Monday, October 6, 2008

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர்

மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது இயற்கையின் நியதி. சரித்திரத்தின் இரத்தம் தோய்ந்த ஏடுகளைப் புரட்டினால் நமக்குத் தெரிவது எழுந்து விழுந்த பேரரசுகளும் பெருநகரங்களும்தான்.

இந்த நாவலை எழுதத்தூண்டிய கேள்வி இதுதான்.

நகரேஷு காஞ்சி என்று வர்ணிக்கப்பட்டும், பல்லவப் பேரரசின் தலை நகரமாய் விளங்கியும், ஆதித்த கரிகாலன் எடுப்பித்த பொன் மாளிகையை தன்னகத்தே கொண்டும், சோழர்களின் வடதிசை மாதண்ட நாயகத்தின் தலைமையகமாகத் திகழ்ந்தும், குலோத்துங்கன் காஞ்சியில் இருந்து, கலிங்கத்தைக் குலைத்துப் பெற்ற வெற்றியும் இன்ன பிற அரசியல் நிகழ்வுகளின் ஆதாரமாக விளங்கி கச்சி என்றும், காஞ்சி என்றும் பெயர் பெற்ற காஞ்சிபுரம் தன் பெருமையையும் முக்கியத்துவத்தையும் இழந்து மற்றுமொரு சாதாரணமான நகரமாக மாறக் காரணம் என்ன?

இதற்காக வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்த போது என் கண் முன் விரிந்தது இக் கேள்விக்கான விடை மட்டுமல்ல. தற்காலத் தமிழக நிலையின் அடித்தளமான நிகழ்வுகளுமாகும்.

நண்பர்களே, கடந்த 700 ஆண்டுகளில் தமிழகத்தை தமிழர்கள் ஆண்டது 70 ஆண்டுகள் கூட இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது மிகப் பிரபலமான கருத்து.

இன்றைய அரசியல் சூழ் நிலையில் தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில் தம் தாய் மொழியல்லாத மற்றவர் ஆட்சிக் கட்டில் ஏறிடல் சாத்தியமா? தமிழகத்தில் மட்டும் இந்த நிலையினை சர்வ சாதாரணமாக நாம் ஏற்றுக் கொண்டோமே, எதனால் என்று சிந்தித்திருக்கிறீர்களா?

தமிழகத்தில் ஏற்பட்ட கலாசார மாற்றமும், சாரி சாரியான பிறமொழியினத்தவர்களின் (குறிப்பாகத் தெலுங்கர்கள்) குடியேற்றத்தினால் ஏற்பட்ட மாற்றங்களென்ன? கர்னாடக இசையின் மும்மூர்த்திகள் காவிரி டெல்டாவில் தோன்றிய அதிசயமென்ன? அவ்வாறு பெயர் சொல்லக் கூடிய தமிழிசை அறிஞர்களோ, புலவர்களோ தோன்றாததன் காரணம் என்ன?
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ் வாழ்ந்து வருவதன் காரணமென்ன?

கேள்விகள், கேள்விகள், கேள்விகள் . . . .

விடைகள் எங்கே? ஒன்றா, இரண்டா?.

இந்தக் கேள்விகளுக்கான ஆதார சுருதியாய் விளங்கும் விடைகளை எடுத்தியம்பும் முயற்சிதான் இந்தப் புதினம்.

ஆம். இவை அனைத்துக்கும் காரணமான சம்பவங்கள் நிகழ்ந்தது 13ம் - 14ம் நூற்றாண்டில்.

இந்தக் கதையும் அந்த மாற்றம் நிகழத் துவங்கிய காலத்திலிருந்து மாற்றம் முழுமையடைந்த காலம் வரை பயணிக்கிறது.

தமிழகத்தின் கடைசித் தமிழ் மாமன்னன் ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன். இவன் ஆட்சியில்தான் தென்னிந்தியா முழுவதும் ஒரே நாடாக அதாவது தமிழ் நாடாக இருந்தது. இவனுக்குப் பிறகு இவன் வாரிசுகளுக்குள் ஏற்பட்ட பதவி ஆசைதான் தமிழகத்தில் அதுவரை நுழையாமல் இருந்த தில்லி சுல்தான் ஆட்சிக்கும் அதன் பின் ஆற்காட்டு நவாபின் ஆட்சிக்கும் அடி கோலியது. மேலும், அப்போதுதான் மலரத் துவங்கிய விஜய நகரப் பேரரசுக்கு பட்டுக் கம்பளம் விரித்துத் தங்கத் தாம்பாளத்தில் தமிழகத்தை தாரை வார்த்துக் கொடுத்ததும் நிகழக் காரணமாயிருந்தது.

இந்தக் கதை காஞ்சி, மதுரை, விஜய நகரம், திருச்சி, ஆற்காடு, வேலூர், செஞ்சி முதலிய இடங்களில் நடைபெறுகிறது.

ஜடாவர்மன் சுந்தர பாண்டியன், வீர பாண்டியன், மாலிக் கஃபூர், கோப்பெருஞ்சிங்கன், எகாம்பர நாதன், ஹரிஹர சங்கமன், புக்க சங்கமன் ஆகியோர் வரலாற்றுப் பாத்திரங்கள். மேலும் சில வரலாற்றுப் பாத்திரங்களை இணைக்க முயற்சிக்கிறேன்.

காதல், கிளு கிளு, இளவரசி முதலிய விஷயங்கள் புதினத்தின் சுவையைக் கூட்டவே பெரும்பாலும் பயன் பட்டிருக்கின்றன. இப் புதினத்திலும் இவற்றை இணைக்கக் கூடுமான வரையில் முயல்கிறேன்.

திரு. கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியாரின் ஹிஸ்டரி ஆஃப் சவுத் இந்தியா வும், பற்பல விக்கி இணைப்புகளும் இவ்வரலாற்றுப் புதினத்தை இயற்றுவதற்குப் பெரிதும் துணையாயிருந்தன.

ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை அன்று வெளியிடலாம் என்று எண்ணியிருக்கிறேன். உங்கள் நண்பர்களிடமும் இம்முயற்சியைப் பற்றி எடுத்துச் சொல்லி, எனக்கு ஊக்கமளிக்க வேண்டுகிறேன்.


உங்கள் மேலான ஆதரவுக்கு நன்றிகள் பல.

11 comments:

☀நான் ஆதவன்☀ said...

முன்னுரையே அசத்தலாக இருக்கிறது. கதையும் அப்படியே வர வாழ்த்துக்கள் பல்லவன்

CA Venkatesh Krishnan said...

//
நான் ஆதவன் கூறியது...
முன்னுரையே அசத்தலாக இருக்கிறது. கதையும் அப்படியே வர வாழ்த்துக்கள் பல்லவன்
//

மிக்க நன்றி ஆதவன்.

எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கிறது.

வெங்கட்ராமன் said...

தொடருக்காக காத்திருக்கிறேன். . .

CA Venkatesh Krishnan said...

//
வெங்கட்ராமன் கூறியது...
தொடருக்காக காத்திருக்கிறேன். . .
//

மிக்க நன்றி வெங்கட்ராமன்

Anonymous said...

வாழ்த்துக்கள்

Anonymous said...

மிக்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

வாழ்த்துக்கள்

புருனோ Bruno said...

வாழ்த்துக்கள் !!

CA Venkatesh Krishnan said...

//
புருனோ Bruno கூறியது...
வாழ்த்துக்கள் !!
//


மிக்க நன்றி டாக்டர் ! ! !

Bee'morgan said...

இன்றுதான், தமிழ்மணத்தில் 5வது அத்தியாயத்தைக் கண்டு இங்கு வந்தேன்.. வரவேற்க வேண்டிய முயற்சி.. காஞ்சித்தலைவனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.. :)
முன்னுரையே சிறப்பாக இருக்கிறது.. பிற அத்தியாயங்கள் இன்னும் படிக்கவில்லை.. கூடிய விரைவில் படித்துப் பின்னூட்டமிடுகிறேன்..

CA Venkatesh Krishnan said...

//
Bee'morgan கூறியது...
இன்றுதான், தமிழ்மணத்தில் 5வது அத்தியாயத்தைக் கண்டு இங்கு வந்தேன்.. வரவேற்க வேண்டிய முயற்சி.. காஞ்சித்தலைவனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.. :)
முன்னுரையே சிறப்பாக இருக்கிறது.. பிற அத்தியாயங்கள் இன்னும் படிக்கவில்லை.. கூடிய விரைவில் படித்துப் பின்னூட்டமிடுகிறேன்..

//

மிக்க நன்றி Bee'morgan

Anonymous said...

முன்னுரையே அசத்தலாக இருக்கிறது. கதையும் அப்படியே வர வாழ்த்துக்கள் பல்லவன் Pavan