் தான் இருக்கிறாள் இறுதி வரையிலும் .வந்தியத் தேவன் மட்டுமே மீண்டும் தன் சிற்றரசு அதிகாரம் பெற்று தன் மற்ற மனைவியருடன் அவனது சிற்றரசில் ஆட்சி செய்வதாக வரலாறு காட்டுகிறது.
பாண்டிய ஆபத்துதவிகள் செய்திருக்கலாம் வாய்ப்பிருக்கிறது. இது அப்போதைய காலகட்டத்தில் மிகவும் சகஜமான விஷயமே, தன் மன்னனைக் கொன்றவனைப் பழி வாங்கும் விதமாக இது நிகழ்த்தப் பட்டிருக்கலாம்.சரித்திரத்தில் இத்தகைய செயலுக்குப் பல உதாரணங்கள் உள்ளனவே!
சோழர்களின் அதிகாரத்தின் கீழ் இருந்த சிற்றரசர்களில் சிலர் இதற்க்கு உடந்தையாக இருந்திருக்கலாம் ...கடம்பூர் சிற்றரசர் போல சிலர் பாண்டிய ஆபத்துதவிகளுக்கு உதவி இருக்கலாம்,மேலும் மலையமான் மகளை சுந்தர சோழர் மணந்ததால் மற்ற அரசர்கள் தங்களுக்கு மன்னருடன் இருந்த நெருக்கத்தை விட மலையமானின் அதிகாரம் கூடி விடுமே போதாக் குறையாக அவரது மகள் வயிற்றுப் பேரன் ஆதித்தன் நாளை சக்ரவர்த்தி ஆனால் தங்களுடைய செல்வாக்கு என்ன ஆவது என்றும் திட்டமிட்டு இப்படி செய்திருக்கலாம்!
இவை எல்லாவற்றையும் தாண்டி "சரித்திரம் காட்டும் ஆதித்தன் மிக எளிதில் உணர்வு வயப் படும் கோபம் மிகுந்த இளைஞனாகவே காணப் படுகின்றான்.ஒரு சக்ரவர்த்திக்குத் தேவையான பொறுமையோ ...சிற்றரசர்களை அனுசரித்துச் செல்லும் பாங்கோ அவனிடத்தில் இல்லை என அப்போதுசோழ சாம்ராஜ்ய அதிகாரத்தில் இருந்தவர்கள் கருதி இருக்கலாம்.
இவை எல்லாம் தாண்டி உத்தம சோழன் விவகாரம் வேறு . ஆக ஆதித்தனது கொலை ஒரு சூழ்ச்சி மிக்க அரசியல் கொலையே தவிர வேறு எதுவும் இல்லை.அருண்மொழி வர்மன் இதில் சம்பந்தப் பட்டிருக்க வாய்ப்பு இல்லை எனவே தோன்றுகிறது.
அருண்மொழி ஆதித்தனைக் கொன்றிருந்தால் ஏன் உத்தமனை அரசனாக்கி விட்டு இலங்கைக்கு படை கொண்டு செல்ல வேண்டும்? அவனே ஆட்சி செய்திருக்கலாம் அல்லவா?இதை விட சிறு வயதில் அக்பர் வட இந்திய அரசராகவில்லையா என்ன?தன் பேரில் பழி வருமே என்று அஞ்சி அவன் ஆட்சியை உத்தமனிடம் கொடுத்திருக்கவும் வாய்ப்பு இல்லை .ஏனெனில் இன்றும் கூட ஆதித்தன் கொலையில் ராஜ ராஜனை சந்தேகிப்பவர்கள் அநேகம் பேர் உள்ளனர்.
மக்கள் செல்வாக்கு அவனுக்கே எனும் பட்சத்தில் அவன் உடனே ஆட்சியப் பொறுப்பை ஏற்றிருக்கலாம் .தேவையே இன்றி உத்தமனை அரசனாக்கி நல்ல பேர் வாங்க பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டிய அவஷியம் என்ன ?
ஆக ராஜ ராஜனை இதிலிருந்து விளக்கி விடலாம். ஆனால் வானதியின் பெரியப்பா கொடும்பாளூர் பெரிய வேளார் இதில் சம்பந்தப் பட்டிருக்கக் கூடும்!!
ஆக மொத்தத்தில் சோழ சிற்றரசர்கள் சிலரது உடந்தையுடன் பாண்டிய ஆபத்துதவிகள் சிலரால் அக்கொலை நிகழ்த்தப் பட்டிருக்க வேண்டும் .ரவி தாசன் இக்கொலைக்குப் பின்னரும் கூட அதிகாரத்துடன் வலம் வந்தான் என்பதற்கு பால குமாரனின் "உடையாரில்" சில இடங்கள் உண்டு .

புருனோ Bruno said...

//1. உத்தமன் அரியணை ஏறிய பின் சந்ததியின்றி போகக் காரணமென்ன?//

சந்ததி இருந்திருக்கலாம். ஆனால் ராஜராஜன் அச்சமயம் மக்கள் ஆதரவுடனும், படையினரின் ஆதரவுடனும் இருந்ததால் அவர் முடி சூட்டியிருக்கலாம்.

2.வந்தியத் தேவனின் 'லோ ப்ரொஃபைல்' ஏன்?
இதற்கு விடை கேள்வி 3

3. குந்தவையின் 'சுப்ரீமசி' ஏன்?
இதற்கு விடை கேள்வி 2

4. ராஜராஜனுக்குப் பிறகு ராஜேந்திரன் தஞ்சையை விட்டு கங்கை கொண்ட சோழபுரம் சென்றது ஏன்?
தந்தையின் நிழலில் இருந்தால் தன் பெயர் வரலாற்றில் இடம் பெறாது என்ற பயமாக இருக்கலாம்

அக்பர் - ஆக்ரா கோட்டை
ஷாஜஹான் - டெல்லி செங்கோட்டை

என்று சரித்திரத்தில் பல உதாரணங்கள் இருக்கின்றன

இதில் முக்கிய விஷயம்

அக்பருக்கும் ஜகாங்கீருக்கும் (சலீம்) அவ்வளவு “உறவு” கிடையாது.

ஜகாங்கீருக்கும் ஷாஜகானுக்கும் எட்டாம் பொருத்தம் தான் (உபயம் நூர்ஜகான் !!)

ஆனால் அக்பர் பிரியத்திற்குட்பட்டவர் ஷாஜகான் (அக்பர் ஜகாங்கிரை விட்டு விட்டு ஷாஜகானை வாரிசாக அறிவிக்க முயன்றதாக கூட கூறுவார்கள்)

அப்படி பட்ட் அக்பரின் ஆக்ரா கோட்டையை விட்டு செங்கோட்டைக்கு ஷாஜகான் சென்றது “தனக்கு அடையாளம் வேண்டும்” என்று தான்

அதே போல் கங்கை கொண்ட சோழபுரத்தையும் கூறலாம்

ஆனால் அக்பர் ஷாஜகான் உறவை விட ராஜ ராஜன் - ராஜேந்திரன் உறவு மோசமாகத்தான் இருந்தது !!

புருனோ Bruno said...

//ரவி தாசன் இக்கொலைக்குப் பின்னரும் கூட அதிகாரத்துடன் வலம் வந்தான் என்பதற்கு பால குமாரனின் "உடையாரில்" சில இடங்கள் உண்டு//

உத்தம சோழனின் ஆட்சியில் ரவிதாசன் தண்டிக்கப்பட்டானா அல்லது ராஜ ராஜனின் ஆட்சியிலா :) :)

புருனோ Bruno said...

நீங்கள் சரித்திரத்துடன் மட்டுமே நிறுத்திக்கொண்டதால் நான் சரித்திரம் மட்டுமே எழுதியுள்ளேன்

பிற பதிவுகளில் அடிக்கும் ஜல்லியை இங்கு அடிக்கவில்லை (ஊகங்கள் எதையும் கூற வில்லை)

:) :)

என் பதிவுகளையை மறுமொழிகளையும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்

☀நான் ஆதவன்☀ said...

//இதையும் இவ்வாறு ஆதாரம் இல்லாமல் ஓரேயடியாக எடுக்க முடியாது.
பின்பு ஏன் அருள்மொழிவர்மன் ஆட்சியில் அமரவேண்டும் என்று ஆசைபடவேண்டும்?
//

அருள்மொழிவர்மன் ஆசைப்படவில்லை. உத்தமனுக்குப் பின் அவன் சந்ததியில்லாத காரணத்தால் அருள்மொழி ராஜராஜனாகப் பதவியேற்கிறான். ஆனால் இங்கு உத்தமசோழனுக்கு சந்ததியில்லாமல் போனது ஏன் என்ற கேள்வி இயற்கையாக எழும்.//

பல்லவன் நான் கூறியது "பின்பு ஏன் அருள்மொழிவர்மன் ஆட்சியில் அமரவேண்டும் என்று குந்தவை ஆசைபடவேண்டும்?"

CA Venkatesh Krishnan said...

வாங்க பூங்குழலி,

கருத்துகளுக்கு நன்றி.

குந்தவையை சந்தேகப் படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. சோழ வரலாற்றை நாம் படிக்கும் போதோ எழுதும் போதோ, பொ.செ. முதலில் வருவதை நாம் யாருமே தடுக்க முடியாது.

CA Venkatesh Krishnan said...

வாங்க மிஸஸ்.டவுட்.

உங்கள் விரிவான பதிலுக்கு நன்றி. உங்கள் பதிலைப் பார்க்கும் போது, பெரும்பாலும் பொ.செ.விலிருந்து ரெஃபரென்ஸ் காட்டியிருப்பது தெரிகிறது.

குந்தவை, ராஜராஜன் பேரில் சந்தேகம் வந்தாலும் இது ஆபத்துதவிகளின் செயல் என்பதை மறுக்க முடியாது. குற்றவாளிகளைக் கண்டுபிடித்தது ராஜராஜ சோழன் காலத்தில்தான். எனவே, உத்தமன் காலத்தில் அவர்கள் சுதந்திரமாகத் தான் இருந்தார்கள். இதுவும் உத்தமனை சந்தேகிக்க ஒரு காரணம்.

நன்றிகள் பல.

வெங்கட்ராமன் said...

நல்ல அலசல் பல்லவன்
அருமையான பதிவு

CA Venkatesh Krishnan said...

வாங்க டாக்டர் ப்ரூனோ,

உங்கள் கருத்துகளுக்கு நன்றிகள் பல.

குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டது ராஜராஜன் ஆட்சியில்.


உண்மையில் ராஜேந்திரன் ஆட்சிக்கு வந்தது சற்றேறக்குறைய 50வது வயதில்:). தற்போது தஞ்சை பெரிய கோவிலை நீங்கள் பார்த்தாலும் தூண்கள் முடிவடையாத நிலையில் இருப்பதைக் காணலாம். ராஜராஜன் மறைவிற்குப் பின் உடனடியாக அரசு இயந்திரம் தஞ்சையை நீங்கியது. கங்கை கொண்ட சோழபுரம் தயாராகும் வரையில் சிதம்பரத்திலிருந்து ஆட்சி செய்தார் ராஜேந்திர சோழன். நீங்கள் சொல்வது போல் இது Fatigue cum aversion ஆக இருக்கலாம்.

//
ப்ரூனோ கூறியது...
நீங்கள் சரித்திரத்துடன் மட்டுமே நிறுத்திக்கொண்டதால் நான் சரித்திரம் மட்டுமே எழுதியுள்ளேன்

பிற பதிவுகளில் அடிக்கும் ஜல்லியை இங்கு அடிக்கவில்லை (ஊகங்கள் எதையும் கூற வில்லை)

:) :)
//

மிக்க நன்றி ப்ரூனோ :))

CA Venkatesh Krishnan said...

//
நான் ஆதவன் கூறியது...

பல்லவன் நான் கூறியது "பின்பு ஏன் அருள்மொழிவர்மன் ஆட்சியில் அமரவேண்டும் என்று குந்தவை ஆசைபடவேண்டும்?"
//

ஆதவன், அது கல்கியின் வெர்ஷன்.

சரித்திரத்தில் அது போன்று எங்கும் இல்லை. ஆனால் குந்தவையின் டாமினேஷன் தெள்ளத் தெளிவாக இருக்கிறது.

CA Venkatesh Krishnan said...

//
வெங்கட்ராமன் கூறியது...
நல்ல அலசல் பல்லவன்
அருமையான பதிவு
//


நன்றி வெங்கட்ராமன்

சி தயாளன் said...

நல்ல அலசல்...கெதியா ஒரு முடிவுக்கு வந்தவுடன் தெரிவியுங்கள்
:-)

நசரேயன் said...

நல்ல அலசல், முடிவுக்கு காத்திருக்கிறேன்

CA Venkatesh Krishnan said...

//
'டொன்' லீ கூறியது...
நல்ல அலசல்...கெதியா ஒரு முடிவுக்கு வந்தவுடன் தெரிவியுங்கள்
:-)
//


வருகைக்கு நன்றி டொன்லீ.
ஒரு முடிவுக்கு வரமுடியாமத்தானே இவ்வளவு சர்ச்சையும் விவாதங்களும்.

CA Venkatesh Krishnan said...

//
நசரேயன் கூறியது...
நல்ல அலசல், முடிவுக்கு காத்திருக்கிறேன்
//

இப்போதைய முடிவு ஆபத்துதவிகளின் வேலை என்பதாகும்.

Sathis Kumar said...

சிந்தனையைத் தூண்டிவிடும் நல்லதொரு பதிவு!

பொன்னியின் செல்வன் படிக்கத் தொடங்கியதிலிருந்து என் மனதை மிகவும் கவர்ந்த ஒரு கதாபாத்திரம் ஆதித்த கரிகாலனாகும்.

இருப்பினும், நாவலையும் சரித்திரத்தையும் ஒன்றாகப் பிணைத்துவிடக் கூடாது என்பதில் இளையபல்லவன் மிக கவனமாகவே பதிவை கையாண்டுள்ளார்.

ஆதித்த கரிகாலனுக்கு ஓர் ஆண்மகவு வாரிசாக இருந்ததாக இராஜராஜனின் ஒரு கல்வெட்டு குறிப்பிடுவதாக South Indian Inscription எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார் திரு. நீலகண்ட சாஸ்திரி. கரிகாலக் கண்ணன் என்பது அவன் பெயர்.

மீதமுள்ள கேள்விகளையும் சிந்தனையைத் தூண்டும் ஒரு பதிவாகப் போட்டால் நன்றாக இருக்கும்.

CA Venkatesh Krishnan said...

//
சதீசு குமார் கூறியது...
ஆதித்த கரிகாலனுக்கு ஓர் ஆண்மகவு வாரிசாக இருந்ததாக இராஜராஜனின் ஒரு கல்வெட்டு குறிப்பிடுவதாக South Indian Inscription எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார் திரு. நீலகண்ட சாஸ்திரி. கரிகாலக் கண்ணன் என்பது அவன் பெயர்.
//


தகவலுக்கு மிக்க நன்றி சதீசு குமார்.

இதைப் பற்றி மேலும் விசாரிக்கிறேன்.

KarthigaVasudevan said...

//சதீசு குமார் கூறியது...
ஆதித்த கரிகாலனுக்கு ஓர் ஆண்மகவு வாரிசாக இருந்ததாக இராஜராஜனின் ஒரு கல்வெட்டு குறிப்பிடுவதாக South Indian Inscription எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார் திரு. நீலகண்ட சாஸ்திரி. கரிகாலக் கண்ணன் என்பது அவன் பெயர்.//

இது முற்றிலும் புதிய செய்தியாக இருக்கிறதே? ஆதித்தன் திருமணம் செய்து கொண்டதற்கு சான்றுகள் எதுவும் இதுவரை எங்கும் குறிப்பிடப்பட்டதாகத் தெரியவில்லையே? இந்த வாரிசு ஆதித்தனின் மகன் என்றால் அவனது அன்னை யார்? மேலதிக விளக்கம் கொடுத்தால் சந்தேகம் தீரும் .

SUREஷ்(பழனியிலிருந்து) said...

http://kanavukale.blogspot.com/2008/12/blog-post_301.html

கூறப்பட்டதையும் மனதில் கொள்ளுங்கள்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஒரு விஷ்யம் கவனித்தீர்களா...


மதுராந்தகன் உத்தமன் என்ற பெயரைப் பெருகிறான்.

அருன்மொழி ராஜராஜன் என்ற பெயரைப் பெருகிறான்.


ஏதாவது காரணங்கள் இருக்குமோ

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ராஜராஜன் மறைவிற்குப் பின் உடனடியாக அரசு இயந்திரம் தஞ்சையை நீங்கியது.//


ஆஹா............... நெறயா மேட்டர் வெளிய வருதே...........

புருனோ Bruno said...

//உண்மையில் ராஜேந்திரன் ஆட்சிக்கு வந்தது சற்றேறக்குறைய 50வது வயதில்:).//

ஆனால் அவர் கங்கை கொண்ட சோழபுரம் கோவிலை கட்டியது (கட்ட ஆரம்பித்தது) எப்பொழுது. ராஜராஜன் ஆட்சியில் இருக்கும் போதா அல்லது அதன் பிறகு தானா

// தற்போது தஞ்சை பெரிய கோவிலை நீங்கள் பார்த்தாலும் தூண்கள் முடிவடையாத நிலையில் இருப்பதைக் காணலாம். ராஜராஜன் மறைவிற்குப் பின் உடனடியாக அரசு இயந்திரம் தஞ்சையை நீங்கியது.//

அவர் சிதம்பரம் சென்றது, கடற்கரைக்கு அருகில் இருக்க வேண்டும் (சோழர்களின் கடற்படை அப்பொழுது பிரமாண்டமாய் இருந்தது) என்பதற்காகத்தானே

//கங்கை கொண்ட சோழபுரம் தயாராகும் வரையில் சிதம்பரத்திலிருந்து ஆட்சி செய்தார் ராஜேந்திர சோழன்.//

//நீங்கள் சொல்வது போல் இது Fatigue cum aversion ஆக இருக்கலாம்.//
50 வயது வரை, பேரன் பேத்தி எடுத்த வரை இளவரசர் பட்டத்தில் இருந்தால் கண்டிப்பாக fatigue cum aversion வருவது இயற்கைதானே

Sathis Kumar said...

//மிஸஸ்.டவுட் கூறியது...
இது முற்றிலும் புதிய செய்தியாக இருக்கிறதே? ஆதித்தன் திருமணம் செய்து கொண்டதற்கு சான்றுகள் எதுவும் இதுவரை எங்கும் குறிப்பிடப்பட்டதாகத் தெரியவில்லையே? இந்த வாரிசு ஆதித்தனின் மகன் என்றால் அவனது அன்னை யார்? மேலதிக விளக்கம் கொடுத்தால் சந்தேகம் தீரும் .//

ஆதித்த கரிகாலன் திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டும் என்று சில அநுமானங்களை வைத்து கூற முடியும். ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்படுவதற்கு முன்பே இராஜேந்திரன் (இராஜராஜரின் மகன்) பிறந்து விட்டான். இளையவருக்கு திருமணம் நடந்துவிட்டிருக்கும் பொழுது, நிச்சயம் ஆதித்தருக்கும் திருமணம் நடந்தேறியிருக்க வேண்டும். மேலும் வயதைக் கொண்டு அவர் திருமணமானவர் என ஊகிக்கமுடிகிறது.

இந்த அநுமானத்தை ஊர்ஜிதப்படுத்துவதுதான் இராஜராஜரின் கல்வெட்டுச் செய்தி.

Anonymous said...

குந்தவை-வந்தியத்தேவனுக்கு வாரிசுகள் இருந்தனரா ?

Sridhar Narayanan said...

நீங்கள் பதிவில் குறிப்பிட்டிருக்கும் 5 மற்றும் 6 -ம் காரணங்களை இணைத்தும் குறிப்பிடலாம்.

- உத்தம சோழன் பாண்டிய ஆபத்துதவிகளுடன் சேர்ந்து ஆதித்த கரிகாலனின் மரனத்திற்கு திட்டம் போட்டிருக்கலாம்.

இந்த அடிப்படையில்தான் பாலகுமாரன் உடையாரில் செம்பியன்ம் மாதேவியின் (உத்தம சோழனின் தாயார்) சதித்திட்டம் என்று எழுதியிருக்கிறார்.

//தமிழ் மன்னர்கள் சகோதர யுத்தம் செய்யும் அளவிற்கு//

ஐயா... அரச அதிகாரம் என்பது பெரும் போதையானது. விஜயாலய சோழன் பிற்கால சோழ சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்ததே அநபாய பல்லவனைக் தந்திரமாக கொன்ற துரோகத்தின் மூலம்தானே. பாண்டியரும், சோழரும் என்ன வெவ்வேறு மொழி பேசிக் கொண்டிருர்ந்த அயல்நாட்டவரா என்ன? பொண்ணு கொடுத்து, எடுத்த பரம்பரைகள்தானே. அரச அதிகாரம் என்று வரும்போது சொந்தம் எல்லாம் தூரம்தானே.

கல்கியின் பொன்னியின் செல்வன் நல்லதொரு திரைக்கதை பாணியில் சிலரை புனிதமயமாக்கி விடுகிறது. ஆபத்துதவிகள் கூட வீரர்களாகத்தானே படைக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் சோழகுடும்பத்தின் உதவியோடு (உத்தம சோழ, செம்பியன் மாதேவி) ரவிதாசன் (பாண்டியனின் ஆபத்துதவி) நடத்திய படுகொலை போல்தான் தெரிகிறது.

புருனோ Bruno said...

//ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்படுவதற்கு முன்பே இராஜேந்திரன் (இராஜராஜரின் மகன்) பிறந்து விட்டான். //

புருனோ Bruno said...

//ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்படுவதற்கு முன்பே இராஜேந்திரன் (இராஜராஜரின் மகன்) பிறந்து விட்டான். //

பொ.செல்வன் படி அப்ப்டி இல்லை என்று நினைக்கிறேன்

நிஜமா நல்லவன் said...

பொன்னியின் செல்வன் படிச்சிட்டு நான் ரொம்ப குழம்பி போய் இருந்தேன்....இப்ப இன்னும் குழம்பிட்டேன்...:(

நிஜமா நல்லவன் said...

/ புருனோ Bruno கூறியது...

//ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்படுவதற்கு முன்பே இராஜேந்திரன் (இராஜராஜரின் மகன்) பிறந்து விட்டான். //

பொ.செல்வன் படி அப்ப்டி இல்லை என்று நினைக்கிறேன்/

அப்படி இல்லவே இல்லை...!

நிஜமா நல்லவன் said...

/கல்கியின் பொன்னியின் செல்வன் நல்லதொரு திரைக்கதை பாணியில் சிலரை புனிதமயமாக்கி விடுகிறது. /

இது சரி என்று எண்ணத்தோன்றுகிறது...:)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் இந்த எஸ்.எம்.எஸ். படு வேகமாக பரவி வருகிறது. அப்படி என்ன இருக்கிறது அந்த எஸ்.எம்.எஸ்ஸில் என்கிறீர்களா. வேறு ஒன்றுமில்லை. கஜினி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியைத்தான் அதில் புட்டுப் புட்டு வைத்துள்ளனர்.

அந்த எஸ்.எம்.எஸ்ஸில், சிலர் ஆமிர்கானின் காதலியைக் கொன்று விடுகின்றனர். பின்னர் ஆமிர் தனது நினைவை இழக்கிறார். அந்த நிலையில், கொலையாளி யார் என்பதை அறிய முயலுகிறார். ஆனால் கொலையாளியே ஆமிர்தான். இப்போது கஜினியைப் பார்க்க தயாராகுங்கள் என்று போகிறது அந்த எஸ்.எம்.எஸ்.
//





kalki the great

Anonymous said...

விடுதலைப்புலிகள் கொன்றிருப்பார்களோ?

இப்ப அதப்பேசுறதுதான் பேமசு!!!!
:)

CA Venkatesh Krishnan said...

இங்கு வந்த பின்னூட்டங்களின் அடிப்படையில் கீழ்கண்ட கேள்விகள் எழுகின்றன.

1. ஆதித்த கரிகாலனுக்கு வாரிசு இருப்பதாகக் கூறப்படுவது உண்மையா? (மிஸஸ். டவுட்)

2. மதுராந்தகனும், அருன்மொழிவர்மனும் முறையே, உத்தம சோழன் என்றும், ராஜராஜன் என்றும் பெயரை மாற்றிக் கொண்டது ஏன்? (சுரேஷ்)

3. ராஜேந்திர சோழன் எப்போது கங்கை கொண்ட சோழபுரத்தைக் கட்டினான். சிதம்பரத்திற்குச் சென்றது ஏன்? (டாக்டர் ப்ரூனோ)

4. குந்தவை-வந்தியத் தேவனுக்கு வாரிசுகள் இருந்தனரா (சின்ன அம்மிணி)

இவற்றுக்கான பதிலைத் தேடுவோம். இவைகளை வரலாற்றுக் கேள்வி பதிலில் சேர்த்து விடுகிறேன். அனைவருக்கும் நன்றி, மிஸஸ்.டவுட், சதீசுகுமார், சுரேஷ், டாக்டர்.ப்ரூனோ, சின்ன அம்மிணி.

CA Venkatesh Krishnan said...

வருகைக்கு நன்றி ஸ்ரீதர் சார்.


உத்தம சோழன் ஆபத்துதவிகளுடன் சேர்ந்தான் என்ற தியரியே ஒப்புக்கொள்ள முடியாதது. இருவரும் தனித்தனியே 'கான்ஸ்பைர்' செய்திருக்கலாம். ஆபத்துதவிகளிடம் உத்தமன் சேர்வது சிங்கத்தின் வாயில் தன் தலையைக் கொடுப்பது போன்றது.


பொ.செ.வில் பாண்டிய இளவல் மதுராந்தகனாக வளர்வதாகக் கூறப்பட்டுள்ளதன் அடிப்படையில்தான் உத்தமனும் ஆபத்துதவிகளும் இணைய முடியும்.இது கல்கியின் 'ட்விஸ்ட்'.


ஒரு அரசனை இன்னொருவர் கொல்வதென்பது வேறு. தனது உடன்பிறப்பைக் கொல்வதென்பது வேறு. நான் சொல்வது இரண்டாவது வகையினது.

உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

CA Venkatesh Krishnan said...

//
நிஜமா நல்லவன் கூறியது...
பொன்னியின் செல்வன் படிச்சிட்டு நான் ரொம்ப குழம்பி போய் இருந்தேன்....இப்ப இன்னும் குழம்பிட்டேன்...:(
//

Mission Accomplished! நீங்க நிஜமாவே நல்லவர்தான். இல்லன்னா இப்படி கொழம்பியிருப்பீங்களா?

குழம்பிய குட்டையில் மீன் பிடிப்போம் வாருங்கள்.

CA Venkatesh Krishnan said...

//
SUREஷ் கூறியது...
//மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் இந்த எஸ்.எம்.எஸ். படு வேகமாக பரவி
//

சுரேஷ், இது என்ன ராங்க் கால் மாதிரி ராங்க் கமெண்டா? :))

CA Venkatesh Krishnan said...

பதிவர்களின், வாசகர்களின் வரலாற்றார்வம் மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி.

Anonymous said...

//உத்தமன் அரியணை ஏறிய பின் சந்ததியின்றி போகக் காரணமென்ன?
உத்தமன் சந்ததி இருந்தது என்று பாலகுமாரனின் "உடையார்"இல் வருகிறது!!
அவரையும் சிவா பழமாக வளர்த்தார்கள் என்றும், அருள்மொழியின் தூண்டுதலால்
சிற்றரசர்கள் உத்தமனை அர்யனையை விட்டு இறங்கும் படி கேட்டார்கள் என்றும், இதனால் செம்பியன் தேவி அருள்மொழியை வெறுத்தார் என்றும் வருகிறது!!

உடையார் முதால் பாகம் மட்டும் படித்தேன்!! பொன்னியின் செல்வன்னுகும், உடையாருக்கும் நிறைய வேறுபாடு இருப்பதால் குழம்ப வேண்டாம் என்று மேல படிக்கவில்லை!

2.வந்தியத் தேவனின் 'லோ ப்ரொஃபைல்' ஏன்?
அப்படி தெரியவில்லை! அவர் அருள் மொழி ஆட்சி செய்ய பேருதவியை இருந்தார் என்று பொன்னியின் செல்வனில் கடைசியாக படித்ததாக ஞாபகம்!!
3. குந்தவையின் 'சுப்ரீமசி' ஏன்?
அவர் தான் அருள்மொழியின் குரு. அவருக்கு ராஜ தந்திரம் முதல் அனைத்தையும் கற்றுத்தந்தவர்

4. ராஜராஜனுக்குப் பிறகு ராஜேந்திரன் தஞ்சையை விட்டு கங்கை கொண்ட
சோழபுரம் சென்றது ஏன்?
இது இயல்பு.. முதலில் குடந்தை, பிறகு தஞ்சை, பிறகு கங்கை கொண்ட
சோழபுரம்

Sridhar Narayanan said...

//உத்தம சோழன் ஆபத்துதவிகளுடன் சேர்ந்தான் என்ற தியரியே ஒப்புக்கொள்ள முடியாதது. //

பல்லவரே,

நீங்கள் ஒத்துக் கொள்ள முடியாததால் அது நடக்கவே இல்லை என்று சொல்லிவிட முடியாதே :-)).

ரேவதாஸ கிரமவித்தன் சோழ நாட்டில் உத்தம் சோழன் காலத்தில் அரசு செல்வாக்கோடு இருந்திருப்பதற்கு சில கல்வெட்டு சாட்சியங்களை பாலகுமாரனின் உடையாரில் படித்திருக்கிறேன். பின்னர் ராஜராஜ சோழனின் காலத்தில் அவனது சொத்துகள் பறிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்படுவதாக எழுதியிருப்பார். ரவிதாஸனும் ரேவதாஸனும் வெவ்வேற ஆட்களாக இருக்கலாம்.

சகோதர யுத்தம் இல்லை என்று ஏதோ ‘புனித’மான விசயத்தை சொல்வது போல திரும்ப திரும்ப சொல்கிறீர்கள். சுந்தர பாண்டியனும் வீர பாண்டியனும் சகோதர சண்டையில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள்.

வரலாற்று ஆசிரியர்களுக்கும் கல்வெட்டுகள் தவிர அதிகமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அதனால் சகோதர யுத்தம் நடந்திருக்கவே இல்லை என்றெல்லாம் ஒட்டுமொத்தமாக முடிவிற்கு வந்துவிட முடியாது இல்லையா? :-) நீலகண்ட சாஸ்திரியே சொல்லியிருக்கிறார், உத்தம சோழன் சதி செய்தார் என்பதை.

பூங்குழலி said...

இங்குள்ள விவாதங்கள் ஆர்வம் கூட்டுபவையாக இருக்கின்றன .இதே காலத்தை அடிப்படையாக கொண்ட இன்னொரு கதை .(தலைப்பு நினைவில்லை )இதில் இந்த கதை நிகழ்வுகளின் ஆரம்பத்திலேயே குந்தவை ,வந்தியதேவன் மணம் முடிந்ததாக இருந்தது (இதற்கு சரித்திர சான்றுகள் உண்டு என்று ஆசிரியர் குறிப்பிட்டிருந்தார்).இவர்களுக்கு பிறந்த மகளை ராஜராஜன் மணமுடித்ததாகவும் சான்று உண்டாம் .

SUREஷ்(பழனியிலிருந்து) said...

////
SUREஷ் கூறியது...
//மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் இந்த எஸ்.எம்.எஸ். படு வேகமாக பரவி
//

சுரேஷ், இது என்ன ராங்க் கால் மாதிரி ராங்க் கமெண்டா? :))//







பொன்னியின் செல்வன் கிளைமாக்ஸிக்கும் அந்த படத்தின் கிளைமாக்ஸ்க்கும் உள்ள ஒற்றுமையைச் சொன்னேன்.

எல்லா கதைகளுக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு ரெஃபரன்ஸ் பொ. செ.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

///இந்த வாரிசு ஆதித்தனின் மகன் என்றால் அவனது அன்னை யார்?.///


சபாஷ் சரியான கேள்வி.....

Sathis Kumar said...

உத்தம சோழனுக்கு வாரிசுகள் இருந்திருக்க வேண்டும் என்று ஆணித்தரமாகக் கூறலாம். உத்தம சோழனுக்கு பல மனைவிகள் இருந்ததாகவும் அவர்களில் ஐவரின் பெயர்கள் ஒரே கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் நீலகண்ட சாஸ்திரி குறிப்பிடுகிறார்.

CA Venkatesh Krishnan said...

நன்றி புவனேஷ்,

சரித்திரத்தை ஒட்டி எழுதப்பட்ட பொ.செ., உடையார் மற்றும் பல நாவல்களின் வரலாற்று ஆதாரங்களைத் தேடும் அலசல் தான் இது.

CA Venkatesh Krishnan said...

//
//உத்தம சோழன் ஆபத்துதவிகளுடன் சேர்ந்தான் என்ற தியரியே ஒப்புக்கொள்ள முடியாதது. //

பல்லவரே,

நீங்கள் ஒத்துக் கொள்ள முடியாததால் அது நடக்கவே இல்லை என்று சொல்லிவிட முடியாதே :-)).
//
ஸ்ரீதர் சார், நிச்சயமாக. ஆனால் இயல்பான விஷயம் இல்லை அது என்று தெரிந்திருக்கலாம்.
சரி வாதத்திற்காக அப்படி வைத்துக் கொள்வோம். ஆதித்த கரிகாலனை உத்தமன் பாண்டிய ஆபத்துதவிகளின் துணையோடு கொன்று விடுகிறான். ஆபத்துதவிகளின் தேவை என்ன? ஆதித்தனை மட்டும் கொல்வதா அல்லது பாண்டிய அரசை மீண்டும் நிறுவுவதா? அப்படி அவர்கள் நிறுவ வேண்டுமென்றால் உத்தமனையும் அல்லவா சேர்த்து கொன்றிருக்க வேண்டும். ஆதித்தன் மறைந்ததால் அவர்கள் 'மிஷன்' முடியவில்லையே.
//
ரேவதாஸ கிரமவித்தன் ....ஆட்களாக இருக்கலாம்.
//
உத்தமன் காலத்தில் இந்த வழக்கு சரியாக விசாரிக்கப் படவில்லை என்பது தெளிவான ஒன்று. எனவேதான் நீதி வழங்க காலம் ஆயிற்று.
//
சகோதர யுத்தம் இல்லை .... உத்தம சோழன் சதி செய்தார் என்பதை.
//
என்னுடைய சக்கர வியூகமும் இந்தச் சண்டையின் அடிப்படையில் அமைந்ததுதான். ஆனால் சண்டை வேறு, சதி வேறு. இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டார்கள்.
நானும் இதை ஒட்டுமொத்தமாக எதிர்க்கவில்லை. ஆனால் வாய்ப்புகள் இல்லை என்று தான் கூறுகிறேன். நீலகண்ட சாஸ்திரியாரின் காலத்தில் உடையாளூர் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப் படவில்லை என்று ஓரிடத்தில் படித்தேன். இதை மீண்டும் உறுதிபடுத்துகிறேன்.

மீண்டும் நன்றி.

CA Venkatesh Krishnan said...

//
பூங்குழலி கூறியது...
//

நன்றி பூங்குழலி.

நீங்கள் குறிப்பிடுவது அகிலனின் வேங்கையின் மைந்தனாக இருக்கலாம்.

CA Venkatesh Krishnan said...

//
SUREஷ் கூறியது...

பொன்னியின் செல்வன் கிளைமாக்ஸிக்கும் அந்த படத்தின் கிளைமாக்ஸ்க்கும் உள்ள ஒற்றுமையைச் சொன்னேன்.

எல்லா கதைகளுக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு ரெஃபரன்ஸ் பொ. செ.
//

உண்மைதான் என்பதை மறுக்க முடியாது.:))

CA Venkatesh Krishnan said...

//
சதீசு குமார் கூறியது...
உத்தம சோழனுக்கு வாரிசுகள் இருந்திருக்க வேண்டும் என்று
//
சதீசுகுமார் சார்,
இந்த விஷயத்தில் மேலதிகத் தகவல்கள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி.

Sathis Kumar said...

உத்தம சோழனின் ஒரே மகன், மதுராந்தகன் கண்டராதித்யன் என்று அழைக்கப்பட்டதோடு, இராஜராஜன் ஆட்சியில் அவன் உயர் பதவியும் வகித்து நாட்டை நிர்வகிப்பதில் இராஜராஜனுக்கு விசுவாசமாக நடந்து உதவினான்.

மதுராந்தகன் கண்டராதித்யனின் பெயர் முதன்முறையாக இராஜராஜனின் (கி.பி 989) ஆட்சி கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருவேளை உத்தமனுக்குப் பிறகு ஆட்சிக் கட்டிலில் உத்தமனின் மக்கள் அமராது, அரசுரிமையை இராஜராஜனுக்கே விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற உடன்படிக்கை இருந்திருக்கலாம். எது எப்படியோ, நாட்டு மக்கள் இராஜராஜனையே அரசனாக்கிப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார்கள் என திருவாலங்காடு பட்டயங்கள் அறிவிக்கின்றன.

Anonymous said...

//அப்படி அவர்கள் நிறுவ வேண்டுமென்றால் உத்தமனையும் அல்லவா சேர்த்து கொன்றிருக்க வேண்டும். ஆதித்தன் மறைந்ததால் அவர்கள் 'மிஷன்' முடியவில்லையே.


அவர்களின் நோக்கம் ஆதித்த கரிகாலனை கொள்வதுதான்!! சிம்பிள், தங்கள் மன்னனை கொன்றவனை பழி வாங்க!!
உடையார் படி ரவிதாசன் செம்பியன் மாதேவியின் விசுவாசி!! அதனால் உத்தமனை கொள்ளாமல் விட்டு இருக்கலாம்!! இந்த நட்பு அவர்களுக்கு பாண்டிய பேரரசை நிறுவ உதவும் என்று அவர்கள் நம்பி இருக்கலாம்!!
பொ.செ., வில் ஒரு பாண்டிய தேசத்து குழந்தை வரும்! நீ தான் அடுத்த பாண்டிய மன்னன் என்று சொல்லி வளர்ப்பார்கள்!! அது வளரும் வரை பனை அரசை அவர்களால் நிறுவ முடியாது!!

பழமைபேசி said...

//ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்? //

கண்டிப்பா, நீங்களும் இல்ல. நானும் இல்ல.

Sathis Kumar said...

இப்பதிவிற்கு பின்னூட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்றால் நிறைய விடயங்களை நாம் பேசலாம். இளையபல்லவன், இப்பதிவினை மீள்பதிவாக மீண்டுமொருமுறை பதிவிட்டால் தப்பில்லை என்று நினைக்கிறேன். நல்லதொரு சிந்தனையைத் தூண்டும் பதிவு இது.

CA Venkatesh Krishnan said...

நன்றி புவனேஷ்,

உடையார், பொ.செ ஆகியவற்றைத் தவிர்த்து வரலாற்றை ஆராயும் முயற்சியே இப்பதிவு.

இந்தக் கதைகளில் வரும் பாத்திரங்களை இஷ்டம் போல் மாற்றிக் கொள்ளலாம். உதாரணத்திற்கு ஆதித்தனையே எடுத்துக் கொள்ளுங்கள். பொ.செ.படி அவனுக்குத் திருமணம் ஆகவில்லை. ஆனால் வரலாற்றின் படி அவனுக்கு குழந்தைகள் உண்டு.

CA Venkatesh Krishnan said...

பழமைபேசியாரே,
உம்மையும் எம்மையும் லிஸ்டிலிருந்து நீக்கியமைக்கு மிக்க நன்றிகள்:))

CA Venkatesh Krishnan said...

மிகப் பயனுள்ள தகவல்களுக்கு மிக்க நன்றி சதீசுகுமார்,

இருதினங்களாக இந்தப் பக்கம் வரமுடியாததால் பதிலிறுக்க முடியவில்லை. இதை மீள்பதிவாகக் கொண்டுவரும் யோசனை நன்றாகவே உள்ளது. அப்போது இப்பதிவிற்கான பின்னூட்டத்திலுள்ள விவரங்களையும் பதிவில் சேர்த்துவிடலாம்.

SurveySan said...

impressive! :)

Subaraj S said...
This comment has been removed by the author.
Subaraj S said...

Mr Pallavan, the pillars which are in complete Thanjai Periaya Kovil may not be from the times of Cholas. If you read the history of Thanjai Periay Kovil, there are may renovations has been done by kings who came after cholas. So your argument of moving the capital from Thanjai just after RRCholan may not hold true.

Unknown said...

please check this link you may get more confused
http://thalaivanankatamilan.blogspot.in/2012/04/ii.html

வெற்றியாழ் வேந்தன் said...

அப்படியே விட்டுவிட்டீர்களா