Wednesday, July 29, 2009

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 11

அத்தியாயம் 11: திட்டம்


மாலிக் கஃபூர் என்ற பெயர், காஞ்சிக் கடிகையின் சிறந்த மாணாக்கர்களையே கவலையும் சந்தேகமும் கொள்ளச் செய்ததென்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. மாலிக் கஃபூரின் அட்டூழியங்களை அவர்கள் அறிந்தே இருந்தார்கள். தக்காணமும் அங்கிருந்து அபகரிக்க நினைத்த அதன் அபரிமிதமான செல்வமும் அவனை மேலும் கொடூரமானவனாக்கியிருந்தது அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. அவன் தென் தமிழகம் வரை வரமாட்டான் என்றே எண்ணியிருந்தார்கள். ஆனால் சுந்தர பாண்டியன் அவனை தாம்பூலம் வைத்து அழைக்காத குறையாக அவனை வரச்செய்தது அவர்களை சற்று கலக்கமுறச் செய்தது.

"இன்று நாம் கூடிப் பேசுவது போல் இனியும் சந்தர்ப்பம் வாய்க்குமா என்பது சந்தேகம் தான். ஆகவே அனைவரும் கவனமுடன் கேளுங்கள். இப்போதைய தக்ஷிண பாரத நிலையைத் தெளிவாகச் சொல்கிறேன். மாலிக் கஃபூருக்கு ஆந்திரத்தில் பெரிதாக ஒன்றும் சிக்காது. அவனது கவனம் முழுவதும், ஹொய்சளத்திலும், பாண்டிய தேசத்திலும்தான் இருக்கிறது. அவனது முதல் திட்டம், ஹொய்சளர்களைத் தாக்கி அங்கே நிலை பெற்றுப் பின் தமிழகத்தைத் தாக்குவதென்பது.

ஆனால் சுந்தரன் வலுவற்ற தமிழகத்தைக் காட்டி அவனை முதலில் இங்கே இழுக்கிறான். மாலிக் கஃபூரும் இன்றைய நிலையை நன்கு அறிந்திருப்பதால் அதற்குச் சம்மதம் தெரிவித்து இங்கு வருகிறான். வருபவனுக்கு நாட்டைப் பிடிக்கும் எண்ணம் சிறிதும் இல்லை. அவனது முதல் திட்டம் இங்கிருக்கும் கோவில்களின் சொத்துக்களை அபகரிப்பதுதான். அத்தகைய செல்வங்களை நாம் சற்றும் விட்டுத்தரக்கூடாது. அதற்கான மாற்றுத் திட்டத்தைத்தான் இங்கே வரைந்திருக்கிறேன். சற்று கவனமாகப் பாருங்கள்.




(இது அன்றைய தென்னிந்தியாவின் வரைபடம். 1 என்ற இடத்தில் மாலிக் கஃபூர் இருக்கிறான். 2 ஹொய்சளர்களின் தலை நகரம். 3 திருவரங்கம். 4 மதுரை. தென் இந்தியாவின் நடுவே இருப்பது மேற்குத் தொடர்ச்சி மலை. சற்றுப் பிரிந்து கிழக்கே செல்வது கிழக்குத் தொடர்ச்சி மலை.)

மாலிக் இருக்கும் இடத்திலிருந்து தமிழகத்திற்கு மேற்கு மலைத் தொடரின் கிழக்குப்பகுதி வழியாக நேரே வந்துவிடலாம். அங்கே அவனுக்கு ஹொய்சளர்களின் எதிர்ப்பிருக்காது. நேராக அவன் இறங்குமிடம் கொல்லிமலைப் பகுதிதான். அங்கிருந்து மதுரைக்குச் செல்லும் ராஜபாட்டையை அவன் அடைவான். அங்கே இருப்பது திருவெள்ளரையும், திருவரங்கமும். திருவரங்கத்தில் இல்லாத செல்வங்கள் இல்லையல்லவா? அதைக் கவர்வது அவன் நோக்கம். அதற்குப் பிறகு நேராகக் கீழே இறங்கி மதுரையைக் கைப்பற்றி பிறகு வடக்கே திரும்பி ஹொய்சளர்களைத் தாக்கிவிட்டு வடதேசம் திரும்புவதுதான் அவன் உத்தேசம். இந்த வகையில் அவன் மேற்குத் தொடர்ச்சி மலையை ப்ரதக்ஷிணமாக வருவான்" என்று அவன் போகும் பாதையை வரைபடமிட்டுக் காட்டினார்.

"உங்களுக்கு மாலிக் கஃபூரின் திட்டம் இவருக்கு இவ்வளவு தெளிவாகத் தெரியவந்தது எப்படி?" இளவழுதி வினவினான் சந்தேகத்தோடு.

"எனக்கு அவன் திட்டம் இதுதான் என்பது தெரியாது. அவன் நிலையில் நான் இருந்தால் இப்படித்தான் செய்வேன். ஏனென்றால் அருகிலிருக்கும் வலுவான எதிரியை விட தூரத்திலிருக்கும் வலுவில்லாத எதிரியை அழிப்பது சுலபம். அந்த வெற்றி தரும் போதையும் உற்சாகமும் வலுவான எதிரியை நன்றாக எதிர் கொள்ளத் தயார் படுத்தும் மேலும் இந்த வெற்றி வலுவான எதிரியிடம் சற்று பயத்தையும் ஏற்படுத்தும்" என்று விவரித்தார் விக்ரமர். அவரது வாதம் ஏற்கத்தக்கதாக இருந்தது.

"சரி இனி ஆகவேண்டியதைப் பார்ப்போம். விரைவிலேயே நாம் மதுரையை அடைய வேண்டியதிருக்கும். வழியில் உங்கள் கொல்லிமலைப் படையையும் அழைத்துக் கொள்வோம். மதுரை நம் வசம் வந்துவிட்டால் மாலிக் கஃபூரை எளிதில் திருப்பி விடலாம்." என்று விவரிக்கத் தொடங்கினார்.

"மதுரையை நாம் தாக்குவது நாம் சுந்தரனுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்திற்கு முரணானது" என்று சுட்டிக்காட்டினான் வீரபாண்டியன்.

"உண்மைதான் வீரா. ஆனால் ஒப்பந்தத்தை முதலில் முறித்தவன் அவன்தான். மாலிக் கஃபூரை வரவழைத்ததன் மூலம் நமக்கும் ஆபத்தைத் தேடித்தந்திருக்கிறான். ஆகவே நம் மீது தவறொன்றுமில்லை. இத்துடன் நாம் கலைகிறோம். மாராயரே நீங்கள் அடுத்த ஓரிரு நாட்களில் இங்கிருக்கும் படைகளைத் தயார் படுத்த வேண்டும். இளவழுதியும் தேன்மொழியும் கொல்லி மலைக்குச் சென்று அங்கிருக்கும் படைகளுடன் திருவரங்கத்தில் தங்கியிருக்க வேண்டும். வீரபாண்டியனும் நானும் படைகளுடன் கிளம்பியதும் நீங்களும் கயல்விழியும் இங்கே தங்கியிருந்து அரசகாரியங்களைக் கவனித்துக் கொள்ளலாம்" விக்ரம பாண்டியனின் வியூகம் மளமளவென வெளிவந்தது.

அவ்வளவு பரபரப்பான விஷயங்களைப் பேசிய போதும் வாயே திறக்காத மாராயர் இறுதியாக "இந்தப் படையெடுப்பின் நோக்கம் மதுரையைக் கைப்பற்றுவதாகத் தெரியவில்லை. தமிழகத்தை பலவீனப்படுத்துவது போல் இருக்கிறது. இதன் மூலம் மாலிக் கஃபூருக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச எதிர்ப்பையும் நாம் அகற்றி விடுகிறோம்." என்று தெளிவாகப் பேசினார். விக்ரமனின் முகத்தில் மந்தகாசம் பூத்தது.

"மாராயரே, இப்போது நடக்கப் போவது தர்மயுத்தமல்லை. ஏன் எப்போதுமே யுத்தம், தர்மமல்லை. யுத்ததர்மமென்பதும் எதுவுமில்லை. இதன் தாக்கத்தை நான் சொல்வதை விட நீங்கள் பார்த்துத் தெரிந்து கொள்வது நலம். இப்போது இதற்கு மறுப்புத் தெரிவிக்காது இந்தத் திட்டத்தை நிறைவேற்ற உதவ வேண்டும்." இப்படி விக்ரமர் சொல்லும் போதே இளவழுதிக்கு சக்கர வியூகம் நினைவிற்கு வந்தது. அவன் கண்கள் மின்னின. அதை கவனிக்கத் தவறாத விக்ரமர் அவனைத் தனியாகச் சந்திக்க வேண்டுமென்று ஆவல் கொண்டார்.

"அவ்வாறே ஆகட்டும். மேற்கொண்டு காரியங்களைப் பார்ப்போம்" என்று மாராயர் முடிக்க அவை மீண்டும் கலைந்தது.

அன்று முதல் வீரதவளப்பட்டணத்தில் போர் ஆயத்தங்கள் அதிகமாயின. அரசு நிறுவி சில திங்களுக்குள்ளாகவே போர் என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எங்கே செல்லப் போகிறோம் என்பது எந்த போர் வீரனுக்கும் தெரியாது. ஏன் தளபதிக்கே தெரியாது...


(தொடரும்)

4 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//திருவரங்கத்தில் இல்லாத செல்வங்கள் இல்லையல்லவா? அதைக் கவர்வது அவன் நோக்கம்.//


ரொம்ப நல்லவர் போல...,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

மாலிக் கபூர் பழனி வந்தாரா தல.., அந்தக் கதையெல்லாம் தொடரில் வருமா தல,,,,

☀நான் ஆதவன்☀ said...

ஆகா அருமை.

விக்கரம பாண்டியருக்கும் “சக்கர வியூகம்” தெரியும? அவர் இப்போது வகுத்திருக்கும் திட்டமும் அதை போன்றே உள்ளதே?

ஒரு சிறிய நினைவுகூர்தல்...சக்கர வியூகத்தின் மீதியை தாங்கள் இன்னும் எங்களுக்கு சொல்லவில்லை பல்லவரே. இளவழுதிக்கு மட்டும் சொல்லியுள்ளீர்கள்

V.RAMACHANDRAN said...

Interesting sir
thanks for your this writing
V.Ramachandaran.
Singapore