Friday, November 14, 2008

பணவீக்கம் - ஒரு அறிமுகப் பதிவு

பணவீக்கம் (Inflation) 8.98% ஆகக் குறைந்தது. இது செய்தி. ஆனால் விலைவாசி எதுவும் குறைந்ததாகத் தெரியவில்லையே. இதற்குப் பணவீக்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

பணவீக்கம் என்றால் என்ன?

பணவீக்கம் என்பது கன்ஸ்யூமர் ப்ரைஸ் இன்டெக்ஸ்(CPI)-ல் ஏற்படும் மாற்றத்தின் அளவாகும். உதாரணமாக, இந்தியப் பொருளாதாரத்தின் முக்கியமான பொருட்கள் மற்றும் சேவைகளின் வெய்ட்டேஜ் சேர்ந்து ஜனவரி 2007ல் 100 என்று வைத்துக் கொள்வோம். ஜனவரி 2008ல் அது 105 ஆக உயர்ந்தால், பணவீக்கம் 5% என்று அர்த்தம். (105-100/100). இதுவே, ஜனவரி 2009ல் 108 ஆக உயர்ந்தால் பணவீக்கம் 2.87% (108-105/105) என்று அர்த்தம்.


மொத்தத்தில், பண வீக்கம் 5 சதவீதத்திலிருந்து, 2.87 சதவீதமாகக் குறைந்துள்ளது. நியாயமாகப் பணவீக்க விகிதம் குறைந்துள்ளதற்கு சந்தோஷப் படவேண்டும். ஆனால் சி.பி.ஐ 105 லிருந்து 108ஆக உயர்ந்துள்ளதைக் கவனிக்க வேண்டும். அதாவது, விலை கூடியுள்ளது, பணவீக்கம் குறைந்துள்ளது.

ஏதாவது ஒரு சில பொருட்களின் விலை குறையலாம். உதாரணமாக தற்போது, கச்சா எண்ணை மற்றும் உருக்கின் (ஸ்டீல்) விலை கணிசமாகக் குறைந்துள்ளன. ஆனாலும் மற்ற மக்கள் நேரடியாக உபயோகப் படுத்தும் பொருட்களின் விலை அதிகமாக ஏறி பணவீக்கத்தை ஒரு அளவில் வைத்துள்ளது.

உண்மையில் பணவீக்கம் குறைவதால் விலைகள் குறைவதில்லை. விலையேற்றத்தின் வேகம் தான் குறைகிறது. உதாரணமாக நீங்கள் வண்டியில் 60 கி.மீ. வேகத்தில் செல்கிறீர்கள். திடீரென்று வேகத்தை 40 கி.மீ.க்குக் குறைக்கிறீர்கள். இதனால் வண்டியின் வேகம் குறைகிறதே ஒழிய, வண்டி பின்னோக்கிச் செல்லவில்லை அல்லவா. இது போலத்தான் பண வீக்கமும், விகிதம் குறையும் போது விலையேற்றத்தின் வேகம் குறைகிறதே தவிர விலை குறைவதில்லை. விலையேற்றத்தின் வேகம் ஏறும் போது, பணவீக்கமும் அதிகரிக்கிறது.

பணவீக்கம் எதனால் வருகிறது?

பண வீக்கம் கீழ்கண்டவாறு வரலாம்.

1. தேவை - தட்டுப்பாடு:- இது ஒரு முக்கியக் காரணி. ஒரு குறிப்பிட்ட பொருளுக்குத் தேவை அதிகரிக்கும் போதோ, தட்டுப்பாடு ஏற்படும் போதோ, விலையேற்றம் தவிர்க்க முடியாதது. இது சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படை. கட்டுப் படுத்தப் பட்ட பொருளாதாரத்தில் இதன் தாக்கத்தை உணர முடியாது. பதுக்கல், கள்ளச் சந்தை ஆகிய வற்றால் தட்டுப் பாட்டை உருவாக்க முடியும்.

2. மூலப் பொருட்களின் விலையேற்றம்:- ஒரு பொருள் தயாரிக்கத் தேவைப் படும் மூலப் பொருட்களின் விலை ஏறும் போது, அந்த விலையேற்றத்தை அப்படியே நுகர்வோருக்கு மாற்றுவதுதான் உற்பத்தியாளர்களின் வாடிக்கை. இதன் மூலமாக விலை ஏறி பணவீக்கம் அதிகரிக்கும்.

3. அடிப்படை விலையேற்றம்:- காலப் போக்கில் சாதாரணமாக ஒரு பொருளுக்கு வருடாவருடம் எது நிகழ்ந்தாலும் நிகழாவிட்டாலும் விலையேற்றுவது என்பது ஒரு வாடிக்கையாக இருக்கும். இது தொழிலாளர் ஊதிய உயர்வு, நிர்வாகச் செலவு, லாப விகித அதிகரிப்பு ஆகிய காரணங்களுக்காக செய்யப்படுவது. இதுவும் விலையேற்றத்திற்கு அடிகோலுகிறது.

4. பணப் புழக்கம் அதிகரிப்பு:- இது மற்றுமொரு முக்கியக் காரணமாகும். மக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்கும் போது, வாங்கும் சக்தி அதிகரிக்கிறது. இதைப் பயன் படுத்தி விற்பவர்கள் அதிக விலைக்கு விற்று விடுகின்றனர். அல்லது விற்பவர்கள் அதிக விலை உள்ள பொருட்களையே சந்தையில் வைக்கின்றனர். உதாரணமாக, சென்னையில் இருந்து, திருச்சிக்கு அரசுப் பேருந்தில் சாதாரண கட்டணம் 105 ரூபாய். சொகுசுப் பேருந்தில் 175 ரூபாய். குளிர்சாதனப் பேருந்தில் 275 ரூபாய். இவை அனைத்தும் அரசுப் பேருந்து கட்டணங்கள். இப்போது பார்த்தீர்களானால், சொகுசுப் பேருந்துகள் தான் அதிகமாக இயக்கப் படுகின்றன. சாதாரணப் பேருந்துகளின் பராமரிப்பு சரியாக இல்லாத காரணத்தால் அவற்றில் மக்கள் பயணிப்பதும் குறைவாக இருக்கிறது. சொகுசுப் பேருந்தில் பயணிப்பதற்குப் பெரும்பாலோர் தயங்குவதில்லை. இதனால் ரூ.105 ஆக இருந்த போக்குவரத்துச் செலவு, ரூ.175 ஆக அதிகரித்து விட்டது.

மற்றொன்று, ஆட்டோ கட்டணம். முன்பு ஒரு விவாதம் வந்தது போல், ஐ.டி. துறையில் பணியாற்றும் நண்பர்கள், எவ்வளவு கட்டணம் கேட்டாலும் கொடுத்துவிடத் தயாராக இருந்தார்கள். (இப்போது எப்படி என்று தெரியவில்லை). ஏனெனில் அவர்களிடத்தில் இருக்கும் பணப் புழக்கம் காரணமாக, 50 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கும் பெரிய வித்தியாசத்தை அவர்களால் காணமுடிவதில்லை. இது மறை முகமாக விலையேற்றத்திற்கு அடிகோலுகிறது. இதை மற்ற விஷயங்களான, காய்கறிகள், வீட்டு வாடகை முதலியவற்றிற்கும் சுட்டிக் காட்டலாம். பெரும்பாலும், கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்லும் போது (ஐ.டி, ஃபைனான்ஸ், கன்சல்டிங் முதலான துறைகளில்), செலவு செய்வதைப் பற்றி கவலையே படுவதில்லை. பேரமும் பேசுவதில்லை. இதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

5. கள்ளப் பணம் / கருப்புப் பணம்:- பணப் புழக்கத்தைக் கட்டுப் படுத்த பாரத ரிசர்வ் வங்கி, பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும். வங்கிகளின் மூலமாகத்தான் பணம் மக்களிடத்தில் நடமாடுகிறது என்பதால், வங்கிகளின் சி.ஆர்.ஆர். போன்றவற்றை அதிகப் படுத்தி, பணப் புழக்கத்தைக் குறைக்கும். ஆனால், கள்ளப் பணம் உலாவுவதால், பணப் புழக்கம் அதிகமாக இருப்பது போன்ற நிலை ஏற்படுகிறது. இதே போலத்தான் கணக்கில் வராத கருப்புப் பணமும். ரிசர்வ் வங்கியின் வட்டத்திற்குள் வராத இவ்விரண்டு வகைகளும் விலையேற்றத்திற்குக் காரணிகளாக அமைந்து விடுகின்றன.

அரசு ஊழியர்களுக்கு விலையேற்றத்திற்கு ஏற்ற வாறு அகவிலைப் படி (டி.ஏ.) உயர்த்தி அளிக்கப் படுகிறது. தற்போது கூட 7% உயர்வு அறிவிக்கப் பட்டுள்ளது.

பணவீக்கம் நல்லதா கெட்டதா? பணவீக்கத்தின் போது பணத்தின் மதிப்பு என்ன? முதலீடும் குறைந்து, பண வீக்கமும் அதிகரிக்கும் போது நமது சேமிப்பின் கதி என்ன?

இவற்றைப் பற்றி விரிவாக அடுத்த பதிவில்.

முடி(அறி)வுரை:- உங்கள் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்.

19 comments:

குடுகுடுப்பை said...

//உங்கள் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும். //

நல்ல அறிவுரை, இந்த பணவீக்கத்துக்காகத்தான் ஸ்டாக்ல போட்டேன். எல்லாம் காலி. ஆனாலும் பரவாயில்லை. என்னுடைய இழப்பு இன்னொருவனுக்கு லாபம்.

Anonymous said...

its Really a good article ... Thanks for giving Basics about the inflation

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இதனால் வண்டியின் வேகம் குறைகிறதே ஒழிய, வண்டி பின்னோக்கிச் செல்லவில்லை அல்லவா.


அப்ப எல்லாம் பிரமைதானா?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பெரும்பாலும், கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்லும் போது (ஐ.டி, ஃபைனான்ஸ், கன்சல்டிங் முதலான துறைகளில்), செலவு செய்வதைப் பற்றி கவலையே படுவதில்லை.///


????????

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பணவீக்கம் நல்லதா கெட்டதா?




தெரியலயயேப்பா

Sathis Kumar said...

பண வீக்கம் தொடர்பாக பல விடயங்களைத் தெளிவுப்படுத்தியுள்ளீர்கள். பணவீக்க தொடர் பகுதி 2-ஐ வெகுவிரைவில் எதிர்ப்பார்க்கிறேன்..

முரளிகண்ணன் said...

இதை தொடருங்கள். உபயோகமாக உள்ளது

CA Venkatesh Krishnan said...

//
குடுகுடுப்பை சொன்னது…
//
வருகைக்கு நன்றி குடுகுடுப்பை.

சேமிப்பு வேறு, முதலீடு வேறு. இதைப் பற்றியும் எழுதுவேன்.

தொடர்ந்து வாங்க.

CA Venkatesh Krishnan said...

//
Vinod சொன்னது…
its Really a good article ... Thanks for giving Basics about the inflation
//

Thanks vinod

CA Venkatesh Krishnan said...

//
SUREஷ் சொன்னது…
//

வாங்க சுரேஷ்,

பணவீக்கம் நாயகன் மாதிரிதான் ஒரு சாராருக்கு நல்லது. மற்றவருக்குக் கெட்டது.

CA Venkatesh Krishnan said...

//
சதீசு குமார் சொன்னது…
//

நன்றி சதீசுகுமார்,

பகுதி இரண்டு, விரைவில்.

CA Venkatesh Krishnan said...

//
முரளிகண்ணன் சொன்னது…
இதை தொடருங்கள். உபயோகமாக உள்ளது
//
நன்றி முரளிகண்ணன்

☀நான் ஆதவன்☀ said...

//உண்மையில் பணவீக்கம் குறைவதால் விலைகள் குறைவதில்லை. விலையேற்றத்தின் வேகம் தான் குறைகிறது//

அட அப்படியா?

http://urupudaathathu.blogspot.com/ said...

தகவல்களுக்கு மிக்க நன்றி ..

http://urupudaathathu.blogspot.com/ said...

ஹி ஹி இன்னும் படிக்கல..
படிச்சுட்டு வரேன் ..

Vidhya Chandrasekaran said...

எளிமையான நடையில் நல்ல விரிவாக எழுதியிருக்கீங்க.

CA Venkatesh Krishnan said...

//
நான் ஆதவன் சொன்னது…
//

மிக்க நன்றி ஆதவன்.

//
அட அப்படியா?
//

ஆமாம் அப்படித்தான்.:)

CA Venkatesh Krishnan said...

//
உருப்புடாதது_அணிமா சொன்னது…
தகவல்களுக்கு மிக்க நன்றி ..
//

ஹி ஹி இன்னும் படிக்கல..
படிச்சுட்டு வரேன் ..
//

என்ன அணிமா. குழப்பறீங்களே.

CA Venkatesh Krishnan said...

//
Vidhya C சொன்னது…
எளிமையான நடையில் நல்ல விரிவாக எழுதியிருக்கீங்க.
//

ரொம்ப நன்றி வித்யா,

தொடர்ந்து வாங்க.