Wednesday, July 15, 2009

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 9

அத்தியாயம் 9 - விருந்து தந்த வியப்பு


புதிய தலை நகரான வீரதவளப்பட்டணத்திற்கு சோபை சேர்க்கும் விதமாக அமைந்திருந்த அரச மாளிகையின் முன் முன்றிலில் அன்று இரவு ஒரே களேபரமாக இருந்தது. புதிய விருந்தினர்களை வரவேற்பதற்காக அரசரும், விக்ரம பாண்டியரும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். புது அரசனான வீர பாண்டியனின் எண்ண ஓட்டத்தை நன்கு அறிந்து கொண்ட விக்ரமர், கயல்விழியின் வருகை பயனளிக்கத் தொடங்கிவிட்டதை எண்ணிப் பெருமகிழ்ச்சி அடைந்தார்.

அந்த நகருக்கு வந்த பின் இத்தனை கோலாகலத்துடன் அரண்மனை என்றுமே இருந்ததில்லையாகையால் பணிமக்களும் பேருவகையுடன் பணியாற்றிக்கொண்டிருந்தனர். மாலை மயங்கியதும் பந்தவிளக்குகள் ஏற்றப்பட்டு தூரத்தே வைக்கப்பட்டன. அவை காற்றால் அணையாதிருக்க அவற்றைச் சுற்றி தகடு அமைக்கப்பட்டிருந்ததால் வெளிச்சம் நேராகப் பாய்ந்தது. அப்படி நேராகப் பாய்ந்தாலும் அருகருகே அவ்வாறான விளக்குகள் அமைக்கப்பட்டிருந்ததால் மற்ற இடங்களில் இருட்டு இல்லை. இவ்வாறு தொலைவில் வெளிச்சம் வந்து கொண்டிருக்க அரசரும் அவரது விருந்தினர்களும் அமரும் இடத்தில் அமைக்கப் பெற்றிருந்த இரத்தினக் கம்பளங்களை ஒட்டி நொந்தா விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. மூலைக்கொன்றாக நிறுத்தப்பட்டிருந்த பாவை விளக்குகளும் அவற்றின் இரு மருங்கிலும் விதானத்திலிருந்து தொங்க விடப்பட்டிருந்த நொந்தா விளக்குகளும் அந்த முன்றிலை தெளிவுறக்காட்டின. அப்படித் தெளிவாகக் காட்டினாலும், நறுமணம் கருதி போடப்பட்டிருந்த அகிற்புகையானது தன் பணியான நறுமணத்தைப் பரப்பியதோடல்லாமல், அந்த வெளிச்சத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தோல்வியே அடைந்தது. ஒரு மருங்கில் இசைக் கலைஞர்கள் இன்ப நாதத்தை மீட்டிக்கொண்டிருக்க அவர்களோடு தோற்கருவிக்கலைஞர்களும் மெல்லிய ஒலியெழுப்பிக் கொண்டிருந்தனர்.

இவற்றையெல்லாம் காணவேண்டுமென்ற அவா இருந்தும் பகலவன் தன் பணியை முடித்துக் கொண்ட காரணத்தால் மலைவாயிலில் விழுந்து மறைந்துவிடவே, மறுபுறத்திலிருந்து வான்மதி மெல்ல எட்டிப்பார்த்தது. பகலவன் இல்லாது போகவே அவனைத் தேடிக்கொண்டு மேற்கு நோக்கி நகரத்தொடங்கியதால் ஏற்பட்ட இயற்கை வெளிச்சம் அந்த சூழலை மேலும் ரம்மியமாக்கியது. ஆடி மாதமானாலும், தென்றலின் மெல்லிய காற்று குறையாமல் வீசி தன் பங்கைத் தவறாமல் ஆற்றியது.அனைவரும் தரையிலேயே அமர்ந்து உணவுண்ணும் வகையில் சுற்றிலும் வெண்பஞ்சு மெத்தைகளும், திண்டுகளும் அமைக்கப்பெற்றிருந்த விதம் வடக்கே புதிதாக வந்திருந்த சுல்தானியர்களின் விருந்தோம்பல் முறையை ஒத்திருந்ததை அதை அறிந்தவர்கள் புரிந்து கொண்டார்கள்.

அன்று விருந்தினர்களோடு, முக்கியத் தளபதிகளுக்கும் அமைச்சர்களுக்குமாக சேர்த்தே விருந்து நடைபெறவிருந்தது. ஒவ்வொருவராக வரத்தொடங்கிய முக்கியஸ்தர்களும், விருந்தினர்களும், தங்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் சென்று அமர்ந்து தங்களுக்குள் பேசியவாறு அரசனை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தனர்.

அனைத்து ஏற்பாடுகளும் செவ்வனே செய்யப்பட்ட நிலையில் விருந்தினர்களும் வந்து அமர்ந்திருக்க, அரண்மனையின் உட்புற ஆலாட்சி மணி மெல்லிய ஒலியெழுப்பி அரசனின் வருகையை அறிவித்தது. விருந்தானாலும், அரசனின் வருகையைக் கருதி கட்டியங்கூறுவோன் பாண்டியர்களது மெய்கீர்த்தியை வாசிக்க புதிய பாண்டிய மண்டலாதிபதியான வீர பாண்டியத் தேவர் எழுந்தருளினார்.

அது அரசவையில்லாததால் மகுடம் தரிக்காமல் தலைக் குழலை தோளின் இருமருங்கிலும் அலைபாய விட்டு, மேலுக்கு ஒரு உத்தரீயத்தை அணிந்து அதன் மேல் இரத்தினங்களால் ஆன இரு ஹாரங்களைத் தரித்தும் நின்ற வீர பாண்டியன், தன் வாளையும் இடையில் கட்டி எடுத்துவந்தது சிலரை வியப்பில் ஆழ்த்தியது. அப்படி வியப்பில் ஆழ்த்திய நிகழ்வை நன்றாகக் கவனித்தாலும் கவனிக்காதது போலக் காட்டிக்கொண்ட வீர பாண்டியன், அனைவரையும் அமருமாறு பணித்துத் தானும் அமர்ந்தான். அவனது உத்தரவை எதிர்ப்பார்த்து நின்றிருந்த விக்ரம பாண்டியரை நோக்கி நிகழ்ச்சியைத் துவக்குமாறும் சைகை செய்தான். இவ்வளவிலும், பெண்கள் யாரும் தென்படாததைக் கவனிக்கத் தவறவில்லை. விக்ரம பாண்டியர் பேச ஆரம்பித்ததுமே இசைக்கலைஞர்கள் தங்கள் திறமையைச் சற்று நிறுத்தி வைத்தனர்.

அனைவரையும் ஒரு முறை தீர்க்கமாகப் பார்த்த விக்ரம பாண்டியர், "அன்பர்களே, இந்த இனிய மாலைப் பொழுதினிலே, இங்கு கூடியிருக்கும் உங்களுடன் என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. பாண்டிய தேசத்துப்புகழ் தென் தமிழகத்திலேயே தங்கிவிடாமல், வட தமிழகம் வரை வந்திருப்பது அது மேலும் விருத்தியடைவதற்கான ஹேதுவாகவே நாம் கருத வேண்டும். இனிய இந்த நேரத்தை அரசியல் பேசிக் கழிக்க விரும்பவில்லை. இந்த அரசு அமைந்ததற்குப் பிறகு நடத்தப் பெறும் இந்தப் பெரிய விருந்தோம்பலை நீங்கள் அனைவரும் சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இனி நர்த்தனமும் அதைத் தொடர்ந்து பாரதக் கூத்தும் நடைபெறும். அனைவரும் உண்டும் கண்டும் களிக்க வேண்டுமென்பது அரசரின் அவா. இனி நிகழ்ச்சிகள் துவங்கும்." என்று கூறி முடிக்க அந்த முன்றிலின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேடையைச் சுற்றி திடீரென வெளிச்சப்பந்தங்கள் தோன்றின. அதுவரை காணாமல் இருந்த அந்த மேடை சட்டெனத் தோன்றவே அங்கு குழுமியிருந்தோரின் ஆஹாகாரம் முன்றிலின் விதானத்தை முட்டியது.

இதைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடந்தவாறிருக்க, விருந்து மிகச் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. மதுபானம் செய்வோரும், மாமிசம் உண்ணுவோரும் தங்கள் தேவைகளைச் சிறப்பாகப் பூர்த்தி செய்து கொண்டிருந்து பணியாட்களின் வேகத்தைச் சோதித்துக் கொண்டிருந்தனர். பணியாட்களும் அசராது அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டிருந்தனர்.

அனைவரையும் அவர்களருகே சென்று நலம் விசாரித்த பாண்டிய மன்னனை அனைவரும் போற்றிப்புகழ்ந்தனர். இறுதியாக முக்கிய விருந்தினராக வந்திருந்த மாராயரையும், இளவழுதியையும் தன்னருகே அமரச் செய்த மன்னன் அவர்களிடம் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தான். ஆனாலும் அவன் எண்ணம் அங்கில்லை என்பதை உணர இருவருக்கும் அதிக நேரம் பிடிக்கவில்லை. "விருந்து முடிந்தவுடன் மேல்மாடத்தில் நாம் முக்கியமாகப் பேச வேண்டும். அப்போது கயல்விழியும், தேன்மொழியும் உடனிருந்தால் நல்லது" என்று சொன்னான் அரசன். "அவ்வாறே ஆகட்டும். இங்கு விருந்து நடப்பதால் சபை நாகரீகம் கருதி அவர்களை அழைத்து வரவில்லை. அங்கே அவர்கள் நிச்சயம் கலந்து கொள்வார்கள்" என்றார் மாராயர்.

ஏழு நாழிகைகளுக்கும் மேலாக நீடித்த அந்த விருந்து ஒரு வழியாக முடிவிற்கு வந்த போது வான்மதி நடுவானைத் தாண்டியிருந்தாள். அனைவரும் அவர்கள் இல்லம் திரும்ப அரசனும் மாராயர், விக்ரமர் மற்றும் இளவழுதியும் மேல்மாடம் நோக்கிச் சென்றனர். அரசனின் வேகத்தைக் கவனித்த விக்ரமன் உள்ளூரப் புன்னகைத்துக் கொண்டு "வீரா உன்னைக் கட்டிப்போடும் கயிற்றைக் கண்டு கொண்டேன். இனி உன் செயல் சீரிய முறையில் செல்ல வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியதுதான்" என்று நினைத்துக் கொண்டார்.

மேல் மாடத்தில் அனைவரும் அமர்வதற்கான ஆசனங்கள் வட்டவடிவில் போடப்பட்டிருந்தன. பெண்கள் முன் கூட்டியே வந்திருந்தாலும், நாகரீகம் கருதி, ஒரு மூலையில் நின்றிருந்தனர். அரசன் முதலானோர் வரவும், தங்களை சற்றே அசைத்துக் கொண்டு தங்கள் இருப்பைக் காட்டிக்கொண்டனர்.

"இங்கே வா கயல்விழி, வா தேன்மொழி. இவ்வளவு நேரம் கழித்து சந்திப்பதில் சங்கடம் ஏதுமில்லையே" என்று கூறினார் விக்ரமர்.

"அதெல்லாம் ஒன்றுமில்லை." என்று சொல்லியவாறே கயல்விழியுடன் வந்தமர்ந்தாள் தேன்மொழி.

"நல்லது இனி நாம் பேசத்தடையில்லை. மாராயரே. உங்களிடம் சில முக்கியச் செய்திகளைப்பற்றி பேச வேண்டியதிருக்கிறது." விக்ரமர் நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.

"விக்ரமரே தாராளமாகச் சொல்லுங்கள்."

"நன்றி மாராயரே. வீர பாண்டியன் இப்போது ஒரு தேசத்திற்கு அரசனாகி விட்டான். ஆனாலும் அவனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. அரசனுக்கு அரசி இருப்பதுதான் மரபு. ஆகவே, வீர பாண்டியனுக்கு விரைவில் திருமணம் நடத்திவிட வேண்டும் என்ற அவா என் எண்ணத்தில் சில் நாட்களாகவே மேலோங்கியிருக்கிறது"

அரசியல் பேசுவார் என்று எதிர்பார்த்த் மாராயர், இப்படி திருமணம் பற்றி பேச்சு வரவே ஒன்றும் சொல்வதறியாது திகைத்தார். தன் மகளுக்கும், வீர பாண்டியனுக்கும் உள்ள தொடர்பை அறிந்திருந்தாரானாலும், இப்போது என்ன சொல்வது என்ற எண்ணத்தில் பதிலிறுக்க மறந்து விட்டார். அவரது எண்ண ஓட்டத்தைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட விக்ரமர்,

"மாராயரே, அரசியலும் பேசுவோம். அதற்கு முதற்படி இந்த அறவியல். அதாவது இல்லறவியல். இங்கிருப்போருக்குத் தெரியாததை நான் சொல்லப்போவதில்லை. ஆனாலும் தெரிவித்து விடுகிறேன். கயல்விழி தேவியார் பாண்டிய சிம்மாசனத்தை அலங்கரிக்கும் நாளை எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறேன்" என்று ஒரே போடாகப் போட்டர்.

சுற்றியிருந்தோர் வாயடைத்து நின்ற விதத்தைப் பார்த்து அங்கிருந்த பாவை விளக்குகள் சிரித்ததைப் போன்றிருந்தது. வான்மதியாளும் சிரிப்பதற்கு வசதியாக மேகமுந்தானையால் தன் முகத்தை மூடினாள்.

(தொடரும்)

4 comments:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

CA Venkatesh Krishnan said...

மிக்க நன்றி செய்தி வளையம் குழுவினர்களே!

நேற்றுதான் உங்களைப் போன்றோரின் எங்களைப் போன்றோருக்கான சேவையைப் பற்றி எழுதினேன்.

☀நான் ஆதவன்☀ said...

ஆஹா...இந்த தடவை வர்ணனைகள் தூக்கலா இருக்கே பல்லவன்.

அதுவும் //இவற்றையெல்லாம் காணவேண்டுமென்ற அவா இருந்தும் பகலவன் தன் பணியை முடித்துக் கொண்ட காரணத்தால் மலைவாயிலில் விழுந்து மறைந்துவிடவே// ரொம்ப ரசிச்சேன் பல்லவன்.

சீக்கிரம் இரண்டு பேருக்கும் சட்டு புட்டுன்னு கல்யாணத்த பண்ணி வையுங்க

CA Venkatesh Krishnan said...

நன்றி ஆதவன். வர்ணனைகள் சேர்க்கவேண்டும் என்றுதான் ஆசை. சில சமயம் அது கதையில் தொய்வை ஏற்படுத்தும் என்பது என் கருத்து.

விரைவில் திருமணம் செய்ய வேண்டுமென்பதுதான் என் விருப்பமும்! பார்ப்போம்!!