Saturday, July 11, 2009

திரைக்கதை எழுதுவது எப்படி? . . .4

நண்பர்களே! சென்ற பதிவுகளில் திரைக்கதையைப் பற்றி ஓரளவு அறிமுகப்படுத்திக் கொண்டோம். இனி தொடர்ந்து பார்ப்போம்.

சென்ற பதிவில் காமெடி, டிராஜெடி என்று இரு பிரிவுகளைப்பற்றி பார்த்தோம். காமெடி என்றால் சினிமா வழக்கில் நாம் நினைக்கும் காமெடி அல்ல. பொதுவாக படம் ஆரம்பிக்கும் போது இருந்த நிலையை விட மேம்பட்ட நிலையில் கதா நாயகன் இருந்தால் அது காமெடி படம்!

படம் ஆரம்பிக்கும் போது இருந்த நிலையை விட கீழான நிலையில் அதாவது அவல நிலையில் படத்தின் முடிவில் இருந்தால் அது டிராஜெடி!

=====

சரி, சென்ற முறை த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சர் திரைக்கதை அமைப்பைப் பற்றி பார்த்தோம். இப்போது மற்ற முறைகளையும் பார்ப்போம்.

திரைக்கதை ஒரு ஹீரோவை மையமாக வைத்துத்தான் எழுதப்படுகிறது என்பதை நாம் நன்கு அறிவோமல்லவா? அந்த அடிப்படையில் கீழ்கண்ட திரைக்கதை அமைக்கும் முறைகள் உள்ளன.

1. கதா நாயகனின் பயணம்
2. சீக்வென்சிங்
3. ஸிட் ஃபீல்ட் மாடல்

இவையனைத்திற்கும் த்ரீ ஸ்ட்ரக்சர் தான் அடிப்படை. இனி இந்த திரைக்கதை அமைப்பு முறைகளைப் பற்றி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

=====

1. கதா நாயகன் பயணம்.

நமது கதைகள் பெரும்பாலும் கதா நாயகன் சார்ந்துதான் அமையப்பெற்றிருக்கும். அவனது சாதனைகளும் சோதனைகளும்தான் கதையை ஏற்படுத்துகின்றன என்ற அடிப்படையில் இந்தத் திரைக்கதை அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.


இந்த மாதிரி திரைக்கதையை கீழ்கண்டவாறு பிரிக்கலாம்.

அ. கதா நாயகனை எதிர் கொள்ளும் சவால்: இந்த சவால் அவனாகவே ஏற்றுக்கொள்வதாகவும் இருக்கலாம். அல்லது அவன் மீது திணிக்கப் படலாம். எது எப்படி இருந்தாலும், அமைதியான வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தும் நிகழ்வை மையப்படுத்தும் பகுதி இது.


ஆ. அந்த சவாலை சமாளிக்கும் போது ஏதிர்படும் சங்கடங்கள்: சவாலை வென்றாக வேண்டிய சூழ்நிலையில் கதாநாயகன் என்னென்ன சங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது என்பது இந்தப் பகுதியில் தெரிவிக்கப் படும். சங்கடங்களின் தாக்கம் அதிகமாகும் போது ஹீரோ அதிக அளவில் மதிக்கப் பெறுகிறான்.


இ. இந்தப் பாதையில் கதா நாயகனுக்குக் கிடைக்கும் புதிய சக்தி அல்லது யுக்தி: சங்கடங்களை எதிர்கொள்ளத் தேவையான சக்தி சமயத்தில் கிடைக்கும் போது ஹீரோவின் பயணம் சற்று சுலபமாகிறது. இந்தப் பகுதி மிகஆழமாக அலசப்படும் போது ஹீரோவின் இமேஜ் அதிகரிக்கிறது. இந்தப் பகுதிதான் படம் பார்க்கும் மக்கள் தங்களை அந்தப் படத்துடன் ஒப்பிட்டுக்கொள்ள (ரிலேடிங் ஒன்செல்ஃப் டு தி மூவி) உதவுகிறது. எந்த அளவு ஒரு ரசிகன் தன்னைப் படத்துடன் ஒப்பிட்டுக் கொள்கிறானோ அந்த அளவு அவன் அந்தக் கதையுடன் ஒன்றி விடுகிறான். ரசிகர்கள் கதையுடன் ஒன்றும் போது திரைப்படம் இயல்பாகவே வெற்றியடைகிறது!!


ஈ. புதிய சக்தி கொண்டு சவாலை முறியடித்தல் அல்லது வெற்றி பெறுதல்: இது க்ளைமாக்ஸ் எனப்படுகிறது. தனது அடிப்படைத் திறமை, சவால் காரணமாக தான் அனுபவித்த துன்பங்கள், புதிய சக்தி கொடுத்த நம்பிக்கை ஆகியவற்றின் மூலம், அவனது திறமை வெளிப்பட்டு சவாலை முறியடித்து வெற்றி பெறும் பகுதி இது. இதன் மூலம் கதா நாயகனின் பயணம் நிறைவு பெறுகிறது. அத்துடன் கதையும் முடிவடைகிறது.

இதுதான் கதா நாயகன் பயணம் என்ற முறையில் அமைக்கப் படும் திரைக்கதைகளின் அமைப்பு. இந்த வகையிலும் படம் பார்த்த ஞாபகம் வருகிறதல்லவா? ஆனால் பெரும்பாலும் ஆங்கிலப் படங்கள் தான் நம் நெஞ்சில் நினைவாடும்!!!

===

இது த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சரில் இருந்து எவ்வாறு மாறுபடுகிறது??

த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சரில், சூழ் நிலையைப் புரியவைப்பது ஒரு பெரும் பகுதி.

ஆனால், அப்படித் தேவையில்லை. கதையுடனான போக்கிலேயே சூழலைப் புரிய வைத்துவிடலாம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் கதா நாயகனின் பயணம் என்ற முறை ஏற்பட்டது. சூழலை அதன் போக்கிலேயே காட்டி, மெல்ல மெல்ல நம்மை திரைக்கதைக்குள் இழுக்கும் முயற்சி இது.

த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சரில் ஹீரோ சவாலை நேரடியாக வெல்வதாகக் காட்டும் முயற்சி நடைபெறும். இங்கு அப்படியல்ல. ஹீரோ சாமானியமானவன். ஆனால் அவன் எதிர் கொள்ளும் சவாலைச் சமாளிக்க அவனுக்கு ஒரு புதிய சக்தி தேவைப் படுகிறது. அந்த புதிய சக்தி எப்படி அவனுக்குக் கிடைக்கிறது. அதை அவன் எப்படி பயன் படுத்துகிறான் என்பது போன்ற நிக்ழச்சிகள் விரிவாக அலசப்படும் போது அந்தத் திரைக்கதை லாஜிக்கலாக அமைகிறது.

இதுதான் த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சருக்கும் ஹீரோ ஜர்னிக்கும் உள்ள வேறு பாடு. இந்த மாதிரி திரைக்கதைகளில் லாஜிக் அதிகமாக இருக்க வேண்டும். இது சூப்பர் ஸ்டார்களுக்கும் சூப்பர் ஸ்டாராக நினைப்பவர்களுக்கும் ஒத்துவராத மாடல். அதனால்தான் இந்த மாதிரி படங்கள் அதிகம் தமிழில் வருவதில்லை.

===

இப்போது நாம் முதலில் பார்த்த கதையை இந்த முறையில் திரைக்கதையாக அமைத்துப்பார்த்தால்,

1. சவால் பகுதி: நேரடியாகவே கதா நாயகன் ஏமாற்றப்படும் காட்சிகளைக் காட்டிவிடலாம். அதன் ஊடாக களனை அவ்வப்போது அறிமுகப்படுத்தும் போது முடிச்சுகள் மெள்ள மெள்ள அவிழும்.

2. சங்கடங்கள் பகுதி: அந்த சவால் காரணமாக அவன் நகரம் நோக்கி வந்த காரியம் நிறைவேறாமல் போகிறது. அல்லது அவனுக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போகிறது.

3. புதிய சக்தி: அந்த எதிரிகளை எதிர் கொள்ளும் திறமையை வளர்த்துக் கொள்வது. (அவர்கள் தொழிலில் போட்டியாக வருவது போன்றவை). மேலே சொன்னது போல் இங்கே லாஜிக் இடித்தால் அது த்ரீ ஆக்ட் ஆகிவிடும். இது எந்த அளவுக்கு மக்களைக் கவர்கிறதோ அந்த அளவுக்குத் திரைக்கததை வெற்றி பெறும்.

4. சவாலை முறியடித்தல் வெற்றி பெறுதல்: இது இறுதியான தீர்வாக அமைந்து, கதா நாயகனின் வாழ்க்கைப்பயணத்தில் அமைந்த தடைக்கற்கள் தகர்த்தெறியப்பட்டு அவன் வெற்றியுடன் மேலும் முன்னேறுகிறான் என்று நிறைவு செய்யும் பகுதி. இதை க்ரிஸ்ப் ஆக வைத்துக் கொள்ள வேண்டும். வசனங்களால் இழுக்காமல், காட்சியமைப்புகளால் மெசேஜ் சொல்லும் போது ரீச் அதிகமாக இருக்கும்.

இப்படியாக ஒரு நல்ல படத்தைப் பார்த்த திருப்தியுடன் ஒரு ரசிகன் திரையரங்கை விட்டு வெளியே வருவதோடு மட்டுமல்லாது மீண்டும் மீண்டும் அந்தப்படத்தைப் பார்க்கவும் செய்வான்.

===

சரி நண்பர்களே, அடுத்த பகுதியில் மற்ற திரைக்கதை முறைகளையும் அலசுவோம்.

உங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதுடன், தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் ஓட்டுப் போடுவதன் மூலம் இந்தப் பதிவுத் தொடரை அனைவரும் படித்துப் பயனடையுமாறு செய்யலாம்.

நன்றி...

(தொடரும்...)

Wednesday, July 8, 2009

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 8

அத்தியாயம் 8: வீர தவளப் பட்டிணம்


கடந்த அத்தியாயங்களில் பல்வேறு நிகழ்வுகள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததை நீங்கள் அறிவீர்கள். கதையின் ஓட்டத்திற்கு அது தேவையாக இருக்கிறது. பெரும்பாலும் உண்மையும் அதுதான். மனித மனம் என்றுமே ஒன்றே போல் சிந்தித்ததில்லை. மனம் சொன்னதை செய்யும் உடலும் ஒன்றே போல் செய்ததில்லை. நாம் ஒவ்வொரு இடத்திலும் அதற்குத் தகுந்தாற்போல் நம் சிந்தனைகளையும் நடவடிக்கைகளையும் மாற்றியமைத்துக் கொள்கிறோம். இதுதான் வாழ்வாதாரக் கோட்பாட்டின் அடிப்படை. (We align ourselves to the requirement of the situtation. This is the fundamental concept of survival theory. Those who does this evovle. Others perish).

இந்த வகையில்தான் ஒவ்வொரு சூழலிலும் நம் கதாபாத்திரங்கள் அந்தந்த சூழலுக்கேற்றாற்போல் தங்கள் செயல்களை மாற்றியமைத்துக் கொண்டார்கள். குறிப்பாக வல்லாளனும், சுந்தர பாண்டியனும் இப்படி மாற்றிப் பேசி வருவது அவர்கள் செயல்களை ஒட்டியே உள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

===

சுந்தர பாண்டியன் தன் ராஜ்ஜியத்தைத் தாக்க வருமாறு வலிய அழைப்பு விடுத்தது மாலிக் கஃபூருக்கு பெரும் அதிர்ச்சியைத் தரவில்லையாயினும் ஆச்சரியத்தைத் தூண்டியது. பழம் நழுவிப் பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்தது என்ற பழமொழி அவனுக்கு அப்போது தெரியாவிட்டாலும் அந்த அளவுக்கு சுந்தர பாண்டியன் தாம்பாளத்தில் வைத்து தமிழகத்தைத் தருவது போல் இருக்கிறதே என்ற எண்ணம் ஏற்படாமல் இல்லை. உள்ளுக்குள் சந்தோஷம் கொப்பளித்தாலும் மேலுக்கு வழக்கம் போலவே அமைதியாக இருந்து சுந்தர பாண்டியன் மேற்கொண்டு சொல்லப்போவதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.

"மாலிக். சுருக்கமாகக் கூறி விடுகிறேன். நீ ஹொய்சளர்களை வடக்கிலிருந்து தாக்கும் போது நான் அவர்களைத் தெற்கிலிருந்து தாக்கி ஹொய்சள தேசத்தைக் கைப்பற்றி பாண்டிய அரசுடன் சேர்த்து விடுவேன். நீ உனக்கு வேண்டிய செல்வங்களுடன் டில்லி திரும்பலாம். அதன் மூலம் என் வீரம் வெளிப்பட்டு பாண்டிய அரசுக்கு நான் நிரந்தர வாரிசாகி விடுவேன். இதுதான் நம் முதல் திட்டம். ஆனால் இப்போது நான் மதுரையை ஆட்சி செய்து கொண்டிருப்பதாலும், என் சகோதரனும் அதில் பங்கெடுத்துக் கொண்டிருப்பதாலும் அவனைக் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.

எனவே திட்டத்தில் மாறுதல் செய்துள்ளேன். நீ ஹொய்சளர்களைத் தாக்காமல் நேரடியாக தமிழகத்திற்குள் வந்து விடு. மதுரையைச் சுற்றி வளைக்கும் போது உன்னைப் பின்புறமாக வீர பாண்டியன் தாக்குவான். அப்போது அவனை நீ கவனித்துக் கொண்டால் போதும். இதற்குப் பிரதியாக உன் ஹொய்சளப் படையெடுப்பிற்கு நான் உதவுகிறேன். அத்துடன் உனக்குத் தேவையான பல அரிய பொக்கிஷங்களும் தருகிறேன். நீ ஹொய்சளர்களின் மீதான வெற்றியுடனும் எங்களது பொக்கிஷங்களுடனும் டில்லி திரும்பலாம். என்ன சொல்கிறாய்?"

மாலிக் கஃபூர் இப்போது திகைத்துத்தான் போனான். அதன் காரணம் பற்றியும் அவனால் உடனே பதிலிறுக்க முடியவில்லை. அவன் முகத்திலிருந்த புன் முறுவல் தற்போது மேலும் விரிவடைந்தது. "மாலிக் நீ உண்மையிலேயே அதிர்ஷ்டக்காரன்தான்" என்று தன்னைத்தானே மனதிற்குள் பாராட்டிக்கொண்டான்.

"நண்பா. நல்லது. அவ்வாறே செய்யலாம். இன்னும் ஒரு மாத காலத்தில் நாம் மதுரையில் சந்திப்போம், இறைவன் கருணையினால். நீ மற்ற ஏற்பாடுகளைச் செய்ய உடனே புறப்படுவது நல்லது. எதையும் காலம் தாழ்த்தாமல் செய்யவேண்டும் அல்லவா?"

"உண்மைதான் மாலிக். நான் உடனே புறப்படுகிறேன். சொன்னது ஞாபகமிருக்கட்டும். இனி உன்னைத் தொடர்பு கொள்வது சற்றுக் கடினம்தான். ஆயினும் முயற்சிக்கிறேன்." என்றவாறே கிளம்பினான் சுந்தர பாண்டியன். அவன் புரவி மறையும் வரை காத்திருந்த மாலிக் அவசர அவசரமாகத் தனது தளபதிகளை வரச்சொன்னான். மாலையில் நடந்த அந்த சந்திப்பு தக்காணம் என்று அறியப்படும் தென்னிந்தியாவிற்குத் தெரிந்திராத பல நிகழ்வுகளுக்கும், வரலாற்றின் மாற்றத்திற்கும் காரணமாக அமைந்தது. மாலிக் கஃபூரின் மனக்கணக்கு அவனது தளபதிகளுக்குப் புரியவில்லை.

ஒவ்வொருவரும் போடும் கணக்கு ஒவ்வொரு விதம். ஆனால் ஆண்டவன் கணக்கு அலாதியானது. இறுதியானது. சிலருக்குக் கூடுதல், சிலருக்குக் குறைவு. யாருக்கும் கேட்டது, கேட்டது போல் கிடைப்பதில்லை!.

===

பாண்டிய தேசம் இரு தலை நகரங்களிலிருந்து ஆட்சி செய்யப்பட்டு வந்தது. புதுத் தலை நகரம் வீர தவளப் பட்டினம். (காஞ்சிக்கருகில் இருந்ததாக வரலாற்றாய்வர்கள் சிலர் கருதுகிறார்கள். ஆனால் சரியான இடம் இது என்று அறுதியிட்டுக் கூறவியலவில்லை. வந்தவாசியாக இருக்கலாம் என்பது என் எண்ணம். வீரதவளப்பட்டணம், வந்து வசித்த இடம் ஆகியவ மருவி வந்தவாசி ஆகியிருக்கலாம். வந்தவாசி, பின்னர் ஆற்காட்டு நவாப்களின் முக்கியக் கோட்டைகளில் ஒன்றாக விளங்கி, ஆற்காடு - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்த நகரம். இங்கு நடைபெற்ற ஆங்கில ப்ரெஞ்சு யுத்தம், தென்னிந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு அடிகோலியது. நம் கதைக்கு வந்தவாசியை வீரதவளப்பட்டினமாக அமைத்துக் கொள்வது தவறாகாது என்பதால் அதையே பயன் படுத்துகிறேன்.)

காஞ்சிக்குத் தென் மேற்கில், மதுரைக்குச் செல்லும் ராஜபாட்டையில் அமைந்திருந்தது இந்தக் கோட்டை நகரம். அங்கு ஏற்கனவே இருந்த சிறு கோட்டையையும், மாளிகையையும் புதுப்பித்து தலை நகருக்கேற்றார்ப்போல் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தது. படை கலன்களும், படைவீடுகளும் சுற்றுப்புறத்தில் ஏற்பட்டன. புதிய மந்திரிகளும், அரசாங்க அதிகாரிகளும் நிர்வாகத்தைக் கவனிக்கத் தொடங்கினர். மதுரைக்கும் வீர தவளப்பட்டணத்திற்கும் இருந்த ராஜபாட்டையானது செம்மைப் படுத்தப்பட்டது. அருகிலிருந்த சிறு குன்று அந்நகருக்கு அழகு சேர்த்தது.


இவையனைத்தும் விக்ரம பாண்டியரது தலைமையிலும், நேரடிக் கண்காணிப்பிலும் நடைபெற்று வந்தன. புதிய அரசனான வீர பாண்டியனோ இவை எதிலும் பட்டும் படாமல் விலகியே நின்றான். அவன் உள்ளத்தில் இந்த ஏற்பாட்டின் தாக்கம் ஓயாது கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்தது. விக்ரம பாண்டியர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் பயனில்லாமல் போகவே ஓர் உபாயம் செய்தார். இருவரை அழைத்து வர ஏற்பாடு செய்தார் வந்ததோ நால்வர். அவர்கள் இளவழுதி, அவனது தந்தை மாராயர், சகோதரி கயல்விழி மற்றும் அவனது மாமன் மகள் தேன்மொழி.

கயல்விழியையும் தேன்மொழியையும் பார்க்கும் போது அவர்கள் இன்னும் மணமாகமல் இருக்கக் காண்கிறோம். முன்பு பார்க்கும் போது இருந்த குழந்தைத் தனம் குறைந்து பக்குவப்பட்டிருந்தாள் கயல்விழி. அந்தப் பக்குவம் அவள் அழகுக்கு மெருகூட்டியது. தான் இங்குதான் வாழப்போகிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டிருப்பதை விழியென்னும் ஏரிக்குள் தத்தளிக்கும் மீன்களாகத் திரியும் அவளது கண்ணின் மணிகள் காட்டிக் கொடுத்து விடுகின்றன. அவளது பருவம், கனிந்து அறுவடைக்குக் காத்திருக்கும் நெற்கதிர்களைப்போல் விளைந்து நின்றதை நாம் உணர்ந்து கொள்கிறோம்.

தேன்மொழியோ அடியோடு மாறிப்போய்விட்டாள். கொல்லிமலைப் படையை இளவழுதியின் கட்டுப்பாட்டில் விட்டதோடல்லாமல், இவளும் அவனிடம் கட்டுண்டுவிட்டாள். இளவழுதியின் கண்கள் தாவும் இடங்களிலெல்லாம் இவளும் நோக்குவதை நாம் பார்க்கத்தவறவில்லை. கயல்விழியுடன் அடிக்கொருதரம் பேசியபடியும், குறுஞ்சிரிப்பு செய்தபடியும் வந்து கொண்டிருந்தது, இளவழுதியின் கவனத்தைச் சிதறடித்தது. அவனால் இவர்கள் புறம் திரும்பாமல் இருக்க முடியவில்லை. அப்படித் திரும்பும் போதெல்லாம் அதிகமாகிய அவர்களது சிரிப்பு, அவன் கோபத்தைக் கிளறியது. முகத்தைக் கடுகடுவென்று வைத்துக்கொண்டான்.

மாராயரோ இவற்றையெல்லாம் கவனித்தும் கவனிக்காதது போல் புதிய தலை நகரை நோட்டம் விட்டார். அத்தலை நகரில் உள்ள பாதுகாப்புக் குறைவையும் கவனத்தில் கொண்டார். வீரபாண்டியன் நல்ல பிள்ளை. ஏன் இந்த முடிவெடுத்தான் என்ற கேள்வியை அவனிடமே கேட்டுவிடுவது என்ற முடிவில்தான் அங்கு வந்திருந்தார்.

இப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையிலிருந்தாலும் அவர்களுக்குள்ளே மேலோட்டமாக பேச்சு இருந்து கொண்டேதான் இருந்தது. நால்வரும் தனித்தனி குதிரைகளில் வந்துகொண்டிருந்தனர். கோட்டை வாயிலை அடைந்தபோது விக்ரமபாண்டியர் வரவே, அவர்கள் அங்கேயே குதிரையிலிருந்து இறங்க வேண்டியதாயிற்று.

"ஆகா. வந்துவிட்டீர்களா? உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். கயல்விழி, நலமா?" என்று குறிப்பாக விசாரித்தவர், பதிலுக்குக் காத்திராமல், "நாம் விரைந்து மாளிகைக்குச் செல்வது நலம். வீர பாண்டியன் செய்கை சற்றும் விரும்பத்தகாததாக இருக்கிறது. அதற்காகத்தான் உங்களை அழைக்க வேண்டியிருந்தது. வாருங்கள் சென்று கொண்டே பேசுவோம்".என்று அவசரப்படுத்தினார்.

"என்ன செய்துவிட்டான் வீரபாண்டியன்?" வினவினார் மாராயர்.

"ஒன்றும் செய்யவில்லை. புதிய அரசன் என்ற முறையில் எதுவுமே செய்வதில்லை. அனைத்தையும் நான்தான் செய்ய வேண்டியிருக்கிறது. அன்று ஒப்புக் கொண்டவன் இன்று பின் வாங்குகிறான். இப்போது இந்தக் கோட்டையை நீங்கள் கவனித்ததை நானும் பார்த்தேன். இதிலுள்ள பாதுகாப்புக் குறைபாடுகள் எனக்கும் தெரியும். ஆயினும் நான் ஒருவன் என்ன செய்வது? அவன் திருந்தினால் ஒழிய ஒன்றும் நடக்கப் போவதில்லை. நீங்கள் தான் வந்து சொல்லவேண்டும்" என்று படபடவென்று பொரிந்து தள்ளினார்.

"நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம் நாங்கள் வந்துவிட்டோமல்லவா. எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கையிருக்கிறது. பிறகு எல்லாம் திருவெள்ளரை புண்டரிகாக்ஷன் செயல்" என்று குறிப்பிட்டார் மாராயர்.

இவர்கள் இருவரைத் தொடர்ந்து மற்ற மூவரும் அரண்மனை மாளிகை நோக்கிப் பயணித்தனர். அவர் சொன்னது சரிதான் என்பது போல் வீரபாண்டியனின் நடவடிக்கைகளில் உடனடி மாற்றம் ஏற்பட்டது. உற்சாகம் எங்கும் தொற்றிக்கொண்டது.

(தொடரும்)

Tuesday, July 7, 2009

ரூ.10,00,00,00,00,00,000 (அ) மட்ட்ட்டமான பட்ஜெட்

காங்கிரஸ் அரசின் இரண்டாவது ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தின் முதல் பட்ஜெட்டின் மதிப்பு ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டிவிட்டதைத் தவிர அதில் பெரிதாக ஒன்றுமில்லை என்பதுதான் உண்மை.

இந்த பட்ஜெட்டைக் கொடுத்து ப.சிதம்பரம் ரொம்ப நல்லவர் என்ற பெயரை வாங்கிக் கொடுத்துவிட்டார் பிரணாப் முகர்ஜி. ஆக அமைச்சர்கள் மாறுவதால் பட்ஜெட்டில் மாற்றம் ஒன்றும் இல்லை.

முன்பெல்லாம் பெட்ரோல் விலையை பட்ஜெட் அன்றுதான் உயர்த்துவார்கள். ஆனால் இப்போது சரியாக ஒரு வாரத்திற்கு முன் ஏற்றிவிட்டார்கள். இல்லையென்றால் அதனுடைய தாக்கமும் சேர்ந்திருக்கும்.

உலகப் பொருளாதாரச் சிக்கலில் இந்தியா மாட்டிக்கொள்ளவில்லை என்று பெருமையாகச் சொல்லியிருப்பவர், ரூ.1,86,000 கோடி ரூபாய்களை இந்தச் சிக்கலில் மாட்டியிருப்பவர்களுக்கு வங்கிகள் கடனாக அளிக்கும் என்று அறிவித்துள்ளார். மேலும் வளர்ச்சியை மேம்படுத்த ஏற்பட்டுள்ள நடவடிக்கைகள் மூலம்தான் பட்ஜெட்டின் பற்றாக்குறை 3.5% அதிகரித்துள்ளது என்று சொல்கிறார். சென்ற வருடம் 6.2%ஆக இருந்த பற்றாக்குறை இந்த முறை 6.8% இருக்கும் என்று சொல்கிறார். 9% வளர்ச்சி இலக்கு. பற்றாக்குறை 6.8%. ஆக நிகர வளர்ச்சி 2.2%தான். இது இந்த பட்ஜெட் மூலம் சாத்தியப் படாது என்பதால் இந்த வருடமும் மந்த நிலை நீடிக்கும்.

விவசாயமும் தொழிலும் நாட்டின் முதுகெலும்பாகும். அதனால்தான் பாரதி உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று கூறினார்.

ஆனால் விவசாயத்திற்கு என ஒன்றுமே செய்யவில்லை இந்த பட்ஜெட்டில். உர மானியம் மாற்றியமைக்கப்படும் என்ற அறிவிப்பு நிர்வாக வசதிக்காக ஏற்படுத்தப் பட்டதேயன்றி, விவசாயிகளுக்காக அல்ல. விவசாயக் கடன்களைத் திருப்பிச் செலுத்தினால் 1% கூடுதல் இன்சென்டிவ் என்ற அறிவிப்பினால் உண்மையான விவசாயிகளுக்கு என்ன பயன்? கடனைச் செலுத்தும் திறன் இருந்தால் ஏன் விவசாயி கடனை வைத்துக் கொண்டு திண்டாடப் போகிறான்? விவசாயக் கட்டமைப்புக்கான திட்டங்கள் என்ன?

சரி. உள் நாட்டுத் தொழில்துறையின் தேவை என்ன? தடையில்லா மின்சாரம், தேவையான கடன் வசதி, தொந்தரவில்லா அரசு இயந்திரம். இவற்றுக்கான அறிவுப்புகள் என்ன? தங்கத்திற்கான இறக்குமதி வரியை ஏற்றியவர், இந்திய சிறுதொழில்களை நசுக்கும் இறக்குமதிகளைக் கண்டுகொள்ளாதது ஏன்?

மாத வருமானம் பெறும் ஊழியர்களுக்கு என்ன சலுகை? ரூ.10000 ஏற்றியிருப்பது ஊழியனுக்கும் பொருந்தும். வியாபாரிகளுக்கும் பொருந்தும். வியாபாரிகளுக்கு வருமான வரியில் பல்வேறு சலுகைகள் உள்ளன. ஊழியர்களுக்கு ஒன்றுமேயில்லை.

ஃப்ரிஞ்ச் பெனிஃபிட் டாக்ஸ் என்ற ஒன்றை நீக்கியிருப்பதால் பெரும்பாலானோர் சந்தோஷமடைந்திருக்கிறார்கள். உண்மையில் அந்த டாக்ஸ் இப்போது மீண்டும் ஊழியர்கள் தலையில்தான் விழும் என்ற உணமையை உணரத் தவறி விட்டார்கள்.

ஏற்றுமதி மற்றும் சாஃப்ட்வேர் நிறுவனங்களுக்கு கொடுத்த வரிச் சலுகைகளால் அவர்கள் லாபம் காட்டினாலும், வரிகட்ட வேண்டிய சூழல் இல்லாமல் இருந்தது. இதை நீக்க மாட் (மினிமம் ஆல்டர்னேடிவ் டாக்ஸ்) என்ற ஒன்று கொண்டுவரப்பட்டது. முதலில் 7.5% ஆக இருந்தது 10% ஆக மாறியது. இப்போது 1998-99 முதல் பின் தேதியிட்டு 15% ஆக உயர்த்தியிருப்பது ஒரு சலுகையைக் கொடுத்து மீண்டும் பறிப்பது போல் ஆகுமல்லவா?

இது வரை இரயிலில் சரக்கு அனுப்பினால் சேவை வரி கட்டத் தேவையில்லை. இப்போது அதற்கும் சேவை வரி கட்ட வேண்டும். இது இறுதியில் யார் கட்ட வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும், எனக்குத் தெரியும். ஆனால் நிதியமைச்சருக்கோ, நிதித்துறை நிர்வாகிகளுக்கோ தெரியுமா தெரியாதா என்பது எனக்குத் தெரியாது.

இதைத் தவிர மூன்று ரூபாய் அரிசி, பல்வேறு 'யோஜனா'க்கள் ஆகியவற்றால் மக்களுக்கு ஒரு பிரயோஜனமும் இருக்காது என்பது உங்களுக்குத் தெரியும், எனக்கும் தெரியும். ஆனால் ... (முன் பாராவையே படித்துக் கொள்ளலாமே).

இறுதியாக, திட்டச் செலவினங்கள், திட்டம் சாரா செலவினங்கள் என்று பட்ஜெட்டில் உண்டு. திட்டச் செலவினங்களால் கட்டுமானம் பெருகி வேலைவாய்ப்பு உண்டாகி, மக்களுக்கு நன்மை பயக்கும். திட்டம் சாரா செலவினங்களால் ஒரு பைசாவிற்கும் பிரயோஜனமில்லை. இந்த பட்ஜெட்டில் திட்டம் சாரா செலவினம் 6.95 லட்சம் கோடி. திட்டச் செலவினம் 3.25 லட்சம் கோடி. அதாவது 1 ரூபாயில், 65 காசு வீணாகச் செலவழிக்கவும் 35 காசு ஏதாவது நல்ல காரியம் என்ற பெயரிலும் செலவழிக்கப் படுகிறது.

இப்போது சொல்லுங்கள். இந்த பட்ஜெட் நான் தலைப்பில் சொன்ன மாதிரியா அல்லது. . .

Saturday, July 4, 2009

திரைக்கதை எழுதுவது எப்படி? . . .3

சென்ற பதிவில், த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சர் பற்றி தெரிந்து கொண்டோம். முதல் பகுதியில் சொன்ன கதைக்கு திரைக்கதை அமைக்குமாறும் கேட்டிருந்தேன். இப்போது த்ரீ ஆக்ட் திரைக்கதை (அவுட்லைன்) எப்படியிருக்கும் என்று பார்ப்போம்.


கதை:

ஒரு கிராமத்து இளைஞன். நகரத்திற்கு வரும்போது ஏமாற்றப் படுகிறான். கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி ஏமாற்றியவர்களை திருத்துகிறான். இந்தக் கதைக்கு ஒரு திரைக்கதை அமைத்துத்தாருங்கள். ஆறு முதல் பத்து வரிகளுக்கு மேல் இருக்கக் கூடாது.


இதற்கான த்ரீ - ஆக்ட் ஸ்ட்ரக்சர்.

1. செட்டிங் (சூழல்)

கிராமத்து இளைஞன், கிராமம், நகரம், நகர மாந்தர் இயல்பு இவை அடிப்படை சூழல்கள்

2. பிரச்சனை, போராட்டம் (சிக்கல்)

ஏமாற்றப்படுதல், தெளிவு பெறுதல், முன்னேறுதல்

3. தீர்வு

ஏமாற்றியவர்களைக் காப்பாற்றுவது, திருந்தச் செய்வது, வெற்றி பெறுவது.

இப்படி பார்ட் பார்ட் ஆக எடுத்துக் கொள்ளலாம். இதையே திரைக்கதை அவுட்லைன் ஆக சொல்லும் போது இப்படிச் சொல்லலாம்.

1. கிராமத்து சூழலையும், கள்ளம் கபடமற்ற மக்களையும், ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு, நம்பி வாழ்வதையும் இத்தகைய சூழலில் வளரும் இளைஞன் அவர்களின் அன்புக்குப் பாத்திரமாவதையும் சொல்ல (காட்ட) வேண்டும்.

2. அத்தகைய இளைஞன் தவிர்க்க முடியாத சூழலில் நகரத்திற்கு வருவதைக் காட்ட வேண்டும்.

3. நகரத்து சூழலையும், இளைஞனை ஏமாற்றப் போகும் மனிதர்களின் இயற்கை அராஜக நிகழ்வுகளையும், நகரில் இதெல்லாம் சாதாரணம் என்பதான தோற்றத்தை ஏற்படுத்தக் கூடிய காட்சிகளையும் காட்ட வேண்டும்.

இது செட்டிங் (சூழல்) பார்ட். ஸ்டார்டர் மாதிரி. இப்படிப்பட்ட சூழலில் நகருக்கு வரும் இளைஞன் என்ன பாடு படப்போகிறானோ என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைக்க வேண்டும். இதுதான் இந்தப் பகுதியின் அப்ஜெக்டிவ்.



4. நகரத்தில் மனிதர்களை நம்புவதையும், அதனால் ஏமாற்றப்பட்டு இருக்கும் உடைமைகளை இழப்பதையும் காட்ட வேண்டும். (இங்கே, கிராமத்து நிகழ்வையும், அதே போன்று நகரத்தில் மாறுபட்ட நிகழ்வையும் காட்டலாம்)

5. மேலும் திரைக்கதைக்கு வலு சேர்க்க, இரண்டாவது முறையும் ஏமாற்றப்படுவதாகக் காட்டலாம். ஆனால் ஓவர்டோஸ் ஆகிவிடாமல் இருக்க வேண்டும்.

6. இதிலிருந்து பாடம் கற்பதாகவும், உழைக்கும் வழி கிடைப்பதாகவும் காட்டவேண்டும்.

7. அந்த உழைப்பிலிருந்து முன்னேறும் நிகழ்வுகள் படிப்படியாகக் காட்டப்பட வேண்டும். (இங்கேதான் லாஜிக் முக்கியம். பெரும்பாலான படங்களில் ஒரு பாட்டில் நாயகன் உயரத்திற்குச் சென்றுவிடுவான்.)

8. அப்படி வளரும் இளைஞன் ஏமாற்றியவர்களுக்கு சிறு சிறு இடைஞ்சல்கள் தருவதாகக் காட்டுவது இளைஞன் வெற்றிப்பாதையை நோக்கிச் செல்வதாகக் காட்டும்.


இது சிக்கல் பகுதி. மெயின் கோர்ஸ். விஸ்தாரமாகவும், காரசாரமாகவும் இருக்கவேண்டும். பாசிடிவ் திங்கிங் இருந்தால் எப்படி ஒருவன் வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தை விதைக்கக்கூடிய அளவுக்கு இருத்தல் அவசியம்.


9. இறுதியில் ஏமாற்றியவர்கள் சிக்கலில் மாட்டிக் கொண்டு முழிக்க, இளைஞன் மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற வகையில் நிகழ்வை ஏற்படுத்த வேண்டும்.

10. ஏமாற்றியவர்கள் செய்வதறியாது நிற்க, இளைஞன் தானாகவே சென்று உதவி செய்து அவர்களை மீட்பது போலவும், அதற்கு அவர்கள் நன்றிக்கடன் பட்டு திருந்துவது போலவும் காட்சியமைப்பு வேண்டும்.

11. இறுதியில் உண்மையே வெல்லும் என்ற மெசேஜுடன் திரைப்படம் முடியவேண்டும்.

இது தீர்வுப்பகுதி. டெஸர்ட். சுவீட்டாகவும், ஹாட்டாகவும், கூலாகவும் இருக்க வேண்டும். குலாப்ஜாமூன் வித் ஐஸ்க்ரீம் காம்பினேஷன் போல.

என்ன படித்து விட்டீர்களா??? படிக்கும் போதே பல்வேறு திரைப்படங்களின் காட்சிகள் கண்முன் நிழலாடியிருக்குமே!!!

இந்த அடிப்படையில்தானே பெரும்பாலான படங்கள் வருகின்றன? ஆனால் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதது போல் வெற்றிபெறச் செய்வதில்தான் திரைக்கதை அமைப்பாளரின் கைவண்ணம் இருக்கிறது.


இது அடிப்படை திரைக்கதை அமைப்பு முறை. இதே முறையில் எந்தக் கதையையும் திரைக்கதையாக மாற்றி விடலாம்.

இவ்வளவுதானா?

இல்லை. இனிமேல்தான் எல்லாம்....

இப்படி அமைக்கப் பட்ட திரைக்கதை ப்ளெயின் ரைஸ் போன்றது. இதனுடன், காதல், டூயட், காமெடி, சென்டிமென்ட் போன்ற மசாலாக்களை சேர்த்து, நமக்கு பிரியாணியாக வழங்குகிறார்கள். ஒரே பிரியாணியை மீண்டும் மீண்டும் கொடுத்தால் அரைத்த மாவையே அரைக்கிறார்கள் என்பார்கள்.

உண்மையில் எல்லோரும் அரைத்த மாவைத்தான் அரைக்கிறார்கள். ஆனால் அது வெளியே தெரியாத அளவிற்கு அரைப்பதில்தான் இருக்கிறது திறமை.

====

இதுவரை அடிப்படை திரைக்கதை அமைக்கும் முறையைத் தெரிந்து கொண்டோம். மேலும் சில வகைகள், காமெடி, டிராஜெடி போன்றவற்றைத் தெரிந்து கொள்வோம்.

தொடர்ந்து வாருங்கள்...

எக்சர்சைஸ்: மேலே சொன்ன திரைக்கதையை மையமாகக் கொண்டு நீங்கள் பார்த்த வெற்றிப் படங்கள் என்னென்ன? தோல்விப்படங்கள் ஏதேனும் உண்டா?? பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்.

(தொடரும்)

தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் ஓட்டுப்ப்போடுவது, இந்தப்பதிவைப் பலரும் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

Friday, July 3, 2009

நானும் நானும்...

கவிதை எழுதி நீண்ட நாட்களாயிற்றென்றாலும் அந்த தாகமும் அதன் தாக்கமும் என்னை விட்டகன்றபாடில்லையாகையால்மீண்டும் ஒரு கவிதைத் தொகுப்பு.


1. முதலும் முடிவும்..

முதலில் முடியும்
முதலும்..
முடிவில் முதலாய் வரும்
முடிவும்...
முதலும் இல்லை
முடிவும் இல்லை என்கிறது
முத்தாய்ப்பாய் ...



2. இல்லாமலிருத்தல்

எங்கே எதுவும்
இல்லாமல் இருக்கிறதோ
அங்கே
இல்லாமை
இருக்கிறது...



3. எங்கே அழகு

உன்னிடம்
இருக்கும் அழகு..
நீ என்னோடு
இருப்பதால்
என்னிடம்
இருக்கிறது..



4. குழந்தை

எதிர்ப்பார்ப்பின்றி
எதிர்பார்க்கும்...
ஏமாற்றினாலும்
ஏமாறாது
நம்மை ஏமாற்றும்


5. தொலைந்தது

தேடிக்கொண்டிருக்கிறேன்...
எதைத்
தொலைத்தேன்
என்பதை..



6. ஏன்

கேட்டேன்..மறந்தேன்.
பார்த்தேன்..நினைத்தேன்..
செய்தேன்..உணர்ந்தேன்..
ஏன்?


7. நானும் நானும்

நானும் நானும்
வேறல்ல என்றாலும்
நானும் நானும்
ஒன்றானதால்
நானும் நானும்
நண்பர்கள்


8. ஒளி

இருளைப்
போக்குவதால் அல்ல
இருளற்றிருப்பதால்
அது
ஒளி..



9. தத்துவம்

தவறானதெதுவும்
தத்துவமாகாததானாலும்
தத்துவம்
தவறாகலாம்..

10. கவிதை

எழுதாமல்
இருந்தாலும்
கவிதை
கவிதைதான்.


இதன் தாக்கத்தை சற்றே தெளிவுபடுத்திச் செல்வீர். என் கவிதைத் தாகத்தைத் தீர்ப்பீர். உங்கள் கருத்துக்களே என் கவிதைக்கு சுவாசக் காற்று.

Wednesday, July 1, 2009

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 7

அத்தியாயம் 7 : இணைந்த கைகள் இணையாத மனங்கள்

இயற்கை நம்மை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதற்குச் சிறந்த அடையாளம் மக்களின் நாகரீகம்தான். நாகரீகங்கள் ஆற்றுப்படுகைகளிலேயே உருவாயின. நீரைச் சார்ந்து விவசாயம். விவசாயம் சார்ந்து வாழ்க்கை. வாழ்க்கையின் அடிப்படைத் தேவையான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம். இவை கிடைத்தபின் மனிதர்கள் மற்ற தேவைகளைப் பற்றி சிந்திக்கிறார்கள். அப்படித் தோன்றியவைதான் இசை, இலக்கியம், நாட்டியம், ஓவியம் முதலியன. இவை மனிதர்களின் மனதைப் பண்படுத்தின. பண்பட்ட மனம் மற்றவர்களைப் புண்படுத்தாது.

இதைத்தான் நாகரீகம் என்கிறோம். நாகரீகமற்றவர்கள் இத்தகைய கலைகளில் ஈடுபாடற்றவர்கள் என்று சொல்வதை விட ஈடுபட வாய்ப்பில்லாதவர்கள் என்பதே சரி. அதனால்தான் மற்ற வறண்ட பிரதேசங்களில் மக்களின் மனது அந்தப் பிரதேசம் போலவே கடுமையாகவும், கொடுமையாகவும், ஈவு இரக்கம் என்ற வார்த்தைகளுக்கு இடமில்லாமலும் இருக்கின்றது. இவற்றுடன் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி, அவர்களுள் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஈரத்தையும் அழித்து விடுகிறது. இப்படித்தான் கொடுங்கோலர்கள் உருவாக்கப்படுகிறார்கள். அப்படி உருவானவன்தான் மாலிக் கஃபூர்.

அது கி.பி.1309ம் வருடத்தின் கோடைக்காலம். தெலிங்கானா என இன்று அறியப்படும் பகுதியில் அவன் தங்கியிருந்தான். அது அவனது தலை நகரமான டெல்லிக்கும், கைப்பற்றத் துடிக்கும் தமிழகத்திற்கும் நடுவில் அமைந்திருந்தது. கிருஷ்ணா, கோதாவரி ஆகிய நதிகளும் அவற்றின் உப நதிகளும் அங்கு பாய்ந்தாலும், அங்கெல்லாம் தங்காமல், கல்லும், முள்ளும் கலந்த பாறைப் பிரதேசத்திலேயே தங்கியிருந்தான். வெயிலின் உக்கிரமும் உச்சத்திலிருந்த காலம் அது. அவனுக்கோ வெண்ணிலவின் தண்ணொளியைப் போன்ற மயக்கத்தைத் தந்தது. நீர் என்ற பொருள் தங்கத்தை விடவும் விலையுயர்ந்த பகுதி. அவனுக்கென்ன கவலை? அது மற்றையோர் பாடு.

அவனது கூடாரம் நடுவிலும், மற்ற சிறு பணியாளர்களின் கூடாரம் அருகிலும் சிறு காவல் படை சற்று தள்ளியும் அந்த பொட்டல் பிரதேசத்தில் அமைந்திருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை சமவெளியாகவே காட்சியளித்தது. மருந்துக்குக் கூட ஒரு மரம் இல்லை. அங்கிருந்து சுமார் பத்து மைல் அருகிலிருக்கும் ஊரிலிருந்துதான் தண்ணீர் முதலான பொருட்கள் வந்து கொண்டிருந்தன. அங்கு வருவதற்கு அது ஒன்று தான் வழி. மற்ற திசைகளில் சென்றால் அது காட்டுக்கும் மலைக்கும் சென்றடைந்து விடும்.


ஆறு மாதத்திற்கு முன் அவன் மதுரையிலிருந்து திரும்பி வந்த பின் வேறெங்கும் செல்லாமல் அங்கேயே தங்கியிருந்தான். தூதுவர்களை தகவல்களோடு அனுப்புவதிலும், ஒற்றர்களை ஏவுவதிலும், அவ்வப்போது தளபதிகளை வரவழைத்து ஆணையிடுவதிலும் காலம் கழித்தான். இப்போதும் மேலுக்கு அமைதியாக இருக்கும் மாலிக் கடந்த இரு வாரங்களாக பரபரப்புடனேயே காணப்பட்டான். யாரையோ எதிர் பார்ப்பது அனைவருக்கும் தெரிந்தது. யாரென்றுதான் தெரியவில்லை. மாலிக்கும் சொல்லவில்லை.

ஒரு வழியாக அவன் நினைத்த நபரும் வந்தார். முகங்கள் புன்முறுவல் பூத்தன. உடல்கள் ஆரத்தழுவி உறவாடின. கைகள் இணைந்தன. உள்ளங்கள் விலகியே நின்றன.

"வாருங்கள் நண்பரே, இப்போதாவது வழி தெரிந்ததா? ஓலை மேல் ஓலை அனுப்பியும் பயனில்லாமலிருக்கவே நீங்கள் எம்மை மறந்துவிட்டீர்கள் என்றே எண்ணினேன். நல்ல வேளை. இறைவன் கருணை செய்து தங்களை இங்கே தருவித்தான். இறைவனுக்கு நன்றி" மாலிக்கின் தேன் தடவிய வார்த்தைகள் வந்தவரை எறும்பாக மாற்றி அழைத்தன.

"முதலில் என்னை ஒருமையில் அழைத்தால்தான் நான் இங்கே இருப்பேன். இல்லையேல் இப்போதே கிளம்பிவிடுகிறேன்" என்று எழுந்தார் அங்கு வந்தவர்.

"சரி சரி. சற்று பரிகாசம் செய்யலாம் என்றால் விடமாட்டேன் என்கிறாயே. என்னை மறந்துவிட்டயா அதைச் சொல் முதலில்"

"ம். அப்படி வா வழிக்கு. உனக்குத் தான் நடப்பவை அனைத்தும் தெரியுமே. நான் அனுப்பிய தகவல்கள் வந்து சேரவில்லையா?"

"வந்து கொண்டுதானிருக்கின்றன. ஆனாலும் அவற்றில் புதிய தகவல்கள் ஒன்றுமில்லை. எனவேதான் நம் திட்டம் என்ன ஆயிற்று என்ற கவலை என்னை வாட்டியது. இன்னும் ஒரு வாரம் நீ வராதிருப்பாயேயானால், நானே அங்கு வந்திருப்பேன்."

"மாலிக். நீ செயல் பட வேண்டிய நேரம் வந்து விட்டது. என்னைப் பொறுத்தவரையில் ஒரு வழியாக பதவியேற்றுக்கொண்டுவிட்டேன். ஆனாலும் தொல்லைகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன. இதனிடையில் என்னை வீரனாக நிலை நிறுத்திக் கொள்ள உன் உதவி உடனே தேவையாயிருக்கிறது. அதனால்தான் தகவல் அனுப்பாமல் உன்னைத் தேடி நானே வந்திருக்கிறேன். நம் திட்டத்தை செயல் படுத்தும் நேரம் வந்துவிட்டது"

"கவலையை விடு நண்பா. நான் எப்போதோ செயலில் இறங்கிவிட்டேன். படைகள் தயாராக இருக்கின்றன. என் ஆணை ஒன்றுதான் தேவை. உன் எண்ணம் ஈடேறும் நாள் வெகு தொலைவில் இல்லை சுந்தரா." ஆம். சுந்தர பாண்டியன் தான் அந்த நபர். தற்போது மதுரை மாமன்னர்.

"என் சகோதரனும் பாண்டிய அரசனாக இருக்கிறான். ஆகவே, என் திட்டத்தில் சிறு மாறுதல்."

"நானும் கேள்விப்பட்டேன். உன் சகோதரன் ஒரு புது தலை நகரில் பாண்டிய மன்னனாக முடிசூடிக் கொண்டிருக்கிறானாமே? என்ன நடந்தது? சற்று விவரமாகச் சொல் சுந்தரா?"

"சொல்கிறேன். என் தந்தையின் மறைவிற்குப் பிறகு எங்களுக்குள் யார் பதவியேற்பது என்ற போட்டி ஏற்பட்டது. என் தந்தையின் விருப்பம் வீரபாண்டியன் அரசாள வேண்டுமென்பது. மந்திரி ப்ரதானிகளின் விருப்பம் நான் பதவியேற்க வேண்டுமென்பது. ஆகவே ஓர் உடன்பாடு எங்களுக்குள் ஏற்பட்டது. இருவரும் நாடாள்வது என்பதே அது. ஒரு தேசம் இரு அரசர்கள். உண்மையில் எனக்கு இதில் விருப்பமில்லை நண்பா. அதனால்தான் உன்னை அழைக்க வந்திருக்கிறேன். பாண்டியதேசம் முழுவதும் எனக்கு வேண்டும்."

"எனக்கும்தான்" என்றான் மாலிக் கஃபூர் மர்மப் புன்னகையுடன்.

"என்ன?"

"அதாவது, உனக்கு பாண்டியதேசம் முழுவதும் வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் உண்டு என்றேன்." என்று சமாளித்த மாலிக், "சரி அதற்காக நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாய்"

"நான் சொன்னது போல் நமது திட்டத்தில் ஒரு மாறுதல். நீ முதலில் ஹொய்சளர்களைத் தாக்காதே, நேராக மதுரையைத் தாக்கு" மதுரை மன்னனிடமிருந்து வந்தது இந்த வார்த்தைகள். ஏமாற்றுவதிலும், குறுக்குத் திட்டங்களிலும் வல்லவனான மாலிக் கஃபூர் கூட இதை எதிர் பார்க்கவில்லை.

(தொடரும்)