Friday, September 19, 2008

டேய் ! ! ! (நிஜமல்ல கதை) (2)

இப்போதுதான் அவர்களிருவரையும் கவனிக்க ஆரம்பித்தேன். இருவரும் ஒரே வயதுடையவர்களாக காணப்பட்டார்கள். பேச்சுக் கொடுத்த போது, இருவரும் ஒரே காலேஜில் இஞ்சினீரிங் படிக்கிறார்கள்.

அவனுக்கு துப்பாக்கி, அவளுக்கு பாய்லர். (திருச்சியில் பாய்லர் என்பது பி ஹெச் இ எல், துப்பாக்கி என்பது எச் ஏ பி பி என்னும் தொழிற்சாலையை குறிக்கும்). இருவரும் கே வி யில் படித்திருக்கிறார்கள். இங்கேயும் கன்டினியூ ஆகிக் கொண்டிருக்கிறது.

எதோ பாட சம்பந்தமாக பேசிக்கொண்டே வந்தார்கள். அடிக்கடி டேய் என்ற சொல் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. நமது துறை வேறாதலால் ஒன்றும் புரிய வில்லை. அப்படியே அசந்து விட்டேன்.

விக்கரவாண்டியின் சர்க்கரை ஆலை வாசனை என்னை பலவந்தமாக எழுப்பியது. விழுப்புரத்தில் இறங்கி ஏதாவது சாப்பிடத் தயாரானேன்.

'டேய்.. நல்லா பசிக்குது. ஏதாவது வாங்கிட்டு வா. போன தடவை என்னவோ வாங்கிட்டு வந்த. வாயில வைக்க முடியல. ஒழுங்கா வாங்கிட்டு வா..' என்றாள்.

'சரி சரி சும்மா வா. எது கெடைக்குதோ அத வாங்கிட்டு வரேன்.' அவன் விட வில்லை.

'தம்பி, விழுப்புரத்தில் உப்புமா சாப்பிட்டு இருக்கிறீர்களா, ட்ரை பண்ணி பாக்கரதுதானே. சூடா நல்லா இருக்கும்.' நான் நடுவில் புகுந்தேன்.

'அத தான் வாங்கிட்டு வாயேண்டா..'

அவனும் வாங்கிட்டு வந்தான். அவளுக்கு பிடித்து இருந்தது போல.

'தாங்க்ஸ் சார்.' என்றாள்.

மீண்டும் பல்லவன் கிளம்பியது. மீண்டும் அசர ஆரம்பித்தேன்.

முதலில் எல்லாம், ரயிலில் பயணம் செய்வதென்றால் இரவில் கூட தூங்க மாட்டேன். வேடிக்கை பார்ப்பதும், வழியில் வரும் ஸ்டேஷன்களின் பெயரைப் படிப்பதுமாக இருப்பேன். இது வாரம் ஒரு முறை வந்து செல்வதால் பார்த்து ரசிப்பதற்கு புதிதாக ஒன்றும் இல்லை என்பதால் நன்றாகத் தூங்கி விடுகிறேன்.

பெண்ணாடம் சர்க்கரை ஆலையின் வாசனையோ, அரியலூரில் அடித்து பிடித்து இறங்கும் தஞ்சாவூர் காரர்களின் ஓசையோ என்னை எழுப்பவில்லை. லால்குடியில் ஒரு வழியாக முழித்துக் கொண்டேன். எல்லாம் பழக்க தோஷம்.

அவர்களும் எல்லாவற்றையும் எடுத்து வைத்து இறங்கத் தயாரானார்கள். ஸ்ரீரங்கமா எனக் கேட்டேன்.

'ஆமாம் சார். இந்த வண்டி ஸ்ரீ ரங்கத்திலிருந்து ஜங்க்ஷன் போறதுக்குள்ள நாங்க வீட்டுக்கே போய் சேர்ந்துடுவோம்'.. அவள் என்னிடம் சொல்லிக் கொண்டே அவனை,

'டேய் எல்லாத்தையும் சரியா எடுத்து வச்சிட்டியா.. என்று கேட்டுக்கொண்டிருக்கும் போதே,

கொள்ளிடக்காற்று அள்ளிக்கொண்டு போனது.

நானும் ஸ்ரீ ரங்கத்தில் இறங்க வேண்டும் என்பதால் அவர்களிடம் 'ஓ கே, சீ யூ, பை' என்று சொல்லி விட்டு வேறு வாசலுக்கு விரைந்தேன்.

அந்தப் பையன் அனைத்து ல்க்கேஜையும் தூக்கிக் கொள்ள,

அவள் அவளது ஊன்று கோலின் உதவியுடன் பெட்டியின் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

சிறிது நேரத்திற்குப் பிறகும் எனக்கு அந்த வார்த்தை கேட்டுக் கொண்டே இருந்தது.

டேய்ய்ய்....

6 comments:

குடுகுடுப்பை said...

நல்லா இருக்கு,அந்த டேய் பாசம , மிரட்டலா?

CA Venkatesh Krishnan said...

//
குடுகுடுப்பை கூறியது...
நல்லா இருக்கு,அந்த டேய் பாசம , மிரட்டலா?
//

மிக்க நன்றி குடுகுடுப்பை.

அந்தப் பெண் அத்துணை முறை 'டேய்' போட்டுக் கூப்பிட்டாலும் அந்தப் பையன் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை.

அது அந்தப் பையன் வைத்துள்ள அன்பையே காட்டுவதாக நான் நினைக்கிறேன்.

VIKNESHWARAN ADAKKALAM said...

சிறப்பாக இருக்கிறது...

CA Venkatesh Krishnan said...

// VIKNESHWARAN கூறியது...
சிறப்பாக இருக்கிறது...
//

மிக்க நன்றி VIKNESHWARAN

உங்கள் பாராட்டுகள் ஊக்கப்படுத்துகின்றன

ஜோசப் பால்ராஜ் said...

சிறுகதையின் முடிவு எப்போதுமே எதிர்பாராதவிதமாய் அமைவது தான் சிறப்பு. அது இந்த கதையில இருக்கு.கடைசி வரில கொடுத்த அழுத்தம் , ஒரு நல்ல எழுத்தாளருக்குள்ள தகுதிய காட்டுது. தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துக்க‌ள்.

CA Venkatesh Krishnan said...

//

ஜோசப் பால்ராஜ் கூறியது...
//

உங்களுடைய பாராட்டுகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

நிச்சயமாய்த் தொடர்ந்து எழுதுகிறேன், உங்களைப் போன்றோரின் ஆதரவோடு.