Monday, August 30, 2010

இளையபல்லவன்:- பதிவரசியல்! அயல் நாட்டு அன்னிய சக்திகளின் சதி!!

நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இப்படியெல்லாம் கூட நடக்குமா? என்ன பதிவுலகமடா இது? திருந்துமென்று பார்த்தால் திரும்பவும் சாக்கடைக்கல்லவா சென்று விட்டது? ஏன்? ஏன்? ஏன்? கருத்துச் சுதந்திரம் கூடாதா? பதிவெழுதச் சுதந்திரமில்லையா? உரிமைக் குரல் கொடுப்போரின் குரல்வளை நெறிக்கப்பட்டால் கூட கூக்குரலெழும். ஆனால் அவர்களையே இருட்டடிப்புச் செய்துவிட்டால்.... ஆஹா.. இது ஒரு தனி முயற்சியல்ல. பலமான கூட்டணியின் பயங்கரச் சதி.. மேலே படியுங்கள்...


மக்களே.. இவ்வளவும் இளையபல்லவனுக்கு இன்று நேர்ந்திருக்கலாம். நாளை உங்களுக்கும் நேராதென்பது என்ன நிச்சயம். ஒன்றாகப் போராடுவோம். இளையபல்லவனுக்கு விடிவு காலம் வரும் வரை பசி நோக்காமல், கண் துஞ்சாமல், எவ்வெவ்வருத்தம் பாராமல், கருமமே கண்ணாக இருப்போம். இந்த அறை கூவலைக் கேட்டு வாரீர் வாரீர்.. நடக்கும் கொடுமைகளைப் பாரீர்... பாரீர்...


என்ன நடந்தது?? இளையபல்லவனிடமே கேட்டோம். 'போல்ட்' எழுத்துக்களில் உள்ளவை தானைத் தலைவர், தன்மானச் சிங்கம், இளையபல்லவர் சொன்னது.எந்தப் பதிவு போட்டாலும் என் பெயர் தெரிவதில்லை...


அட.. பதிவின் தலைப்பை வைத்தே நான்தான் பதிவு போட்டேன் என்று மக்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு பிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரபலமான பதிவராகிவிட்டேனா என்று எனக்கு வந்த ஆச்சரியம், வழக்கமாகக் கடைப்பக்கம் வரும் ஒன்றிரண்டு பேர் கூட வராமல் போனபோதுதான் தெளிவாகியது.

பதிவின் பெயர் மட்டும் வருகிறது. வகைப்படுத்திய விதம் தெரிகிறது. என் பெயர் மட்டும் இல்லை:(

இதுவாவது பரவாயில்லை. ஒரு வாரத்திற்கு முன் 'புதியது'?! என்ற லேபிள் வேறு!!!ஆஹா. இது என்ன கொடுமை? யார் குரல் கொடுத்தார்கள் என்று தெரியவிடாமல் செய்யப்படுகிறதா?? அதுவும் பழைய குரலை புதிய குரல் என்று அறிமுகம் செய்யப்படுகிறதா??அடுத்து...


மறுமொழிகள் திரட்டப்படுவதில்லை...


அய்யா... என் பதிவெல்லாம் ஒரு சில மணித்துளிகளாவது முகப்பில் தெரிகிறதென்றால் அது அவ்வப்போது வரும் ஒன்றிரண்டு பின்னூட்டங்களினால்தான். அப்படி பின்னூட்டம் வராவிட்டால் நமக்கு நாமே திட்டத்தின் படி ஒன்றிரண்டு 'டெஸ்ட்' பின்னூட்டங்கள் போடும் திட்டத்தைச் செயல் படுத்தி பதிவை 'மார்க்கெட்டிங்' செய்திருக்கிறேன்.

அய்யகோ.. ஆனால் இப்போதோ, முதலுக்கே மோசம் வந்தது போல்.. மொத்தமாக அந்த வரிசையிலேயே வருவதில்லை...அந்தோ பரிதாபம்.. தில்லாலங்கடி வேலை செய்தாவது தன் பதிவை அவயத்து முந்தியிருப்பச் செய்யும் செயலைக் கூட தடுக்கும் தன்னிகரல்லா உலகமடா இஃது..அடுத்து...
தமிழ்மணம் கருவிப்பட்டை செய்யும் மக்கர்...

என்பதிவின் மேல் தமிழ்மணம் கருவிப்பட்டை, பதிவை அனுப்புவதற்கு முன் எப்படியிருக்குமோ அப்படியே இருக்கிறது. யாராவது கருணை மனம் மிகுந்த தர்மவான்கள்/தர்மவானிகள் இரக்கப்பட்டு அவ்வப்போது போடும் அரை வோட்டு அல்லது ஒன்றரை ஓட்டு கூட விழாமல் சதி செய்யப்பட்டு விட்டது!!!

இப்படி அடுக்கடுக்காக, எனக்கு எப்போதாவது எழுதவேண்டும் என்று வரும் ஆசையை முளையிலேயே கிள்ளியெறியவும், அந்த ஒன்றிரண்டு பதிவுக்காக பரிதாபப்பட்டு வரும் ஒன்றிரண்டு பின்னூட்டங்களும் வரக்கூடாது, வந்தாலும் தெரியக்கூடாது என்ற நல்(?!)லெண்ணத்திலும், ஓட்டுப்போடுவதையே கடமையாகக்கொண்டுள்ள ஓரிரண்டு நல்லவர்களின் ஓட்டுரிமையைப் பறிக்கும் பொருட்டும் இவ்வாறெல்லாம் சதி செய்யப்படுகிறது என்று நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லாவிட்டாலும்... நம்பாமல் இருக்க முடியவில்லை...

ஓட்டு வாங்கும் உரிமையும் ஓட்டுப்போடும் உரிமையும் ஒருங்கே தட்டிப் பறிக்கப்படுகிறதே. ஐயகோ.. என்செய்வோம்?. என்செய்வோம்?...அ.உ.இ.ப.மு.கவின் செயற்குழு, பொதுக்குழு, மற்றும் அனைத்துக் குழுக்களின் கூட்டுக்குழம்பு(சாரி குழு) எடுத்த முடிவினை உங்கள் முன் எடுத்து வைக்கிறோம்...

அ. மேற்கண்ட குறைகளையெல்லாம் உடனே சீர் செய்ய வேண்டும். இடைக்கால நிவாரணமாக கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால், ஒவ்வொரு மணித்துளிக்கும் ஒரு பதிவிட்டு தமிழ்மண முகப்பு நிரப்பும் போராட்டம் நடைபெறும் என அ.உ.இ.ப.மு.க. (அகில உலக இளையபல்லவன் பதிவுகள் முன்னேற்ற கழகம்) உறுப்பினர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.

1. பதிவுலகிலிருந்து ஓய்வு பெற்ற மூத்த பிரபல பதிவர் தலைமையில் ஒரு கமிஷன் வைத்து விசாரணை செய்
2. இடைக்கால நிவாரணமாக அடுத்த ஒரு மாதத்திற்கு இளையபல்லவனை நட்சத்திரமாக்கு
3. இளையபல்லவனின் அனைத்து இடுகைகளுக்கும் உடனே 25 வாக்குகளை வழங்கு
4. இளையபல்லவனின் அனைத்து இடுகைகளுக்கும் உடனே 50 மறுமொழிகளை வழங்கு

குறிப்பு:-

1. மேலும் கோரிக்கைகள் அ.உ.இ.ப.மு.க.வினர் சார்பாக வரவேற்கப்படுகின்றன
2. அ.உ.இ.ப.மு.க.வில் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
3. அ.உ.இ.ப.மு.க. இல்லாத இடமே இல்லையென்றாலும், மேலும் கிளைகள் துவங்க அனுமதி வழங்கப்படுகிறது.
4. அ.உ.இ.ப.மு.க. சார்பாக போராட்டம் நடத்த தகவல்களுடன் தொடர்பு கொள்ளவும்.
5. 200க்கும் மேல் தொகுதிகள் கொடுத்து கூட்டணி வைத்துக்கொள்ள விரும்புவோர், தொடர்புகொள்ளவும்.


இப்படிக்கு:-
இ.ப.மு.க. சார்பில்
தமிழ்மண நிர்வாகிகளின் 'கடைக்கண் காட்சி'
காணக்காத்திருக்கும்
'குணா' -
இளையபல்லவன்.

பின்குறிப்பு:- என் பிளாக்கிற்கு இவ்வளவு பிரச்சினைகளை அளித்து ஒரு பதிவெழுத வாய்ப்பளித்த தமிழ்மணத்திற்கு நன்றி! நன்றி!! நன்றி!!!