அத்தியாயம் 15 - மாதவன் சொன்ன சக்கரவியூகம்
ப்ரதானாசாரியாரின் முக்கிய சீடனான மாதவன் பல்வேறு திருத்தலங்களுக்கு யாத்திரை செய்துவிட்டு ஸ்ரீரங்கத்தை அடைந்தான். அங்கு ரங்க நாதனை சேவித்துவிட்டு வேதாந்த தேசிகரின் மடத்திற்குச் சென்றான். அப்போது தேசிகர் அருகிலுள்ள திருப்பதிகளுக்குச் சென்றிருந்தாராதலால் உடனே தரிசிக்க முடியவில்லை. அவர் வருவதற்கு சில நாட்களாகலாம் என்ற தகவல் அவனை சிந்தனைக்குள்ளாக்கியது. மார்கழித் திருவாதிரை நெருங்கிக் கொண்டிருந்தது. தில்லையில் மாணாக்கர்களுக்கு சக்கர வியூகத்தைப் பற்றி சொல்வதாக வாக்களித்திருந்தான். ப்ரதானாசாரியாரோ அதற்குமுன் தேசிகரை சந்தித்து அவரது கருத்தையும் கேட்கச்சொல்லியிருந்தார்.
சிறிய குழப்பமிருந்தாலும், தேசிகருக்காகக் காத்திராமல் தில்லைக்குச் செல்வது என்று முடிவெடுத்தான். ஒரு ஓலையில் தான் வந்த நோக்கத்தை எழுதி அவரது சேவகர்களிடம் சேர்த்துவிட்டு தில்லை நோக்கிப் புறப்பட்டான் மாதவன். அவன் சென்ற சில நாழிகைக்கெல்லாம் வந்து சேர்ந்தார் தேசிகர். சில காரணங்களால் அவரது திருப்பதிகளுக்கான யாத்திரையை பாதியிலேயே முடித்துக்கொள்ள வேண்டியதாயிற்று. மாதவனின் ஓலையைக் கண்டவர் 'சற்று தாமதித்திருக்கலாமே. ஹும் இறைவனின் திருவுளம் இவ்வாறிருந்தால் யார்தான் என்ன செய்யமுடியும். நடப்பவை நாரணன் செயல்' என்றெண்ணியவாறே மற்ற அலுவல்களைக் கவனிக்க முற்பட்டார்.
====
தில்லை. சைவர்களின் மூலக்கோவில். தமிழக சைவர்களின் ஆதி மதமாகிய சைவம் வேறு. ஆதிசங்கரர் நியமித்த ஷண்மதங்கள் எனப்படும் ஆறு மதங்களில் (சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், கௌமாரம், ஷௌர்யம்) இருக்கும் சைவம் வேறு. இவற்றுக்கிடையில் இருக்கும் வித்தியாசங்களை விட்டுவிட்டு, ப்ரபஞ்சத்தின் மூலாதாரமாக விளங்கும் தில்லையம்பலத்திற்குள் நுழைவோம்.
'உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்' என்று முதலடியாகவும் 'நின்றது எங்கும் நிலவி உலகெலாம்' என்று ஈற்றடியாகவும் கொண்ட பெரிய புராணம் அரங்கேறியது இத்தில்லையில்தான். சேக்கிழார் உலகெலாம் என்று துவக்கி உலகெலாம் என்று முடித்தது உலகெங்கும் நிறைந்தவன் இறைவன் என்ற அரும்பொருளை அழகாக எடுத்தியம்பியது போல் தோன்றுகிறதல்லவா?
அரியும் சிவனும் ஒண்ணு. அறியாதவர் வாயில் மண்ணு என்பது பழமொழி. ஆனால் அது எவ்வளவு பழைய மொழி என்பது தெரியவில்லை. ஸ்ரீரங்கத்தீவைப் போலவே தில்லையிலும் அரியும் சிவனும் ஒன்றாகவே இருக்கின்றார்கள். அங்கே தனித்தனி கோவில் கொண்டவர்கள் இங்கே ஒரே கோவிலுக்குள் சேர்ந்து இருக்கின்றார்கள். பிரித்தாள்வது என்பது அயல் நாட்டினர் நமக்குச் சொல்லித்தந்ததாகக் கூறுவர் சிலர். ஆனால் நாம் தான் அதைக் கண்டுபிடித்தோம் என்பதை ஒப்புக்கொள்ள மனம் வருவதில்லை பலருக்கு. சிவனாரும் அரனாரும் ஒன்றாக இருக்க அவர்களுக்கு மகிழ்ச்சிதான்.
ஆனால் ஒற்றுமை என்ற வார்த்தை வார்த்தையாகத்தான் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து ஒற்றுமையைக் குலைத்ததால், இடையில் கோவிந்தராஜர் தில்லைத் திருச்சித்திரகூடத்தை (தில்லை வைணவத்திருப்பதி இவ்வாறு குறிப்பிடப்படுகிறது) நீங்கியிருக்க வேண்டியதாயிற்று. இந்தக் கதை நடக்கும் காலத்தில் அவர் மீண்டும் தில்லையில் குடிகொண்டுவிட்டார்.
கோவில் செவ்வக வடிவிலிருந்தது. அரசர்கள் தொடர்ந்து திருப்பணி செய்தும் பொன் வேய்ந்தும் அந்தக் கோவிலின் புதுமை மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். சிற்சபை, பொற்சபை, இராசசபை, தேவசபை, நிருத்தசபை என்று ஐந்து சபைகளுடன் ஆதியந்தமில்லாத ஆனந்த நடனம் புரிபவராக சிவனார் இருக்க, அவர் நடனத்தை ரசித்தவாறு ஆனந்தசயனத்தில் ஈடுபட்டிருந்தார் அரியான கோவிந்தராஜர்.
ஆதிரை நட்சத்திரம் சிவனாருக்குகந்தது. ஆகவே அது திருவாதிரை ஆயிற்று. அதுவும் கடவுளர்க்குகந்த மார்கழித் திருவாதிரை சீரும் சிறப்புமாகக் கொண்டாடப் பட்டு வந்துள்ளது. நடராஜத் திருமேனி அன்று ஊர்வலம் வரும் நாள். அம்பலத்துள்ளேயே ஆடிக்கொண்டிருக்கும் எம்மான் அன்று வீதியிலும் ஆடும் நாள். அன்று தில்லை அல்லோலகல்லோலப்பட்டது என்றால் மிகையாகாது.
அத்தகைய தில்லையின் பெருமையை சொல்லவேண்டிய'தில்லை'. ஆகவே நமது நண்பர்களின் நடவடிக்கைகளைப் பார்ப்போம்.
====
அந்தப் பெருமை வாய்ந்த தில்லை நகரிலே பல்வேறு வகையான சத்திரங்களிருந்தன. அரசர்கள் முதல் ஆண்டிகள் வரை அனைவரும் வந்து செல்லவும் வருவோர் வயிறார உண்ணவும், உடலாற உறங்கவும் பற்பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அத்தகைய ஒரு சத்திரத்தின் விதானத்திலமைந்த ஒரு விசாலமான அறையில் குழுமியிருந்தனர் நமது நண்பர்கள். முறையே மாதவன், வீர பாண்டியன், இளவழுதி, வல்லாளன், கோப்பெருஞ்சிங்கன். அரிஹரனும் அவன் தம்பியும் வரவில்லை. மாதவன் நடுவில் வீற்றிருக்க அவனைச் சுற்றி அரைவட்டமாக அமர்ந்திருந்தனர் மற்றையோர்.
அவர்களுக்கு நடுவில் ஒரு வெள்ளைச் சீலை விரிக்கப் பட்டிருந்தது. அருகில் சில வண்ண மைக்கூடுகளும், தூரிகைகளும் வைக்கப்பட்டிருந்தன. ஏதோ தியானத்தில் அமர்ந்திருப்பவன் போல் இருந்தான் மாதவன். உண்மையில் தன் குருவை மானசீகமாக துதித்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரம் கழித்துக் கண் விழிக்க மற்றையோர் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு புன்முறுவலொன்றைப் பூத்தவாறே, 'நண்பர்களே, சொன்னவண்ணம் நாம் இங்கே குழுமிவிட்டோம். ஹரிஹரனும் அவன் சகோதரனும் வரவில்லை. இருந்தாலும் நாம் தொடர்வோம். நீங்களனைவரும் தில்லைத் தெய்வங்களைத் தொழுதுவிட்டீர்களா?'
'ஆம். நல்ல தரிசனம்.' என்றான் இளவழுதி. மற்றையோரும் அவனைப் போலவே சிலாகித்துப் பேசினர்.
'நண்பர்களே, நீங்களாக வாய்திறந்து கேட்கவில்லையாயினும் சக்கரவியூகத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் உங்கள் முகங்களில் தெரிகிறது. அந்த ஆவலைப் பூர்த்தி செய்யவே இங்கு வந்துள்ளேன். சில விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளும் போது பூர்வ பீடிகை மிக மிக அவசியமாகிறது. சக்கரவியூகமும் அதைப் போன்றதே. இது மிக மிக அபாயகரமானது அதே நேரத்தில் உபயோககரமானதும் கூட. இதைப் பயன்படுத்தும் விதத்தில் இருக்கிறது.
உதாரணத்திற்கு தீயை எடுத்துக் கொள்ளுங்கள். சமைக்கவும் பயன்படுத்தலாம். எரிக்கவும் பயன்படுத்தலாமல்லவா? ஆகவே ஒரு விஷயத்தின் மதிப்பு அதைப் பயன் படுத்தும் முறையில் உள்ளதே தவிர அந்த விஷயத்திலில்லை என்பதை நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும்.
இந்த சக்கரவியூகத்தை நல்ல வகையில்தான் பயன் படுத்துவோம் என்று முதலில் நீங்கள் அனைவரும் சர்வ சாட்சியாக உங்களது தர்மப்படி சத்தியம் செய்யுங்கள்.' என்று நிறுத்தினான்.
உடனே ஒவ்வொருவராக முன்வந்து 'முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக, பஞ்ச பூதங்கள் சாட்சியாக, தில்லை நாயகர்கள் சாட்சியாக இந்த சக்கரவியூகத்தை நன்மைக்காகவே பயன் படுத்துவேன். சத்தியத்தின் பக்கலில் எப்போதுமிருப்பேன்.' என்று கூறி வாளால் தன் கையில் கீறி ஒரு துளி ரத்தத்தை சிந்தினார்கள்.
'தற்போது நீங்கள் உங்கள் சத்தியத்தால் கட்டுப்பட்டிருக்கிறீர்கள். நானும் உங்கள் சத்தியங்களை நம்புகிறேன். உங்கள் வாக்கு மறைந்துவிட வில்லை. உங்களைச் சுற்றியே வந்து கொண்டிருக்கும். சத்தியம் செய்தவனை, முழுமையாகக் காப்பவனை சத்தியமே காக்கும். அதைத் தவறினால் சத்தியமே அவனை அழிக்கும். இதையும் நினைவில் கொள்ளுங்கள். நல்லது. சக்கரவியூகத்தை நீங்கள் அறிந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது. இப்போது இந்த சீலையில் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள்.' என்று கூறிய மாதவன் அந்த சீலையில் அரை நாழிகைப் பொழுதுக்கு எதையோ வரைந்தவண்ணம் இருந்தான். முடிந்தபின்,
'நண்பர்களே. சக்கரவியூகம் என்பது ஒரு படை அமைப்பு. இதை விளங்கிக் கொள்ள சில கேள்விகளைக் கேட்கிறேன். உங்களுக்குத் தெரிந்த பதிலைச் சொல்லுங்கள். வியூகம் ஏன் அமைக்க வேண்டும்'
உடனே கோப்பெருஞ்சிங்கன் 'வியூகமென்பது நீங்கள் சொன்னது போல் போர்க்களத்தில் படைகளை நிறுத்திடும் முறை. இதனால் நம் படைகளுக்கு சேதம் குறைவாகவும் எதிரிப்படைகளுக்கு சேதம் அதிகமாகவும் இருக்கும். நல்ல வியூகத்தில் வெற்றி எளிதாகும்'
'நன்று நன்று. அதே எண்ணம் எதிரிக்கும் இருக்குமல்லவா? நம்மைப் போன்றே சிறந்த வியூகத்தை எதிரி அமைத்தால் என்ன செய்வீர்கள்?'
போர் பற்றி ஏட்டறிவு மட்டுமே இருந்த கோப்பெருஞ்சிங்கனால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. வல்லாளன் தொடர்ந்தான். 'நம் திறமையின் அளவு எதிரியின் திறமையைப் பொறுத்தே அமைகிறது. திறமையான எதிரி நிச்சயம் நல்ல வியூகம் அமைப்பான். ஆனால் வியூகத்தை அமைப்பதை விட முக்கியமானது அந்த வியூகத்தை முறியடிப்பது. ஆகவே நமது வியூகத்தை எதிரியின் வியூகம் முறியடிக்கப்படும் விதத்தில் அமைத்திடல் வேண்டும்.'
'அருமையாகச் சொன்னாய் வல்லாளா. உன் பாட்டனாரும் தந்தையும் அதிகமான போர்களில் ஈடுபட்ட காரணத்தால் உனக்கு இந்தத் தெளிவு இருந்திருக்க வேண்டும். ஆக வியூகம் அமைப்பதை விட முக்கியமானது அதை முறியடிக்கும் திறமை. அப்படி முறியடிக்கும் எண்ணம் எதிரிக்கும் இருக்குமல்லவா? அதற்கு என்ன செய்யவேண்டும்?'
வல்லாளனும் யோசிக்க ஆரம்பித்தான். இளவழுதிக்கு தேன்மொழி சொன்னது நினைவிற்கு வந்தது. 'முறியடிக்கப்படக் கூடியது என்று மேலுக்குத் தோன்றும் வகையில் ஒரு வியூகத்தை அமைத்து எதிரி நம் வியூகத்தை அழிக்க வரும்போது சட்டென்று மாறக்கூடிய வகையில் வியூகம் அமைத்திட வேண்டும். இந்த விதமான வியூக மாற்றம் தளபதிக்கும், வியூகத்தின் கேந்திரங்களில் தலைமையேற்கும் சில உபதளபதிகளுக்கும் மட்டுமே தெரிந்திருக்க வேண்டும். என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும். அதற்கான சமிக்ஞைகள் எப்படி இருக்கும் என்பதை இவர்கள் மட்டுமே அறிந்திருக்க வேண்டும். இப்படி செய்யும் போது திறமையான எதிரியையும் வீழ்த்திவிடலாம்'
இளவழுதியின் இந்த விளக்கம் குழுமியிருந்தோரிடையே மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. புரிந்து கொண்டதற்கு அடையாளமாக பலமாகத் தலையசைத்தனர்.
'அற்புதம். இளவழுதி. இதை நீ இடையில் யாரிடமோ கற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் இது நம் குருகுலத்தில் யாருக்கும் கற்றுத்தரப்படுவதில்லை. சற்றேறக்குறைய சக்கரவியூகத்தின் முதல் பகுதியை நீ சொல்லிவிட்டாய். சரி. இதெல்லாம் நாம் எதிரியை விட சற்று திறமையானவர்கள் என்ற எண்ணத்தில் கூறப்பட்டவை. எதிரி நம்மை விட வலுவானவன். அனைத்து வியூக அமைப்புகளையும் அறிந்தவன். சட்டென்று வியூகங்களை மாற்ற வல்லவன் என்று வைத்துக் கொள்வோம். அப்போது வெற்றிபெற என்ன செய்யவேண்டும்?'
ஒருவருக்கும் விடை தெரியவில்லை. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டவர்கள், மொத்தமாக மாதவனை நோக்கினார்கள். அவனும் புன்னகைத்தவாறே
'நல்லவேளை. இதற்கு யாரும் விடையளிக்கவில்லை. அளித்திருந்தால் என் விளக்கம் மேலும் தேவைப்பட்டிராது. நண்பர்களே, இந்த கேள்விதான் சக்கரவியூகத்தின் அடிப்படை. சரியான சக்கரவியூகத்தின் மூலம் எத்தகைய எதிரியையும் அழித்துவிடலாம். ஒருவேளை இரு தரப்பும் சக்கரவியூகம் அமைத்திட்டால் அனைவருக்கும் அழிவுதான். ஆகவேதான் சக்கரவியூகத்தைப் பற்றி ஆசாரியார் முழுமையாகச் சொல்லவில்லை. இதற்கான குறிப்புகள் எந்த சாத்திரத்திலும் இல்லை. செவிவழியாகவே அறியப்பட்டு வந்துள்ளது. பாரதப் போருக்குப் பிறகு சக்கரவியூகத்தை யாரும் பயன் படுத்தவில்லை. ஆனால் இப்போது முதல் பயன்படுத்த நேரிடலாம்.' என்று நீர் அருந்துவதற்காக சிறிது நிறுத்தினான். அதையே யாராலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
'முக்கியமாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, சக்கர வியூகம் போர்க்களத்தில் மட்டும் வைக்கப்படும் வியூகமன்று. அதைப் போர்க்களத்தில் பிரயோகிக்க வேண்டுமென்றால் அதற்கான ஆரம்பம் வெகு காலத்திற்கு முன்னமே இருக்க வேண்டும். எவ்வளவு காலத்திற்கு முன் துவங்குகிறதோ அவ்வளவு வீச்சு அந்த வியூகத்தில் இருக்கும். போர் நிலை சக்கரவியூகம், பொது நிலை சக்கர வியூகம் என இரண்டு வியூகங்கள் இருக்கின்றன. இரண்டும் இயைந்தவாறு ப்ரயோகம் செய்யப்பட வேண்டும். இல்லையேல் அது அமைத்தவருக்கெதிராகத் திரும்பிவிடும் அபாயமுள்ளது. முதலில் போர் நிலை சக்கர வியூகத்தைப் பார்ப்போம். இந்த சீலையைப் பாருங்கள்' என்று சொன்னதும் அனைவரும் அந்தச் சீலையின் ஓவியத்தில் கவனத்தைச் செலுத்தினர்.
பிறைச்சந்திர வடிவத்தில் இருந்தது அந்த ஓவியம். இரு பக்கத்தில் இரண்டு புள்ளிகள் இருக்க அவற்றை இரு கோடுகள் பிறை நிலா போல் இணைத்தன. ஆங்காங்கே சிற்சில வடிவங்களும், குறிகளும் இருந்தன.
'நண்பர்களே, இதுதான் சக்கர வியூக அமைப்பு. அடிப்படை அமைப்பு. ஆனால் கருட வியூகம் போலவும், படுத்திருக்கும் சர்ப்ப வியூகம் போலவும் முதலில் அமைத்து எதிரிகளைப் புகவிட்டு சக்கர வியூகமாக மாற்றிக்கொள்ளலாம். இங்கே பாருங்கள். பிறையின் இரு முனைகள் இருக்கின்றன. அதிலிருந்து இரண்டு வரிசைகள் அடுத்த புள்ளியை நோக்கி நகர்கின்றன. ஒன்று வெளி ஆரமாகவும், மற்றொன்று உள் ஆரமாகவும் இருக்கிறது. வெளி ஆரத்தின் நடுவில் படைத்தலைவன் இருக்க வேண்டும். அவன் முன் இருக்கும் உள் ஆரம் சற்று தளர்ந்து இருக்க வேண்டும். ஆரம் நடுவில் வலுவாகவும் விளிம்புகளில் இலகுவாகவும் இருக்கவேண்டும். அதாவது நடுவில் யானைகளை நிறுத்தி ஓரங்களில் குதிரைகளை நிறுத்த வேண்டும். இடையில் காலாட்படை இருக்க வேண்டும். ஏதாவது சந்தேகங்களிருந்தால் கேளுங்கள்.'
மாதவன் சொல்வதை கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள் 'நீங்கள் முழுமையாக முடித்து விடுங்கள். பிறகு சந்தேகங்கள் இருந்தால் கேட்கிறோம்' என்றான் வீர பாண்டியன். மற்றவர்களும் ஆமோதித்தார்கள்.
' அவ்வாறே ஆகட்டும். இதுவரை நீங்கள் தெரிந்து கொண்டது வியூகம் அமைக்கும் முறை. அடுத்து வியூகம் நடத்தும் முறையைப் பார்ப்போம்.'
(தொடரும்)
10 comments:
.
பலே பல்லவா!!!
என்னடா இது சக்கர வியூகம்-னு ஒரு சரித்திர தொடரா? என்னதான் பல்லவரு கயிறு திரிசிருக்காருனு படிக்க அரம்பிச்சேம்பா...
150 நிமிடம் 15 அத்தியாயமும் முடிந்தது...
கதை புனைந்த விதம், கேரக்டர்களின் எண்டரி, அத்தியாயங்களாக பிரிச்சது எல்லாமே அருமை...
அது என் சார் நான் படிக்க ஆரம்பிச்ச 15 ஆவது வாரம் சக்கர வியூகத்தை பற்றி சொல்ல ஆரம்பிச்சதோட நிறுத்திடீங்க... இன்னும் ஒரு வாரம் ஆகுமா இன்னும் கொஞ்சம் தெரிய..
முயற்சிக்கு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி வாழவந்தான்!!!
Hai,
After a month I am reading this.
SUPER.
suba.
ஹும்,.அப்புறம்
நன்றி சுபா, தொடர்ந்து வாங்க. கருத்துக்களைச் சொல்லுங்க.
//
நசரேயன் கூறியது...
ஹும்,.அப்புறம்
//
நன்றி நசரேயன்.
இது என்ன ரியாக்ஷன்???
wow...சூப்பர் பல்லவன். சக்கர வியூகத்தை சொல்லிவருவதை படிக்கும்போது ஆவல் கூடிகொண்டே வந்தது. முடிக்கும் போதும் அது குறையாமல் முடித்திருப்பது அருமை.
ஆனால் அந்த ஓவியம் மனதில் நிற்க மறுக்கிறது. முடிந்தால் ஒரு ஓவியமாக வரைந்து அடுத்த பகுதியில் வெளியிடுங்கள்.
Thanks for your comments and suggestion aadhavan.
I will try to post the drawings of chakra vyuham.
Post a Comment