Tuesday, February 17, 2009

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர் . . . 18

அத்தியாயம் 18 - வாரிசுரிமைப் போர்

பாண்டியர் அரண்மனையின் மாறவர்மர் குலசேகரப் பாண்டியரின் அறையில் குழுமியிருந்தோரின் முகத்தில் தேங்கி நின்ற கவலை, அந்தச் சூழலைத் தெள்ளென எடுத்தியம்பியது. நன்றாகத் தேறி வந்த மாறவர்மரின் உடல் நிலை சட்டென மாறுமென்றோ, அவர் நிலை இவ்வளவு கவலைக்கிடமாகுமென்றோ யாரும் எதிர்ப்பார்க்க வில்லைதான். வாடிய பயிரைப் போலிருந்தாலும் நினைவு தப்பவில்லை. கண்ணை மூடியே கிடந்தாலும் விழிகளின் அசைவுகள் நன்றாகத் தெரிந்தன.

மாறவர்மரின் பட்டத்தரசியார் (சுந்தர பாண்டியனின் தாய்), சுந்தர பாண்டியன், வீர பாண்டியன், அவர்களின் மாமா விக்ரம பாண்டியன், இளவழுதி, கயல்விழி, முதன்மை அமைச்சர்கள், தளபதிகள் ஆகியோருடன் மருத்துவர்களும் அங்கே இருந்தனர்.

சிறிது நேரத்திற்குப்பின் கண் விழித்த மாறவர்மர், மூவரைத் தவிர அனைவரையும் வெளியேறப் பணித்தார். அனைவரும் வேறு வழியின்றி வெளியேற அந்த அறையில் இருந்தது மாறவர்மர், விக்ரம பாண்டியன், வீர பாண்டியன், சுந்தர பாண்டியன். யாரும் பேசாமல் போகவே மாறவர்மரே, தீனமான குரலில் பேசினார்,

"சில மாதங்களுக்கு முன் நாம் இதே அறையில் சந்தித்தோம். இவ்வளவு விரைவில் மீண்டும் இங்கே சந்திப்போம் என்று நான் எண்ணவில்லை. தற்போதைய என் உடல் நிலையில் இன்னும் எவ்வளவு நாழிகை என்பது தெரியவில்லை." இடையே விக்ரமபாண்டியர் ஏதோ சொல்ல வாயெடுத்தபோது, "வேண்டாம் விக்ரமா, என்னைப் பேச விடு. நான் சொல்ல வந்ததை முழுமையாகச் சொல்லிவிடுகிறேன்."

"எவ்வளவு முறை சொன்னாலும் சலிக்காதது, எத்துணை முறை கேட்டாலும் தெவிட்டாதது இந்தத் தொல் பழங்குடியான பாண்டிய வமிசத்தின் வரலாறு. சங்க காலம் முதல் எவ்வளவோ இடர்ப்பாடுகள் வந்தாலும், இம்மதுரையையும், தமிழையும் எப்போதும் காத்துவந்தவர்கள் நாம். இடையிடையே சூரியனை மேகங்கள் மறைப்பது போல் நம் குலம் தாழ்ந்து கிடந்தது. தாழ்ந்தோமே தவிர வீழ்ந்து விடவில்லை. இதோ மீண்டும் ஒரு பாண்டியப் பேரரசு தமிழகத்தில் நிலைபெற்றுள்ளது. இதற்கான முயற்சிகள் எவ்வளவு என்று உங்களுக்குச் சொல்லித்தெரிய வேண்டியதில்லை"

"அப்படிப்பட்ட நிலையில் இந்தப் பேரரசு இருக்கும் போது பெரும் வினாவாக எழுந்துள்ளது வாரிசுரிமைப் போராட்டம். இவ்வளவு நாள் தள்ளிப் போய்விட்டது. கடைசியாக இப்போது, எனக்குப் பின் யார் என்பதை நான் முடிவு செய்தாக வேண்டிய சூழலில் இருக்கிறேன். சுந்தரனும், வீரனும் என் பேச்சைத் தட்டமாட்டார்கள் என்று நீ கூறினாய். ஆனால் இவர்கள் நடத்தையில் எவ்வித முன்னேற்றமும் தெரியவில்லை. ஆகவே இன்று ஒரு முடிவுடன் தான் உங்களைப் பேச அழைத்திருக்கிறேன்" என்று சற்று நிதானித்தார்.

ஒவ்வொருவரின் மனதிலும் ஓராயிரம் எண்ணங்கள். ஆயினும் யாரும் எதையும் வெளிப்படுத்தவில்லை. அவரது அடுத்த சொல்லுக்காகக் காத்துக் கிடந்தனர்.

"விக்ரமா. என் இறுதியான முடிவு இதுதான். பட்டத்திற்கு அடுத்து வர வேண்டியது வீர பாண்டியன்தான். அதற்கான ஏற்பாடுகளைச் செய். சுந்தரா, உன் அண்ணனுக்கு உதவுவதுதான் உன் முதல் கடமை என்பதை நினைவில் கொள். உனக்குத் தேவையான அதிகாரங்களை அவன் தருவான். அந்த நம்பிக்கை எனக்கு உண்டு. ஆனால் தவறான முடிவு செய்து பாண்டியப் பழங்குடிக்கு ஆபத்தை விளைவித்துவிடாதே. இதை என் ஆணையாகக் கொள்ளலாம். அல்லது வேண்டுகோளாகவும் ஏற்கலாம். சரி இப்போது செல்லுங்கள். இறைவன் அருள் இருந்தால் நாளை சந்திப்போம்." என்றவர் அவர்களது பதிலுக்குக் காத்திராமல் அருகிலிருந்த மணியை அடித்து ஓசை எழுப்பினார். அவ்வோசை கேட்டதும் வெளியே சென்ற மற்றவர்கள் உள்ளே வந்தனர்.

அதற்குப் பிறகு மாறவர்மர் எதுவும் பேசவில்லை. எப்போதும் பேசவில்லை. அவர் கூறியதைப் போல் இறைவன் அருள் கிடைக்காததால் மறு நாள் அவர்கள் சந்திக்க முடியவில்லை. காலனின் பின் தொடர்ந்தார் மதுரைக் காவலர்.

====

மாறவர்மன் குலசேகரப் பாண்டியனுக்குப் பிறகு சுந்தர பாண்டியனுக்கும், வீர பாண்டியனுக்கும் வாரிசுரிமைப் போர் ஏற்பட்டதை அனைத்து வரலாற்றாசிரியர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். இதற்கு சுந்தர பாண்டியனே காரணம் என்றும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு முடிவெடுக்க என்ன ஆதாரம் இருந்தது என்பது தெரியவில்லை. ஆயினும் முதல் மகன் என்ற முறையில் வீர பாண்டியனுக்கு அதிக உரிமை இருக்கலாம் என்ற எண்ணத்தில் அனைவரும் அவன் சார்பாக கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

இந்த வாரிசுரிமைப் போரே, தமிழகத்தின் இறுதி தமிழ்ப் பேரரசின் முடிவுக்குக் காரணமாகவும் அமைந்தது.

====

அனைவர்க்கும் ஒரு நீதியென்றால் அரசர்க்கு ஒரு நீதி என்பது மரபு. அதன்படி மாறவர்மர் மறைந்த துக்கம் நீங்குமுன்னமே அடுத்த அரசர் யார் என்பதைத் தெளிவுபடுத்த அமைச்சர்களும் அதிகாரிகளும் கூடியிருந்தனர். பிரதான அமைச்சரே பேச்சைத் துவக்கினார்.

"மேன்மை தங்கிய மாறவர்மர் மறைந்து சில தினங்களுக்குள்ளாகவே நாம் இவ்வாறு கூட வேண்டிய நிலை மிகவும் துர்ப்பாக்கியவசமானது. மன்னர் தனக்குப் பின் ஆட்சிசெய்யவேண்டியவரைத் தெரிவு செய்து பட்டத்திளவரசாக அறிவிப்பது மரபு. ஆயினும் மாறவர்மர் அவ்வாறு செய்யவியலாமற் போனதன் காரணம் நமக்கெல்லாம் தெரிந்ததே. இன்றைய அரசியல் சூழலில் பாண்டிய நாடு வலுவுடனிருந்தாலும், எதிரிகளின் பலமும் அதற்குக் குறைவில்லாமல் இருக்கிறது. ஜடாவர்மசுந்தர பாண்டியரால் விரிவு படுத்தப்பட்டு மாறவர்ம குலசேகரரால் பரிபாலனம் செய்யப்பட்டு வந்த இந்தப் பேரரசின் பெரும்பொறுப்பை ஏற்கவேண்டியது யார் என்பதை முடிவு செய்ய வேண்டியதே நம் கடமை. இனி நீங்கள் அனைவரும் உங்கள் கருத்துக்களைக் கூறலாம்"

இவ்விதமாக ப்ரதானி கூறியவுடன், அனைவரும் சுந்தர பாண்டியனே பட்டத்திற்குறியவன் என்று கூறினர். இது விக்ரமனையும், வீர பாண்டியனையும் வியப்பிலாழ்த்தியது. ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். கண்கள் பேசின. விக்ரமனின் செய்தியை முழுமையாகப் புரிந்து கொண்டான் வீர பாண்டியன். இளவழுதியால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

"விக்ரம பாண்டியரே உங்கள் கருத்து என்ன?"

"அய்யா, நீங்கள் அனைவரும் சுந்தரனே அடுத்த அரசன் என்று முடிவெடுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதில் என் கருத்து என்ன இருக்கிறது. மறைந்த மன்னரின் கருத்து ஒன்று உண்டு. ஆனால் இன்றைய நிலையில் அது பொருள் தராது. ஆகவே உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள். நாங்கள் வருகிறோம். வா வீர பாண்டியா" என்று வேகமாக வெளியேறினான் விக்ரம பாண்டியன்.

அனைவரையும் ஒரு முறை நோக்கிய வீர பாண்டியன் சுந்தரபாண்டியனை தீர்க்கமாகப் பார்த்தான். அவன் பார்வையின் தீக்ஷண்யம் சுந்தரனைத் தலை குனியச் செய்தது. ஒரு முடிவுடன் கிளம்பினான் வீர பாண்டியன். உடன் புறப்பட்டான் இளவழுதி. அங்கே துவங்கியது ஒரு வரலாற்றுத் திருப்பம்.

(தொடரும்)

4 comments:

☀நான் ஆதவன்☀ said...

நான் தான் முதல்ல...

☀நான் ஆதவன்☀ said...

//வேண்டாம் விக்ரமா, என்னைப் பேச விடு. நான் சொல்ல வந்ததை முழுமையாகச் சொல்லிவிடுகிறேன்."//

இப்படி ஒரு டயலாக்கை எதிர்பார்த்தேன். இதை தவிர்த்திருக்கலாம்.

//அங்கே துவங்கியது ஒரு வரலாற்றுத் திருப்பம்.//

கதை(வரலாறு) ஏற்கனவே கொஞ்சம் தெரிந்தாலும் உங்கள் திரைக்கதையை ஆவலுடன் அடுத்தடுத்த வாரங்களில் எதிர்பார்க்கிறேன்.

CA Venkatesh Krishnan said...

வாங்க ஆதவன்.

இந்த டயலாக் மரபுப்படி தேவையான ஒன்று. அது தானாக வந்து விட்டது.

Anonymous said...

இன்னும் கொஞ்சம் சுவாரசியமா இருக்கலாம்..