Wednesday, October 29, 2008

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர்...4


அத்தியாயம் 4: ஆலோசனையும் ஆபத்தும்.

வீரபாண்டியனும், இளவழுதியும் அவ்வாறு பேசிக்கொண்டிருக்க, இன்னொரு பகுதியில், கோப்பெருஞ்சிங்கனும், வல்லாளனும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர்.


'ஆசாரியாரின் சக்கரவியூகத்தின் அர்த்தம்தான் என்ன? எனக்கு ஒன்றும் புரியவில்லை' என்றான் கோப்பெருஞ்சிங்கன். சுருக்கமாக சிங்கன்.
'சிங்கா. எனக்கும் ஒரு சிறிய பொறிதான் தட்டியது. ஆசாரியர் நிச்சயமாக போர் வியூகத்தை மட்டும் சொல்ல வர வில்லை. அது மாதவனுக்கு முழுமையாகப் புரிந்திருக்கிறது. அவர்தான் நமக்குப் பிறகு தெரிவிப்பதாகக் கூறிவிட்டாரே. அதைப் பற்றி இப்போது என்ன கவலை. வேறு விஷயத்தைப் பற்றி பேசுவோம். நீ இப்பொழுது என்ன செய்வதாக உத்தேசம்.' என்று கேட்டான் வல்லாளன்.


'நான் இந்த ஊர்தானே, நேராக அரண்மனைக்குச் சென்று, சிறிது காலம் ஓய்வெடுத்துவிட்டு, பிறகுதான் யோசிக்க வேண்டும். உன்னுடைய உத்தேசம் என்ன?'


'நான் தொரசமுத்திரத்திற்கு (ஹொய்சளர்களின் தலை நகரம்) செல்லப் போகிறேன். அதற்குமுன் திருவரங்கம் சென்று அரங்கனைத் தரிசித்து விட்டுச் செல்லலாம் என்றிருக்கிறேன்.'


'நல்லது. நாம் மீண்டும் தில்லையில் சந்திப்போம்' என்று கூறி வல்லாளனை ஆரத் தழுவிக் கொண்ட பின் தன் அரண்மனை திரும்பினான் கோப்பெருஞ்சிங்கன்.


====


மாதவன் ஆசாரியாரை அடுத்த நாள் சந்தித்தான்.


'குருவே, நேற்று நடந்தது...' என்று இழுக்க.


'மாதவே, காரணமாகவே அவ்வாறு பாதியில் நிறுத்தினேன். அங்கு குழுமியிருந்தவர்கள் அனைவரும் மிக நல்ல மாணவர்களாயினும் அரசியல் என்று வரும்போது அவ்வாறு இருக்க மாட்டார்கள். எல்லோருக்கும் சக்கர வியூகத்தைப் பற்றித் தெரிந்துவிட்டால், இறுதியில் அனைவரும் அழிந்துவிடுவர். ஆகவே அவ்வாறு நிறுத்த நேரிட்டது'.


'அப்படியானால் அதைச் சொல்லாமலே இருந்திருக்கலாம் அல்லவா'


'மிக நல்ல கேள்வி. இவ்வாறு ஒன்று இருப்பது அனைவருக்கும் தெரிய வேண்டும். அப்போதுதான் இதைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் வரும். எது விதை, எது பதர் என்பது தெரிய வரும். ஒன்று மட்டும் நிச்சயம் மாதவா, இந்த சக்கர வியூகத்தைப் பற்றி நல்லவனுக்கு மட்டும் தான் தெரிய வேண்டும். இது சத்தியம்' என்றார்


'ஆனால் குருவே, வரும் மார்கழி திருவாதிரையன்று தில்லையில் அவர்களுக்கு இதைப் பற்றி விளக்குவதாக வாக்குக் கொடுத்து விட்டேனே'


'அப்படியா...' நீண்ட சிந்தனைக்குப் பின்.


'சற்று அவசரப் பட்டுவிட்டாயே மாதவா.. பரவாயில்லை. நான் சொல்வது போல் செய். எல்லாம் அந்த ஏகம்பன் அருளாலும் அன்னை காமாக்ஷியின் கருணையாலும் நன்மையாகவே முடியும்' என்றவர் மாதவனுக்கு மட்டும் கேட்குமாறு மிக நீண்ட நேரம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.


அவர் சொல்லச் சொல்ல மாதவனின் முகத்தில் சொல்லவொண்ணா திருப்தியும் சாந்தியும் நிலவத் தொடங்கியது.


'மிக்க நன்றி குருவே. அவ்வாறே செய்கிறேன். நம்மால் முடிந்த வரை மனித குலம் வாழவே பாடு படுவோம். அழிவென்று வந்தால் தீமையே அழியட்டும். குருவே, நானும் சற்று தேசாந்திரம் சென்று வரலாம் என்று உள்ளேன். உத்தரவு வேண்டும்'


'நல்லது. எங்கே செல்வதாக உத்தேசம்.'


'தெற்கே சென்று, தென் தமிழகத் திருத்தலங்களைத் தரிசித்த பின், கேரளம் சென்று, காலடி க்ஷேத்திரத்தைத் தரிசித்துத் திரும்பலாம் என்று எண்ணியுள்ளேன்.'


'அவ்வாறே செய். திருவரங்கத்தில் ஸ்ரீ வேதாந்த தேசிகனைச் சந்திப்பதாக நேற்று இரவு கூறினாயே. மறந்து விட்டாயா?'


'இல்லை சுவாமி. அது மறக்கக் கூடிய சந்திப்பா. என் வாழ்வில் பெரும் மாற்றத்தையே ஏற்படுத்திய நிகழ்வல்லவா? அவரைத்தான் முக்கியமாக சந்திக்க வேண்டும். தில்லைக்கூட்டத்திற்கு முன் இந்த சந்திப்பு நிகழவேண்டும் என்று எண்ணுகிறேன்.' என்றவாறு மாதவன் கிளம்பினான்.


'ஆஹா.. இந்தத் தமிழகத்திற்கு வரப்போகும் ஆபத்தை எவ்வாறு தடுத்து நிறுத்துவது? இவர்களுக்குத் தேவையான பலத்தையும் யுக்தியையும் இறைவன் தான் அளிக்க வேண்டும். எல்லாம் இறைவன் செயல்' என்றெண்ணியவாறு நின்றார் பாஸ்கராசாரியார்.


(தொடரும்)

10 comments:

நான் ஆதவன் said...

கதை நன்றாக செல்கிறது பல்லவன். இதே போல் தொடர வாழ்த்துக்கள்.

Anonymous said...

சுபா பகர்வது,
மிக நன்றாக உள்ளது.தொடரின் சுவாரஸ்யம் படிக்க தூண்டுகிற்து

கூடுதுறை said...

மிக்க நன்றி திரு.காஞ்சித்தலைவன் அவர்களே...

இது போன்ற தொடரை நான் ஆவலுடன் எதிர்பார்த்தேன்...

இளைய பல்லவன் said...

//
நான் ஆதவன் கூறியது...
கதை நன்றாக செல்கிறது பல்லவன். இதே போல் தொடர வாழ்த்துக்கள்
//
உங்களது தொடர் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ஆதவன்.

இளைய பல்லவன் said...

//...
சுபா பகர்வது,
மிக நன்றாக உள்ளது.தொடரின் சுவாரஸ்யம் படிக்க தூண்டுகிற்து
//

மிக்க நன்றி சுபா

தொடர்ந்து வாங்க

இளைய பல்லவன் said...

//
கூடுதுறை கூறியது...
மிக்க நன்றி திரு.காஞ்சித்தலைவன்

இது போன்ற தொடரை நான் ஆவலுடன் எதிர்பார்த்தேன்...
//

மிக்க நன்றி கூடுதுறை அவர்களே...

தொடர்ந்து வாங்க.

ஆதரவு தாங்க :)

Venkatesh said...

good going

உருப்புடாதது_அணிமா said...

கதையை நன்றாக எடுத்து சென்று கொண்டு இருக்கின்றீர்கள் ....
தொடரட்டும்..

இளைய பல்லவன் said...

//
உருப்புடாதது_அணிமா கூறியது...
கதையை நன்றாக எடுத்து சென்று கொண்டு இருக்கின்றீர்கள் ....
தொடரட்டும்
//
நன்றி அணிமா

இளைய பல்லவன் said...

10