Friday, January 15, 2010

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 20

அத்தியாயம் 20 - வல்லாளனின் தெளிவு

தஞ்சைக்கு சற்று வடக்கே தண்டு இறங்கியிருந்த வீரபாண்டியனின் படைத்தளத்தில் அமைந்திருந்த ஒரு கூடாரத்தில் வீரபாண்டியன், விக்ரம பாண்டியன், மாராயர் மற்றும் இளவழுதி ஆகியோர் அமர்ந்திருந்தனர். மேற்கொண்டு படை நடத்த வேண்டியதைப் பற்றி விவாதிப்பதற்காகவே அவர்கள் அங்கே அமர்ந்திருந்தது தெளிவாகத் தெரிந்தது.

"விக்ரம பாண்டியரே, நாம் இங்கே வந்து சற்றேறக்குறைய ஒரு வாரம் ஆகிவிட்டது. கொல்லி மலை வில்லவர்களும் வந்து சேர்ந்து விட்டனர். நமது படைகள் மதுரையை நோக்கி உடனே புறப்படுவது நல்லது. இல்லாவிட்டால் படை வீரர்களிடத்தில் சோம்பலும் உற்சாகக் குறைவும் தோன்றிவிடும்" என்றார் மாராயர்.

"மாராயரே, அதை உணர்ந்தே இருக்கிறேன். ஆனால் நாம் மதுரையை அடையும் போது மாலிக் கஃபூரின் படைகளும் அங்கே வந்து சேர்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் சுந்தரன் நம்மைத் தாக்குவதா அல்லது மாலிக்கஃபூரைத் தாக்குவதா என்று புரியாமல் குழப்பமடைவான். ஆகவே மாலிக்கின் படைகளின் நடமாட்டத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். அங்கிருந்து தக்க செய்தி வந்தவுடன் நம் புறப்பட்டுவிடலாம்." விக்ரமரின் பதிலில் இருந்த தந்திரம், மாராயரை அமைதிப்படுத்தியது.

=====

உறையூரின் அருகே தண்டு இறங்கியிருந்த ஹொய்சளப்படைகளைப் பார்வையிட்டபடியே அவற்றின் ஊடாக நடந்து சென்ற குவலாலா கோட்டைத் தலைவன் ஆதவனுக்கு இந்தப் படையெடுப்பிற்கான காரணம் முற்றிலும் விளங்கவில்லை. இதை ஒருசில உப தளபதிகளும் வாய்விட்டு கேட்கவே செய்தனர். அவர்களையெல்லாம் மன்னர் உத்தரவு என்ற வார்த்தைகளைச் சொல்லி அடக்கியாயிற்று. ஹொய்சளத்தின் ப்ரதான படைகள் இங்கே வந்து விட தேசம் நிர்க்கதியாக இருக்கிறதே என்ற கவலை ஏற்பட்டது அவனுக்கு. நாற்புறமும் பகைவர் இருக்க, அனைத்துப் படைகளையும் தெற்கு நோக்கித் திருப்ப வேண்டிய அவசியம் ஏன் என்ற கேள்விக்கும் சரியான பதில் கிடைக்கவில்லை. சரியான சமயத்தில் வந்து சேர்ந்து கொள்வதாக ஓலை மூலம் தெரிவித்திருந்த மன்னரும் வந்து சேரவில்லை. இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் இங்கே அமைதியாக அமர்ந்திருப்பது? வந்த வேகத்தில் நேராக மதுரை மீது இறங்கியிருந்தால் இந்நேரம் மதுரைக் கோட்டையில் ஹொய்சளர்களின் கொடி பறந்திருக்கும். இந்த மாதண்ட நாயகம் பிடித்து வைத்த பிள்ளையாரைப் போல் இருக்கிறாரே ஒழிய ஒரு உத்தரவும் தருவதில்லை. ம்ஹூம். ஒன்றும் சொல்லிக் கொள்வது போல் இல்லையே. இது எங்கே கொண்டு போய் விடும்? தாயே ஹொய்சளர்களைக் காப்பாற்று என்று குவலாலாவின் காவல் தெய்வம், துர்க்கையை மனதார வேண்டிக் கொண்டான்.

அந்த வேண்டுதலை குவலாலா கோலாரம்மன் காதில் விழுந்திருக்க வேண்டும். அன்று மாலையே ஹொய்சள மன்னன் வல்லாளன் அந்த படைத்தளத்திற்கு வந்து சேர்ந்தான். ஆனால் அவன் முகத்தில் உற்சாகம் சிறிதளவும் இல்லை. வந்தவுடன் ஸ்நானபானங்களைக் கூட கவனிக்காமல், மாதண்ட நாயகத்துடன் தனியாக ஆலோசனையில் இறங்கி விட்டான். சற்றேறக்குறைய நான்கு நாழிகைகளுக்கும் மேலாக நீடித்த ஆலோசனைக்குப் பிறகு வெளிப்போந்த மாதண்ட நாயகத்தின் முகத்திலும் ஈயாடவில்லை. எதற்கும் அசைந்து கொடுக்காத மாதண்ட நாயகத்தையே ஆட்டம் காண வைத்த செய்தி என்னவாக இருக்கும் என்று எவ்வளவு சிந்தித்துப் பார்த்தும் ஆதவனுக்குப் புலப்படவில்லை. எனினும் அவராகவே சொல்லட்டுமென்று விட்டுவிட்டான்.

அடுத்த நாள் காலை அவனை அழைத்த மாதண்ட நாயகம், மன்னனின் பாசறைக்குச் செல்ல வேண்டுமென்று கூறி அழைத்துச் சென்றார். அங்கே கவலையின் மொத்த உருவமாக அமர்ந்திருந்தான் வல்லாளன். இரவு உறங்கச் செல்லவில்லை என்பதற்கு அறிகுறியாக அவனது பாசறையில் இடப்பட்டிருந்த மஞ்சம் கலையாமல் இருந்தது. இதற்கு முன் பல முறை வல்லாளனைப் பார்த்திருக்கிறான் ஆதவன். வல்லாளன் எந்த நிலையிலும் கலங்காதவன் என்ற பெயரைப் பெற்றிருந்தான். அப்படிப்பட்டவனும் இவ்வளவு கலங்கியிருக்கிறானென்றால், மாதண்ட நாயகம் நேற்று அவ்வாறு இருந்தது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று நினைத்துக் கொண்டான். மேற்கொண்டு அரசரோ, மாதண்ட நாயகமோ பேசட்டுமென்று வாளாவிருந்தான்.

வந்து சிறிது நேரமாகியும், மன்னன் தங்கள் பக்கம் திரும்பாதிருக்கவே, சற்று தொண்டையைக் கனைத்து அரசனது கவனத்தைத் திருப்பப்பார்த்தார் மாதண்ட நாயகம். அதில் வெற்றியும் பெற்றார். இவர்கள் பக்கம் திரும்பிய வல்லாளன், ஆதவன் மீது கண்களை நன்றாக ஓட்டினான். அது ஆதவனை என்னவோ செய்தது. வெட்கத்தில் தலையைக் குனிந்து கொண்டான். அந்த செய்கை வல்லாளனின் முகத்தில் புன்முறுவலை வரவழைத்தது.

"நாயகரே, இவன் நமது திட்டத்தை சரியாக நிறைவேற்றுவானா? இப்படி வெட்கத்தில் வளைந்து நிற்கிறானே?" என்று கேட்டான் வல்லாளன். தொடர்ந்து சிறு சிரிப்பும் வெளிவந்தது அவன் வாயிலிருந்து.

"அரசே, தங்கள் முகத்தில் இந்த மந்தகாசத்தை உண்டாக்கியவன் நிச்சயம் நம் திட்டத்தை நன்றாக நிறைவேற்றுவான். குவலாலாவிலிருந்து உறையூருக்குப் படைகளை நகர்த்திய விதத்திலேயே இவன் திறமையைக் கண்டுபிடித்துவிட்டேன். குவலாலாவில் இப்போது பெரிய படைகள் இல்லாவிட்டாலும், அதை யாராலும் உடனே பிடித்து விட முடியாது. அப்படிப்பட்ட முன்னேற்பாடுகளைச் செய்திருக்கிறான்."

"நல்லது. ஆதவா, உன்னை இங்கே அழைத்ததன் காரணத்தை மாதண்ட நாயகம் விளக்கினாரா?"

"இல்லை அரசே, நேராகத் தங்களிடம் அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்" என்றான் ஆதவன் பணிவுடன். அவனிடமிருந்த வெட்கம் சற்று விலகியிருந்தது.

"ம். இந்தப் படையெடுப்பு சில பல ஊகங்களின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. ஆனால் அந்த ஊகங்கள் தவறாகலாம் என்ற நிலை இப்போது இருப்பதாகப் படுகிறது எனக்கு. மாதண்ட நாயகமும் அப்படியே நினைக்கிறார். இந்நிலையில் நமது திட்டத்தில் சிறு மாற்றம் செய்ய வேண்டியது அவசியமாகிறது. ஆகவே நாம் இங்கிருந்து ஒரு பிரிவுப் படையை நகர்த்திக் கொண்டு மீண்டும் தொரசமுத்திரத்திற்கே செல்லவேண்டும். இங்கிருக்கும் மற்றொரு பிரிவு மதுரையைத் தாக்க வேண்டும். இப்போது கேள்வி என்னவென்றால், யார் தொரசமுத்திரத்திற்குச் செல்வது என்பதுதான். நான் இங்கே இருக்க வேண்டும் என்பது என் ஆசை. நீண்ட நாட்களாகத் தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்று பாண்டியர்களிடம் உள்ளது. ஆகவே தொரசமுத்திரத்திற்குச் செல்லும் படைக்கு உன்னைத் தளபதியாக நியமிக்கலாம் என்று மாதண்ட நாயகம் கருதுகிறார். உனக்குச் சம்மதமா?" என்று சுருக்கமாக எடுத்துரைத்தான் வல்லாளன.

ஆதவனுக்குக் கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டாற்போல் இருந்தது. குவலாலாவின் கோட்டைப் பொறுப்பையே இப்போதுதான் ஏற்றுக்கொண்டிருந்தான். அப்படியிருக்க உடனடியாகப் படைப்பிரிவிற்குத் தளபதியென்றால் என்ன ஆவது? அந்தப் படையில் இருக்கும் மற்ற உபதளபதிகள் இதை ஏற்றுக்கொள்வார்களா? நம்மால் முடிகிற காரியமா? என்ற பல்வேறு கேள்விகள் அவன் மனதில் கணப்பொழுதில் எழுந்தன. அதனால் உடனே பதிலிறுக்க முடியவில்லை. ஆனால் மாதண்ட நாயகம் விடுவதாக இல்லை.

"அரசே, மவுனமாக இருப்பதிலிருந்தே அவனுக்குச் சம்மதம் என்று தெரிகிறதே. இனி தாமதப் படுத்தாமல் படையைப் பிரித்து வடக்கே நடத்த வேண்டியதுத்தான். இம்முறை ராஜபாட்டையிலேயே செல்லலாம்." என்றார் மாதண்ட நாயகம்.

"சரி, நீங்கள் சென்று என் உத்தரவை அனைத்து உபதளபதிகளுக்கும் தெரியப்படுத்துங்கள். நான் சற்று நேரம் ஆதவனுடன் தனியாகப் பேச வேண்டியிருக்கிறது" என்ற வல்லாளன் மாதண்ட நாயகத்தை வெளியேற்றிவிட்டு, ஆதவனை அருகில் அழைத்தான். மாதண்ட நாயகம் வெளியே சென்றுவிட்டார் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு, தன் உடையிலிருந்து ஒரு வரைபடத்தை எடுத்து வைத்தான். அது தக்ஷிணபாரதத்தின் படம் என்பது தெள்ளென விளங்கியது ஆதவனுக்கு. மேற்கொண்டு அரசன் பேசுவதற்காகக் காத்திருந்தான்.

"ஆதவா, இந்தப் படத்தை நன்றாகப் பார். இது தக்ஷிண பாரதத்தின் படம் என்பது உனக்குப் புரிந்திருக்கும். நாம் உறையூரில் இருக்கிறோம். இங்கிருந்து நேர் தெற்கே மதுரை இருக்கிறது. சற்றுத் தள்ளி வடமேற்கில் கொல்லி மலை அடிவாரத்தில் மாலிக் கஃபூரின் படைகள் இருக்கின்றன. கிழக்கே தஞ்சைக்கருகில், வீரபாண்டியனின் படைகள் இருக்கின்றன. இந்தப் படைகள் மூன்றும் மதுரையை நோக்கி இருக்கின்றன. வேகமாக வந்து சேர்ந்த இந்தப் படைகள் அனைத்துமே ஏதோ ஒரு காரணத்திற்காக மதுரையைத் தாக்காமல் கடந்த ஒரு வார காலமாக நின்று கொண்டிருக்கின்றன. இதன் காரணம் என்னவென்று உன்னால் ஊகிக்க முடிகிறதா?" என்று வினவினான் வல்லாளன்.

"இந்தப் படைகள் எதிர்ப்பார்த்து வந்த ஒரு நிகழ்வு இன்னும் நடக்காமல் இருக்க வேண்டும். இல்லையென்றால் அவை தேங்கி நிற்க எந்த ஒரு காரணமும் இல்லை"

"நன்று ஆதவா. நன்று. இந்தப் படையெடுப்பின் பின் புலத்தை நீ அறிய வேண்டியது அவசியமாகிறது. பாண்டியர்கள் ஹொய்சளர்களை கண்ணூர் கொப்பத்திலிருந்து விரட்டியடித்தனர். கண்ணூர்க்கொப்பம், ஹொய்சளர்களின் தமிழகத் தலை நகரம். அதன் பிறகுதான் நாம் குவலாலாவை பலப்படுத்தினோம். இப்போது குவலாலா ஹொய்சளர்களின் எல்லையாக விளங்குகிறது. கண்ணூர்க்கொப்பத்தை மீட்டெடுப்பது மட்டுமின்றி மதுரையையும் அழிப்பதே என் படையெடுப்பின் முக்கிய நோக்கம். இதன் காரணமாக மாலிக் கஃபூரையும் நான் சந்தித்தேன். அவனையும் துணைக்கழைத்தேன். அவனும் ஒப்புக்கொண்டான். அவ்வாறே அவனது படைகளையும் கொல்லிமலைக்கருகில் நிறுத்தியிருக்கிறான்."

"திட்டப்படி சரியாகத்தான் இருக்கிறது. இனி தாமதமின்றி மதுரையைத் தாக்கலாமே."

"அப்படித்தான் செய்திருக்க வேண்டும். ஆனால் மாலிக் கஃபூரின் சூழ்ச்சியும் வஞ்சகமும் இப்போதுதான் புரிகிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க நினைக்கிறான். ஹொய்சளர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே உள்ள பகையைப் பயன் படுத்தி இருவரையும் அழித்து அவன் பயன் பெற நினைக்கிறான். அவன் விரித்த வலையில் தக்ஷிண பாரதம் முழுவதும் விழுந்து விட்டதாகவே நினைக்கிறேன். ஆனால் ஹொய்சளர்களை அவ்வளவு எளிதில் அவனால் அழித்துவிட முடியாது. எனக்கு உதவுவதாகச் சொன்னது போல் சுந்தர பாண்டியனிடமும் சொல்லியிருக்கிறான். அதனால்தான் சுந்தர பாண்டியன் யாரையும் முன்னேறித் தாக்கவில்லை. மாலிக் கஃபூரின் உதவியை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறான்.

இதன் படி, மாலிக் நம்மையும் பாண்டியரையும் மோதவிட்டு இடையில் கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு வழியில் தொரசமுத்திரத்தையும் அழித்துவிட்டு மீண்டும் தில்லி திரும்பத் திட்டமிட்டுள்ளான். தொரசமுத்திரத்தைத் தாக்க மாட்டேன் என்று என்னிடம் கூறிய உறுதிமொழியை உடைப்பதாக முடிவெடுத்துவிட்டான். அவனை நம்பியது என் தவறுதான். அதற்கான பரிகாரம் தேட வேண்டியதும் என் பொறுப்பு. ஆகவே நான் இங்கிருந்து மாலிக் கஃபூரையும், சுந்தர பாண்டியனையும் கவனித்துக்கொள்கிறேன். நீ தொரசமுத்திரத்திற்குச் சென்று அதன் பாதுகாப்பை கவனித்துக்கொள். இங்கே போர் முடிந்தவுடன் நான் உன்னுடன் வந்து சேர்ந்து கொள்கிறேன். இனி நாம் படைத்தளத்திற்குச் சென்று தொரசமுத்திரம் செல்ல வேண்டிய படைகளைப் பிரித்தெடுப்போம்" என்று சொல்லி வேகமாக வெளியே சென்றான் வல்லாளன்.

ஆதவனுக்கு அது அரசனின் ஆணை என்று புரிந்தது. இனி எல்லாம் இறைவன் செயல் என்று எண்ணியவாறு அரசனைத் தொடர்ந்து சென்றான்.

(தொடரும்)

3 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

படித்துவிட்டேன். இடைவெளி அதிகரிப்பதால் சற்றுக் குழப்பம் ஏற்படுகிறது. அதனால் சீக்க்கிரம் அடுத்த பகுதி போடுங்கள்.

அல்லது முக்கியப் பகுதிகளுக்கு ரெஃபர் செய்ய லிங்க் கொடுத்துவிடுங்கள்

jo said...

என்னைய ஆழ காணுமே என்று நினைத்தேன் .
தலையும் வாலும் புரியாமல் வந்து நிக்கிறீரே!!!!!!!!!!!!!!!

குப்பத்து ராசா said...

பல்லவரே - கதை நன்றாக போகிறது தொடர்ந்து எழுதவும்