Thursday, February 5, 2009

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர் . . . 17

அத்தியாயம் 17 - மதுரையில் காதல் வியூகம்

மீண்டும் மதுரை நம்மை அழைக்கிறது. சென்ற முறை சரியாக மதுரையை நம்மால் பார்க்க இயலவில்லை. இப்போது நல்ல வெளிச்சத்தில் பட்டப்பகலில் வந்திருக்கிறோமல்லவா? ஆஹா... பல்லவர்களின் தலை நகரம் காஞ்சி இடையில் தோன்றியது. சேரர்களின் தலை நகரங்கள் வஞ்சியிலிருந்து திருவனந்தபுரம் வரை மாறிக் கொண்டே இருக்கின்றன. சோழர்களோ உறையூர் முதல் கங்கை கொண்ட சோழபுரம் வரை தங்கள் தலை நகரை மாற்றிக் கொண்டே இருந்தனர். ஆனால் என்றும் மாறாத தலை நகர் மதுரை மட்டும் தானே!

எவ்வளவுதான் மதுராந்தகன் என்றும் மதுராந்தகி என்றும் சோழர்கள் மாற்றி மாற்றி பெயர்களை வைத்துக் கொண்டாலும் அவர்களால் மதுரையை அழித்துவிடமுடியவில்லையே. நீறு பூத்த நெருப்பாக இருந்த பாண்டியர்கள் ஜடாவர்ம சுந்தர பாண்டியர் காலத்தில் அக்கினிக்குழம்பாகப் புறப்பட்டு சோழர்களை அழித்ததையும் ஹொய்சளர்களை விரட்டியதையும் சேரர்களை ஒடுக்கியதையும் யார்தான் மறக்க முடியும்? அத்தகைய சிறப்புகளுக்கெல்லாம் மௌன சாட்சியாக விளங்கும் மதுரையும், மீனாட்சிசுந்தரேஸ்வரர் ஆலயமும், வைகையும் பேச முடிந்திட்டால் இவற்றின் கதைகளை நாளெல்லாம் சொல்லுமே..

இந்த மாநகர் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டிருக்கிறது. கோட்டையும் அதை சார்ந்த நகரும் ஒரு பிரிவாகவும், ஏனைய சிறு கிராமங்களின் கூட்டம் ஒரு பிரிவாகவும் உள்ளது. தலைநகரங்களை ஆற்றுக்கருகில் அமைப்பது மரபு. ஆற்றுப் படுகைகள் நகருக்கான நீர் ஆதாரமாக மட்டுமின்றி அரண் போலவும் செயல்படுகின்றன. ஆகவே ஆற்றங்கரையோரம் அதுவும் ஆறுகள் வளைந்து குதிரைக் குளம்பைப் போல் அமையும் இடத்தில் தலை நகரை அமைத்தால் மூன்று பக்கமும் இயற்கை அரண் அமைந்து விடுகிறது. ஆனால் மதுரையும் வைகையும் அப்படியன்று. வைகை ஒரு நேர்க்கோடாக செல்கிறது. ஆகவே மற்ற நகரங்களைப் போல் மதுரைக்கு இயற்கை அரணில்லை. ஆயினும் என்ன, இயற்கைக் குறைபாடுள்ளவர்களுக்கு வேறு வகையில் தற்காப்பு அமைந்து விடுகிறதல்லவா? அதைப் போன்றே மதுரை மண்ணின் மைந்தர்களுக்கு போராடும் குணமும், தோல்வியைக் கண்டு துவளாத மனமும் இயற்கையாக அமைந்துவிட்டன. இதுவே பிற்காலப் பாண்டியர்களின் வளர்ச்சிக்குக் காரணம் என கூறலாம். மிகப் பழமையான நகராதலால் திட்டமிட்ட வளர்ச்சியைக் காண முடியாத நிலை இருந்தாலும் நகருக்குண்டான மிடுக்கை யாரும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

அக்காலத்தில் பெரும் நகரங்களை இணைக்கும் வழிகள் மூன்று இருந்தன. அவை முறையே ராஜ பாட்டை, பொதுப்பாட்டை மற்றும் சகடப்பெருவழி என்பதாகும். ராஜபாட்டை சீருடனும் பாதுகாப்புடனும் விளங்கிவந்தன. அவற்றில் பெரும்பாலும் அரச குடும்பத்தினர், அமைச்சர்கள், அதிகாரிகள், படைத்தலைவர்கள், படைகள் பயணித்தன. பொதுமக்கள் இவற்றைப் பயன் படுத்தத் தடை விதிக்கப் பட்டிருந்தது. அவர்கள் பொதுப்பாட்டை என்னும் வழியில் செல்ல வேண்டும். அதில் மக்கள் நடந்தும், சிறு கூடு வண்டிகளில் சென்றும் பயணம் செய்தனர். அக்காலத்தில் வெளியூர்ப் பயணம் என்பது அவ்வளவு சவுகரியமானதன்று, ஆபத்தானதும் கூட. ஆகவே மக்கள் அவ்வளவாகப் பிரயாணப்பட மாட்டார்கள். சகடப் பெருவழியானது துறைமுக நகரங்களான கொற்கை, நாகை, புகார், மல்லை ஆகியவற்றிலிருந்து தலை நகரங்களுக்கும் மற்ற பெரு நகரங்களுக்கும் சென்றன. இவற்றில் பெரும் பொதி சுமந்த வண்டிகள் செல்லும். சகடம் என்றால் சக்கரம். ஆகவே பெரும் சக்கரங்களுடைய வண்டிகள் செல்வதால் இவை சகடப் பெருவழியாயிற்று. இவற்றைத் தவிர மற்ற ஊர்களை இணைப்பது ஒற்றையடிப்பாதைகளும், காட்டுப் பாதைகளும்தான்.

மதுரை தமிழகத்தின் இதயத்தில் இருந்ததால், ராஜபாட்டைகளும், பொதுப்பாட்டைகளும், சகடப்பெருவழிகளும் இங்கு சங்கமித்தன. இவை நகரை நேராகச் சென்று அடையாத வண்ணம் தொலைவிலேயே சாவடிகள் அமைத்து தடுக்கப் பட்டிருந்தன. ஒரு பாட்டைக்கும் மற்றொரு பாட்டைக்கும் இணைப்புப் பாட்டைகளும் அமைக்கப் பட்டிருந்தன.

=====

தில்லையிலிருந்து வந்த வீர பாண்டியன் தஞ்சை வழியாக வந்த ராஜ பாட்டையிலேயே பயணம் செய்து வந்ததால் விரைவில் மதுரை சேர்ந்தான். வழியில் அவனுக்கு மாற்று குதிரைகளும் கிடைத்தன. ஆகவே எங்கும் தங்கவில்லை. சக்கர வியூகத்தைப் பற்றி கயல்விழியிடம் சொல்ல வேண்டும் என்ற ஆவல் மிகுதியில் விரைந்தான் தன் மாமன் அரண்மனை நோக்கி.

கயல்விழியும் இவன் வருகைக்காகக் காத்திருந்தாள். அவனிடம் சொல்ல நிறைய தகவல்கள் இருந்தன. இடைப்பட்ட காலத்தில் மதுரை அவளுக்குப் பழகிவிட்டது. அழகர் மலை வரை தனியாகவே பயணம் செய்துவிட்டாள். மதுரையில் சாதாரண உடையில் திரிந்ததில் பலப்பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. முக்கியமாக மாலிக் கஃபூரின் மாயவலையின் முளைகள் மதுரையில் பலமாக அடிக்கப்பட்டு விட்டதை அவள் கவனிக்கத் தவறவில்லை.

=====

முதலில் அரண்மனையில் தந்தையின் நலனைத் தெரிந்து கொண்டு தன் மாளிகை நோக்கி சென்றான். பயணத்தில் ஏற்பட்ட அலுப்பைப் போக்க நன்றாக நீராடி, உணவுண்ட பின் ஒரு சிறு தூக்கம் அவனைத் தழுவியது. மாலையில் விழித்தவனின் சிந்தையில் கயல்விழி என்ன சொல்வாளோ என்ற எண்ணமே மேலோங்கியது. துரிதமாகக் கிளம்பினான் மாமன் மாளிகை நோக்கி, மயிலைத் தேடி.

மார்கழி மாதத்து மாலை நேரம் குளிர் மிகுந்திருந்தாலும் இதமாகவே இருந்தது. உத்தியான வனத்திலே உலாவந்து கொண்டிருந்தாள் கயல்விழியாள். அவளை நோக்கி வந்த வீர பாண்டியனை நோக்கியவள் ஒன்றும் சொல்லாமல் புன்முறுவல் பூத்தாள். மாலை நேரமும், உத்தியான வனமும் காதற்கடவுளுக்குகந்த நேரமாயிற்றே. இருவர் மனதிலும் அவன் அதிகமாகவே அம்பெய்தியிருந்தான். அதோடு சேர்ந்த புன்முறுவல் அவனை மொத்தாமாக சாய்த்துவிட்டது. காதல் வியூகம் அமைத்துவிட்டாள் கட்டிளங்குமரி. விருப்பத்தோடு கட்டுண்டான் வீர பாண்டியன்.

"வாருங்கள். ப்ரயாணமெல்லாம் சௌகரியம்தானே"

"அதிலென்ன குறையிருக்க முடியும். இருந்தாலும் அதைப் பெரிதாக நினைப்பதில்லை. ப்ரயாணமும் நன்றாக இருந்தது. சென்ற காரியமும் நன்றாக முடிந்தது. உன் அண்ணன் பிறகு வருவதாகக் கூறினான்"

"அவன் திருவெண்காட்டிற்குச் சென்றிருப்பான்"

"உனக்கெப்படித் தெரியும்"

"எங்கள் தந்தையின் உற்ற நண்பரொருவர் அங்கே வசிக்கிறார். அவர் வருவதும் நாங்கள் அவர் இல்லத்திற்குச் செல்வதும் எப்போதும் நடக்கும். மேலும் தில்லை சென்றால் திருவெண்காடு செல்லாமல் திரும்பமாட்டார் என் தந்தை. அதைத்தான் என் தந்தை இளவழுதிக்கும் சொல்லியிருப்பார். சரி சக்கரவியூகத்தைப் பற்றித் தெரிந்து கொண்டீர்களா?"

"அதைப் பற்றி சொல்லத்தானே ஓடி வந்தேன். அதை விளக்க வேண்டுமென்றால் இங்கே பேசுவது முறையல்ல. மேலும் இந்த சமயத்தில் போரைப் பற்றி பேச வேண்டாமென எண்ணுகிறேன்"

"வேறென்ன செய்வதாக உத்தேசம். திருப்பாவையைப் பற்றியும் திருவெம்பாவையைப் பற்றியும் விவாதிப்போமா?"

"அதற்கு அதிகாலை உகந்தது. இப்போது விவாதிக்க வேண்டியது இந்தப் பாவையைப் பற்றி" என்று அவளைச் சுட்டியவன் "ஆனால் இதற்கு நேரம் காலம் தேவையில்லை" என்று அவள் கரங்களைப் பற்றினான்.

சில்லென்ற காற்று, ரம்மியமான மாலை நேரம், சில நாட்களே பிரிந்திருந்தாலும் நீண்ட நாள் பிரிந்திருந்தது போன்ற நினைப்பு அவர்களின் வியூகத்தை வலுப்படுத்தின. வியூகம் வலுத்தது. மங்கை வலுவிழந்தாள். ஆனால் வெற்றி யாருக்கும் கிட்டவில்லை.

(தொடரும்)

11 comments:

சொல்லரசன் said...

இந்த சரித்தர தொடரை முதல் முறையாக படிக்கிறேன்.
நீங்கள் ஒரு இளைய
சாண்டில்யன். அருமையான வரலாறுநடை தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துகள்.

Anonymous said...

Hello Pallavan

Very impressive. i wandered into your blog by mistake and it is in my favorite list now.

-Venkat

ஆதவன் said...

nalla alasal.. varalaatru thodar arumai.. thodarungal.. if possible please give your mobile no to thamizhstudio@gmail.com


thanks,
thamizhstudio.com

☀நான் ஆதவன்☀ said...

//ஆதவன் சொன்னது…

nalla alasal.. varalaatru thodar arumai.. thodarungal.. if possible please give your mobile no to thamizhstudio@gmail.com


thanks,
thamizhstudio.com//

நான் அவனில்லை!

☀நான் ஆதவன்☀ said...

//அத்தகைய சிறப்புகளுக்கெல்லாம் மௌன சாட்சியாக விளங்கும் மதுரையும், மீனாட்சிசுந்தரேஸ்வரர் ஆலயமும்//

கதை நடக்கும் காலத்தில் மீனாட்சி அம்மன் ஆலயம் கட்டப்பட்டுவிட்டதா?

☀நான் ஆதவன்☀ said...

மதுரை மாநகர் பற்றிய விளக்கம் அருமை.

CA Venkatesh Krishnan said...

//
சொல்லரசன் கூறியது...
//

தங்கள் கருத்துகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சொல்லரசன் அவர்களே.

CA Venkatesh Krishnan said...

//
Hello Pallavan
Very impressive. i wandered into your blog by mistake and it is in my favorite list now.
-Venkat
//

Thank you very much venkat! Do visit weekly and offer your comments !!

CA Venkatesh Krishnan said...

நன்றி அப்சர்வர்,

நன்றி ஆதவன் !

CA Venkatesh Krishnan said...

வாங்க 'நான் ஆதவன்'

அந்த ஆதவன் நீங்களில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன் !

மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் தேவார மூவருக்கு முன்னரே இருந்த கோவில். ஆனால் இன்றைய பெரும்பாலான கோவில்களைப் போல் ராஜ கோபுரமு, திருச்சுற்று மதில்களும், விஜய நகர, நாயக்க மன்னர்கள் காலம் தொட்டு அமைக்கப் பட்டவை.

மதுரை வருணனை குறித்த தங்களது கருத்துக்கு நன்றி 'நான் ஆதவன்' (இனி உங்களை இப்படித்தான் அழைக்க வேண்டும் போல !)

Anonymous said...

சுபா கூறியது,
மிக அருமையாக உள்ளது.
தங்களின் மனதில் இப்படி ஒரு சரித்திர நாவல் எழுத எண்ணம் எப்படி உதித்தது?
தெரிவிக்க இயலுமா?