Tuesday, September 1, 2009

அரிசி உப்புமா - சமையல் குறிப்பு

இன்று தங்கமணி ஊரில் இல்லை. வழக்கமாக தங்க்ஸ் ஊரில் இல்லாத நாட்களில் காசிவினாயகாவுக்கு ஜூட் விட்டுவிடுவேன். இன்று வித்தியாசமாகச் செய்யலாம் என்று பார்த்ததில் எனக்கு மிகவும் பிடித்த, நான் செய்ததை நண்பர்கள் ரசித்துச் சாப்பிட்ட டிபன் அரிசி உப்புமா செய்வது என்று முடிவு செய்தேன். அதை நீங்களும் செய்து சுவைத்துப் பாருங்கள்.

சூடாகவும் சுவையாகவும் அரிசி உப்புமா செய்வது எப்படி என்று பார்ப்போமா? (நன்றி டாக்டர் மா.நன்னன்)

முதலில் உப்புமா செய்வதற்குத் தேவையான பாத்திரங்கள், உபகரணங்கள்.



1. மிக்ஸி (ஜார் அவசியம், மின்சாரம் மிக மிக அவசியம்)
2. வாணலி, அல்லது அடி கனமான பாத்திரம்
3. குக்கர், குக்கருக்குள் போடும் பிளேட், குக்கருக்குள் போடும் பாத்திரம், அதை மூட ஒரு தட்டு, குக்கர் மூடி, விசில்.
4. கரண்டி - ஜல்லிக் கரண்டி அல்லது சட்டுவம்.
5. அரிசி எடுக்க ஒரு பாத்திரம்.
6. கேஸ் அடுப்பு - கேஸ் இருக்க வேண்டும்., லைட்டர்

அடுத்து உப்புமா செய்வதற்குத் தேவையான பொருள்கள்

1. பச்சை அரிசி - 200 கிராம்
2. துவரம்பருப்பு - 20 கிராம்
3. மிளகு - 10 கிராம்
4. சீரகம் - 10 கிராம்

இந்தப் பொருட்களை ஒன்றாகக் கலந்து மிக்ஸி ஜாரில் போட்டு (ஒன்றும் பாதியுமாக அரைத்துக் கொள்ள வேண்டும்).

5. எண்ணெய் (நல்லெண்ணை பெஸ்ட், ரீஃபைண்ட் ஆயில் ஓக்கே, கடலை எண்ணை டேஸ்ட் நன்றாக இருக்கும்) - 15 மில்லி
6. கடுகு - சிறிதளவு
7. வெந்தயம் - சிறிதளவு
8. கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு - சிறிதளவு
9. பெருங்காயத்தூள் - சிறிதளவு
10. மிளகாய் வற்றல் - இரண்டு அல்லது மூன்று
11. கருவேப்பிலை - சிறிதளவு

இவை தாளிக்கத் தேவையான பொருட்கள் - இந்த வரிசையில்தான் தாளிக்க வேண்டும்.

இவற்றோடு முக்கியமாக உப்பு. உப்பு இல்லையேல் அது உப்புமா இல்லை, சப்புமா ??

தண்ணீர் - அரைத்துக்கொண்ட பொருட்களின் அளவுக்கு இரண்டு பங்கு (பழைய அரிசியாக இருந்தால் இரண்டரை பங்கு)

செய்முறை:-

ப்ராசஸ் 1:-

1. அடுப்பைப் பற்ற வைக்கவும்
2. வாணலி அல்லது அடி கனமான பாத்திரைத்தை அடுப்பின் மேல் வைக்கவும்
3. எண்ணையை விடவும்
4. எண்ணை காய்ந்ததும், கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றைப் போட்டு திருப்பவும்.
5. இவை சற்று பொன்னிறமாக வந்ததும், பெருங்காயத்தூள், மிளகாய்வற்றல் ஆகியவற்றைப் போடவும்.
6. கார நெடி சற்று குறைந்ததும் கருவேப்பிலையைப் போடவும்.
7.கருவேப்பிலை வெடித்தவுடன் தண்ணீர் ஒரு டம்ளர் ஊற்றவும்.
8. உப்பு தேவையான அளவு சேர்க்கவும்.
9. மீதியிருக்கும் தண்ணீரை ஊற்றவும்.
10. தண்ணீர் கொதிக்கும் வரை காத்திருக்கவும்.

ப்ராசஸ் 2:-

1. தண்ணீரை வாணலியில் ஊற்றிவிட்டு காத்திருக்கும் சமயத்தில் அடுத்த பர்னரை பற்ற வைக்கவும்.
2. குக்கரை அதன் மேல் ஏற்றவும். குக்கருக்குள் தண்ணீர் விடவும். மூடியில் கேஸ்கெட் போட்டு தயாராக வைக்கவும். விசில் தயாராக வைக்கவும்.
3. வாணலியில் தண்ணீர் கொதிக்கும் நிலைக்கு வந்ததும், சற்று சிம் செய்யவும்.
4. அரைத்து வைத்திருக்கும் அரிசி ஆகிய வற்றை மெதுவாகக் கொட்டிக்கொண்டே கிளறவும்.
5. இரண்டு மூன்று முறை கிளறியதும், குக்கருக்குள் வைக்கும் பாத்திரத்திற்கு இதை அப்படியே ட்ரான்ஸ்ஃபர் செய்யவும்.
6. குக்கருக்குள் குக்கர் பாத்திரத்தை இறக்கி, மூடி போட்டு, விசிலையும் போடவும்.
7. பர்னரை 'ஹை'யில் வைக்கவும்.
8. இரண்டு விசில் வந்ததும் 'சிம்' செய்யவும்.
9. இன்னும் இரண்டு விசில் வந்ததும் ஆஃப் செய்யவும்.
10. சிறிது நேரத்திற்குப் பிறகு ஸ்டீம் போன பின் குக்கரைத் திறந்தால் .....

ஆஹா.... நாவில் சுவையூற வைக்கும் அரிசி உப்புமா தயார். அதை ஒரு கிளறு நன்றாகக் கிளறவும். சூடாகப் பரிமாறவும்.

பெஸ்ட் சைட் டிஷ்:- எலுமிச்சங்காய் ஊறுகாய், அல்லது தக்காளி சாம்பார்.

செய்து பார்த்து சுவைத்து விட்டுச் சொல்லுங்கள்..

இன்னும் நிறைய ஐட்டங்கள் இருக்கின்றன!!!

23 comments:

Prabhu said...

இது வேறயா? அரிசி உப்புமாக்கு கொத்சு(aka)கிச்சடி நல்லாருக்குமே!

Jaleela Kamal said...

தங்க மணி இல்லை என்றதும் , சமையலில் அதுவும் அசத்தலான அரிசி உப்புமாவை கொடுத்து இருக்கிறீர்கள்.அப்ப நல்ல ட்ரெயினிங் போல‌

தொடரட்டும் தொடரட்டும்

Anonymous said...

இது பொங்கல் மாதிரி இல்ல இருக்கு. துவரம் பருப்புக்கு பதில் பயத்தம்பருப்பு போட்டுக்கலாம்- பொங்கலாயிடும் - அரிசி பருப்பு உடைக்க வேண்டியதில்லை. :)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

o.k...,

☀நான் ஆதவன்☀ said...

ரைட்டு.... என்னவோ அண்ணி ஊர்ல இல்லாதப்ப மட்டும் சமைக்கிற மாதிரி பில்டப் கொடுக்குறீங்க?

ஓ...அண்ணி இல்லாதப்ப உங்களுக்கு பிடிச்சது சமைக்கிறீங்களா...அப்படி தெளிவா சொல்லுங்க.

ஆயில்யன் said...

//சின்ன அம்மிணி said...

இது பொங்கல் மாதிரி இல்ல இருக்கு. துவரம் பருப்புக்கு பதில் பயத்தம்பருப்பு போட்டுக்கலாம்- பொங்கலாயிடும் - அரிசி பருப்பு உடைக்க வேண்டியதில்லை. :)//

அதானே ஒரு ஐட்டத்தை டெலிட் செஞ்சு ஒரு பிராசஸையே (மிக்ஸி) கட் செஞ்சும்புடலாமே :)))

Shakthiprabha (Prabha Sridhar) said...

கொஞ்சம் தேங்காய் துருவன் (grated n fresh) சேர்த்துக்கொள்ளுங்கள்.

உப்புமாக்கு வெந்தயமா? புதிதாய் இருக்கிறது...ஹ்ம்ம்...

variation க்கு பச்சை மிளகாய் சேருங்கள். நிறைய கறிவெப்பிலை கொத்துமல்லி அள்ளித் தூவுங்கள். கட்டைவிரலை தொட்டுக்கொண்டே சாப்பிடலாம் அவ்வளவு ருசியாக இருக்கும்.

CA Venkatesh Krishnan said...

@ pappu
வாங்க பப்பு, கொத்சு பொங்கலுக்கு ஏற்றது.

@ Jaleela
வாங்க ஜலீலா மேடம். கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்க. அந்த ட்ரெயினிங்க் எபிசோட் தனியா ஒரு பதிவில்!

@ சின்ன அம்மிணி

வாங்க சின்ன அம்மிணி, பொங்கலுக்கும் இதுக்கும் ஆறு வித்தியாசத்துக்கு மேல இருக்குங்களே! பொங்கலுக்கு, மிளகாய்வற்றல், வெந்தயம், உ.ப., க.பவெல்லாம் வராது:)

CA Venkatesh Krishnan said...

//
SUREஷ் (பழனியிலிருந்து) said...

o.k...,//

வாங்க அஜித்! ஓக்கேவுக்கு ஓக்கே!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உங்களை வழக்கமாக படித்து விட்டு பின்னூட்டம்போடாத பலரும் இப்போது பின்னூட்டம் இட்டுக் கொண்டு இருக்கிறார்கள். கலக்குங்கள்

CA Venkatesh Krishnan said...

//
☀நான் ஆதவன்☀ said...

ரைட்டு.... என்னவோ அண்ணி ஊர்ல இல்லாதப்ப மட்டும் சமைக்கிற மாதிரி பில்டப் கொடுக்குறீங்க?

ஓ...அண்ணி இல்லாதப்ப உங்களுக்கு பிடிச்சது சமைக்கிறீங்களா...அப்படி தெளிவா சொல்லுங்க.
//

ஆஹா சீக்ரட் மேட்டர ரிலீஸ் பண்ணிட்டீங்களே!!

CA Venkatesh Krishnan said...

///ஆயில்யன் said...

//சின்ன அம்மிணி said...//

அதானே ஒரு ஐட்டத்தை டெலிட் செஞ்சு ஒரு பிராசஸையே (மிக்ஸி) கட் செஞ்சும்புடலாமே :)))
///

ம் நல்ல ஐடியாதான். நன்றி ஆயில்யன்!

CA Venkatesh Krishnan said...

// Shakthiprabha said...

கொஞ்சம் தேங்காய் துருவன் (grated n fresh) சேர்த்துக்கொள்ளுங்கள்.

உப்புமாக்கு வெந்தயமா? புதிதாய் இருக்கிறது...ஹ்ம்ம்...

variation க்கு பச்சை மிளகாய் சேருங்கள். நிறைய கறிவெப்பிலை கொத்துமல்லி அள்ளித் தூவுங்கள். கட்டைவிரலை தொட்டுக்கொண்டே சாப்பிடலாம் அவ்வளவு ருசியாக இருக்கும்.
//

நன்றி சக்திப்ரபா! வேரியேஷன்களை ட்ரை செய்கிறேன்.

வெந்தயம் அரிசி உப்புமாவின் டேஸ்டைக் கூட்டும்.

Jaleela Kamal said...

//@ Jaleela
வாங்க ஜலீலா மேடம். கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்க. அந்த ட்ரெயினிங்க் எபிசோட் தனியா ஒரு பதிவில்//

ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

எம்.எம்.அப்துல்லா said...

தங்கமணிகளை ஊருக்கு அனுப்பிவைப்பது எப்படிங்குற டெக்னிக்க ஒரு பதிவா போடுங்கண்ணா

:))

Anonymous said...

//எம்.எம்.அப்துல்லா said...

தங்கமணிகளை ஊருக்கு அனுப்பிவைப்பது எப்படிங்குற டெக்னிக்க ஒரு பதிவா போடுங்கண்ணா

:))
//

இதப்பாருங்க, எல்லாரும் சேந்து இவரை அமெரிக்கா அனுப்பலாம்னா இவரு தங்கமணிகளை ஊருக்கு அனுப்பறது எப்படின்னு கேக்கறாரு :)

Anonymous said...

//
வாங்க சின்ன அம்மிணி, பொங்கலுக்கும் இதுக்கும் ஆறு வித்தியாசத்துக்கு மேல இருக்குங்களே! பொங்கலுக்கு, மிளகாய்வற்றல், வெந்தயம், உ.ப., க.பவெல்லாம் வராது:)//

ஏங்க , அப்படிப்பாத்தா குக்கர், மிக்ஸியெல்லாம் கூடத்தான் உப்புமாக்கு தேவையில்லை. உப்புமான்னா சட்டுனு செய்யணும். இப்படி இவ்வளவு நீளமா செய்முறை இருந்தா எப்படி , :)

சும்மா அடுத்த பதிவுல ஒரு ஓட்டெடுப்பு நடத்துங்க. இது உப்புமாவா, பொங்கலான்னு , :)

Sathis Kumar said...

சார், வர வர உங்க உடம்புல சில ஹார்மோன்ஸ் சேஞ்ச் ஆயிகிட்டு இருக்குன்னு நினைக்கிறேன்... :)

CA Venkatesh Krishnan said...

நன்றி ஜலீலா மேடம்.

வாங்க அப்துல்லா அண்ணே. கண்டிப்பா போட்டுருவோம். தங்கமணிகளை ஊருக்கு அனுப்புறதில் ரங்கமணிகள் குறியாக இருப்பது ஏன் என்பதையும் போட்டுருவோம்.

வாங்க சின்ன அம்மணி, கண்டிப்பா பொங்கலா உப்புமாவான்னு ஒரு ஓட்டெடுப்பு நடத்திடுவோம்.

CA Venkatesh Krishnan said...

ஒற்றன் சார்.. வாங்க, வாங்க.

//
சார், வர வர உங்க உடம்புல சில ஹார்மோன்ஸ் சேஞ்ச் ஆயிகிட்டு இருக்குன்னு நினைக்கிறேன்... :)
//

அவ்வ்வ்வ். அதில்ல சார். சட்டுனு ஏதாவது செய்யணும்னு தோணுச்சுன்னா நமக்கு உடனே தோன்றது உப்புமா இல்லையா? அதான் உப்புமா பதிவு.

மோனிபுவன் அம்மா said...

அரிசி உப்புமா ரொம்ப சூப்பர்

அண்ணி டிரைனிங்கும் கூட
சூப்பர்

sakthi said...

MORE KULAMBU VAIPPADU EPPADI

Unknown said...

சாப்ட கை, கழுவ தண்ணி, சாப்ட வாய். இத விட்டுடீங்க!!!