வலையுலகிற்கு இப்போது சோதனை மேல் சோதனை போலிருக்கிறது. இல்லாவிட்டால் இப்படியெல்லாம் நடக்குமா?? வலைப்பூ எழுதவந்த கதையை எழுத வேண்டுமாம், அதை நீங்கள் படிக்கவேண்டுமாம். ஆதவன் ஆனையிட்டுவிட்டார். அதுவும் 'இப்படியாவது எழுதுங்க பல்லவன்'ன்னு சொல்லிட்டார். என்ன கொடுமை ஆதவன் இது :(( ஆனாலும் விடுவோமா?? சுயபுராணம் படிப்பது அல்வா கொடுப்பது மாதிரி அல்லவா?! இதோ வந்துவிட்டது சூடான சுவையான அல்வா!. ருசித்துப் பயன் பெறுங்கள் !!!.
அதாவது காஞ்சிபுரம் என்ற ஓர் மாநகர் இருக்கிறது. அங்கே ஒரு சிறுவனுக்கு எப்படியாவது எழுத்தாளன் ஆக வேண்டும் என்ற உந்துதல் அடி மனதிலே இருந்திருக்கிறது. அப்போது அவன் நான்காம் வகுப்புதான் படித்துக் கொண்டிருந்தான். அத்துடன் அம்புலிமாமா, பாலமித்ரா முதலியவற்றுடன் பற்பல மாயாஜாலக் கதைகளும் படித்துக்கொண்டிருந்தான். அப்படிப் படிக்கும் போதுதான் என்னடா இது ஒன்றுமே இல்லாமல் இப்படி எழுதுகிறார்களே, நாம் எழுதினால் இவர்களெல்லாம் காணாமல் போய்விடுவார்களே என்று எண்ணிக்கொண்டான். அவன் எண்ணியவாறே நடந்தது! அந்தச் சிறுவனின் எழுத்துக்கள் வலைப்பூவில் பதியப்படும் போது, பாலமித்ராவும் மாயாஜாலக் கதைகளும் வருவதில்லை:(. அம்புலிமாமா பற்றி சந்தேகமாக இருக்கிறது. அந்தச் சிறுவன்தான் உங்கள் காஞ்சித் தலைவன் என்பதைத் தெள்ளெனப் புரிந்து கொண்டிருப்பீர்கள். இதுதான் எழுத வந்த கதையின் முதல் பாகம்.
அதே சிறுவன் சற்று வளர்ந்து ஆறாம் வகுப்பில் சேர்ந்தான். அப்போது அம்புலிமாமாக்களும், பாலமித்ராக்களும் அவன் படிக்கும் தகுதியை இழந்துவிட்டிருந்தன! மேலும் என்ன படிக்கலாம் (பள்ளியில் பாடம் படித்தானா என்ற கேள்வி இந்தப் பதிவின் வரையறைக்கப்பாற்பட்டது) என்றெண்ணும் போதுதான் அந்த ஊரின் நூலகத்தில் உறுப்பினராகும் வாய்ப்பு கிட்டியது. அங்கே அவனுக்குக் கிடைத்தது 'பொன்னியின் செல்வன்'. முதலில் ஒரு புத்தகத்தை எடுக்கும் போது அதில் 'பொன்னியின் செல்வன் - நான்காம் பாகம்' என குறிப்பிட்டிருந்தது . அவனுக்கு அப்போது பாகங்களோ, பகுதிகளோ தெரிந்திருக்க வில்லை. அந்தப் புத்தகத்தைக் கேட்ட போது நூலகர் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தார். அவன் அதற்கெல்லாம் சளைக்கவில்லை. பொ.செ.வைப் படித்த போது அவன் உள்ளே இருந்த விளக்கு பற்றிக் கொண்டது. நானும் ஒரு சரித்திரத் தொடர் எழுதுவேன் என்று எண்ணிக் கொண்டான். அது இன்று நிறைவேறியது. (விட்டு விட்டு வருகிறதே என்று கேட்டால், புன்னகை மட்டுமே பதிலாக வரும்). அந்தச் சிறுவன்தான் இளைய பல்லவன் என்பது உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை.
அதே சிறுவன் பிறகு மேலும் வளர்ந்து (அவ்வளவுதான், இனி நிகழ்கால இறந்தகாலம்தான்!) பல்வேறு புத்தகங்களைப் படித்தான். ஊரில் உள்ள அனைத்து நூலகங்களிலும் மெம்பர் ஆனான். சி.ஏ. இன்ஸ்டிடியூட், அமெரிக்கன் லைப்ரரி, ப்ரிட்டிஷ் கவுன்சில், அகில உலகப் புகழ் பெற்ற கன்னிமாரா நூலகம் என்று அவன் சட்டைப்பையில் உறுப்பினர் அட்டைகள் நிறைந்தன. இப்படியாகப் படித்துப் படித்து மேலும் என்ன செய்வது என்று யோசித்த போதுதான் கணினி அவன் அறிவுப்பசிக்கு ஒரு புதிய ஜன்னலை (விண்டோஸ்) திறந்தது. அந்தோ பரிதாபம்!. அங்கே அவனக்குக் கிடைத்ததோ ஆங்கிலப் பக்கங்களே. எவ்வளவோ முயற்சித்தும் ஒன்றும் சரியாக அமையவில்லை. தொடர்ந்து கணினியில் தமிழுக்காக, தவமாய்த் தவமிருந்தான்.
கி.பி. 2005, அவன் வாழ்வில் மறக்க முடியாத ஆண்டு. அப்போதுதான் தமிழ் என்று டைப் செய்து கூகிளாண்டவரிடம் வேண்டிய போது அத்தனை ஆண்டு கால தவத்தை மெச்சிய கூகிளாண்டவர், தமிழ்மணம்.காம் என்ற விலாசத்தைத் தந்தருளினார். அது அவனுக்குக் கிடைத்த வாய்ப்பா, ஆப்பா என்பதை இன்று வரை அவனால் உறுதி செய்ய முடியவில்லை.
அப்படிக் கிடைத்த தமிழ்மணத்தில் தான் எத்தனை எழுத்துக்கள்?! எத்தனை எழுத்தாளர்கள்!! மீண்டும் அவன் அகங்காரம் தலை தூக்கியது. இத்துணை பேர் எழுதும் போது நாம் எழுதலாகாதா? என்ற எண்ணம் தோன்றியது. இடையில் ஓரிருமுறை பிளாக்கர் கணக்கைத் துவக்க முற்பட்டான். ஆனால் 'மீண்டும் அந்தோ பரிதாபம்'. கணினி அறிவியலில் அவ்வளவாகப் பரிச்சயமில்லாத காரணத்தால் ஒன்றும் செய்யவியலவில்லை. ஆயினும் சிறிய வயதில் படித்த அம்புலிமாமாவில் வந்த 'தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன்' வந்து அவனை உசுப்பி விட்டுக்கொண்டே இருந்ததால் அவனால் சும்மா இருக்க முடியவில்லை.
இப்படியாக ஒரு வழியாக ஆகஸ்டு 2008ல் வெற்றிகரமாக ஒரு பிளாக்கர் கணக்கைத் துவக்கி, இளையபல்லவன்.பிளாக்ஸ்பாட்.காம் என்ற பக்கத்தைப் பதிவு செய்து பதிவிட ஆரம்பித்துவிட்டான். ஆரம்பத்திலேயே தனது தில்லாலங்கடி வேலையையும் காட்டிவிட்டான். தமிழ்மணத்தில் இணைக்க மூன்று பதிவுகள் இடவேண்டும். ஒரே பதிவை மூன்று முறை காபி பேஸ்ட் செய்து அதிரடியாக தமிழ்மணத்தில் நுழைந்தான்.
தொடர்ந்து சக்கர வியூகம் எழுதியதும், தமிழ் மணத்தில் நட்சத்திரமானதும், நண்பர்கள் பலரின் அறிமுகமும் கடந்த ஓராண்டில் அவனுக்குக் கிடைத்த நன்மைகள். அவ்வப்போது பணிச்சுமையில் காணாமல் போய்விடுவது அவனது 'வீக்னெஸ்'.:((.
ஆனால் ஒன்று அவனது தன்னடக்கம் மிக மிக அதிகம். அதனால்தான் தன்னைப் பற்றி எழுதும் போது கூட யாரோ ஒரு மூன்றாம் மனிதனைப் பற்றி எழுதுவது போல் 'நான்' என்று விளிக்காமல் 'அவன்' என்று விளிக்கிறான்.
ஆனால் ஒன்று. இவன் 'நான் அவன் இல்லை என்று எப்போதும் சொல்லமாட்டான்' . நிச்சயமாக 'அவன் - நான் தான் (அப்பாடா தலைப்பை நியாயப்படுத்தியாச்சு!) !!'
இந்தத் தொடருக்கு நான் நண்பர் சுரேஷ்-ஐ அழைக்கிறேன்.
7 comments:
நடத்தப் படும்
அந்த ‘அவன்(ர்)’ சொன்னபடி இந்த வரலாற்றுப் பதிவை போட்டமையால் வரலாற்றுத் தொடர் வராமல் போனதிற்காக மன்னிக்கப்படுகிறான். ஆனால் இனி ஒழுங்காக பதிவுகள் வரவேண்டும் எனவும் எச்சரிக்கையும் செய்யப் படுகிறான் :)
தலைவா வேலை, குடும்பம் தான் முக்கியம். இந்த வலைப்பூ எல்லாம் சும்மா டைம் பாஸ் தான். அதுனால கவலை படாம வேலைய பாருங்க. நேரம் கிடைக்கும் போது வாங்க. ஆனா “சக்கர வியூகம்” மட்டும் மறந்திறாதீங்க :)
//SUREஷ் (பழனியிலிருந்து) said...
நடத்தப் படும்
//
நன்றி தல!!!
ஆதவனாரின் எச்சரிக்கையை கவனித்துக் கொண்டான்:))
// ☀நான் ஆதவன்☀ said...
தலைவா வேலை, குடும்பம் தான் முக்கியம். இந்த வலைப்பூ எல்லாம் சும்மா டைம் பாஸ் தான். அதுனால கவலை படாம வேலைய பாருங்க. நேரம் கிடைக்கும் போது வாங்க. ஆனா “சக்கர வியூகம்” மட்டும் மறந்திறாதீங்க :)
//
உண்மையான வார்த்தை. நன்றி ஆதவன்.
//
ஆனா “சக்கர வியூகம்” மட்டும் மறந்திறாதீங்க :)
//
கண்டிப்பா.
பட்டயக்கணக்கர் பதிவு பராம்பரியத்தை பதிச்சு பட்டயக்கிளப்பிட்டார்.
Post a Comment