அத்தியாயம் 17 - ஜலாலுதீன்
மாலிக் கஃபூரின் படைத்தளத்திற்கு மீண்டும் வருகிறோம். முன்பு சுந்தர பாண்டியன் வந்த போது நாமும் அவனுடன் ரகசியமாக வந்து திரும்பி விட்டதால் அவனது படை பலத்தைப் பார்க்க முடியவில்லை. இப்போது வெட்ட வெளிச்சத்தில் அந்த நிலப்பரப்பில் பரந்து விரிந்திருந்த படைத்தளத்தைக் கண்ணாரக் காணலாம்.
தில்லியிலிருந்து அழைத்து வந்த படையும், இடையே இணைந்த படையும் சேர்ந்து ஒரு சிறு பெரும் சைன்யமாகியிருந்தது. எந்த ஒரு பிடிப்பும் இன்றி, மாலிக் கஃபூரின் ஆணைக்குக் கட்டுப்பட்டோ, பயந்தோதான் பணியாற்றிக்கொண்டிருந்தனர் அந்தப் படை வீரர்கள். அவர்களை வீரர்கள் என்று அழைப்பதே வீரர்களுக்குச் செய்யும் அவமரியாதையாகும்.
மங்கோலியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட குதிரைப்படயினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர் இருந்தனர். செங்கிஸ்கானின் குதிரைப்படையின் சாகசத்திற்கு தில்லி பலமுறை பலியாகியிருக்கிறது. அந்த மங்கோலியர்களையே பணத்தாசை காட்டி மயக்கிவிட்டான் மாலிக் கஃபூர். இந்தப் புறம் வில்லாளிகள். மத்திய ஆசியப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வேட்டையாடுவது என்பது மூச்சுவிடுவதைப் போன்று இயல்பான ஒன்று. ஈவு, இரக்கம் என்ற இரண்டு வார்த்தையும் இவ்விரு பிரிவினரின் அகராதியிலும் கிடையாது. இப்படிப்பட்ட படையினரை வைத்துத்தான் யாதவர்களை வீழ்த்தியும், காகதீயர்களை அடிபணியவைத்தும் தனது வெற்றிப்பாதையை வகுத்து வந்திருந்தான் மாலிக் கஃபூர்.
ஒரு தலைவன் தான் எடுத்த பணியைச் செவ்வனே செய்து முடிக்க வேண்டியது அவனுக்குள்ள முதல் கடமை. அந்தப் பணி சரியா தவறா என்பது அவனுக்கு இரண்டாம் பட்சம்தான். அந்தப் பணியை முடிக்கத் தேவையான தளவாடங்கள், உத்திகள், உதவிகள், தந்திரங்கள் அனைத்தையும் பின்பற்ற வேண்டும். யார் மூலமாக என்ன சாதிக்க வேண்டுமோ, அவர்களை சரியான தருணத்தில் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் முழுமையான வெற்றி கிட்டும். தெய்வப்புலவர் திருவள்ளுவரும் 'இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்' என்று மேலாண்மை பாடம் நடத்துகிறார்!
மாலிக் கஃபூர் நிச்சயமாக திருக்குறளைப் படிக்கவில்லையென்றாலும், அவரது வாய்மொழிக்கேற்ப, அவனது படையில் மங்கோலியர்களையும், மத்திய ஆசிய வில்லாளர்களையும் சேர்த்துக் கொண்டிருந்தான். இவர்களோடு பணம் மட்டுமே குறியாகக் கொண்ட படையும், தில்லியிலிருந்து வந்த சுல்தானின் படையும் சேர்ந்து கொண்டதால், வெற்றி மட்டுமே அவனது சொந்தமாக இருந்து வந்தது.
எப்போது படை நகர வேண்டும், எவ்வளவு படை நகர வேண்டும் என்பதைப் பற்றியும் விவாதிப்பதற்காக, தனது தளபதிகளை தனது கூடாரத்திற்கு அழைத்தான் மாலிக். அவனது ஆலோசனைக் கூட்டம் எப்போதுமே அவன் உத்தரவு செய்வதும் மற்றையோர் ஆமோதிப்பதுமாகவே நடைபெறுவது வழக்கம். அன்றும் அதே போல் அவனது உத்தரவை எதிர்பார்த்து வந்திருந்தனர் தளபதிகள்.
"நாம் தெற்கு நோக்கி நகர வேண்டிய நேரம் வந்து விட்டது" சுருங்கச் சொன்னான் மாலிக்.
"உத்தரவிடுங்கள். படை நகரத் தயாராக இருக்கிறது" கூட்டத்திலிருந்து ஒரு குரல்.
"ம். இதுவரை நாம் படை நடத்தியதற்கும், இனி நடப்பதற்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது." என்று சொன்ன மாலிக் தளபதிகளின் மீது தன் கண்களை ஓட்டினான். அவனே மேலும் தொடர்வான் என்பதால் ஒருவரும் வாயைத் திறக்கவில்லை.
"இனி நாம் செல்ல இருக்கும் தேசம், இதுவரை நாம் பார்த்ததற்கு முற்றிலும் மாறு பட்டது. அங்கே நமது பாரம்பரிய போர் முறை எடுபடாது. செல்வங்கள் அங்கே அரண்மனைகளில் இல்லை. அவை இருப்பது கோவில்களில். புரிந்ததா?"
ஒரு மாதிரியாகத் தலையாட்டி வைத்தனர் தளபதிகள்.
"நீங்கள் அனைவரும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அரசன் வேறு. ஆண்டவன் வேறு. அரசன் மீது நாம் போர் தொடுத்தால் மக்களிடம் இருந்து எதிர்ப்பு இருக்காது. ஆண்டவனிடம் நம் கைவரிசையைக் காண்பித்தால், மக்கள் நம்மை வாழ விடமாட்டார்கள். ஆகவே நமது திட்டமும் இதை அடிப்படையாகக் கொண்டுதான் இருக்க வேண்டும்" என்று சற்று நிறுத்தினான் மாலிக் கஃபூர்.
இவ்வளவு ஆணித்தரமாக அலசும் எந்த ஒரு தலைவனையும் அவனது உபதளபதிகள் தலைமேல் வைத்துக் கொண்டாடுவார்கள். ஆனால் மாலிக்கிற்கு வாய்த்த உபதளபதிகளுக்கோ இவை ஒன்றும் சுத்தமாகப் புரியவில்லை. அவன் இதெல்லாம் ஏன் சொல்கிறான் என்று கூட ஓரிருவர் யோசிக்கத் துவங்கினார்கள்.
"சரி, இவற்றையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நமது படைகள் சற்று பிரிந்து செல்ல வேண்டும். ஆகவே நமது படைகள் இன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு பத்து தவணைகளில் இங்கிருந்து புறப்படும். நாம் இருப்பது ஹொய்சள தேசத்தின் வட எல்லையில். நாம் செல்ல வேண்டியது பாண்டிய தேசத்திற்கு. நாம் படை நடத்தும் போது இடையில் இருக்கும் ஹொய்சள தேசத்தை நாம் ஒன்றும் செய்யக் கூடாது. ஹொய்சளர்கள் நமது படையைத் தடுக்கும் வகையில் ஒன்றும் செய்ய மாட்டார்கள். ஒவ்வொரு பிரிவிலும் சுல்தானின் கொடி முன்னே செல்ல வேண்டும். இங்கிருந்து நேர் தெற்கே சென்றால் நாம் கொல்லி மலையை அடைவோம். நமது படைகள் அங்கே தண்டு இறங்கட்டும். அதற்குப் பிறகு நடக்க வேண்டியதைப் பற்றி நான் அங்கே வந்து சொல்கிறேன். இனி என்னை நீங்கள் அங்கு தான் பார்க்க முடியும்." என்று விவரித்தவன் இறுதியாக "புரிந்ததா?" என்று சம்பிரதாயமாகக் கேட்டு வைத்தான்.
அவனது வியூகம் ஒன்றும் தளபதிகளுக்குப் புரியவில்லை. ஒரு மாதத்திற்குப் படை நடத்தினால் எதிரி விழித்துக் கொள்வானே? முதலில் இருக்கும் ஹொய்சளர்களைத் தாக்கினால் அந்த படையையும் தங்களுடன் சேர்த்துக்கொள்ளலாமே? படை கிளம்பி நேராக இலக்கைத் தாக்கினால் முழு வேகத்துடன் தாக்கி எளிதில் வெற்றி அடையலாமே? எதற்கு இடையில் கொல்லி மலையில் தங்க வேண்டும்? இப்படியெல்லாம் ஒருவரும் யோசிக்க வில்லை. அப்படி யோசிக்கவும் அவர்களுக்குச் சொல்லித்தரப்படவில்லை. அனைவரும் எழுந்து அவன் சொன்னதைப் புரிந்து கொண்டதற்கு அறிகுறியாகத் தலை தாழ்த்தி வணங்கி அவனது கூடாரத்தை விட்டு வெளியேறினர். அப்படி சென்றவர்களில் ஒருவனை மட்டும் நிறுத்தினான் மாலிக். மற்றவர்கள் அகன்றுவிட்டனர் என்பதை நிச்சயம் செய்து கொண்ட பின் அவனைத் தன் அருகில் அழைத்து "உன்னை மட்டும் அழைத்தது ஆச்சரியமாக இருக்கிறதா ஜலாலுதீன்?" என்று புன்னகையுடன் வினவினான்.
ஜலாலுதீன் என்று அழைக்கப்பட்ட ஜலாலுதீன் அசன் கான், சற்றேறக்குறைய இருபது வயதுடையவனாகத் தோன்றினான் . தில்லி சுல்தானியப் படைப் பிரிவின் தளபதியாக சுல்தான் அலாவுதீன் கில்ஜியால் நியமிக்கப் பட்டவன். நல்ல அறிவாளியானாலும் அதை மாலிக் கஃபூர் இருக்கும் போது உபயோகிப்பது தன் தலையைத் தானே கொய்து கொள்வது போல் என்பதை உணர்ந்திருந்தானாகையால் அவனது போக்கு இந்தப் படையெடுப்பில் மாலிக் காலால் இட்டதைத் தலையால் செய்வதென்பதாகவே இருந்தது. இதுவே மாலிக் அவனிடத்தில் மதிப்பு வைப்பதற்கும் காரணமாக அமைந்தது. மேலும் சுல்தான் தேர்ந்தெடுத்த ஒருவரை தன் அருகில் வைத்துக் கொள்வது நாளைக்கு ஏதாவதொரு விதத்தில் நன்மை பயக்கும் என்பதும் மாலிக்கின் எண்ணம்.
"அப்படியெல்லாம் இல்லை. தங்கள் உத்தரவை நிறைவேற்றுவதுதான் எங்கள் பணியென்பதை சுல்தான் தெளிவுபடுத்தியுள்ளார்". என்றான் அடக்க ஒடுக்கமாக.
"ஜலாலுதீன், இப்போது போன தளபதிகளெல்லாம் நான் சொல்வதை மட்டுமே செய்வார்கள். அவர்களாக ஒன்றும் யோசிக்க மாட்டார்கள். ஆனால் நீ அப்படியல்ல. சுல்தான் அவர்களே உன்னை பிரத்யேகமாக தேர்வு செய்துள்ளார். தில்லியை விட்டுக் கிளம்பும் போது கூட என்னைத் தனியாக அழைத்து உன்னை நல்ல படியாக நடத்துமாறு உத்தரவிட்டார். நீயும் மிக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறாய். அதனால்தான், இனி படையை நடத்தும் பொறுப்பை உன்னிடத்தில் ஒப்படைக்கலாம் என்று எண்ணுகிறேன்" மாலிக் சற்று நிறுத்தி அவன் கண்களை ஊடுறுவினான். ஜலாலுதீனுக்கு என்ன சொல்வதென்று விளங்கவில்லை. இதில் ஏதோ சூது இருப்பது மட்டும் அவன் உள்ளத்திற்குத் தெளிவாகத் தெரிந்தது.
"அத்தகைய திறமை என்னிடம் இருப்பதாகத் தாங்கள் நினைத்தால் அதில் தவறேதுமிருக்காது என்பது என் எண்ணம்."
அதைக் கேட்டு பெரிதாக நகைத்த மாலிக், "ஜலாலுதீன், இந்த பதில் மூலம் நீ மிக மிக புத்திசாலி என்பது உறுதியாகிறது. நல்லது. நான் சொன்னது போல், உங்களைப் பிரிய வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்தப் படையெடுப்பு மிகவும் வித்தியாசமானது. ஆகவேதான் அவ்வாறு உத்தரவிட்டேன். இனி நான் இல்லாத போது நீதான் படைகளை நடத்த வேண்டும். அதற்கான உத்தரவுப் பத்திரம் இதோ. இனி நான் சொல்வதைக் கவனமாகக் கேள்" என்று அவனிடம் ஒரு சீலையைக் கொடுத்துவிட்டு அவன் நடந்து கொள்ள வேண்டிய முறைகளையும் எடுத்துரைத்தான்.
"அப்படியே ஆகட்டும். இன்ஷா அல்லாஹ்" என்றவாறே வெளியேறினான் ஜலாலுதீன். அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்த மாலிக்கின் வாயிலிருந்த் சிறிது நேரம் கழித்து வந்தன "இன்ஷா அல்லாஹ்" என்ற சொற்கள்.
(தொடரும்)
7 comments:
அருமைங்க.... விறு விறுப்பா போய்கிட்டு இருக்கு கதை..
நேத்து கவிதை பாத்ததும் இந்த வாரம் இளையபல்லவன் வரமாட்டானோ அப்படின்னு நினைச்சேன்
இன்ஷா அல்லாஹ் :)
ஜலாலுதீன்கிட்ட படைப்பொறுப்பை கொடுத்துட்டு இவன் எங்க போறான்?
//இந்த வாரம் இளையபல்லவன் வரமாட்டானோ அப்படின்னு நினைச்சேன்//
அதே அதே! :)
//
இரவுப்பறவை said...
அருமைங்க.... விறு விறுப்பா போய்கிட்டு இருக்கு கதை..
நேத்து கவிதை பாத்ததும் இந்த வாரம் இளையபல்லவன் வரமாட்டானோ அப்படின்னு நினைச்சேன்
//
ஆஹா...
நம்ம பேரு இப்படியெல்லாம் ரிப்பேர் ஆகியிருக்கே..
இளையபல்லவன் திருந்திட்டான், இனி அப்பப்ப டிமிக்கி கொடுக்க மாட்டான். (டேய் இளையபல்லவா, பாத்துக்கோ..)
//☀நான் ஆதவன்☀ said...
இன்ஷா அல்லாஹ் :)
ஜலாலுதீன்கிட்ட படைப்பொறுப்பை கொடுத்துட்டு இவன் எங்க போறான்?
//
ம்.ம். மாலிக்கின் அதிரடி இனிமேல்தான் ஆரம்பம்.
//
☀நான் ஆதவன்☀ said...
//இந்த வாரம் இளையபல்லவன் வரமாட்டானோ அப்படின்னு நினைச்சேன்//
அதே அதே! :)
//
வாழ்த்துகள் நண்பரே. தொடரட்டும்
Post a Comment