Sunday, December 7, 2008

மீள்பதிவு எப்படி இடுவது மற்றும் பிற சந்தேகங்கள்

பதிவுலக நண்பர்களே, எனக்கு மீண்டும் ஒரு சந்தேகம். சந்தேகத்தைத் தீர்த்து வைப்பவர்களுக்கு 1000 பொன்-நன்றிகள் பரிசு.

சந்தேகம் இதுதான்.

மீள் பதிவு எவ்வாறு இடுவது? தயவு செய்து விளக்கினால் நான் மீள்பதிவு இடுவதற்கு வசதியாக இருக்கும்.

மற்றொரு ஆலோசனை.

எனக்குத்தான் இவ்வாறு சந்தேகம் வருகிறதா அல்லது எல்லாருக்கும் இதைப் போல் சந்தேகம் வருமா. இது போல் பதிவுலகில் வேறென்னென்ன சந்தேகங்கள் வரலாம். இதையெல்லாம் பின்னூட்டத்தில் தெரிவித்தால் இந்தப் பதிவில் சேர்த்து விடுகிறேன்.

உங்கள் உதவிக்கு மிக்க நன்றி.

தமிழால் கிடைத்த பெருமை

சற்றேறக்குறைய நான்கு மாதங்கள். நாற்பது சொச்சப் பதிவுகள். எட்டு பின் தொடர்வோர். வழக்கமாக தளத்திற்கு வருவோர் அதைப்போல் இரண்டு மூன்று மடங்கு. பெயர் சொல்ல ஒரு சரித்திரத் தொடர். இவ்வளவுதான் பதிவுலகில் என் பின்புலம். இதற்குத்தான் தமிழ்மணத்தின் நட்சத்திரப் பதிவராக அழைப்பு. ஆகவே பதிவுலகில் நான் ஒரு குழந்தை. இது எனக்குத் தமிழால் கிடைத்த பெருமையே அன்றி வேறில்லை.

என்றேனும் ஒரு நாள் நட்சத்திரப் பதிவராவோம் என்ற எண்ணம் அனைத்துப் பதிவர்களைப் போல் எனக்கும் உண்டு. ஆனால் இவ்வளவு சீக்கிரத்தில் இது நடைபெறும் என்பது எதிர்பாராதது. ஆகவே தற்போது நடப்பது நான் எதிர் பார்த்தது. ஆனால் இவ்வளவு விரைவில் நடைபெறும் என்பது எதிர் பாராதது :).

இந்த நட்சத்திர வாரத்தில் வழக்கமான சக்கர வியூகத்துடன் பல்வேறு விஷயங்களையும் தங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

இந்த நட்சத்திர வாரத்தின் மூலம் நான் அடைய விரும்புவது, அதிக அளவிலான 'ரீச்'. மேலும் பல நண்பர்கள். அதன் மூலம் எனது எழுத்தில் ஏற்பட வேண்டிய முன்னேற்றம். உங்கள் ஒத்துழைப்பு. இவை நிச்சயம் கிடைக்கும் என்பது என் நம்பிக்கை.

இடையிடையே என் எழுத்தில் ஏற்பட்ட தொய்வினைச் சரிகட்டியும் என்னுடைய பதிவிற்குத் தொடர்ந்து வந்து பின்னூட்டமிட்டும் என்னை ஊக்கப் படுத்தி வரும் அணிமா, சதீசு குமார், சுரேஷ், குடுகுடுப்பை, ஆதவன் மற்றும் பலருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. என்னை நட்சத்திரமாகத் தேர்ந்தெடுத்த தமிழ்மண நிர்வாகிகளுக்கு நன்றி. எல்லாவற்றிற்கும் மேல் இந்தப் பெருமையை எனக்களித்த தமிழுக்கு நன்றி.

தங்கள் மேலாதரவான ஆதரவை எப்போதும் போல் எதிர்பார்க்கும்,

உங்கள்
இளைய பல்லவன்.

Saturday, December 6, 2008

பெண்கள் மென்மையானவர்களா?

ஆம் என்ற பதிலுடன் நிறைவுறுகிறது இந்தப் பதிவு.

கடவுள் படைப்பில் பெண்களை 'மாஸ்டர் பீஸ்' என்றும் ஆண்களை 'டிராஃப்ட்' என்றும் கூறுவர். ஏனெனில் முதலில் ஆணைப் படைத்ததாகவும் அதில் உள்ள குறைகளை நீக்கி முழுமையான படைப்பாக பெண்ணைப் படைத்தான் இறைவன் என்பது இதன் சாரம்.

சரி மென்மையானது முழுமையானதா. பெண்களை பூவிற்கும் தென்றலிற்கும் ஒப்பிடுவது கவிஞர்களின், காதலர்களின் வழக்கம். இது ஆணீயத்தின் வெளிப்பாடே ஒழிய பெண்களை ஏற்றிப் போற்றும் செயலல்ல.

உண்மையில் மென்மை என்பது உளவியல் சார்புடையதன்றி, உடலியல் சார்ந்ததன்று.

பெரும்பாலான ஆண்களுக்கு வரும் மாரடைப்பு பெண்களுக்கு ஏன் வருவதில்லை?. ஆண்கள் இளவயதிலேயே மூப்பெய்த பெண்கள் வயதான பின்பும் திடமாக இருப்பது எதனால்? இந்தியக் குடும்பச் சூழலோ அயல் நாட்டுக் குடும்பச் சூழலோ பெண்கள் ஆண்களைச் சார்ந்தே பெரும்பாலும் இருக்கிறார்கள். ஆயினும் கணவன் மறைவிற்குப் பின் பெண்கள் தனியாக குடும்பத்தைப் பேணுவதைப் போல் மனைவியின் மறைவிற்குப் பிறகு ஆண்களால் முடிவதில்லையே ஏன்?

ஆக மென்மை என்பது அவர்கள் உலகியலை நோக்கும் பாங்கிலும் அதை எதிர்கொள்ளும் வகையிலும் இருக்கிறது. ஆண்கள் அனைத்தையும் ஒருவித உறுதியுடன் அதாவது செய்து முடித்துவிட வேண்டும், இது தன்மானம் சார்ந்த செயல் என்ற நினைப்பில் செய்யும் போது 'டென்ஷனும்' 'வெறியும்' சேர்ந்து கொள்கிறது. ஆகவே, மனம் கல்லாகி விடுகிறது. அதாவது மென்மைத் தன்மையை இழந்து விடுகிறது.

பெண்கள் அவ்வாறல்ல. செயல்களை ஒரு வித கடமையாகச் செய்கிறார்கள். ஒரு செயலை அணுகும் முறையும் வேறுபட்டு இருக்கிறது. ஆகவே அவர்கள் மென்மையானவர்களாக இருக்கிறார்கள்.

நமது பதிவுலகையே எடுத்துக் கொள்ளுங்கள். எத்துணைப் பெண் பதிவர்கள் 'கான்ட்ரவர்சியலாக' எழுதுகிறார்கள். இங்கு 'கான்ட்ரவர்சியலாக' என்பது விவகாரமான, காரசாரமான, முரண்பட்ட போன்ற பதிவுகள் எனலாம். அவர்களது பதிவுகளில் வாழ்க்கையின் இனிமையான நிகழ்வுகளும் நகைச்சுவையும் இழையக் காணலாம்.

இவற்றை எல்லாம் எழுதக் கூடாது என்பதோ, எழுதுவது தவறு என்பதோ அல்ல என்னுடைய கருத்து.

வாழ்க்கை என்பது எப்போதுமே 'ஹால்ஃப் ஃபில்ட் க்ளாஸ்' தான். பாதி நிரம்பிய கிண்ணம். அதில் எந்தப் பாதியைப் பார்க்கிறோம் என்பதில் தான் நாம் மென்மையானவர்களா, வன்மையானவர்களா என்பது அடங்கி உள்ளது.

ஆகவே, பெண்கள் மென்மையானவர்கள். ஆனால் உறுதியானவர்கள்.

டிஸ்கி (அ) பின் குறிப்பு:- இன்று காலை வெளியே செல்லும்போது, பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவன் அல்லது தன்னுடன் வரும் ஆணின் கையைப் பிடித்தவாறு செல்வதைப் பார்க்க நேர்ந்தது. அப்போது தோன்றிய கேள்விதான் தலைப்பு. அதற்கு என் மனம் பகன்ற பதில்தான் இந்தப் பதிவு.

Friday, December 5, 2008

உதவி தேவை:- ஹிட் கவுண்டர், ஆன்லைன் ஸ்டேடஸ் தெரியவில்லை.

கடந்த சில நாட்களாக, ஹிட் கவுண்டர் (இதுவரை இத்தனை பேர்), ஆன்லைன் ஸ்டேடஸ் (இப்போது இவர்கள்) ஆகியவை தெரியவில்லை.

ஜாவா ஸ்க்ரிப்ட் எல்லாம் செக் செய்து மீண்டும் பேஸ்ட் செய்து பார்த்தேன். ஒன்றும் நடக்க வில்லை.

எனக்குத்தான் தெரியவில்லையா. அல்லது என் ப்ளாக்கைப் பார்க்கும் அனைவருக்கும் தெரியவில்லையா என்பதும் தெரியவில்லை.

யாராவது உதவி செய்யுங்களேன்.

மிக்க நன்றி.

Thursday, December 4, 2008

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர்...8

அத்தியாயம் 8: திருவரங்கம்

இதுவரை:- காஞ்சிக் கடிகையில் பயின்ற சிறந்த மாணாக்கர்களுக்கு சக்கரவியூகத்தைப் பற்றி அறைகுறையாக எடுத்துரைக்கிறார் ப்ரதானாசாரியாராகிய பாஸ்கராசாரியார். மாணாக்கர்களிடையே எழும் ஆர்வத்தைத் தணிக்கத் தில்லையில் அதைப் பற்றிக் கூறுவதாகச் சொல்கிறான் மாதவன். வீர பாண்டியனும், இளவழுதியும் திருவெள்ளரைக்கு வருகின்றனர். அங்கு மாலிக் கஃபூரும், சுந்தர பாண்டியனும் சதித் திட்டத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வருகிறது.

இனி:-

மேலும் தொடர்ந்த சதியாலோசனையில் முக்கியமாகத் தெரிந்தது இதுதான். மதுரையை எப்பாடு பட்டாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற வெறியில் இருந்தான் சுந்தர பாண்டியன். அதற்குத் தூபம் போட்டுக் கொண்டிருந்தான் மாலிக் கஃபூர்.

இதையெல்லாம் மாராயரிடம் சொன்னாள் தேன்மொழி. அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாராயர், அவர்கள் அறியாவண்ணம் பின் தொடரத் தன் அந்தரங்க ஊழியன் ஒருவனை அவர்களோடு அனுப்பினார்.

இவ்வாறாக அந்த நிகழ்ச்சியை விவரிக்கும் போது வீர பாண்டியன் முகத்தில் சொல்லொணாத் துயரமும் சுயப்பச்சாத்தாபமும் மண்டியது. இடையிடையே கோபமும் கொப்பளித்தது. சற்று நேரம் அவ்விடத்தில் நிலவிய மௌனம் அந்த இரவின் அமைதியை பயங்கரமாக்கிக் காட்டியது.

இறுதியில் மாராயரே அந்த அமைதியைக் கலைத்தார்.

'இப்போது என்ன செய்வதாக உத்தேசம் வீர பாண்டியா?'

உண்மையில் மிக்க வேதனையுடன் அமர்ந்திருந்த வீர பாண்டியன், 'என்ன சொல்வதென்றே தெரியவில்லையே? பிறகுதானே என்ன செய்வது என்பதைக் கூறுவது' என்றான் விரக்தியுடன்.

'வீரா, உன் மனம் எனக்குப் புரிகிறது. ஆனாலும் மனதைத் தளர விடுவது வீரற்கு ஏற்றதல்ல. இது பாண்டிய சகோதரர்களுக்குள் ஏற்படும் சண்டையென்றால் ஒரு விதத்தில் நான் மகிழ்ந்திருப்பேன். ஏனென்றால் நான் சோழர்களின் உப்பைத் தின்று வளர்ந்தவன். ஆனால் இன்று ஏற்பட்டிருக்கும் நிலை அதையும் தாண்டிய ஒன்று. இப்போது நான் வாளாவிருந்தால், இந்தத் தமிழகத்தின் கதி வட தேசத்தின் கதியை விட மிக மோசமானதாகி விடும். ஏனென்றால் இங்கு வட தேசத்து அரசர்கள் போல் வலுவான அரசுகள் இல்லை. இங்கு இருக்கும் கோவில்களில் உள்ள சொத்துக்கள் கணக்கிலடங்காதவை. அவை அனைத்தும் மாலிக் கஃபூருக்கு தாரை வார்க்கப் பட்டுவிடும். தமிழகமும் தமிழும் அழிந்து படும்.' என்று நிறுத்தினார்.

'தந்தையே, சுந்தர பாண்டியனுக்கு மாலிக் கஃபூர் உதவுகிறான் என்பதால் மட்டும் இது மிக ஆபத்தான நிகழ்வு என்ற முடிவிற்கு வந்துவிடலாமா என்ன?'

'இளவழுதி, மாலிக் கஃபூரைப் பற்றி நீங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள். அவனுடைய நோக்கம் தக்காணத்தில் தில்லி சுல்தானின் ஆட்சியை நிறுவுவது. அதற்குத் தடையாக இருப்பவன் வல்லாளன். ஆகவே சுந்தர பாண்டியனை மதுரை அரியணையேற்றி வல்லாளனின் கவனத்தைத் திசை திருப்பப் பார்க்கிறான்.

அவ்வாறே நடப்பதாக வைத்துக் கொள்வோம். பிறகு என்னவாகும். வல்லாளன் மறைந்து விடுவான். தக்காணத்தில் சுல்தானின் ஆட்சி நிறுவப் படும். பிறகு எஞ்சியிருப்பது தமிழகம் தான். அங்கு தான் வலுவில்லாத சுந்தரனை முதலிலேயே இருத்திவிட்டானே, ஆகவே தமிழகத்தைக் கைப்பற்றுவது மாலிக் கஃபூருக்கு சிறுபிள்ளை விளையாட்டைப் போலாகிவிடும். அதற்குப் பிறகு தமிழகம் படப் போகும் பாடு கொஞ்சமா, நஞ்சமா?'

அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருப்பதை உணர்ந்ததால் கல்லாகச் சமைந்து நின்றனர் நண்பர்கள்.

அவர்களிடமிருந்து பதில் வராமல் போகவே, மேலும் தொடர்ந்தார் மாராயர்.

'வீரா, தற்போது காரியம் ஒன்றும் மிஞ்சிப் போய்விட வில்லை. இன்னும் நம் வசம் அவகாசம் இருக்கிறது. ஆனால் அதை சரியாக உபயோகித்துக் கொள்ளவேண்டும். நீ உடனே, மதுரை செல்ல வேண்டியது அவசியமாகிறது. இங்கு வந்ததாகவோ, சுந்தரனின் திட்டத்தை அறிந்து கொண்டதாகவோ காட்டிக் கொள்ளாதே. எப்போதும் போல் இரு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்.

இளவழுதி, நீ உடனே வல்லாளனைச் சந்திக்க வேண்டும். அவன் எங்கிருப்பான் என்ற விவரம் தெரியுமா?'

'தந்தையே அவன் திருவரங்கத்திற்குச் சென்று அரங்கனைத் தரிசித்து விட்டு அவன் தலை நகரம் திரும்பப் போவதாகக் கூறினான்'

'நல்லது, நீங்கள் கிளம்பிய நேரத்தில் அவனும் கிளம்பியிருந்தால் தற்போது அவன் திருவரங்கம் சேர்ந்திருக்கலாம். உடனே, திருவரங்கத்திற்குச் செல். அங்கு ஸ்ரீ வேதாந்த தேசிகர் இருப்பார். அவரிடம் வல்லாளனை அழைத்துச் செல். நான் தரும் ஓலையை ஸ்ரீ தேசிகரிடம் அளித்து, இந்த விவரங்களைத் தெரிவி. மேற்கொண்டு அவர் வழி காட்டுவார். அல்ல அல்ல. அவர் மூலம் அனவரதமும் அரவணை துயிலும் அரங்கன் வழி காட்டுவான்' என்றார் நாத் தழுதழுத்தவாறே.


(தொடரும்)

Tuesday, December 2, 2008

தீதும் நன்றும் பிறர் தர வாரா

தமிழில் தற்போது படிப்பவர்கள் எத்துணை பேர்? தமிழ் நாட்டுப் பள்ளிக்கூடங்களில் தற்போது ஆத்திச் சூடியும், கொன்றை வேந்தனும் கற்றுத் தரப் படுகிறதா? அப்படிக் கற்றுத் தரப்பட்டால் நெட்டுருவுக்காக மட்டுமின்றி அதன் பொருளும் சொல்லித் தரப் படுகிறதா?

நான் பார்த்தது வரை, தமிழகத்தில் தற்போது இரு வகையான பள்ளிகள் உள்ளன. தனியார் மெட்ரிகுலேஷன் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள். அரசு மற்றும் அரசு மானியம் பெறும் பள்ளிகள்.

இதில் முதல் பிரிவில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மட்டும் தமிழ் என்று ஒரு பாடம் உண்டு. ஆனால் பெரும்பாலான மாணவர்கள் இதில் பாஸ் மார்க் தான் வாங்குகிறார்கள். அல்லது அந்த அளவுக்குத்தான் பள்ளிகளில் கற்றுத் தருகிறார்கள். சி.பி.எஸ்.இ.யில் தமிழ் கட்டாயம் அல்லவென்று நினைக்கிறேன்.

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் தரம் சொல்லத்தரமற்றதாக இருக்கிறது. ஒன்றிரண்டு விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய ஆசிரியர்களைத் தவிர யாரும் மாணவர்களுக்கு நல்ல தமிழைக் கற்றுத் தருவதாகத் தெரியவில்லை.

அரசு உதவி பெறும் பள்ளிகள் தற்போது மெட்ரிகுலேஷன் பள்ளிகளுடன் போட்டியிட வேண்டிய சூழலில் இருக்கின்றன. அங்கும் தமிழ் வளர்வதற்கான சூழல் குறைந்திருக்கிறது.

இந்த நிலையில் சின்னத் திரையில் தமிழ் படும் பாடு தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

இவ்வாறு படிக்க வேண்டிய நிலையிலேயே தமிழை மக்கள் படிக்காவிட்டால் என்ன ஆவது?தமிழைப் பேசினால் மட்டும் போதுமா? இப்போதே நிறைய ஊடகங்களில் வழக்குத் தமிழ் உபயோகப் படுத்தப்பட்டு வருகிறது. உரை நடைத் தமிழும், இயற்தமிழும் இல்லாத நிலை இருந்து வருகிறது.

இது தொடர்ந்தால் . . . . . .

ஆகவேதான் , 'தீதும் நன்றும் பிறர் தர வாரா'.