அத்தியாயம் 18 - திரிசூலம் !
ஜலாலுதீனிடம் உத்தரவைப் பிறப்பித்த சிறிது நேரத்திலேயே அந்தக் காட்டிலிருந்து ஒரு குதிரையில் புறப்பட்டு விட்டான் மாலிக். உடன் வர நினைத்த சில காவலர்களையும் வேண்டாமென்று சொல்லிவிட்டான். அங்கிருந்து நேர் தெற்கு நோக்கிச் செல்லாமல் தென்கிழக்காகப் பயணப் பட்டான். சற்றேறக்குறைய ஒரே வாரத்தில் திருமலையடிவாரத்தை அடைந்துவிட்டான். அங்கிருந்து காஞ்சி வழியாக செல்வதுதான் அவனது திட்டம். ஒரே வாரத்தில் அவ்வளவு தூரத்தைக் கடந்து விட்டதால் சற்று இளைப்பாற நினைத்தான். அவனது படைகளும் வந்து சேர வேண்டுமல்லவா?
=====
மாலிக் திருமலையடிவாரத்தை அடைந்த அதே சமயத்தில் குவலாலாவிற்கு வந்த குதிரைப்படைத் தலைவன் வெளியேறினான். அதற்குப் பிறகு மாதண்ட நாயகத்தின் உத்தரவின் படி படைகள் புறப்படுவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளத் துவங்கினான். முதலில் உணவுப் பொதிகளைச் சுமந்து கொண்டு மாட்டு வண்டிகள் முன்னே சென்றன. அவற்றின் பின், தண்டு இறக்கும் போது தேவையான கூடாரங்கள், நீண்ட கழிகள், வடங்கள் ஆகியவை அடங்கிய வண்டிகள் சென்றன. அதைத் தொடர்ந்து, தளவாடங்களைச் சுமந்து செல்லும் பொதிகள் சென்றன. அவற்றின் மேல் பாதுகாப்புக் கருதி வைக்கோல் போர்த்தப்பட்டிருந்தது. இவற்றோடு யானைப்படையும் புறப்பட்டது. யானைகளுக்கு மதம் பிடிக்காமலிருக்கும் பொருட்டு, அதற்குத் தேவையான மருந்துகள் அளிக்கப்பட்டிருந்தன. ஆகவே யானைகள் எது சொன்னாலும் செய்யும் பூனைகளைப் போல் சாதுவாகக் கிளம்பிச் சென்றன.
இவை குவலாலாவை விட்டுக் கிளம்பிய மூன்றாவது நாள், காலாட்படையினரை உறையூர் நோக்கிச் செல்லுமாறு பணித்தான் ஆதவன். வழியில் முன்னே சென்ற உணவுப் பொதிகள் மூலமாக இந்தப் படைக்கு ஆங்காங்கே உணவு தயாராக வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் கிளம்பிய மூன்று நாட்களுக்குப் பிறகு குதிரைப்படைகள் புறப்பட்டன. அவற்றுடன் முக்கிய தளபதிகளுக்கான ரதங்களும் புறப்பட்டன.
இவ்வாறாக ஒரே வாரத்தில் அவனது படைகள் அனைத்தும் ஒரே சமயத்தில் உறையூர் சேரும் வகையில் படைகளை நடத்தினான். படைகள் செல்லும் பெருவழியில் எந்த வித நெருக்கமும் ஏற்படாத வகையில் அமைந்த இந்த ஏற்பாட்டை மிகவும் பாராட்டினார் மாதண்ட நாயகம். கோட்டையைப் பாதுகாக்க சிறு படையை விட்டுவிட்டு மாதண்ட நாயகமும், ஆதவனும் உறையூர் புறப்பட்டனர்.
======
ஜலாலுதீன் தன் படைகளை மாலிக் கஃபூரின் உத்தரவுப் படி தென் மேற்காக நடத்திச் சென்றான். நேராக கொல்லி மலை செல்லாமல், வட ஆந்திரத்திலிருந்து மேற்கே சென்று மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டி தலைக்காடு வரை இறங்கி அங்கிருந்து மீண்டும் தென்கிழக்காகத் திரும்பி கொல்லி மலையை அடைந்தான்.
அவனது படையில் மங்கோலியர்கள் முதலிய இனத்தவர் இருந்ததால் அவர்களுக்குக் காட்டு வழியே இனிமையாக அமைந்தது ஆங்காங்கே தென் பட்ட விலங்குகளையே வேட்டையாடி உண்டனர். திறந்த வெளிகளிலேயே உறங்கினர். அவர்களிடமிருந்த வேல், வில், அம்பு தவிர வேறொரு தளவாடமும் அவர்களிடத்தில் இல்லை. ஆகவே அவர்களது பயணம் துரிதகதியில் அமைந்தது.
======
வீரதவளப்பட்டணத்தின் படைவீட்டில் அமைந்திருந்த வீர பாண்டியனின் படைகள் மற்றும் வில்லவர் ஐந்நூறு பேரும் சிதம்பரம் வழியாக தஞ்சைக்கு சற்று வடக்கே தண்டு இறங்கினர். அளவில் சிறு படையான வீர பாண்டியன் படை வீரதவளப்பட்டணத்திலிருந்து தஞ்சைக்கு ஒரே வாரத்தில் வந்து சேர்ந்து விட்டது. இப்படியாக மதுரையை நோக்கி மூன்று படைகள் முறையே கொல்லிமலை, உறையூர் மற்றும் தஞ்சையில் தண்டு இறங்கியிருந்தன.
மேலே உள்ள வரைபடத்தில் பச்சை நிறத்தில் குறியிடப்பட்டுள்ள வழியாக ஜலாலுதீன் மாலிக்கின் படைகளை அழைத்துவந்தான். சிவப்பு நிற வழியாக ஹொய்சள வல்லாளனின் படைகள் துவாரசமுத்திரத்திலிருந்து கிளம்பி குவலாலா வழியாக உறையூரை அடைந்தன. நீல நிறக்குறியீட்டின் வழியாக வீர பாண்டியனின் படைகள் வீரதவளப்பட்டணத்தின் படைவீட்டிலிருந்து நேராக தஞ்சைக்கு சற்று வடக்கே முகாமிட்டிருந்தன. இந்த அமைப்பு மதுரையைத் தாக்கும் திரிசூலத்தை ஒத்திருப்பதைப் பார்க்கலாம்.
இந்த மூன்று படைகளும் மிக விரைவாகவும் மறைவாகவும் வந்து சேர்ந்ததால் மற்ற படைகளின் நடமாட்டத்தைப் பற்றிய தகவல் யாருக்கும் தெரியாமல் போயிற்று. ஆனால் மதுரையிலிருந்த சுந்தரனுக்கோ இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் உடனே தெரிய வந்தது. அவன் நினைத்தது ஒன்று ஆனால் நடப்பது வேறாக இருந்ததால் அவன் மனம் பெரிதும் குழம்பியிருந்தது.
மதுரையை நோக்கி நீண்டிருந்த திரிசூலம் அவன் மனதை பெரும் கலக்கத்திற்குள்ளாக்கியது. அவனது நண்பன் மாலிக் கஃபூரிடமிருந்தும் ஒரு தகவலும் இல்லை. மாலிக்கின் படையில் மாலிக் கஃபூர் இல்லை என்பதும், ஜலாலுதீன்தான் அந்தப்படைகளுக்குத் தலைமை வகிக்கிறான் என்பதும் அவனுக்குக் கிடைத்திருந்தது.
மதுரைக்கு ஒரு பெரும் ஆபத்து நெருங்கிவிட்டதை அவன் பரிபூரணமாக உணர்ந்தான்.
(தொடரும்)
1 comment:
அன்னைக்கே போட வேண்டிய கமெண்ட் படிச்சுட்டு அவசரத்துல போயிட்டேன். விறுவிறுப்பு அதிகமாகிவிட்டது பல்லவன்....
Post a Comment