Wednesday, July 1, 2009

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 7

அத்தியாயம் 7 : இணைந்த கைகள் இணையாத மனங்கள்

இயற்கை நம்மை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதற்குச் சிறந்த அடையாளம் மக்களின் நாகரீகம்தான். நாகரீகங்கள் ஆற்றுப்படுகைகளிலேயே உருவாயின. நீரைச் சார்ந்து விவசாயம். விவசாயம் சார்ந்து வாழ்க்கை. வாழ்க்கையின் அடிப்படைத் தேவையான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம். இவை கிடைத்தபின் மனிதர்கள் மற்ற தேவைகளைப் பற்றி சிந்திக்கிறார்கள். அப்படித் தோன்றியவைதான் இசை, இலக்கியம், நாட்டியம், ஓவியம் முதலியன. இவை மனிதர்களின் மனதைப் பண்படுத்தின. பண்பட்ட மனம் மற்றவர்களைப் புண்படுத்தாது.

இதைத்தான் நாகரீகம் என்கிறோம். நாகரீகமற்றவர்கள் இத்தகைய கலைகளில் ஈடுபாடற்றவர்கள் என்று சொல்வதை விட ஈடுபட வாய்ப்பில்லாதவர்கள் என்பதே சரி. அதனால்தான் மற்ற வறண்ட பிரதேசங்களில் மக்களின் மனது அந்தப் பிரதேசம் போலவே கடுமையாகவும், கொடுமையாகவும், ஈவு இரக்கம் என்ற வார்த்தைகளுக்கு இடமில்லாமலும் இருக்கின்றது. இவற்றுடன் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி, அவர்களுள் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஈரத்தையும் அழித்து விடுகிறது. இப்படித்தான் கொடுங்கோலர்கள் உருவாக்கப்படுகிறார்கள். அப்படி உருவானவன்தான் மாலிக் கஃபூர்.

அது கி.பி.1309ம் வருடத்தின் கோடைக்காலம். தெலிங்கானா என இன்று அறியப்படும் பகுதியில் அவன் தங்கியிருந்தான். அது அவனது தலை நகரமான டெல்லிக்கும், கைப்பற்றத் துடிக்கும் தமிழகத்திற்கும் நடுவில் அமைந்திருந்தது. கிருஷ்ணா, கோதாவரி ஆகிய நதிகளும் அவற்றின் உப நதிகளும் அங்கு பாய்ந்தாலும், அங்கெல்லாம் தங்காமல், கல்லும், முள்ளும் கலந்த பாறைப் பிரதேசத்திலேயே தங்கியிருந்தான். வெயிலின் உக்கிரமும் உச்சத்திலிருந்த காலம் அது. அவனுக்கோ வெண்ணிலவின் தண்ணொளியைப் போன்ற மயக்கத்தைத் தந்தது. நீர் என்ற பொருள் தங்கத்தை விடவும் விலையுயர்ந்த பகுதி. அவனுக்கென்ன கவலை? அது மற்றையோர் பாடு.

அவனது கூடாரம் நடுவிலும், மற்ற சிறு பணியாளர்களின் கூடாரம் அருகிலும் சிறு காவல் படை சற்று தள்ளியும் அந்த பொட்டல் பிரதேசத்தில் அமைந்திருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை சமவெளியாகவே காட்சியளித்தது. மருந்துக்குக் கூட ஒரு மரம் இல்லை. அங்கிருந்து சுமார் பத்து மைல் அருகிலிருக்கும் ஊரிலிருந்துதான் தண்ணீர் முதலான பொருட்கள் வந்து கொண்டிருந்தன. அங்கு வருவதற்கு அது ஒன்று தான் வழி. மற்ற திசைகளில் சென்றால் அது காட்டுக்கும் மலைக்கும் சென்றடைந்து விடும்.


ஆறு மாதத்திற்கு முன் அவன் மதுரையிலிருந்து திரும்பி வந்த பின் வேறெங்கும் செல்லாமல் அங்கேயே தங்கியிருந்தான். தூதுவர்களை தகவல்களோடு அனுப்புவதிலும், ஒற்றர்களை ஏவுவதிலும், அவ்வப்போது தளபதிகளை வரவழைத்து ஆணையிடுவதிலும் காலம் கழித்தான். இப்போதும் மேலுக்கு அமைதியாக இருக்கும் மாலிக் கடந்த இரு வாரங்களாக பரபரப்புடனேயே காணப்பட்டான். யாரையோ எதிர் பார்ப்பது அனைவருக்கும் தெரிந்தது. யாரென்றுதான் தெரியவில்லை. மாலிக்கும் சொல்லவில்லை.

ஒரு வழியாக அவன் நினைத்த நபரும் வந்தார். முகங்கள் புன்முறுவல் பூத்தன. உடல்கள் ஆரத்தழுவி உறவாடின. கைகள் இணைந்தன. உள்ளங்கள் விலகியே நின்றன.

"வாருங்கள் நண்பரே, இப்போதாவது வழி தெரிந்ததா? ஓலை மேல் ஓலை அனுப்பியும் பயனில்லாமலிருக்கவே நீங்கள் எம்மை மறந்துவிட்டீர்கள் என்றே எண்ணினேன். நல்ல வேளை. இறைவன் கருணை செய்து தங்களை இங்கே தருவித்தான். இறைவனுக்கு நன்றி" மாலிக்கின் தேன் தடவிய வார்த்தைகள் வந்தவரை எறும்பாக மாற்றி அழைத்தன.

"முதலில் என்னை ஒருமையில் அழைத்தால்தான் நான் இங்கே இருப்பேன். இல்லையேல் இப்போதே கிளம்பிவிடுகிறேன்" என்று எழுந்தார் அங்கு வந்தவர்.

"சரி சரி. சற்று பரிகாசம் செய்யலாம் என்றால் விடமாட்டேன் என்கிறாயே. என்னை மறந்துவிட்டயா அதைச் சொல் முதலில்"

"ம். அப்படி வா வழிக்கு. உனக்குத் தான் நடப்பவை அனைத்தும் தெரியுமே. நான் அனுப்பிய தகவல்கள் வந்து சேரவில்லையா?"

"வந்து கொண்டுதானிருக்கின்றன. ஆனாலும் அவற்றில் புதிய தகவல்கள் ஒன்றுமில்லை. எனவேதான் நம் திட்டம் என்ன ஆயிற்று என்ற கவலை என்னை வாட்டியது. இன்னும் ஒரு வாரம் நீ வராதிருப்பாயேயானால், நானே அங்கு வந்திருப்பேன்."

"மாலிக். நீ செயல் பட வேண்டிய நேரம் வந்து விட்டது. என்னைப் பொறுத்தவரையில் ஒரு வழியாக பதவியேற்றுக்கொண்டுவிட்டேன். ஆனாலும் தொல்லைகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன. இதனிடையில் என்னை வீரனாக நிலை நிறுத்திக் கொள்ள உன் உதவி உடனே தேவையாயிருக்கிறது. அதனால்தான் தகவல் அனுப்பாமல் உன்னைத் தேடி நானே வந்திருக்கிறேன். நம் திட்டத்தை செயல் படுத்தும் நேரம் வந்துவிட்டது"

"கவலையை விடு நண்பா. நான் எப்போதோ செயலில் இறங்கிவிட்டேன். படைகள் தயாராக இருக்கின்றன. என் ஆணை ஒன்றுதான் தேவை. உன் எண்ணம் ஈடேறும் நாள் வெகு தொலைவில் இல்லை சுந்தரா." ஆம். சுந்தர பாண்டியன் தான் அந்த நபர். தற்போது மதுரை மாமன்னர்.

"என் சகோதரனும் பாண்டிய அரசனாக இருக்கிறான். ஆகவே, என் திட்டத்தில் சிறு மாறுதல்."

"நானும் கேள்விப்பட்டேன். உன் சகோதரன் ஒரு புது தலை நகரில் பாண்டிய மன்னனாக முடிசூடிக் கொண்டிருக்கிறானாமே? என்ன நடந்தது? சற்று விவரமாகச் சொல் சுந்தரா?"

"சொல்கிறேன். என் தந்தையின் மறைவிற்குப் பிறகு எங்களுக்குள் யார் பதவியேற்பது என்ற போட்டி ஏற்பட்டது. என் தந்தையின் விருப்பம் வீரபாண்டியன் அரசாள வேண்டுமென்பது. மந்திரி ப்ரதானிகளின் விருப்பம் நான் பதவியேற்க வேண்டுமென்பது. ஆகவே ஓர் உடன்பாடு எங்களுக்குள் ஏற்பட்டது. இருவரும் நாடாள்வது என்பதே அது. ஒரு தேசம் இரு அரசர்கள். உண்மையில் எனக்கு இதில் விருப்பமில்லை நண்பா. அதனால்தான் உன்னை அழைக்க வந்திருக்கிறேன். பாண்டியதேசம் முழுவதும் எனக்கு வேண்டும்."

"எனக்கும்தான்" என்றான் மாலிக் கஃபூர் மர்மப் புன்னகையுடன்.

"என்ன?"

"அதாவது, உனக்கு பாண்டியதேசம் முழுவதும் வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் உண்டு என்றேன்." என்று சமாளித்த மாலிக், "சரி அதற்காக நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாய்"

"நான் சொன்னது போல் நமது திட்டத்தில் ஒரு மாறுதல். நீ முதலில் ஹொய்சளர்களைத் தாக்காதே, நேராக மதுரையைத் தாக்கு" மதுரை மன்னனிடமிருந்து வந்தது இந்த வார்த்தைகள். ஏமாற்றுவதிலும், குறுக்குத் திட்டங்களிலும் வல்லவனான மாலிக் கஃபூர் கூட இதை எதிர் பார்க்கவில்லை.

(தொடரும்)

8 comments:

☀நான் ஆதவன்☀ said...

தலைவரே தொடர்ச்சியா இரண்டு வாரம் போட்டு சாதனை பண்ணிட்டீங்க போங்க...

இப்ப நேரம் இல்ல அப்புறம் வந்து படிக்கிறேன்

☀நான் ஆதவன்☀ said...

இதுக்காக அடுத்த வாரம் போடாம இருந்திராதீங்க....

CA Venkatesh Krishnan said...

//☀நான் ஆதவன்☀ said...
தலைவரே தொடர்ச்சியா இரண்டு வாரம் போட்டு சாதனை பண்ணிட்டீங்க போங்க...

இப்ப நேரம் இல்ல அப்புறம் வந்து படிக்கிறேன்
//

ம்ம்.. சொல்லுங்க சொல்லுங்க..

உங்களுக்கு படிக்கவே நேரமில்லைங்கறீங்க.. எழுதறதுக்கு எனக்கு எப்படி நேரம் கெடைக்கும்???

CA Venkatesh Krishnan said...

//
☀நான் ஆதவன்☀ said...
இதுக்காக அடுத்த வாரம் போடாம இருந்திராதீங்க....
//

அது....

☀நான் ஆதவன்☀ said...

ஆஹா கூட்டு சேர்ந்திட்டான்ங்களே!!!

☀நான் ஆதவன்☀ said...

//உங்களுக்கு படிக்கவே நேரமில்லைங்கறீங்க.. எழுதறதுக்கு எனக்கு எப்படி நேரம் கெடைக்கும்??//

செல்லாது செல்லாது....எழுதாததற்கு காரணமெல்லாம் செல்லாது

சைக்கள் கேப்புல கடா வெட்டுறீங்களே

CA Venkatesh Krishnan said...

ஆதரவுக்கு நன்றி ஆதவனாரே...

உங்களையும் ஒரு பாத்திரமா சேத்துடலாமா???

☀நான் ஆதவன்☀ said...

// இளைய பல்லவன் said...
ஆதரவுக்கு நன்றி ஆதவனாரே...

உங்களையும் ஒரு பாத்திரமா சேத்துடலாமா???//

ஓகே..ஆனா ஜோடியா நல்ல ஃபிகரா போடுங்க...உங்ககிட்ட பிகருன்னு சொன்னாலே நீங்க உடனே வேலை ஞாபகத்து ஓடிடுவீங்க..

சரி கால்ஷீட் எப்ப வேணும்?