Wednesday, July 8, 2009

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 8

அத்தியாயம் 8: வீர தவளப் பட்டிணம்


கடந்த அத்தியாயங்களில் பல்வேறு நிகழ்வுகள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததை நீங்கள் அறிவீர்கள். கதையின் ஓட்டத்திற்கு அது தேவையாக இருக்கிறது. பெரும்பாலும் உண்மையும் அதுதான். மனித மனம் என்றுமே ஒன்றே போல் சிந்தித்ததில்லை. மனம் சொன்னதை செய்யும் உடலும் ஒன்றே போல் செய்ததில்லை. நாம் ஒவ்வொரு இடத்திலும் அதற்குத் தகுந்தாற்போல் நம் சிந்தனைகளையும் நடவடிக்கைகளையும் மாற்றியமைத்துக் கொள்கிறோம். இதுதான் வாழ்வாதாரக் கோட்பாட்டின் அடிப்படை. (We align ourselves to the requirement of the situtation. This is the fundamental concept of survival theory. Those who does this evovle. Others perish).

இந்த வகையில்தான் ஒவ்வொரு சூழலிலும் நம் கதாபாத்திரங்கள் அந்தந்த சூழலுக்கேற்றாற்போல் தங்கள் செயல்களை மாற்றியமைத்துக் கொண்டார்கள். குறிப்பாக வல்லாளனும், சுந்தர பாண்டியனும் இப்படி மாற்றிப் பேசி வருவது அவர்கள் செயல்களை ஒட்டியே உள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

===

சுந்தர பாண்டியன் தன் ராஜ்ஜியத்தைத் தாக்க வருமாறு வலிய அழைப்பு விடுத்தது மாலிக் கஃபூருக்கு பெரும் அதிர்ச்சியைத் தரவில்லையாயினும் ஆச்சரியத்தைத் தூண்டியது. பழம் நழுவிப் பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்தது என்ற பழமொழி அவனுக்கு அப்போது தெரியாவிட்டாலும் அந்த அளவுக்கு சுந்தர பாண்டியன் தாம்பாளத்தில் வைத்து தமிழகத்தைத் தருவது போல் இருக்கிறதே என்ற எண்ணம் ஏற்படாமல் இல்லை. உள்ளுக்குள் சந்தோஷம் கொப்பளித்தாலும் மேலுக்கு வழக்கம் போலவே அமைதியாக இருந்து சுந்தர பாண்டியன் மேற்கொண்டு சொல்லப்போவதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.

"மாலிக். சுருக்கமாகக் கூறி விடுகிறேன். நீ ஹொய்சளர்களை வடக்கிலிருந்து தாக்கும் போது நான் அவர்களைத் தெற்கிலிருந்து தாக்கி ஹொய்சள தேசத்தைக் கைப்பற்றி பாண்டிய அரசுடன் சேர்த்து விடுவேன். நீ உனக்கு வேண்டிய செல்வங்களுடன் டில்லி திரும்பலாம். அதன் மூலம் என் வீரம் வெளிப்பட்டு பாண்டிய அரசுக்கு நான் நிரந்தர வாரிசாகி விடுவேன். இதுதான் நம் முதல் திட்டம். ஆனால் இப்போது நான் மதுரையை ஆட்சி செய்து கொண்டிருப்பதாலும், என் சகோதரனும் அதில் பங்கெடுத்துக் கொண்டிருப்பதாலும் அவனைக் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.

எனவே திட்டத்தில் மாறுதல் செய்துள்ளேன். நீ ஹொய்சளர்களைத் தாக்காமல் நேரடியாக தமிழகத்திற்குள் வந்து விடு. மதுரையைச் சுற்றி வளைக்கும் போது உன்னைப் பின்புறமாக வீர பாண்டியன் தாக்குவான். அப்போது அவனை நீ கவனித்துக் கொண்டால் போதும். இதற்குப் பிரதியாக உன் ஹொய்சளப் படையெடுப்பிற்கு நான் உதவுகிறேன். அத்துடன் உனக்குத் தேவையான பல அரிய பொக்கிஷங்களும் தருகிறேன். நீ ஹொய்சளர்களின் மீதான வெற்றியுடனும் எங்களது பொக்கிஷங்களுடனும் டில்லி திரும்பலாம். என்ன சொல்கிறாய்?"

மாலிக் கஃபூர் இப்போது திகைத்துத்தான் போனான். அதன் காரணம் பற்றியும் அவனால் உடனே பதிலிறுக்க முடியவில்லை. அவன் முகத்திலிருந்த புன் முறுவல் தற்போது மேலும் விரிவடைந்தது. "மாலிக் நீ உண்மையிலேயே அதிர்ஷ்டக்காரன்தான்" என்று தன்னைத்தானே மனதிற்குள் பாராட்டிக்கொண்டான்.

"நண்பா. நல்லது. அவ்வாறே செய்யலாம். இன்னும் ஒரு மாத காலத்தில் நாம் மதுரையில் சந்திப்போம், இறைவன் கருணையினால். நீ மற்ற ஏற்பாடுகளைச் செய்ய உடனே புறப்படுவது நல்லது. எதையும் காலம் தாழ்த்தாமல் செய்யவேண்டும் அல்லவா?"

"உண்மைதான் மாலிக். நான் உடனே புறப்படுகிறேன். சொன்னது ஞாபகமிருக்கட்டும். இனி உன்னைத் தொடர்பு கொள்வது சற்றுக் கடினம்தான். ஆயினும் முயற்சிக்கிறேன்." என்றவாறே கிளம்பினான் சுந்தர பாண்டியன். அவன் புரவி மறையும் வரை காத்திருந்த மாலிக் அவசர அவசரமாகத் தனது தளபதிகளை வரச்சொன்னான். மாலையில் நடந்த அந்த சந்திப்பு தக்காணம் என்று அறியப்படும் தென்னிந்தியாவிற்குத் தெரிந்திராத பல நிகழ்வுகளுக்கும், வரலாற்றின் மாற்றத்திற்கும் காரணமாக அமைந்தது. மாலிக் கஃபூரின் மனக்கணக்கு அவனது தளபதிகளுக்குப் புரியவில்லை.

ஒவ்வொருவரும் போடும் கணக்கு ஒவ்வொரு விதம். ஆனால் ஆண்டவன் கணக்கு அலாதியானது. இறுதியானது. சிலருக்குக் கூடுதல், சிலருக்குக் குறைவு. யாருக்கும் கேட்டது, கேட்டது போல் கிடைப்பதில்லை!.

===

பாண்டிய தேசம் இரு தலை நகரங்களிலிருந்து ஆட்சி செய்யப்பட்டு வந்தது. புதுத் தலை நகரம் வீர தவளப் பட்டினம். (காஞ்சிக்கருகில் இருந்ததாக வரலாற்றாய்வர்கள் சிலர் கருதுகிறார்கள். ஆனால் சரியான இடம் இது என்று அறுதியிட்டுக் கூறவியலவில்லை. வந்தவாசியாக இருக்கலாம் என்பது என் எண்ணம். வீரதவளப்பட்டணம், வந்து வசித்த இடம் ஆகியவ மருவி வந்தவாசி ஆகியிருக்கலாம். வந்தவாசி, பின்னர் ஆற்காட்டு நவாப்களின் முக்கியக் கோட்டைகளில் ஒன்றாக விளங்கி, ஆற்காடு - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்த நகரம். இங்கு நடைபெற்ற ஆங்கில ப்ரெஞ்சு யுத்தம், தென்னிந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு அடிகோலியது. நம் கதைக்கு வந்தவாசியை வீரதவளப்பட்டினமாக அமைத்துக் கொள்வது தவறாகாது என்பதால் அதையே பயன் படுத்துகிறேன்.)

காஞ்சிக்குத் தென் மேற்கில், மதுரைக்குச் செல்லும் ராஜபாட்டையில் அமைந்திருந்தது இந்தக் கோட்டை நகரம். அங்கு ஏற்கனவே இருந்த சிறு கோட்டையையும், மாளிகையையும் புதுப்பித்து தலை நகருக்கேற்றார்ப்போல் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தது. படை கலன்களும், படைவீடுகளும் சுற்றுப்புறத்தில் ஏற்பட்டன. புதிய மந்திரிகளும், அரசாங்க அதிகாரிகளும் நிர்வாகத்தைக் கவனிக்கத் தொடங்கினர். மதுரைக்கும் வீர தவளப்பட்டணத்திற்கும் இருந்த ராஜபாட்டையானது செம்மைப் படுத்தப்பட்டது. அருகிலிருந்த சிறு குன்று அந்நகருக்கு அழகு சேர்த்தது.


இவையனைத்தும் விக்ரம பாண்டியரது தலைமையிலும், நேரடிக் கண்காணிப்பிலும் நடைபெற்று வந்தன. புதிய அரசனான வீர பாண்டியனோ இவை எதிலும் பட்டும் படாமல் விலகியே நின்றான். அவன் உள்ளத்தில் இந்த ஏற்பாட்டின் தாக்கம் ஓயாது கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்தது. விக்ரம பாண்டியர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் பயனில்லாமல் போகவே ஓர் உபாயம் செய்தார். இருவரை அழைத்து வர ஏற்பாடு செய்தார் வந்ததோ நால்வர். அவர்கள் இளவழுதி, அவனது தந்தை மாராயர், சகோதரி கயல்விழி மற்றும் அவனது மாமன் மகள் தேன்மொழி.

கயல்விழியையும் தேன்மொழியையும் பார்க்கும் போது அவர்கள் இன்னும் மணமாகமல் இருக்கக் காண்கிறோம். முன்பு பார்க்கும் போது இருந்த குழந்தைத் தனம் குறைந்து பக்குவப்பட்டிருந்தாள் கயல்விழி. அந்தப் பக்குவம் அவள் அழகுக்கு மெருகூட்டியது. தான் இங்குதான் வாழப்போகிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டிருப்பதை விழியென்னும் ஏரிக்குள் தத்தளிக்கும் மீன்களாகத் திரியும் அவளது கண்ணின் மணிகள் காட்டிக் கொடுத்து விடுகின்றன. அவளது பருவம், கனிந்து அறுவடைக்குக் காத்திருக்கும் நெற்கதிர்களைப்போல் விளைந்து நின்றதை நாம் உணர்ந்து கொள்கிறோம்.

தேன்மொழியோ அடியோடு மாறிப்போய்விட்டாள். கொல்லிமலைப் படையை இளவழுதியின் கட்டுப்பாட்டில் விட்டதோடல்லாமல், இவளும் அவனிடம் கட்டுண்டுவிட்டாள். இளவழுதியின் கண்கள் தாவும் இடங்களிலெல்லாம் இவளும் நோக்குவதை நாம் பார்க்கத்தவறவில்லை. கயல்விழியுடன் அடிக்கொருதரம் பேசியபடியும், குறுஞ்சிரிப்பு செய்தபடியும் வந்து கொண்டிருந்தது, இளவழுதியின் கவனத்தைச் சிதறடித்தது. அவனால் இவர்கள் புறம் திரும்பாமல் இருக்க முடியவில்லை. அப்படித் திரும்பும் போதெல்லாம் அதிகமாகிய அவர்களது சிரிப்பு, அவன் கோபத்தைக் கிளறியது. முகத்தைக் கடுகடுவென்று வைத்துக்கொண்டான்.

மாராயரோ இவற்றையெல்லாம் கவனித்தும் கவனிக்காதது போல் புதிய தலை நகரை நோட்டம் விட்டார். அத்தலை நகரில் உள்ள பாதுகாப்புக் குறைவையும் கவனத்தில் கொண்டார். வீரபாண்டியன் நல்ல பிள்ளை. ஏன் இந்த முடிவெடுத்தான் என்ற கேள்வியை அவனிடமே கேட்டுவிடுவது என்ற முடிவில்தான் அங்கு வந்திருந்தார்.

இப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையிலிருந்தாலும் அவர்களுக்குள்ளே மேலோட்டமாக பேச்சு இருந்து கொண்டேதான் இருந்தது. நால்வரும் தனித்தனி குதிரைகளில் வந்துகொண்டிருந்தனர். கோட்டை வாயிலை அடைந்தபோது விக்ரமபாண்டியர் வரவே, அவர்கள் அங்கேயே குதிரையிலிருந்து இறங்க வேண்டியதாயிற்று.

"ஆகா. வந்துவிட்டீர்களா? உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். கயல்விழி, நலமா?" என்று குறிப்பாக விசாரித்தவர், பதிலுக்குக் காத்திராமல், "நாம் விரைந்து மாளிகைக்குச் செல்வது நலம். வீர பாண்டியன் செய்கை சற்றும் விரும்பத்தகாததாக இருக்கிறது. அதற்காகத்தான் உங்களை அழைக்க வேண்டியிருந்தது. வாருங்கள் சென்று கொண்டே பேசுவோம்".என்று அவசரப்படுத்தினார்.

"என்ன செய்துவிட்டான் வீரபாண்டியன்?" வினவினார் மாராயர்.

"ஒன்றும் செய்யவில்லை. புதிய அரசன் என்ற முறையில் எதுவுமே செய்வதில்லை. அனைத்தையும் நான்தான் செய்ய வேண்டியிருக்கிறது. அன்று ஒப்புக் கொண்டவன் இன்று பின் வாங்குகிறான். இப்போது இந்தக் கோட்டையை நீங்கள் கவனித்ததை நானும் பார்த்தேன். இதிலுள்ள பாதுகாப்புக் குறைபாடுகள் எனக்கும் தெரியும். ஆயினும் நான் ஒருவன் என்ன செய்வது? அவன் திருந்தினால் ஒழிய ஒன்றும் நடக்கப் போவதில்லை. நீங்கள் தான் வந்து சொல்லவேண்டும்" என்று படபடவென்று பொரிந்து தள்ளினார்.

"நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம் நாங்கள் வந்துவிட்டோமல்லவா. எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கையிருக்கிறது. பிறகு எல்லாம் திருவெள்ளரை புண்டரிகாக்ஷன் செயல்" என்று குறிப்பிட்டார் மாராயர்.

இவர்கள் இருவரைத் தொடர்ந்து மற்ற மூவரும் அரண்மனை மாளிகை நோக்கிப் பயணித்தனர். அவர் சொன்னது சரிதான் என்பது போல் வீரபாண்டியனின் நடவடிக்கைகளில் உடனடி மாற்றம் ஏற்பட்டது. உற்சாகம் எங்கும் தொற்றிக்கொண்டது.

(தொடரும்)

8 comments:

ரவி said...

ஓட்டு போட்டாச்சு. நல்ல நடை...

☀நான் ஆதவன்☀ said...

சூப்பர் தல..சொன்ன வாக்கை காப்பாத்தியதற்கு நன்றிகள் பல...


தமிலிஷ்ல பதிவு பண்ணுங்கன்னு ஒவ்வொரு தடவையும் சொல்ல வேண்டியதா இருக்கே :(

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஓட்டுப் போட்டுவிட்டேன்

CA Venkatesh Krishnan said...

நன்றி செந்தழல் ரவி !

CA Venkatesh Krishnan said...

ஆமாம் ஆதவன் ஒரு வழியா இந்த வாரமும் காப்பாத்திட்டேன்.

என் அலுவலக இணைப்பில் தமிழிஷ் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே சொந்த இணைப்பில் இருக்கும் போதுதான் தமிழிஷில் இணைக்க முடிகிறது. இப்போது ஒரு ரிலையன்ஸ் பிராட்பேண்ட் வைத்திருக்கிறேன். ஆகவே இனி மிஸ் ஆகாது. (போதுமா விளக்கம்?!)

CA Venkatesh Krishnan said...

நன்றி தல!

ஓட்டு மட்டும்தானா???

Sathis Kumar said...

வழக்கம்போல் தொடர் அருமையாக இருக்கிறது. சில காட்சி வர்ணனைகளையும் இணைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்..

CA Venkatesh Krishnan said...

நன்றி சதீசுகுமார்,

வருணனைகளை அதிகமாக்க முயற்சிக்கிறேன். என்னைப் பொறுத்தவரை வர்ணனைகள் கதையில் தொய்வை ஏற்படுத்துகிறது என்று எண்ணுகிறேன். என் எண்ணம் தவறா என்பதைச் சுட்டிக்காட்டினால் நல்லது.

நன்றி.