மிக முக்கியமான பதிவு சென்னையின் சிங்காரத் தமிழில் எழுதியதால் பெரும்பாலானோருக்குப் புரியாமல் போய் விட்டது :(. ஆகவே இதை அனைவரும் படித்துப் பயன்பெறும் வண்ணம் தூயதமிழில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறேன். வருக. பயன் பெறுக.
வீட்டில் சொல்லிக்கொண்டு வந்துவிட்டீர்களா?
இங்கே அமர்ந்திருக்கும் அனைவருக்கும் முதற்கண் என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் நலம். நீங்களனைவரும் நலமா? என்னைப் பேச அழைத்த அன்பின் சகோதரர் நான் ஆதவன் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
புத்தாண்டின் முதல் தேதியிலிருந்து இன்று வரை (பதிவு எழுதப்பட்டது 07.01.2010 அன்று) ஏதோ கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்களாம். அதன் பெயர் சாலை பாதுகாப்பு வாரம் என்று சொல்கிறார்கள். அதைப்பற்றிப் பேசுவதற்குத்தான் வந்திருக்கிறேன். அதற்குப் பெயர்தான், வீட்டில் சொல்லிக்கொண்டு வந்துவிட்டீர்களா?
நீங்கள் எப்போதாவது சென்னைக்கு வந்திருக்கும் போது, தானியங்கியிலோ, மிதிவண்டியிலோ செல்லும் போது இந்த வாக்கியத்தைக் கேட்டிருக்கலாம். இதன் கூடவே சென்னைக்கே உரித்தான அருச்சனை மொழிகளான 'பேமானி, நாதாரி, கய்தே, கஸ்மாலம் (இவற்றுக்கெல்லாம் விளக்கம் சொல்ல ஒரு தனி பதிவுத் தொடர்தான் எழுத வேண்டும்!). போன்றவற்றையும் கேட்டிருக்கலாம். நாங்களெல்லாம் பேசத்துவங்கினாலே இந்தவிதமான வார்த்தைகள் தானாக வந்துவிடும்.
உண்மையில் இப்படி கேட்பவர்கள்தான் தவறான பாதையில் வந்திருப்பார்கள். சென்னையில் நாம் முதலிலேயே மிகவும் சாக்கிரதையாக இருக்கவேண்டும். இல்லையென்றால், நம்மை நடுத்தெருவில் நிறுத்தி நாய்படாத பாடு படுத்திவிடுவார்கள். (பேஜார், காவாலி - விளக்கம் தனியாக). இப்படித்தான் ஒரு முறை, மாவா மனோகர் [மாவா என்பது அடைமொழி. சென்னையில் எல்லாருக்கும் ஒரு அடைமொழி உண்டு. டொமாரு குமாரு, பிளேடு பக்கிரி, செயின் செல்வம், என்பது போல். இந்த மனோகர் மாவா என்ற பொருளை வாயில் குதப்பிக்கொண்டே இருப்பான். அதனால் மாவா மனோகர். மாவா என்றால் பான் பராக் போன்ற ஒரு வஸ்து. அதை வாயின் உள் புறத்தில் உதட்டுக்குக் கீழே வைத்துக் கொள்வார்கள். ம்ம்முடியல..] என்னிடம் தன் கைவரிசையைக் காட்ட முயன்றான். நான் விட வில்லை. சாலையில் நான் செய்த செயல்களில் (ஊடு கட்னது) அவன் அரண்டுவிட்டான் (டகுலு பிகிலு ஊதிட்சி - இவை இரண்டும் நேர் மொழி மாற்றம் இல்லையென்றாலும் இந்த அளவுக்குத்தான் செய்ய முடிகிறது :( ). அதற்குப் பிறகு அவன் என் கண்ணிலேயே தென் படவில்லை. இன்னொரு இடத்தில் காஜா கபாலி (காஜா என்பது அடைமொழி - காஜா தைக்கும் பையன்). அட. சொல்ல வந்ததை விட்டுவிட்டு வேறெங்கோ சென்று விட்டேன் போலிருக்கிறதே (போயினேகிறேன்போலகீதே).
அதாகப்பட்டது, என்ன சொல்ல வருகிறேன் என்றால், நாம் சாலையில் செல்லும் போது அது நமக்கே சொந்தமான ஒன்று என்று நினைத்துக்கொண்டு செல்லக்கூடாது. அப்படிச் சென்றால் வருகிறவர்களும் போகிறவர்களும், நம்மீது இடறிவிழ (உயுண்ட்டு - விழுந்துவிட்டு என்பதன் மரூஉ)வாய்ப்பிருக்கிறது. பிற்கு நம் வாழ்க்கைதான் வீணாகிவிடுமேயன்றி (பேஜார்) நம்மை இடறியவர்களுக்கு ஒன்றும் ஆகாது. அட அவர்களுக்கு என்ன ஆனால் நமக்கென்ன. முதலில் நாம் நம்மை சரியாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். (நம்ம லுங்கி கயலாம பாத்து நாஜுகா - நம் உடை கழண்டு விடாமல் நாசூக்காக என்பது நேர் மொழிமாற்றம். இங்கே உவமையாகக் கூறப்பட்டுள்ளதை அறிக). நாம் ஒழுங்காக (ஒயுங்கா) இருந்தால் வீட்டில் மனைவிமக்கள் (புள்ளகுட்டி) மகிழ்ச்சியுடன் (குஜாலா) இருப்பார்கள் என்பதை மனதில் நிறுத்தினால் எல்லாமே சரியாகிவிடும்.
பிறகு, தினம் முழுவதும் காவலர்கள் (டாணாகாரங்கோ) சாலையில் நின்றுகொண்டே இருக்கிறார்கள். நாம் ஒரு இரு நிமிடம் நின்றாலே கண்கள் மது (சல்பேட்டா) உண்டதைப் போல் (அட்ச்சகணக்கா) சிவந்து விடுகிறது. அதுவும் வண்டி ஓட்டுனர்கள் செய்யும் தொல்லையால் ரத்த அழுத்தம் (டெம்பர்) நேராக (ஸ்டெய்ட்டா - ஸ்ட்ரெய்ட் என்பதன் மரூஉ) உச்சியில் (எல்லைசி - எல்.ஐ.சி கட்டிடம் சென்னையின் உயரமான கட்டிடம் என்பதால் உவமையாகக்காட்டப்பட்டு மருவியுள்ளதைக் கவனிக்க) ஏறிவிடுகிறது (அவர்களது துன்பத்தையும் நினைத்துப்பார்க்க வேண்டும் என்பது இதன் சாரம்!). ஆகவே அவர்கள் நிற்கச்சொன்னால் நின்று போகச்சொன்னால் போய்க்கொண்டுமிருந்தால் போக்குவரத்து நெரிசல் என்ற பேச்சுக்கே இடமில்லை.
பிறகு (அப்பாலிக்கா, அப்றமேல்ட்டு ஆகியவற்றின் பொது அர்த்தம்), சிக்னல்களில் நீண்ட நேரம் நிற்கும் நிலை ஏற்பட்டால் வண்டியின் எஞ்சினை ஓடவிட்டுக்கொண்டிருக்காமல் (டுர்ரு டுர்ரு .. வண்டியின் ஓசை) நிறுத்திவிட்டால், பெட்ரோல் செலவு மிச்சமாகிவிடும். (அய - அழ.)
இன்னொரு முக்கிய விஷயம் (சமாசாரம்). டாஸ்மாக்கில் மதுஅருந்திவிட்டு மயக்கமாக (கேரா) இருக்கும் போது (சொல்லோ என்ற வார்த்து போது என்ற அர்த்தத்தில் பயன்படும் போசொல்லோ - போகும் போது, வர்சொல்லோ - வரும்போது) வண்டி ஓட்டவே கூடாது. எடுத்தால் அவ்வளவுதான். நேராக மேலுலகம்தான் செல்வீர்கள். (கண்ணம்மா பேட்டையும், கிருட்டினாம்பேட்டையும் சென்னையின் மிக பிரபலமான மயானங்கள். இங்கே சூசகமாகச் சொல்லப்பயன்படுத்தப்பட்டிருக்கிறது) அது கூட நீங்களாகச் செல்லத்தேவையில்லை (போதாவல - போகத்தேவையில்லை என்பதன் திரிபு). அவர்களே தூக்கிக்கொண்டு சென்றுவிடுவார்கள் (பூடு - போய்விடு). அதனால் இந்த விஷயத்தில் மட்டும் அனைவரும் சாக்கிரதையாக (ஸ்ரிக்டா - ஸ்ட்ரிக்டாக) இருந்து கொள்ளுங்கள்.
இதைப் போன்ற சிந்தனைகள் (ரோஜன - யோசனை - சிந்தனை) எல்லாருக்கும் வந்துவிட்டால் எல்லோரும் சாலையில் ஒழுங்காக அவர்கள் பாதையைப் பார்த்துக்கொண்டு சென்று கொண்டே இருப்பார்கள். பிறகு, விபத்து (ஆஸ்டண்டு - ஆக்சிடெண்டின் சென்னைத்தமிழாக்கம்!) என்ற பேச்சே இருக்காது. இதுதான் நான் சொல்ல விழைந்தது.
அடுத்த முறை (தபா - தடவை என்பதன் திரிபு) சாலையில் செல்லும் போது யாராவது உங்களை முந்திச் சென்றால் (சைடு வாங்குனா) வீட்டில் சொல்லிக்கொண்டு வந்துவிட்டாயா என்று கேட்பதை விட்டுவிட்டு (உட்டுட்டு - விட்டு விட்டு), என்ன நண்பரே (நைனா - அப்பா, ஆனால் அன்பாக அழைக்கும் சொல்), நலமா, வீட்டில் அனைவரும் நலமா, பிறகு என்ன சொல்லுங்கள்' என்று கேட்டீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்களேன், முந்திச் சென்றவனுக்கு எப்படி இருக்கும் தெரியுமா?!.
நீங்கள் தலைவர் (தலிவரு - ரஜினிகாந்த் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?!) சொன்னதைப்போல் (மேரி, மாரி, மாறி - போல்), ச்ச்சும்மா அதிருதுல்ல என்று கேட்டவாறே நம் தலையை தட்டிக் காண்பித்துவிட்டு (காம்சிட்டு) நம் வழியில் சந்தோஷமாக (ஜில்ப்பா) போய்க்கொண்டே இருக்கலாம்.
ஏதோ எனக்குத் தோன்றியது சொல்லிவிட்டேன். சரியாக இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள். தவறாக இருந்தால் சொல்லுங்கள். என்னை மாற்றிக்கொள்கிறேன்.
வரட்டுமா???
(டிஸ்கி 1. : அப்பாடி.. நான் எழுதியதிலேயே மிக நீளமான பதிவு என்று நினைக்கிறேன்.
டிஸ்கி 2: இது கூட நன்றாக இருக்கிறதே. சென்னைத் தமிழ்ப்பதிவு ஒன்றும் அதற்கு நிகரான ஒரு தமிழ்ப்பதிவும் போட்டு விட்டால் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்!!)
9 comments:
அப்படியே தமிழில் அருஞ்சொற்பொருள் கொடுத்திருக்கலாம்,
முதற்கண்= முதலில், FIRST என்று பொருள் கொள்ளலாம் FIRST EYE என்று பொருள் கொளல் தவிர்க்க வேண்டும்
சாலை = ரோடு என்று எடுத்துக்கொள்ள வேண்டும். குடிசை என்று எடுத்துக் கொள்ள கூடாது
//SUREஷ் (பழனியிலிருந்து) said...
அப்படியே தமிழில் அருஞ்சொற்பொருள் கொடுத்திருக்கலாம்,//
தல. என்ன சொல்றீங்க. இந்தப் பதிவுக்கு ஒரு மொழிமாற்றமா? நான் ரெடி, தாங்குமா இந்தப் பதிவுலகம்??
// SUREஷ் (பழனியிலிருந்து) said...
முதற்கண்= முதலில், FIRST என்று பொருள் கொள்ளலாம் FIRST EYE என்று பொருள் கொளல் தவிர்க்க வேண்டும்
//
அவ்வ்வ்வ்வ்..
நல்லாயிருங்க. அவ்வளவுதான்...
//
SUREஷ் (பழனியிலிருந்து) said...
சாலை = ரோடு என்று எடுத்துக்கொள்ள வேண்டும். குடிசை என்று எடுத்துக் கொள்ள கூடாது
//
அய்யா. அவ்வளவுதானா இன்னும் ஏதேனும் இருக்கிறதா.. ஒட்டுக்கா சொல்லிடுங்க.
இன்னா தல ஒண்ணமே பிரியல... முன்னாடி போட்ட மாரி தமில்ல போடுங்க தல... இன்னா பாச இது...
//
நாஞ்சில் பிரதாப் said...
இன்னா தல ஒண்ணமே பிரியல... முன்னாடி போட்ட மாரி தமில்ல போடுங்க தல... இன்னா பாச இது...
//
வாங்க நாஞ்சில். சென்னை செந்தமிழ்ல போட்டா சின்ன அம்மணி போன்றவர்களுக்கு புரியல. இங்க வந்தா சுரேஷ் வித்தியாசமான கமெண்டு போடறாரு. உங்களுக்கோ இது புரியல.
ஆக மொத்தம் எனக்கு மட்டும் ஒண்ணு புரியுது. இனி பதிவுகள், பதிவுத்தமிழ்லதான் போடுவேன்.
இது எப்படி இருக்கு!!!
அண்ணே முடியல!!!!!
Post a Comment