Monday, December 29, 2008

2008ல் வந்த தமிழ்ப் படங்கள் ?

இந்த படமெல்லாம் 2008ல வந்ததா சொல்றாங்க. உங்களுக்குத் தெரியுமா?



1. ஆறு மனமே

2. ஆட்ட நாயகன்

3. அயன்

4. ஆதிவாசியும் அதிசயப்பேசியும்

5. ஆனந்த தாண்டவம்

6. அசோகா

7. பலம்

8. இன்னொருவன்

9. ஜெயலக்ஷ்மி

10. கண்களும் கவிபாடுதே

11. குளிர்

12. காதலர் கதை

13. பார்க்கலாம் பழகலாம்

14. பொக்கிஷம்

15. புலி வருது

16. சரித்திரம்

17. சில நேரங்களில்

18. தங்கம்

19. தித்திக்கும் இளமை

20. தாவணி போட்ட தீபாவளி

21. திரு.கவுதம் எஸ்.எஸ்.எல்.சி

22. வாடா

23. வம்புசண்டை

24. வர்ணம்

25. வாழ்த்துக்கள்

26. வேள்வி

27. வள்ளுவன் வாசுகி

28. வசூல்

29. யாருக்கு யாரோ

30. என்னைத் தெரியுமா



இந்த முப்பதுல உங்களுக்கு எத்தனைப் படம் தெரியும்னும் எத்தனை படம் பாத்தீங்கன்னும் கொஞ்சம் சொன்னீங்கன்னா என்னுடைய சினிமா அறிவை வளத்துக்குவேன்.

Saturday, December 27, 2008

வரலாற்று கேள்வி-பதில்கள்

என்னுடைய சிறு முயற்சிக்கு முதல் ஆதரவுக்கரம் நீட்டி ஆதரித்த அன்பு அண்ணன் ஆதவன் அவர்களுக்கும், அன்பு அண்ணன் நாஞ்சில் பிரதாப் அவர்களுக்கும் முதற்கண் நன்றி கலந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். (கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன் !)

இப்போது கேள்வி பதில்கள்

நான்-ஆதவன்
1. பிருத்திவிராஜ் மற்றும் சம்யுக்தா இவர்கள் காதல் கதையை கேட்டிருந்தாலும் எந்தளவிற்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. அவர்கள் காதல் கதையைப் பற்றி விளக்கவும். அவர்கள் கல்யாணம் செய்திருந்தால் ,அதற்கு பிறகு அவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸியமான சம்பவம் இருந்தாலும் தெரியப்படுத்தவும். (ஹி ஹி இது முதல் கேள்வியா, அதான் கொஞ்சம் ரொமாண்டிக்கா இருக்கட்டுமேன்னு :-)

ரொமான்டிக்காவே ஸ்டார்ட் பண்ணுவோம் சார். இவர்கள் காதல் கதை உண்மைதான். பெரும்பாலும் காணாமலே காதல் தான். ஆனால் வரைபடம் பார்த்து காதல். பிறகு களவுவழி காதல் (திருட்டுத்தனமாக சந்திப்பது). இது எப்படியோ சம்யுக்தாவின் தந்தைக்குத் தெரிந்து போய், சுயம்வரம் வைத்தவர் பிரிதிவிராஜுக்கு மட்டும் அழைப்பு அனுப்பவில்லை. ஆனால் அவனைப் போல் சிலை ஒன்றை மண்டபத்தில் வைத்துவிடுகிறான். சிலைக்கு மாலையிடச் சென்ற சம்யுக்தா சிலைக்குப் பின் நின்ற பிரிதிவிராஜுக்கு மாலையிடுகிறாள். அவன் அப்படியே அவளைக் கவர்ந்து சென்றுவிடுகிறான். இவ்வாறு கூறுகிறது 'ப்ரிதிவிராஜ் ரஸோ' என்ற பிரிதிவிராஜன் சரித்திரம்.

இவனது அவைப் புலவனும் நெருங்கிய நண்பனுமான சந்த் பர்தாய் என்பவன்தான்'ப்ரித்விராஜ் ரஸோ' என்ற இலக்கியத்தைப் படைத்தவன். இதை நம்மூர் கலிங்கத்துப் பரணி போன்று எடுத்துக் கொள்ளலாம். சம்யுக்தாவின் தந்தை ஜெய்சந்த். ஜெய்சந்தை டில்லிக்கு அரசனாக்காமல் பிரிதிவிராஜை அரசனாக்கியதில் ஜெய்சந்துக்கு முதலிலேயே ஏகப்பட்ட கடுப்பு. இப்போது மகளைக் கவர்ந்துவிட்டதில் அது இரட்டிப்பாகிவிட்டது.

வெறும் 24 வயது வரையே வாழ்ந்து மறைந்த காவியத் தலைவன் ப்ரிதிவிராஜ் சவுகான் என்னும் ப்ரிதிவிராஜ். ராஜ்புதன அரசர்களிலேயே இவனும் ராணா ப்ரதாப் சிங்கும் மிகப் பிரபலமானவர்கள். ப்ரிதிவிராஜ் டில்லியின் கடைசி வெற்றிகரமான ஹிந்து அரசன் என்று சொல்லலாம். இவனது தலை நகரம் டில்லி மற்றும் அஜ்மீர்.

பிரிதிவிராஜ் டில்லியை ஆண்ட போது பலப்பல தொல்லைகள் இருந்து வந்திருக்கின்றன. போரிடவே நேரம் சரியாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. திருமணத்திற்குப் பின் காதல் என்னவாயிற்று என்பதற்கான குறிப்புகள் குறைவே:((



2. காஷ்மீர் மக்களின் வரலாறு. முக்கியமாக எப்போது இருந்து அங்கு முஸ்ஸீம் இனத்தவர் வாழ்க்கின்றனர். அதற்கு முன் இருந்த மக்களை ஆண்டது யார். காஷ்மீர் பண்டித்துக்கள் இப்போது என்ன செய்கிறார்கள் என்பதையும் உங்களுக்கு தெரிந்தவற்றை விளக்கவும். (இந்த கேள்வி உண்மையில் எனக்கு காஷ்மீர் வரலாறு தெரியாத்தால் கேட்கப்பட்டது. தற்போதைய காசுமீர் நிலவரம் எனக்கு தெரியும் ஆனால் அதன் வரலாறு தெரியாது, பாடபுத்தகங்களில் படித்ததாகவும் ஞாபகம் இல்லை )

காஷ்மீர் பற்றிய முதல் குறிப்பு கல்ஹணர் என்பவர் எழுதிய 'ராஜதரங்கிணி' என்னும் சமஸ்கிருத வரலாற்று நூலில் கிடைக்கிறது. மவுரிய வம்சத்து அசோகர் ஆண்டபகுதியாக இருந்தது பின்னர் குஷாண வம்சத்திற்கு மாறியது. கனிஷ்கர் மிகப்ரபலமானவர். கி.பி.12ம் நூற்றாண்டுவரை தொடர்ந்த ஹிந்து அரசுகள் மற்ற இந்திய அரசுகளைப் போல் வீழ்ந்துவிட்டன.

பதினெட்டாம் நூற்றாண்டு வரை தொடர்ந்த முஸ்லீம் அரசுகள் பெரும்பாலும் ஆஃப்கன், துருக்கிய, முகலாய அரசுகள்தான். மக்கள் முஸ்லீம்களாக மாறினர். பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தப் பகுதி சீக்கியர் வசமானது. லாஹூரிலிருந்து மஹாராஜா ரஞ்சித் சிங் இந்தப் பகுதியைக் கைப்பற்றினார். பிறகு ஆங்கிலேயர்களுக்கும் சீக்கியர்களுக்கும் நடந்த போரில் இது ஆங்கிலேயர் வசமாகிவிட குலாப் சிங் என்பவர் ராவி நதிக்கு மேற்கிலுள்ள பகுதிகளையும் சிந்து நதிக்குக் கிழக்கிலுள்ள பகுதிகளையும் 1847ல் ரூ.75 லட்சத்திற்கு அவர்களிடமிருந்து வாங்கினார். பிறகு இவரது மகன் ரன்வீர் சிங் கில்கிட், ஹுன்ஸா, நகர் முதலிய பகுதிகளை இணைத்தார். இப்படியாக லடாக்கில் பௌத்தர்கள், காஷ்மீரில் முஸ்லீம்கள், ஜம்முவில் ஹிந்துக்கள் என காக்டெயில் நாடாக விளங்கியது காஷ்மீர். 1857க்குப் பிறகு ப்ரின்ஸ்லி ஸ்டேட் ஆக மாறியது. மொத்தத்தில் மக்கள் பெரும்பாலும் முஸ்லீம்கள். அந்தந்தப் பகுதியில் மற்றவர்கள் மெஜாரிடி. காஷ்மீரில் பண்டிட்டுகள் இருந்திருந்தாலும் அவர்கள் மைனாரிடிதான்.

இப்போது பண்டிட்டுகள் பெரும்பாலும் ஜம்முவிலும், டில்லியிலும் வாழ்வதாகத் தெரிகிறது. இதைப் பற்றி பல்வேறு கருத்துகள் இருந்தாலும் உள் நாட்டில் புலம்பெயர்ந்தோர் என்பதை மறுக்க முடியாது. 1989க்குப் பிறகு கடந்த சில வருடங்களாக காஷ்மீரிலுள்ள சரஸ்வதி கோவிலுக்கு யாத்திரை சென்று வருகிறார்கள். மற்றபடி பண்டிட்டுகளுக்கும் முஸ்லீம்களுக்கும் 'சர் நேம்' பெரும்பாலும் ஒன்றாக இருக்கும்.

தற்போதைய காஷ்மீர் நிலவரம் பற்றியும் இதன் பின்புலம் பற்றியும் ஏதும் குறிப்பிடவில்லை. தேவையெனில் அதைப் பற்றி தனிப் பதிவாகவோ கேள்விபதிலாகவோ போடலாம்.

===

நாஞ்சில் பிரதாப்
3.அக்பருக்கு ஆயிரம் பொண்டாட்டியாம்ல...உண்மையா???எப்படிங்க???


என்னங்க அக்பர் சக்ரவர்த்திய குறைவா மதிப்பிட்டுட்டீங்க!?. பொதுவா பாதுஷாக்கள்லாம் இதுல கணக்கே வச்சிக்கறதில்லையே. அதுவும் அக்பர் இதை ஒரு தந்திரமாகவே கையாண்டவராச்சே. கணக்கு சொல்றவங்க 300லருந்து 5000 வரைக்கும் சொல்றாங்க.

ஜலாலுதீன் அக்பர், மொகலாயப் பேரரசர்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தவர். பல்வேறு கலைகள் தெரிந்தவர். ஒன்றைத் தவிர. அதாவது படிப்பு. எழுதப்படிக்கத் தெரியாதவர்.

ஹிந்துக்களைக் கவர நிறைய ராஜபுதன இளவரசிகளை மணந்தவர். எம்மதமும் சம்மதம் என்று மதத்திற்கு ஒரு முக்கிய அரசியை வைத்திருந்தார். இவையல்லாது போகும் போது வரும்போது பார்ப்பதையெல்லாம் அந்தப்புரத்தில் சேர்ப்பது பாதுஷாவுக்கு பொழுது போக்கு.

ஆகவே கணக்கு கேக்காதீங்க. உங்களுக்கு தோணின ஃபிகர (அதாவது நம்பர்) வச்சுக்கங்க ;-))


இவைதான் இந்த வார கேள்விகள். அடுத்த வார கேள்விகளுக்குக் காத்திருக்கிறேன்.

கொ(நெ)டுஞ்சாலைகள்

நீங்கள் சென்னையிலிருந்து வடக்கில் ஆந்திரா செல்கிறவரா? வடமேற்கில் பெங்களூரு செல்கிறவரா? தெற்கில் திண்டிவனம் வரை செல்கிறவரா? இவற்றிற்கெல்லாம் ஆம் என்று பதில் சொன்னால் கையைக் கொடுங்கள். நீங்கள்தான் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. தின்டிவனத்திற்குத் தெற்கே பயணப் பட்டவர்கள் சென்ற பிறப்பில் கழுதையைத் துன்புறுத்தியிருக்க வேண்டும். அவ்வளவு பாவத்தையும் சுமந்து கொண்டு கஷ்டப்படுவதைப் போன்ற கொடுமை நமது நெடுஞ்சாலைகளில் பயணிப்பது.

தங்க நாற்கரம் என்கிறார்கள். வடக்கு தெற்கு சிறப்புச்சாலை என்கிறார்கள். தேசிய நெடுஞ்சாலைகளை நான்குவழிப் பாதைகளாக்குகிறோம் என்கிறார்கள். ஆனால் நடப்பதெல்லாம் ஒன்றுதான். அது வாகனங்கள்தான்.

ஆம். வாகனங்கள் நமது நெடுஞ்சாலைகளில் நடக்கின்றன. ஓடவில்லை.

திருச்சி - சென்னை 330 கி.மீ. இதைக் கடக்க பேருந்துகள் எடுத்துக் கொள்ளும் நேரம் சர்வசாதாரணமாக பத்து முதல் பனிரெண்டு மணி நேரங்கள். அதாவது ஒரு மணிக்கு 30 கி.மீக்கும் குறைவான வேகம். இதுவும் அரசு விரைவுப் பேருந்தில்!.

கடந்த வியாழனன்று திருச்சியிலிருந்து தஞ்சை வழியாக வைத்தீஸ்வரன் கோவில் செல்ல நேரிட்டது. வழக்கமாக திருச்சியிலிருந்து கிளம்பினால் 45 நிமிடங்களில் சிற்றுந்தில் தஞ்சையை அடைந்துவிடலாம். ஆனால் அந்தோ பரிதாபம். இந்த முறை சற்றேறக்குறைய 2 மணி நேரங்களாயின. வழியெங்கும் நான்குவழிப்பாதையாக்குகிறோம் என்று சொல்லி 'லிடரல்லி' சாலையைக் குதறி வைத்திருந்தார்கள்.

இதே நிலைதான் மதுரை, திண்டுக்கல், கரூர் சாலைகளுக்கும். சேலம் சாலை இப்போதைக்கு நான்கு வழி அல்ல என்றாலும் அதுவும் குண்டும் குழியுமாகத் தான் இருக்கிறது.

மிகமிக அவலமான நிலையில் இருக்கின்றன தமிழகத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலைகள். ஆனால் தமிழக மாநில நெடுஞ்சாலைகள் பரவாயில்லை. நன்றாக போடப்பட்டுள்ளன. புதுப்புது அரசுப் பேருந்துகள் சிறப்பாக இயங்கும் நிலையில் இந்த மோசமான நெடுஞ்சாலைகளால் விரைவில் பணிமனை சேரும் அபாயம் உள்ளது.

அய்யா நெடுஞ்சாலைத் துறையினரே, நீங்கள் நான்கு வழிப்பாதை அமைப்பதைத் தடுக்கவில்லை. ஆனால் மக்கள் போக்குவரத்திற்கான பாதையை நன்றாகப் பராமரிக்கலாம் அல்லவா? அதற்கு வரி வேறு செலுத்துகிறோமே. பாதை சரியில்லாததால் எவ்வளவு சிக்கல்கள். நட்டங்கள். எரிபொருள் வீணாக்கம். இவையெல்லாம் உங்களுக்குத் தெரியவில்லையா?

என்றுதான் மக்களுக்கு விடிவு காலம் பிறக்குமோ?

எல்லாம் வல்ல இணையத்தின் கடவுளர்களான தென் திருப்பேரை மகர நெடுங்குழைக் காதனையும், பாடிகாட் முனீஸ்வரரையும், மலைக்கோட்டை மாணிக்க வினாயகரையும் வணங்கி வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லை.

Wednesday, December 24, 2008

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர்...11

அத்தியாயம் 11 - மதுரை

பாண்டியர்கள் சங்கம் வைத்து தமிழை வளர்த்த மாநகர் மதுரையில் நாம் இருக்கிறோம். கருக்கலிலேயே வந்து விட்டதால் அவ்வளவு தெளிவாகக் காட்சிகள் தெரியவில்லை. சற்று நேரம் பொறுத்தால் விடிந்து விடுகிறது. வைகை சலசலத்தோடும் ஓசை மட்டுமே கேட்கிறது. கருக்கலாதலால் புள்ளினங்களும் உறங்கச் சென்றுவிட்டன. மரங்கள் அசையும் ஓசை கூட இல்லாதது அவையும் ஓய்வெடுக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இவ்வளவிலும் காவற்காரர்களின் நடமாட்டம் இருந்து கொண்டுதான் இருந்தது. இயற்கை ஓய்ந்தாலும் மனிதனின் ஆசை ஓட்டம் ஓயாது என்பது போல் வைகையின் சலசலப்பும், காவற்காரர்களின் ஓசையும் காலைக் கருக்கலின் அந்தகாரத்தை அதிகப் படுத்திக் கொண்டிருந்தன. பெரும்பாலான மாளிகைகளிலும், இல்லங்களிலும் விளக்குகள் அணைக்கப் பட்டிருந்தாலும், ஆங்காங்கே தெரிந்த ஒரு சில விளக்குகளின் வெளிச்சம் இருளை அதிகப்படுத்துவது போலிருந்தது.

அதோ கீழ்வானில் சுக்கிரன் தோன்றிவிட்டான். இனி வானம் சிவத்தால் வெளிச்சம் வந்துவிடும். வானத்தில் விடிவெள்ளி முளைத்து விட்டது. மதுரைக்கு?...

சற்றுத் தூரத்தில் இரண்டு பேர் நடந்து வருகிறார்ப்போல் தெரிகிறது. அவர்கள் அருகில் வர வர ஒருவர் ஆணென்றும் மற்றவர் பெண்ணென்றும் தெளிவாகிறது. ஆம். சந்தேகமே இல்லை. அவர்கள் வீரபாண்டியனும் கயல்விழியும். அட.. மதுரைக்கும் விடிவெள்ளியோ...

====

'கயல் விழி, இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். விடியலுக்குள் மதுரைக்குள் சென்று உன்னை என் மாமனின் இல்லத்தில் சேர்ப்பித்து விடுகிறேன். பிறகு நான் மீண்டும் நேர் வழியில் மதுரைக்கு வர வேண்டும்.'

'அன்பரே, இவ்வளவு தூரம் தங்களுடன் வந்தவள் இப்போது பிரிய வேண்டுமே என்று நினைக்கையில் மிகவும் வேதனையாக இருக்கிறது'

'இரண்டு நாட்கள்தான் சேர்ந்திருந்தார்கள். அதற்குள்ளாகவே அவர்களின் தொடர்பு யுகயுகாந்திரமாய் தொடர்வதாய்ப் பட்டது. இடையே வீரபாண்டியன் நாம் இப்படியே எங்காவது சென்று விடலாமென்றும் அவளை அவன் காப்பாற்றுவதாகவும் தேசமே தேவையில்லை என்றும் உளறினான். அவள் தெளிவாக அவனை மதுரைக்கு அழைத்துவந்தாள். இங்கு அவன் தெளிவு பெற அவளிடத்தில் கலக்கம்.

அவளது வேதனையை அந்த இருட்டிலும் அவனால் பார்க்க முடிந்தது. உணர முடிந்தது. நெகிழ்ச்சியுடன், கரம் பற்றி அவளை அணைத்தான் ஆதரவாக.

'கயல்விழி, என்னை இங்கு அழைத்து வந்ததே நீதான். இப்போது நீ இப்படி சொன்னால் நான் தெளிவாக இருக்க முடியுமா? மிஞ்சிப் போனால் இரண்டு அல்லது மூன்று நாட்கள். நாம் மீண்டும் சந்திக்கப் போகிறோம். ஆகவே கவலையை விடு' என்றான்.

ஒருவழியாக அவளை சமாதானப் படுத்தி அவனது மாமன் விக்ரம பாண்டியன் மாளிகையில் சேர்ப்பித்ததுடன் மற்ற விஷயங்களைப் பற்றி அவள் சொல்வாளென்றும் அவளை அரண்மனைக்குள் எப்படியாவது சேர்த்துவிட வேண்டுமென்றும் மாமனிடம் கூறிவிட்டு வேகமாக மீண்டும் மதுரையை விட்டு வெளியேறினான்.

====

விடியலும் வந்தது. பொழுதும் புலர்ந்தது. புள்ளினங்கள் ஆர்ப்பரித்தன. மரத்திலிருந்து வெளிப்பட்டு மீண்டும் மரத்திற்குத் திரும்பியது உடற்பயிற்சி செய்தனவோ என்று எண்ணுமாறு இருந்தது. மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர் ஆலய ஆலாட்சிமணி, காலைப் பூசைகள் துவங்கியதற்கான அறிகுறியாக ஒலித்தது. மக்களின் ஆரவாரமும் துவங்கியது.

இப்போது மதுரையை நன்றாகப் பார்க்க முடிகிறதே. வைகை ஒரு புறம் மதிலாக அமைந்த மதுரை மாநகர் வெகு தூரத்திற்கு வெகு தூரம் பரவியிருந்தது. தமிழகத்தின் தற்போதைய பேரரசின் தலை நகருக்குரிய அனைத்து லக்ஷணங்களும் பொருந்தியிருந்தது மதுரை நகரில். ஊரைக் கடந்து கோட்டையை அடைவதற்கே அரை நாழிகை பிடித்தது. வழியில் மக்களும், பொதி சுமந்த வாகனங்களும் பல்வேறு திக்குகளிலிருந்து வந்திருந்தன. கோட்டைக்கு வெளியே சந்தையும், பிற வியாபாரத் தலங்களும் இருந்தன. கோட்டையில் முத்தங்காடிகளும், பொற்கொல்லர்களும் இருந்தார்கள்.

ஒவ்வொரு நூறடிக்கும் வீரர்கள் அந்த அதிகாலையிலும் நின்று கொண்டிருந்தனர். மக்களை ப்ரதான வாயிலுக்குள் செல்ல விடாமல் வேறு வழியாகத் திருப்பி விட்டுக் கொண்டிருந்தனர். என்னேரத்திலும் பிடி இறுகும் வகையில் படை நிறுத்தப் பட்டிருந்தது. வேகமாக அரண்மனைக்குச் செல்லவேண்டுமென்ற அவாவில், வீர பாண்டியன் காலையில் கடைப்பிடித்த கவனத்தைத் தவறவிட்டான். நகரின் காவல் நிலையில் ஏற்பட்டிருந்த மாற்றத்தை கவனிக்க வில்லை.

ப்ரதான வாயிலை அடைந்தவுடன் தன் முகத்தில் பாதி மறைத்திருந்த மேலங்கியை நீக்கியபடி நின்றான். நடந்து வந்த அவனைக் கண்டதும் ஆச்சரியப் பட்ட கோட்டைக்காவலர்கள் வேகமாக வாயிலைத் திறக்க முற்பட்டனர். அங்கே ஒரு குதிரையை எடுத்துக் கொண்டு வேகமாக அரண்மனை நோக்கிச் சென்றான்.

அரண்மனையின் கம்பீரம் சொல்லமுடியாததாகவிருந்தது. பல்வேறு அடுக்குகளும் கட்டங்களுமாக அரண்மனை பிரிக்கப் பட்டிருந்தது. நன்கு அறிந்தவர்களே அந்த அரண்மனையில் துணையின்றி உலாவ முடியும். அரண்மனையின் அமைப்பைப் பற்றி விரிவாக பிறகு பார்ப்போம். இப்போது வீர பாண்டியன் நோய்வாய்ப்பட்டிருந்த குலசேகர பாண்டியனின் அறைக்கு விரைந்து சென்றான்.


குலசேகரர் சற்று தெளிவுடனே இருந்தார். மருத்துவர்கள் அந்தக் காலை நேரத்திலும் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். மகனைக் கண்டதும் வியப்பு மேலிட,

'வா வீரா. வருவதாகக் தகவலே இல்லையே. உன் படிப்பு முடிந்ததா?'

வீரபாண்டியனால் தந்தையின் நிலை கண்டு பேசவும் முடியவில்லை. அப்படியே அமர்ந்து விட்டான். சிறிது நேரம் கழித்தே அவர் கேட்டது அவனுக்கு உறைத்தது.

'தந்தையே இது என்ன? தங்கள் உடல் நிலை பற்றி ஒன்றுமே தெரிவிக்கவில்லையே. என்னை ஒதுக்கிவிட்டீர்களா? இல்லை மறந்துவிட்டீர்களா?' என்று ஆவேசமாகவும் துக்கத்துடனும் கேட்டான்.

'வீரா, உன் கோபம் புரிகிறது. ஆனால் அதற்கு இது சமயமல்ல. நீ நேரடியாக இங்கு வந்திருக்கிறாய். என் நிலை ஒன்றும் அவ்வளவு க்ஷீணித்து விடவில்லை. ஆகவே ஸ்னான பானங்களை முடித்துக் கொண்டு இங்கு வா. உன் மாமன் விக்ரமனையும் வரச் சொல். சுந்தரனையும் வரச் சொல்லிவிடுகிறேன்.'

சுந்தரன் பெயரைக் கேட்டதுமே வீரனுக்கு இருப்புக் கொள்ள வில்லை. 'அவன் எதற்கு. அவனை சந்திக்க ....' என்று இழுத்தான்

'வீரா. நான் நோய்வாய்ப்பட்டாலும் சிலவிஷயங்கள் தெரிந்திருக்கக்கூடிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கிறேன். உனக்கும் அவனுக்கும் இருக்கும் பகையில் பாண்டிய நாடு அழிந்து படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். என் தந்தையும் உன் பாட்டனாரும் இந்த் ராஜ்ஜியத்தை ஸ்தாபிப்பதற்கு பட்ட கஷ்டங்கள் வீணாகி விடக்கூடாது. ஆகவே அவற்றை மறந்து விடு. இதை அறிவுரையாக ஏற்காவிட்டால் என் ஆணையாகக் கொள்ளலாம். இனி நீ செல்லலாம்' என்றார்

ஏதோ சொல்ல வாயெடுத்த வீரன், குலசேகரரின் கண்ணசைவைக் கண்டு, தலையசைத்தான் பவ்யமாக. களமும் காலமும் கனிவாக இல்லை என்பதைக் கண்டுகொண்டான் அவர் கண்ணசைவில்.

====

குலசேகரரின் அந்தரங்க அறையில் அவர் படுக்கையருகே மூவர் அமர்ந்திருந்தனர். மருத்துவர்கள் அவரை அமரக்கூடாது என்று திட்டம் செய்து விட்டதால் அவர் படுக்கையிலேயே சாய்ந்த நிலையில் இருக்க வேண்டியதாகிவிட்டது. மற்றவர்கள் சுந்தர பாண்டியனும், வீர பாண்டியனும் அவர்கள் மாமன் விக்ரம பாண்டியனும்தான் என்பதைத் தெரிந்து கொள்ள அதிக நேரம் தேவையில்லை.

அரசரே விவாதத்தைத் தொடங்குதல் மரபு என்பதால் அனைவரும் குலசேகரரின் குறிப்பறிந்து காத்திருந்தனர். ஒருவரை ஒருவர் பார்ப்பதையும் தவிர்த்தனர். இதில் விக்ரம பாண்டியன் மத்திம வயதுடையவனாகக் காணப்பட்டான். பாண்டியர்களில் அரசுரிமையில்லாதோர் சிறு நில மன்னர்களாக இருந்து வந்துள்ளனர். அவ்வாறு தென் தமிழகத்தின் ஒரு பகுதியை விக்ரம பாண்டியன் ஆண்டு வந்தான். குல சேகரர் மற்ற உறவினர்களை விட விக்ரமன் மீதே அதிக நம்பிக்கை வைத்திருந்தார். அவனும் அந்த நம்பிக்கைக்குப் பாத்திரனாகவே நடந்து கொண்டிருந்தான்.

அனைவரையும் ஒரு முறை ஆழமாகப் பார்த்த பின்,' விக்ரமா, வீரா, சுந்தரா. உங்களை இங்கு அழைத்ததன் நோக்கத்தை நான் விளக்க விரும்பவில்லை. அது உங்களுக்குத் தேவையும் இல்லை. இன்றைய நிலையில் பாண்டிய நாடு நசிந்து விடக்கூடாது என்பதுதான் என்னுடைய ஆசை. இது நிறைவேற உங்கள் உதவியை எதிர்ப்பார்ப்பதில் தவறில்லை என்று எண்ணுகிறேன்'

'உதவி என்ற பெரிய வார்த்தைகளெல்லாம் வேண்டாம் அரசே, ஆணையிடுங்கள் நிறைவேற்றக் காத்திருக்கிறோம்.' என்றான் விக்ரமன். மற்றவர்கள் மௌனம் காத்தார்கள்.

'நீ சொல்லிவிட்டாய். இவர்கள் வாயே திறக்கவில்லையே'

அப்போதும் இருவரின் மவுனமும் கலையவில்லை. குலசேகரரிடமிருந்து பெருமூச்சொன்று வெளிவந்தது.

'அரசே, இவர்களை விடுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன். முதலில் நீங்கள் பழைய நிலைக்கு வரவேண்டும் என்பதே எங்கள் ப்ரார்த்தனை. ஆகவே மனதைக் குழப்பிக் கொள்ள வேண்டாம். இன்றுதான் வீர பாண்டியன் வந்திருக்கிறான். உங்கள் முன் விவாதிக்க இருவருமே தயங்குவது தெரிகிறது. இதுவே அவர்களைப் பற்றிய நல்ல அபிப்ராயத்தைக் கொடுக்கிறது. ஆகவே பழமையான பாண்டிய வம்சத்திற்கு எந்தவொரு குறைவும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது என் கடமை' என்று தைரியப் படுத்தினான் விக்ரமன்.

உண்மையிலேயே இருவரின் மனமும் அவ்வாறுதான் இருந்தது. என்ன இருந்தாலும் தந்தை இருக்கும் போதே அரியாசனத்திற்கான போட்டி என்பது இருவராலுமே சகித்துக் கொள்ள முடியவில்லை. சுந்தரனின் மன நிலை மதுரைக்கு வந்து தந்தையை மீண்டும் பார்த்தவுடன் ஓரளவு மாறிவிட்டிருந்தது.

'ஆம் தந்தையே' என்றனர் இருவரும் ஒரே சமயத்தில். இது ஒருவித மகிழ்ச்சியை அளித்தது குலசேகரருக்கு.

(தொடரும்)

Tuesday, December 23, 2008

சூடான இடுகை, வாசகர் பரிந்துரை: தமிழ்மணத்திற்கு ப்ராக்டிகலான யோசனை.

நெஜமாவே தெரியாம கேட்கிறேன். ஒரு பக்கம் சூடான இடுகைகள்ன்னு ஒரு தலைப்பு இருக்கு. அதுல ரெண்டு டேப் இருக்கு. ஒண்ணு இன்றைய சூடான இடுகைகள். அதுக்குப் பக்கத்திலேயே இன்னொன்று. அது இந்த வார சூடான இடுகைகள்.

இதில் இடம் பிடிக்க மினிமம் ஹிட்ஸ் ஏதாவது இருக்கா? எந்த அடிப்படையில ஒரு இடுகையை சூடானதா செலக்ட் செய்றாங்க?

ஏன்னா நான் நெறைய சூடான (?!?!) மேட்டர்லாம் எழுதிப்பாத்துட்டேன். ஒண்ணுமே இதுல வரல. கட்டம் கட்டற அளவுக்கு நான் பெரிய ஆளும் இல்ல. அப்ப ஏன் சூடான இடுகையில வரமாட்டேங்குது?

வாசகர் பரிந்துரை பண்ணுங்கன்னு ஒரு இடுகையில கேட்டதனால பெரிய மனசு பண்ணி நேத்து முதல் தடவையா என்னுடைய இடுகையும், இரண்டாவது தடவையா என்னுடைய பேரும் (ஒரு முறை சுரேஷ், என் பேரை தலைப்புல வச்சி சூடாக்கிட்டார். அது வாசகர் பரிந்துரைலயும் வந்தது) வந்திருக்கு.

====

இப்ப லாஜிகலா (?!?!) யோசிப்போம்.

ஒரு இடுகை சூடாகணும்னா என்ன நடக்கணும்?. நெறைய பேர் வந்து பார்க்கணும்.

எப்ப பாப்பாங்க? ஒண்ணு இடுகை மேலே தெரியணும் இல்லைன்னா நம்மள பதிவர்களுக்கோ, வாசகர்களுக்கோ தெரியணும். அப்பதான் நம்மளப்பாக்க நம்ம வலைப் பக்கம் வருவாங்க.

சரி அப்ப என்ன மாதிரிப் புதுப்பதிவர்லாம் என்ன பண்றது?

ஒரு நல்ல (?!) இடுகையைப் போட்டுட்டு யாராவது வருவாங்களான்னு பாத்துக்கிட்டிருக்கும் போதே நம்ம இடுகை நடுசென்டர்லர்ந்து மறைஞ்சி போயிடும்.

அப்புறம்..... 'அந்தப்புறம்தான்'. அதாவது உள்ள அதாவது பின்னாடி ஒரு பக்கம் இருக்கில்ல அங்க போயிடும்னு சொல்றேங்க.

===

இதனால் சகலருக்கும் தெரிவிப்பது என்னன்னா... எல்லாரும் சூடான இடுகைக்கு ஆசைப் படுறாங்க. (இதுல தெரிவிக்கறது என்ன இருக்கு. இதுதான் லோல் பட்டுகிட்டிருக்கேன்னு நீங்க கேக்கப்போறது எனக்கு இப்பவே கேக்குது).

ஆகவே தமிழ்மண நிர்வாகிகளே, தயவு செய்து நடுவில் தெரியும் பட்டைக்கு 'சூடான இடுகை / வாசகர் பரிந்துரை' என்று தலைப்பு வைத்துவிடவும். அப்போது எல்லோரது பதிவும் தோன்றும் போதே சூடான, பரிந்துரைத்த பதிவாகிவிடும்.

எப்படி நம்ம ஐடியா ?

===

ஆக நம்ம பங்குக்கு நாமளும் இந்த மேட்டர்ல நம்ம மேலான கருத்த சொல்லிட்டோம்.

இதுக்கு தம்ஸ் அப்ல ஒரு குத்து குத்திட்டு போங்க (இது பரிந்துரைக்கு). மீண்டும் மீண்டும் வாங்க (இது சூட்டுக்கு).

ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?

தமிழக வரலாற்றில் ஒரு அழியாத கறையை அளித்துச் சென்றுவிட்ட நிகழ்வு ஆதித்த கரிகாலன் கொலை. தமிழக வரலாற்றில் அதற்கு முன் முற்காலச் சோழர்களில் கரிகாலனின் தந்தையான இளஞ்சேட்சென்னியும் கொலை செய்யப்பட்டதாக சங்க காலப் பாடல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஆதித்த கரிகாலன் கொலையைப் போன்ற நிகழ்வாக அது அமையவில்லை. இந்த நிகழ்வு இத்துணை பிரபலமானதற்கு மற்றுமொரு முக்கிய காரணம் கல்கியின் பொன்னியின் செல்வன் என்று கூறலாம்.

இப்போது இந்தக் கொலையைச் செய்தவர் யார் என்பது பற்றிய ஒரு அலசல். நண்பர் சுரேஷ் குந்தவை கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார். சரியான ஆதாரங்கள் இல்லாத நிலையில் பலவித சந்தேகங்கள் எழும்புவது இயல்பே.

நம் பங்கிற்கு, நமக்குத் தெரிந்த வரையில் இதைப் பற்றிய விரிவான அலசல் ஒன்றை ஏற்கனவே செய்துள்ளோம். அது பொன்னியின் செல்வன் யாஹூ க்ரூப்பில் வெளிவந்துள்ளது. அதனடிப்படையில் அமைந்த ஒரு அனலிசிஸ் கீழே தரப்பட்டுள்ளது. இந்த அலசல் கீழ்கண்ட பிரிவுகளாக உள்ளது.

1. நிகழ்வு (The Incident)
2. நிகழ்வு நடந்த காலத்தின் பின்னணி (Backdrop of the Incident)
3. குற்றம் சாட்டப் பட்டோரும் அவர்களது குறிக்கோள்களும் (The Accused and motiffs)
4. குந்தவை கூட்டாளிகள்
5. உத்தம சோழன் கூட்டாளிகள்
6. பாண்டிய ஆபத்துதவிகள்
7. கிடைத்த ஆதாரங்கள் (Evidences available)
8. அனுமானமும் முடிவும் (Inference and Conclusion)
9. மீதமிருக்கும் கேள்விகள் (Unanswered Questions)





1. நிகழ்வு (The Incident)

ஆதித்த கரிகாலன் அதாவது சோழ அரசின் பட்டத்து இளவரசன் மர்மமான முறையில் இறந்ததுதான் நிகழ்வு. அவன் கொலை செய்யப்பட்டானா, தற்கொலையா, இயற்கையான மரணமா? என்ற கேள்விகள் எழுகின்றன. தற்கொலை செய்துகொள்ள வேண்டிய சூழலும், இயற்கையான மரணம் ஏற்படக்கூடிய வயதும் காரணமும் இல்லாத நிலையில் கொலை செய்யப்பட்டான் என்றே முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.



2. நிகழ்வு நடந்த காலத்தின் பின்னணி (Backdrop of the Incident)


சங்க காலத்தில் இருந்த சேர சோழ பாண்டியர்கள் மறைந்த பிறகு களப்பிரர்கள் தலையெடுத்தார்கள். சற்றொப்ப முன்னூறு ஆண்டுகால களப்பிரர் ஆட்சிக்குப் பின் தலையெடுத்தது பாண்டியர்களும் பல்லவர்களும். சோழர்கள் கோழி என்றழைக்கப்படும் உறையூரிலேயே முடங்கியிருந்தனர். பின்னர் விஜயாலய சோழன் காலத்தில் தலையெடுத்தார்களேயொழிய, இந்தக் கொலை நிகழ்ந்த சுந்தர சோழன் காலம் வரை அவர்களால் ஒரு பேரரசை நிறுவ முடியவில்லை. உண்மையில் பேரரசாக மாறத் துவங்கியது உத்தம சோழன் காலத்தில்தான்.

இந்தக் காலகட்டத்தில் வடக்கே ராஷ்டிரகூடர்களின் தொல்லை இருந்து வந்தது. ஆகவேதான் காஞ்சியில் ஆதித்த கரிகாலன் படைவீடமைத்தான். அங்கே ராஷ்டிரகூடர்களைத் தடுத்து நிறுத்த முடிந்ததே ஒழிய அதற்கு வடக்கே அவனால் செல்ல இயலவில்லை. தெற்கே வீர பாண்டியனை அழித்துவிட்டாலும், பாண்டியர்களின் எழுச்சி என்னும் அச்சம் இருந்து வந்தது. பாண்டியர்களுக்கு உதவிய இலங்கை அரசை எதிர்த்துப் போரிட வேண்டியிருந்தது. சேரர்களுடன் கொள்வினை இருந்ததால் அந்த சமயத்தில் நேரடித் தொல்லை இல்லை.

இவ்வாறாக பாண்டிய பல்லவர்கள் இல்லையாயினும் உதயமாகும் ஒரு அரசிற்குத் தேவையான அனைத்துத் தலைவலிகளும் சோழர்களுக்கு இருந்தன. நண்பர்களை விட பகைவர்களே அதிகமிருந்தனர்.

அரச குடும்பத்தை நோக்குங்கால், சுந்தர சோழர் நேரடியாக போர்களில் பங்கேற்கவில்லை. அருள்மொழிவர்மன் இளைஞன். மதுராந்தகனான உத்தமனும் போர்களில் பங்கெடுக்க வில்லை. வீரத்தைக் காட்டி எதிரிகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய ஒரே அரச வாரிசு ஆதித்த கரிகாலன் மட்டுமே. வீர பாண்டியனைக் கொன்றதுடன் ராஷ்டிர கூடர்களைத் தடுத்து நிறுத்தும் தன்மையும் பெற்றிருந்தான். மேலும் யுவராஜனாக பட்டமேற்றுக்கொண்டதால் சுந்தர சோழனுக்குப் பிறகு அவன் ஆட்சியில் எதிரிகள் நிலை மேலும் மோசமாகலாம் என்ற நிலை இருந்தது.


இவைதான் பின்னணி. இந்தப் பின்னணியில் பார்க்கும் போது சோழர்களின் வளர்ச்சியை விரும்பாதவர்களுக்கு முதல் குறி ஆதித்த கரிகாலன் தான் என்பது தெள்ளத் தெளிவாக விளங்கும்.

3. குற்றம் சாட்டப் பட்டோரும் அவர்களது குறிக்கோள்களும் (The Accused and motiffs)

குற்றம் சாட்டப்பட்டோரை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. குந்தவை, அருள்மொழிவர்மன், வந்தியத்தேவன்
2.உத்தம சோழன் மற்றும் சிற்றரசர்கள்
3. பாண்டிய ஆபத்துதவிகள்

ராஷ்டிரகூடர்கள் வலிமையாக இருந்ததால் ஆதித்த கரிகாலனே ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆகவே அவர்கள் விலக்கப் படுகிறார்கள். இப்போது ஒவ்வொருவராகப் பார்ப்போம்.


4. குந்தவை கூட்டாளிகள்

குந்தவை சோழ நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்ற எண்ணத்தில் இருக்கிறாள். தன் சொல் படி நடக்கும் தம்பி அருள்மொழிவர்மனைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறாள். தன் காதலர் வந்தியத்தேவனை உன்னதப் பொறுப்பில் நிறுத்தி ஆட்சி அதிகாரத்தைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறாள். தன்னுடைய தோழியை தன் தம்பிக்கு மணமுடிக்கிறாள். இவற்றால் சோழ தேசத்தின் அரியணையை ஆட்டுவிக்க எண்ணுகிறாள். இவையனைத்தும் பொ.செ.வில் கூறப்பட்டவைகள்.

உண்மையில் நடந்தது என்ன? குந்தவை மிகப் பெரிய செல்வாக்குடன் விளங்கியிருக்கிறாள் என்பது தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டொன்றைப் பார்த்தால் தெரியவரும். கோவில் கட்ட நிதியளித்தவர்கள் பட்டியலைப் பற்றி ராஜராஜன் எழுதியிருக்கும் கல்வெட்டில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது,

'நாம் குடுத்தனவும், நம் அக்கன் குடுத்தனவும்...' என்று ஆரம்பித்து அனைவரது பெயரும் இடம்பெறும். இதிலிருந்து தமக்கு அடுத்தபடியாக தமக்கையின் பெயரைச் செதுக்கியிருக்கிறார் ராஜராஜர். அது கூட தான் அரசர் என்பதால் முதலில் தன் பெயரை எழுதியிருக்கிறார். இல்லையென்றால் முதலில் தமக்கையின் பெயரைத்தான் எழுதியிருப்பார்.

ஆகவே அவள் ராஜராஜன் காலத்தில் மிகப்பிரசித்தி பெற்றிருந்தாள் என்பது உண்மை. ஆனால் தன் தமையனைக் கொலை செய்ய முன் வந்தாளா? தமையனை எதற்காகக் கொலை செய்யவேண்டும்? அவன் வீரத்தில் சிறந்தவன். சோழப் பேரரசை நிறுவ அனைத்து விதத்திலும் தகுதியானவன். தமக்கை சொல் கேளாதவன் என்ற நிலை பொ.செ.வில் எடுக்கப்பட்டதே ஒழிய உண்மை நாமறியோம். வந்தியத் தேவனுக்கும் ஆதித்தனுக்கும் மோதல் ஏற்படக்கூடிய சூழல் இருந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் வந்தியத் தேவன் ஆதித்தன் இருந்த தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தவன். மேலும் அதுவரையிலோ, அதற்குப் பிறகோ சகோதரக் கொலை என்பது தமிழரசர்களின் வரலாற்றில் இல்லாதவொன்றாக இருக்கிறது.

அருள்மொழிவர்மன் இலங்கை சென்றதற்கான ஆதாரங்கள் இல்லை. அது பொ.செ.வில் கூறப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு, அதாவது உத்தம சோழன் ஆட்சிக்காலத்தில் தான் அருள்மொழிவர்மனின் படையெடுப்புகள் நிகழ்ந்துள்ளன. உத்தமன் சந்ததியில்லாமல் இறந்தபிறகே அருள்மொழி ஆட்சிக்கட்டில் ஏறியுள்ளான்.



5. உத்தம சோழன் கூட்டாளிகள்

'தி ஹிஸ்டரி ஆஃப் சவுத் இந்தியா'வில், திரு.கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார், 'Uthama conspired the assasination of Athitha' என்று சொல்கிறார். ஏனெனில் வாரிசுரிமைப் படி அவன் தந்தை கண்டராதித்தனுக்குப் பிறகு முடி சூட வேண்டிய உத்தமன் யுவராஜனாகக் கூட தெரிவு செய்யப் படவில்லை. பொ.செ.வில் சுந்தர சோழன் எவ்வாறு அரியணை ஏறினான் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. கண்டராதித்தன் இறந்துவிட, அவருடைய தம்பி அரிஞ்சயனும் இறந்து விட அவரது மகன் சுந்தர சோழன் அரியணை ஏறுகிறான். ஆனால் பொ.செ.வில் குறிப்பிட்டுள்ளது போல் சுந்தர சோழனும் அவன் சந்ததியருமே அரசாள வேண்டும் என்ற எந்தவொரு திட்டமும் இல்லை. இது கதையை நகர்த்துவதற்காக கல்கி கையாண்ட முறை.

ஆகவே, உத்தமனுக்கு வழமையாகச் சேரவேண்டிய அரசுரிமை அவன் வயதிற்கு வந்த பின்பும் அவனிடம் சேர்க்கப்படாமல் ஆதித்தனை யுவராஜனாக முடிசூட்டியது கண்டிப்பாக கோபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இது நடு நிலையான சிற்றரசர்கள் மத்தியில் கூட சலசலப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.

அதுவரை போரைச் சந்தித்திருக்காத ஒரு நபர். போரில் பல வெற்றிகளைக் குவித்து ராஷ்டிரகூடர்களைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கும் மற்றொரு நபர். எதிரிகள் முழுமையாக முறியடிக்கப்படாத நிலையில், இவ்விருவரில் உரிமைப் போர் என்ற பெயரில் முதல் நபரைத் தேர்ந்தெடுத்தால் எதிரிகளின் தொல்லையை அனுபவிக்கப்போவது உத்தமனல்ல இந்தச் சிற்றரசர்கள்தான்.


6. பாண்டிய ஆபத்துதவிகள்

வீரபாண்டியன் காலத்தில் பாண்டியர்கள் தலையெடுக்க ஆரம்பித்தார்கள். இலங்கை அரசனின் உதவியும் இருந்தது. ஆனால் ஆதித்த கரிகாலனால் வீரபாண்டியன் கொல்லப்பட்டவுடன் பாண்டியத் தலையெடுப்பில் ஒரு தொய்வு ஏற்பட்டது. ஆபத்துதவிகளும், வேளக்காரர்களும் அரச மெய்க்காப்பாளர்கள் என்ற செய்தி உறுதி படுத்தப்பட்டிருக்கிறது. தாங்கள் இருந்தும் தங்கள் தலைவர் மரணமடைந்ததை எந்தவொரு ஆபத்துதவியாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எதிரியே இல்லாத நிலையை விட பலமில்லாத எதிரி என்பவன் உபயோகமானவன். ஆகவே மொத்த சோழகுலத்தை அழிப்பதற்குப் பதில் ஆணிவேராக உருவெடுத்துக் கொண்டிருக்கும் ஆதித்தனை அழித்துவிட்டால் ஆட்டம் கண்டுவிடும் என்பதே ஆபத்துதவிகளின் கணக்கு. அவர்களின் எண்ணத்தில் எவ்விதத்தவறுமில்லை.


7. கிடைத்த ஆதாரங்கள் (Evidences available)

இந்த ஆதித்தன் கொலைவழக்கில் கிடைத்த ஒரே ஒரு ஆதாரம் உடையாளூர் கல்வெட்டுக்கள். இந்தக் கல்வெட்டுகள், ஆதித்தனைக் கொன்ற குற்றத்திற்காக ரவிதாசன் ஆகியோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப் படுவதுடன் அவர்கள் உறவினர்கள் உட்பட அனைவரையும் தேசப்ப்ரஷ்டம் செய்வதாகவும் உத்தரவு உள்ளது.

இது நேர்மையான விசாரணையின் முடிவாக இருக்குமா என்ற கேள்வி எழலாம். ஆனால் சோழ தேசத்தின் நிர்வாகச் சீர்திருத்தங்கள், வழக்கு விசாரணை அமைப்புகள் ஆகியவற்றைக் குறித்த கல்வெட்டுகளை வைத்துப் பார்க்கும் போது நீதி நியாயமான முறையில் வழங்கப் பட்டிருப்பதைக் காணலாம்.


8. அனுமானமும் முடிவும் (Inference and Conclusion)

சகோதரக் கொலை செய்யுமளவிற்குத் தமிழரசகுலத்தில் எந்த நிகழ்வுகளும் இல்லை, அவர்களின் தரம் தாழ்ந்துவிடவில்லை என்ற அடிப்படையில் குந்தவையும் மற்றவர்களும் இந்தக் கொலையில் சம்பந்தப் பட்டிருக்க வாய்ப்பில்லை.

உத்தம சோழனுக்கும், சிற்றரசர்களுக்கும் ஆதித்தனின் மறைவால் ஏற்படும் இழப்பு மிக அதிகம். அப்போதுதான் வளர்ந்து கொண்டிருக்கின்ற ஒரு பேரரசின் கீழ் இருக்க விரும்பும் சிற்றரசர்கள் நல்ல தலைமையையே விரும்புவார்கள். மேலும், ஆதித்தன் இறந்தவுடன் உத்தமன் 'Stop Gap arrangement' முறையில் அரசாண்டிருக்கிறான். ஆகவே உத்தமனுக்கும் இதில் சம்பந்தமிருக்க வாய்ப்பில்லை.

ஆபத்துதவிகளின் நோக்கமும் செயலும் இயல்பானவை மற்றும் காலத்துடன் இயைந்தவை. தன் மன்னனைக் கொன்றவனைக் கொல்வது இயல்பேயன்றி வேறில்லை. ஆகவே ஆபத்துதவிகள் கொன்றிருப்பார்கள் என்பதுடன் அவர்களுக்கு உதவிய சோழதேசத்தினனான ரவிதாசன் மற்றும் கூட்டாளிகளும் தண்டிக்கப் பட்டுள்ளார்கள் என்பது நேரியல் முடிவிற்கு வர ஏதுவாக இருக்கிறது.

எனவே ஆதித்தனைக் கொன்றது பாண்டிய ஆபத்துதவிகள்தான் என்பதை மறுதளிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை.


9. மீதமிருக்கும் கேள்விகள் (Unanswered Questions)

1. உத்தமன் அரியணை ஏறிய பின் சந்ததியின்றி போகக் காரணமென்ன?
2.வந்தியத் தேவனின் 'லோ ப்ரொஃபைல்' ஏன்?
3. குந்தவையின் 'சுப்ரீமசி' ஏன்?
4. ராஜராஜனுக்குப் பிறகு ராஜேந்திரன் தஞ்சையை விட்டு கங்கை கொண்ட சோழபுரம் சென்றது ஏன்?

மேலும் பல கேள்விகளும், உங்கள் கருத்துகளும் வரவேற்கப் படுகின்றன.