Wednesday, July 22, 2009

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 10

வீரதவளப்பட்டிணத்தின் அரண்மனையில் நடைபெற்ற விருந்திற்குப் பிறகு மேல்மாடத்தில் நடைபெற்ற பிரத்யேக சந்திப்பில் சில வித்தியாச நிகழ்வுகளை இளவழுதி எதிர்பார்த்தான் என்றாலும், பேச்சு துவங்கிய உடனேயே தன் தங்கையை பெண் கேட்பார்கள் என்று எதிர் பார்க்கவில்லை. வீர பாண்டியனுக்கும் கயல்விழிக்கும் இருந்த நெருக்கம் அவனுக்குத் தெரிந்தே இருந்தது. துடிப்பான பெண்ணானதால் கயல்விழியிடம் அவனுக்கு நம்பிக்கை இருந்தது. தந்தையின் பதிலுக்காகக் காத்திருந்தான். இத்துணைக்கும் வீர பாண்டியனும், கயலவிழியும் ஒருவரையொருவர் பார்ப்பதைத் தவிர்க்க பிரம்மப்பிரயத்தனப்பட்டனர்.

மாராயர் உடனடியாக சுதாரித்துக் கொண்டவராய், "நாங்கள் அரச குலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. அரச குலத்தைச் சேராதவர்கள் அரியணை ஏறுவது மரபும் அல்ல" என்றார்.

"மரபுகள் காலத்தின் பாற்பட்டவை. நேற்று சரியான ஒன்று இன்று தவறாகிறது. நேற்று தவறான ஒன்று இன்று சரியாகிறது. அரச குலத்தோர்தான் ஆள வேண்டுமென்றால் புதிய அரசுகள் என்றும் ஏற்பட்டிருக்காது. காலத்தோடு மாற வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆகவே உங்கள் நிலை இன்றைய நிலையில் ஏற்கத்தக்கதல்ல. இதைத் தவிர வேறு ஆட்சேபணை ஒன்றும் இருக்காது என்றே நம்புகிறேன்." என்று மாராயரது சம்மதத்தை வலுக்கட்டாயமாக எடுத்துக் கொண்ட விக்ரமர், "நீ என்ன சொல்கிறாய் கயல்விழி?" என்று கயல்விழியை இழுத்தார்.

இயல்பிலேயே மிகவும் துணிச்சல்காரியான கயல்விழி, திருமணம் என்ற பேச்சு வந்தவுடன் பெண்ணிற்குரிய நாணம் மேலோங்கிவிட்டதை அறிந்து ஆச்சரியப்பட்டாலும் விரைவிலேயே சுதாரித்துக் கொண்டாள். "அய்யா, நான் என்ன சொல்வதற்கு இருக்கிறது. நீங்களும் தந்தையும் எங்கள் நன்மையை முன்னிட்டே எதையும் செய்வீர்கள் என்ற நம்பிக்கை பரிபூரணமாக என்னிடம் இருக்கிறது." என்றாள். அவளது சொற்கள் அனைவரையும் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் கொள்ளச் செய்தன.

"மாராயரே, கேட்டீர்களா உமது புதல்வியின் பதிலை. எவ்வளவு தந்திரத்துடன் பாரத்தை நம் மீது சுமத்திவிட்டாள். இவளைத் தவிர இந்த அரண்மனையின் தலைவியாக இருக்க யாருக்கு அருகதை இருக்கிறது. இனியும் தாமதிப்பது தவறு என்றே நினைக்கிறேன்." என்றார் விக்ரமர்.

"உண்மைதான் விக்ரமரே, தாமதிப்பது தவறுதான். நடப்பவை யாவும் நன்மைக்கே. விரைவிலேயே திருமணம் முடித்துவிடலாம். திருவெள்ளரை புண்டரிகாக்ஷனும், மதுரை மீனாக்ஷியும் அருள் புரிந்துவிட்ட பிறகு அதைத் தடுக்க நாம் யார்?" எனச் சொல்லியவாறே, "கயல்விழி, உன் நம்பிக்கை வீண் போகவில்லையல்லவா?" புன்னகையுடன் வினவினார்.

கயல்விழியும் சளைக்காமல்,"என் நம்பிக்கை எப்போதும் பொய்த்ததில்லையப்பா" என்றாள். திருமணப் பேச்சு முடிந்த விதம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தேன் மொழி, கயல்விழியை வெளிப்படையாகப் பாராட்டவும் செய்தாள்.

"நல்லது. அறவியலில் நல்ல முடிவு கண்டோம். இனி மறவியலைப் பற்றி பார்ப்போம், குறிப்பாக தமிழக நிலவரம், ஹொய்சளர்கள், முகமதியர்கள், மாலிக் கஃபூர்.." எல்லாரது கவனமும் விக்ரம பாண்டியரின் பேச்சை நோக்கித் திரும்பியது. அவர் ஒவ்வொன்றாக விவரிக்க நிலை அவ்வளவு நன்றாக இல்லை என்பது அனைவருக்கும் புலனாயிற்று. "ஆக எனக்கு வந்த தகவல்களின் படி சுந்தர பாண்டியன் மாலிக் கஃபூரை மதுரைக்கு அழைத்துள்ளான்.."

"இனி நம் பணி என்ன?" வினவினான் இளவழுதி.

"சுந்தர பாண்டியன் தரம் தாழ்ந்து விட்டான். மதுரையைக் கைப்பற்றுவோம். அதற்கான பணிகள் உடனே துவங்க வேண்டும். நாலை பகலுணவுக்குப் பிறகு மீண்டும் நாம் சந்திப்போம் அப்போது இதைப் பற்றிய உங்கள் கருத்துக்களுடன் என் திட்டத்தையும் சொல்கிறேன். இப்போதே இரவு நீண்டுவிட்டது. இனி நாம் உறங்கச் செல்ல வேண்டியதுதான்"

அன்றைய பல்வேறு நிகழ்வுகள் அனைவரையும் சற்று அதிக ஆயாசப்படுத்தியிருந்தன. மறுப்பேதும் சொல்லாமல் அனைவரும் தங்கள் படுக்கையறை திரும்பினர். ஆனால் ஒருவரும் உறங்கவில்லை.

=====

மறு நாள், பகலுணவுக்குப் பின் மீண்டும் அந்த மேல் மாடத்தில் அனைவரும் கூடிய போது அவர்களிடத்தில் சற்று தெளிவு பிறந்திருந்தது. வீர பாண்டியன், விக்ரம பாண்டியன், மாராயர், தேன் மொழி, கயல்விழி, இளவழுதி என்ற வரிசையில் சக்கர வட்டமாக அமர்ந்திருந்தனர். அவர்கள் முன் ஒரு சீலையில் வரைபடம் அமைக்கப் பட்டிருந்தது. அது தென் தேசத்து வரைபடம் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. அதில் மதுரை, ஸ்ரீரங்கம், வீரதவளப்பட்டணம், காஞ்சீபுரம், ஹொய்சளர்களின் தலை நகரமான தொர சமுத்திரம் முதலிய இடங்கள் குறிக்கப்பெற்றிருந்தன. அவற்றை இணைக்கும் ராஜ பாட்டைகளும், முக்கிய மலைப் பகுதிகளும் ஆறுகளும் வரையப்பட்டிருந்தன. தொர சமுத்திரத்திற்கு வடகிழக்கில் ஒரு பகுதியில் பிறைவடிவக் குறி அமைக்கப்பட்டிருந்தது. அனைவரது கவனமும் அந்தச் சீலையின் மீதே இருந்தது.

ஒரு முறை மெதுவாகக் கனைத்துக் கொண்ட விக்ரமர், " இந்தச் சீலையில் இருப்பது தக்ஷிண பாரதத்தைக் குறிக்கும் படம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இப்போது முக்கியமாக மதுரை குறிவைக்கப்பட்டுள்ளது. ஆதி காலம் தொட்டு தமிழகத்தில் எத்தனையோ அரசுகள் இருந்தாலும், தலை நகரங்கள் இருந்தாலும், மதுரை மட்டும் என்றும் அழியாமல் இன்று வரை இருந்து வருகிறது. அந்த மதுரைக்குத் தான் இப்போது ஆபத்து வந்திருக்கிறது. இன்றைய நிலையில் தென் தேசத்தில் ஆந்திரம், ஹொய்சளம், கேரளம், தமிழகம் என்று அரசியல் பிளவுபட்டிருக்கிறது. இதில் ஆந்திரத்தில் காகதீயர்கள் நிலை பெற்றுவிட்டார்கள். அவர்கள் வம்புச் சண்டைக்கும் செல்வதில்லை, வந்த சண்டையையும் விடுவதில்லை. அவர்களால் இப்போது நமக்குப் பிரச்சனையில்லை. கேரளத்தில் வீர ரவி உதயமார்த்தாண்ட வர்மனை ஜடாவர்மராகிய சுந்தர பாண்டியர் வீழ்த்திய பிறகு அங்கிருந்தும் தொல்லை ஏதுமில்லை. ஆனால் ஹொய்சளர்கள் அப்படியில்லை. அவர்கள் ஒரு பெரும் சக்தியாக உருவாகப் பார்க்கிறார்கள். காகதீயர்களை வெற்றி கொள்ள முடியாததால், தமிழகத்தை நோக்கித் திரும்ப நினைக்கிறார்கள். தற்போது மிக பலவீனமாக இருக்கும் தமிழகத்தைத் தாக்கினால் சேதம் அதிகமின்றி அதைக் கைப்பற்றி விடலாம் என்று எண்ணியிருக்கிறார்கள். ஆகவே நமது எதிரி நமக்கு நேர் வடக்கே இருக்கிறான். அவன்தான் வல்லாளன்" என்று தொர சமுத்திரத்தை நோக்கி தனது குறுவாளைக் காட்டினார் விக்ரமர். "இவனின்றி இன்னொருவனும் அவனருகே இருக்கிறான். அவன் இங்கே இருக்கிறான்" என்று பிறையிட்ட இடத்தைக் காட்டவும் செய்தார்.

"அது.."

"மாலிக் கஃபூர்"

"நினைத்தேன்" ஒரு சேரச் சொன்னார்கள் வீர பாண்டியனும், இளவழுதியும்.

"அவனை நிறுத்தி திசைதிருப்புவதுதான் நமது நோக்கம்" விக்ரமர் சொன்னது நடக்குமா என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்தது.

(தொடரும்)

7 comments:

CA Venkatesh Krishnan said...

தேர்வு

☀நான் ஆதவன்☀ said...

// இளைய பல்லவன் said...

தேர்வு//

குசும்பு :)

☀நான் ஆதவன்☀ said...

விறு விறுப்பு கூடிக்கொண்டே போகிறது பல்லவரே!

ஓவியர் யாராது இருந்தாங்கன்னா அப்படியே அத்தியாத்திற்கு ஏத்த மாதிரி வரையச் சொல்லுங்க. அருமையா இருக்கும்

Yamineem said...

Very interesting novel. Being a full-time accountant and writing a historical novel is a great achievement. karpanai endraalum parava illai, varalaatru sambavangaludan thodarbu paduthi ezhudhuvathu nichayam potrudhalukku uriyadhu. thodarndhu veru sila novelgalum ezhuthungal ilaya pallavan.vaazhthukkal.

CA Venkatesh Krishnan said...

Blogger ☀நான் ஆதவன்☀ said...

// இளைய பல்லவன் said...

தேர்வு//

குசும்பு :)
///
:)))

CA Venkatesh Krishnan said...

☀நான் ஆதவன்☀ said...

விறு விறுப்பு கூடிக்கொண்டே போகிறது பல்லவரே!

ஓவியர் யாராது இருந்தாங்கன்னா அப்படியே அத்தியாத்திற்கு ஏத்த மாதிரி வரையச் சொல்லுங்க. அருமையா இருக்கும்
////

ம் பாக்கலாம். நன்றி.

எழுத்துப் பிழைகளை கவனியுங்கள் ஆதவன்!!

CA Venkatesh Krishnan said...

உங்கள் கருத்துக்கும் ஊக்கத்திற்கும் நன்றி முனியஸ்வாமி அவர்களே!.

தொடர்ந்து வாங்க..