Wednesday, December 9, 2009

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 15 !

இதுவரை:-

சக்கரவியூகம் இதுவரை சற்றேறக்குறைய 45 பகுதிகளாக வெளி வந்திருக்கிறது. இதுவரை நடந்த கதையின் ஓட்டத்தை அது நடந்த ஊர்களின் பெயர்களில் பார்ப்போம்.

காஞ்சி:-
காஞ்சியின் கடிகையில் பயின்ற மாணாக்கர்களுக்கு சக்கர வியூகத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள ஆசை. ஆனால் ஆசாரியர் தெளிவாக விளக்க வில்லை. துணை ஆசாரியன் மாதவன் அதை விளக்குவதாகக் கூறுகிறான். மாணாக்கர்கள், வீர பாண்டியன் (மதுரை), வல்லாளன் (துவாரசமுத்திரம், ஹொய்சளம்), இளவழுதி (திருவெள்ளரை), கோப்பெருஞ்சிங்கன் (காஞ்சிபுரம்), ஹரிஹர ராயன், புக்கராயன் (காஞ்சி). இவர்கள் அனைவருமே முக்கியப் பாத்திரங்கள்.

திருவெள்ளரை:-

இளவழுதியின் சொந்த ஊர். அவன் தந்தை மாராயரும் சகோதரி கயல்விழியும், மாமன் மகள் தேன்மொழியும் அந்த ஊரில் வசிக்கிறார்கள். வீரபாண்டியனும் இளவழுதியும் இங்கே வர, முறையே கயல்விழியிடமும், தேன் மொழியிடமும் காதல் கொள்கிறார்கள். தேன்மொழிக்கு மாலிக் கஃபூரின் திட்டம் தற்செயலாகத் தெரிய வருகிறது.

ஸ்ரீரங்கம்:-

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளி, வல்லாளனை தமிழகத்தின் பக்கம் இருத்த முயற்சிக்கிறார். ஆனால் வல்லாளன் பிடி கொடுத்துப் பேசவில்லை. அதே நேரத்தில் அவரிடம் வந்த இளவழுதியை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்துகிறார்.

சிதம்பரம்:-

திருவாதிரைத் திரு நாளில், சிதம்பரத்தில் அனைவருக்கும் சக்கரவியூகத்தைப் பற்றி எடுத்துரைக்கிறான் மாதவன். ஆனால் இளவழுதிக்கு மட்டும் உண்மையான சக்கரவியூகத்தைப் பற்றி தெளிவாக எடுத்துரைக்கிறான்.

மதுரை:-

சுந்தர பாண்டியனுக்கும் வீர பாண்டியனுக்கும் வாரிசுரிமைப் போட்டி வெளிப்படையாக நடக்கிறது. கயல்விழி மாறுவேடத்தில் வீரபாண்டியனின் மாமன் விக்ரம பாண்டியன் வீட்டில் தங்குகிறாள். வீரபாண்டியனின் தந்தை குலசேகர பாண்டியர் மரணமடைகிறார். சுந்தரன் தந்திரமாக அரசுக்கட்டில் ஏறுகிறான். (இத்துடன் முதல் பாகம் முடிவடைந்தது)

துவார சமுத்திரம் (ஹளபேடு) :-

இரண்டாம் பாகத்தில், வல்லாளன் அரசனாக தனது அவையைக் கூட்டி தமிழகத்தின் மீது போர் தொடுக்க வேண்டியதன் தேவையைத் தெரிவிக்கிறான். மாலிக் கஃபூர் பற்றிய அச்சம் தேவை இல்லை என்றும் தெரிவிக்கிறான். இவனுக்கு நீலா என்ற மனைவியும், ஒரு மகனும் இருக்கிறார்கள்.

வீரதவளப்பட்டணம் (வந்தவாசி):-

விக்ரம பாண்டியன் செய்த ஒரு உடன்படிக்கை மூலம், வீரதவளப்பட்டினத்தைத் தலைமையிடமாகக் கொண்டு வீர பாண்டியன் ஒரு அரசை நிறுவுகிறான். அங்கே மாராயர், இளவழுதி, கயல்விழி, தேன்மொழி ஆகியோர் வருகிறார்கள். அங்கே மாலிக் கஃபூரின் தென்னிந்தியப் படையெடுப்பின் திட்டத்தை விளக்குகிறார் விக்ரம பாண்டியர்.

ஆந்திராவின் காடு:-

மாலிக் கஃபூர் தன் படைகளுடன் தங்கியிருக்கிறான். அவனைச் சந்திக்க சுந்தர பாண்டியன் வருகிறான். அவன் மதுரையைத் தாக்க வருமாறு அழைக்கிறான். மாலிக் கஃபூர் மேலும் ஒரு திட்டத்தை வகுக்கிறான்.

குவலாலா (கோலார்):-

ஹொய்சளர்களின் முக்கிய நகரமான குவலாலாவில் ஹொய்சளப் படைகள் ஒன்று சேர்கின்றன. அங்கே அரசரை எதிர்பார்த்து மாதண்ட நாயகமும், குவலாலாவின் கோட்டைத்தலைவன் ஆதவனும் காத்திருக்கிறார்கள்.

= = =

இனி. . .



ஹொய்சள தேசத்தின் முக்கிய நகரமான குவலாலாவையும், அதன் தலை நகரான துவார சமுத்திரத்தையும் இணைக்கும் முக்கியப் பெருவழி எப்போதும் மிகுந்த ஆரவாரத்துடனும் ஜனத்திரளுடனும் இருக்குமென்றாலும், அன்று அந்த வழியில் அதுவரை ஒரு ஈ, காக்கை கூட வர வில்லை. அந்தப் பெருவழியில் அன்று பொதுவானவர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஒரு முக்கியப் பிரமுகரின் வருகைக்காக நீண்ட நேரமாக எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த போது, கோட்டைக் காவலன் ஆதவனுக்கும், மாதண்ட நாயகத்திற்கும் தெரிந்தது ஒரு சிறு புழுதிப்படலம் மட்டுமே. சற்று நேரம் கழித்து அங்கே ஏறக்குறைய நூறு குதிரைகளில் வீரர்கள் வருவது புலப்பட்டது. அக்கூட்டத்தின் முன்னே ஹொய்சளர்களின் ராஜ முத்திரையிட்ட பதாகையைத் தாங்கியவாறு வந்த ஒரு குதிரையால் அந்தக் கூட்டத்தில் முக்கிய பிரமுகர் வருகிறார் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டது.

கோட்டை வாயிலை அந்த வீரர் கூட்டம் நெருங்குவதற்கும், ஆதவனும், மாதண்ட நாயகமும் அங்கே செல்வதற்கும் சரியாக இருந்தது. அந்தக் கூட்டத்தில் இவர்கள் இருவரும் தேடிய முக்கியப் பிரமுகர் இல்லை.

"ஆதவா, படையின் முன்னே பதாகை. ஆனால் படையிலோ தலைவர் இல்லை. ஒரே குழப்பமாக இருக்கிறதே" என்றார் மாதண்ட நாயகம்.

"எனக்கும் அதே சந்தேகம்தான். எதற்கும் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று பார்ப்போம். நாமாக ஒன்றும் கூற வேண்டாம்." ஆதவன் சொன்னது சரியாகவே பட்டது மாதண்ட நாயகத்திற்கு. (இனி இவரை நாயகம் என்றே அழைப்போம்.)

சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்ட குதிரை வீரர்கள், ஒரு ஒழுங்கான வரிசையில் தங்கள் குதிரைகளை நிறுத்திக் கொண்டார்கள். அவர்களில் தலைவன் போல் காணப்பட்ட ஒருவன், தனது கொம்பை எடுத்து பலமாக ஊதினான். பிறகு "கோட்டைத் தலைவரிடம் அவசரமாக ஒரு தகவல் சொல்ல வேண்டும். மன்னரின் ஆணை. உடனே கதவைத் திறவுங்கள்" என்றான் சத்தமாக. அதைக் கேட்டு வாயிலின் முகப்பிற்கு வந்த நாயகம், "யார் நீ, முதலில் அதைத் தெளிவாகச் சொல். பிறகு உள்ளே வருவதைப் பற்றி பேசலாம்" என்றார் கோபமாக.

"நான் யாரென்பது தேவையில்லாத விஷயம். இதோ மன்னரின் பதாகை இருக்கிறது. அவரது முத்திரை பதித்த ஓலை இருக்கிறது. முக்கியமான தகவல் என்று அவரே என்னிடம் கூறினார். அதோடு அவரது இலச்சினையையும் கொடுத்திருக்கிறார்" என்று ஹொய்சள ராஜ முத்திரையைக் காட்ட முற்பட்டான். இந்தப் பதிலால் திருப்தியடைந்த நாயகம், "சரி, நீ மட்டும் உள்ளே வா. மற்றவர்கள் அங்கேயே இருக்கட்டும்" என்று கூறி ஒருவன் மட்டும் உள்ளே நுழையும் அளவுக்கு வழியை ஏற்படுத்துமாறு கோட்டைக் காவலர்களுக்குக் கட்டளையிட்டார்.

உள்ளே வந்த வீரன் மாதண்ட நாயகத்திடம் ஓலையை அளித்துவிட்டு, "நான் வந்த வேலை முடிந்தது. உத்தரவு கொடுங்கள். நாங்கள் உடனே புறப்பட வேண்டும்." என்றான்.

"எங்கே" ஓலையைப் பிரித்துக் கொண்டே நாயகம் வினவினார்.

"அதைச் சொல்ல உத்தரவில்லை"

"நான் நாயகம்"

"நான் அரசரின் தூதுவன்"

அதற்குள் ஓலையைப் பிரித்துவிட்ட நாயகம் அதன் மீது தன் கண்களை ஓட்டினார். சற்று நேரத்திற்குப் பிறகு அந்தத் தூதுவனைப் பார்த்த நாயகம், "இதை மன்னர் தான் அளித்தாரா?" என்றார்.

"ஆம்"

"எங்கே"

"அதைச் சொல்ல உத்தரவில்லை"

"இந்த ஓலையின் மீது எனக்கு நம்பிக்கையில்லை"

"அதைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை"

"சரி உன் பெயர் என்ன?"

"அதைச் சொல்ல உத்தரவில்லை"

"ம். என் பொறுமையைச் சோதிக்கிறாய். உன்னை இப்போதே சிறை செய்ய முடியும்"

"அரசரின் உத்தரவு அவ்வாறு இல்லை"

எதற்கும் அசராத அந்த வீரனின் நிலையைப் பார்த்து சற்று அசந்துதான் போனார் நாயகம். சிறிய சிந்தனைக்குப் பின் "சரி, நீ செல்லலாம்" என்று உத்தரவு பிறப்பித்தார். அவனும் அவரை வணங்கிவிட்டு, கோட்டைவாயிலை விட்டகன்றான். உடனே சில வீரர்களை அழைத்து அவனைப் பின் தொடர்ந்து சென்று கண்காணிக்குமாறு உத்தரவிட்டுவிட்டு, ஆதவனைத் தேடிச் சென்றார்.

"ஆதவா, அரசரிடமிருந்து ஓலை வந்திருக்கிறது"

"அரசரிடமிருந்தா?, அவரையல்லவா எதிர்ப்பார்த்தோம்." ஆதவன் வினவினான் ஆச்சரியத்துடன்.

"ம். ஆனால் ஓலை மீது எனக்கு என்னவோ நம்பிக்கை பிறக்கவில்லை. இதோ பார்" என்று ஓலையை அவனிடம் நீட்டினார். அதில் இவ்வாறு எழுதியிருந்தது

"நாயகத்திற்கு... நாம் வேறு சில பணிகளில் ஈடுபட்டிருப்பதால், தற்போதைக்கு குவலாலா வருவதற்கில்லை. ஆகவே படைகளைத் திரட்டிக்கொண்டு, காவிரிக் கரை வழியாக, உறையூரில் தண்டு இறங்கவும். உங்களை அங்கே சந்திக்கிறேன். உடன் ஆதவனையும் அழைத்துச் செல்லவும்." இதன் பின் அரச இலச்சினை பொறிக்கப்பட்டிருந்தது.

அதை மீண்டும் ஒரு முறை வாசித்துவிட்டு, "இதைச் சந்தேகிக்க ஒரு முகாந்திரமும் இல்லையே" என்றான் ஆதவன்.

"இல்லை ஆதவா, ஓலை சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் அரசரின் திட்டம் இதுவல்ல. என்னால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. யோசித்துக்கொண்டிருக்கிறேன்" என்றார் நாயகம். அவரது முகத்தில் கவலையும், குழப்பமும் சேர்ந்து இருந்தன.

"நீங்கள் குழம்ப வேண்டாம். அரசரது உத்தரவுப் படியே நடப்பதுதான் நல்லது என்று நினைக்கிறேன்"

"ம். எதற்கும் ஓரிரு நாட்கள் பொறுப்போம். அந்த வீரனைப் பின் தொடர்ந்து செல்ல ஆட்களை அனுப்பியிருக்கிறேன். பார்க்கலாம். எதற்கும் நீ படை நடத்துவதற்கான பூர்வாங்க வேலைகளைத் துவக்கிவிடு" என்று ஆதவனைப் பணித்துவிட்டு மெதுவாக நடந்தார் நாயகம். அவரையே பார்த்தவாறு நின்றிருந்தான் ஆதவன்.

(தொடரும்)

'

7 comments:

Sathis Kumar said...

மீண்டும் சக்கரவியூகத் தொடரை தொடங்கியதற்கு மிக்க நன்றி நண்பரே. தொடர் சற்று விருவிருப்புடன் மீண்டும் தொடங்கியுள்ளது..

☀நான் ஆதவன்☀ said...

இது நல்ல பிள்ளைக்கு அழகு :)

முன் கதை சுருக்கம் ஊர் வாரியாக போட்டது நல்லா போச்சு :)

வழக்கம் போல விறுவிறுப்பா போகுது. இனிமே விடாம கொண்டு போங்க பல்லவரே!

இரவுப்பறவை said...

முன்கதை சுருக்கத்திற்கும் இளையபள்ளவனின் வருகைக்கும்
நன்றி..
கொஞ்சம் இடைவிடாம எழுதினா ரொம்ப நல்லா இருக்கும்னு ஒரு வேண்டுகோள் வெச்சுக்கறேன்...

இரவுப்பறவை said...

*இளையபல்லவனின்

CA Venkatesh Krishnan said...

நன்றி ஒற்றன் அவர்களே !

CA Venkatesh Krishnan said...

இவன் ரொம்ப நல்லவன்ன்ன்ன்ன்னு சொன்னதுக்கு நன்றி ஆதவன்!.

நிச்சயமா விடாம தொடர்றதுக்கு முயற்சி பண்றேன்.

CA Venkatesh Krishnan said...

நன்றி இறவுப்பறவை!

நிச்சயமாக இனி இடைவிடாது.