Wednesday, December 17, 2008

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர்...10

அத்தியாயம் 10 - வல்லாளனின் மாற்றம்

'என்ன என்னுடன் மதுரைக்கு வருகிறாயா? நடக்கிற காரியமா?' வீர பாண்டியன் சந்தேகத்துடன் வினவினான், உள்ளூர அவள் வரவேண்டும் என்ற ஆசையுடன்.

'அன்பரே, இப்போது என் தந்தையின் எண்ணம் தமிழகத்தில் மாலிக் கஃபூரை வர விடாமல் தடுப்பது. நமது எல்லோருடைய எண்ணமும் அதுதான். அதே போன்று, நீங்கள் மதுரை அரியணையேற வேண்டும் என்பதும் அனைவரது விருப்பம். இவையெல்லாம் நடக்க வேண்டுமென்றால் சிலவற்றைச் செய்துதானாக வேண்டும். ஒற்றாடல் என்பது இந்தச் சமயத்தில் மிக அவசியமானதொன்றாகிறது. திருவள்ளுவர் இதைப் பற்றி ஒரு அதிகாரத்தையே எழுதிவைத்து விட்டுப் போனாரல்லவா? ஆகவே நான் மதுரையில் ஒற்றாடப் போகிறேன். என் தந்தையும் ஒப்புக் கொள்வார்" என்றாள் மந்தகாசத்துடன்

****

திருவரங்கம் சென்ற இளவழுதி, அந்தத் தீவின் அழகில் சொக்கிப் போய் நின்றான். கார்காலம் துவங்கிவிட்டதால் காவிரியும் கொள்ளிடமும் இருகரைகளையும் தொட்டுக்கொண்டு நொங்கும் நுரையுமாக ஓடிக்கொண்டிருந்தன. ஒரு கரையிலிருந்து மறுகரைக்குப் படகுப் போக்குவரத்தே சிரமமாக இருந்தது. ஆயினும் ஒரு சில பெரிய படகுகள் நீரின் வேகத்தைப் பொருட்படுத்தாமல் சென்றுகொண்டிருந்தன.

எங்கும் பச்சையின் வண்ணம் மிளிர்ந்திருந்தது. இதைப் பார்த்துதான் அரங்கனைப் பாடிய ஆழ்வானுக்கும் பச்சை முதலில் ஞாபகம் வந்து பச்சைமாமலை போல் மேனி என்று ஆரம்பித்திருப்பான் போலும் ! என்று எண்ணிக் கொண்டான் இளவழுதி.

மாபெரும் மதில்களும் ஏழு சுற்றுகளும் சேர அமைந்திருந்தது திருவரங்கத் திவ்யக்ஷேத்ரம். அதன் அருகில் அதே தீவில் எப்போதும் ஜலகண்டனாய் ஜம்புகேஸ்வரருடன் வீற்றிருக்கும் திருவானைக்காவல். இப்படி ஒரே தீவில் இவர்கள் இருந்தது எப்போதும் ஹரியும் சிவனும் ஒன்றுதான் என்பதை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது.

இவ்வாறு பச்சை நிறம் நிறைந்தும், நீல நிற நீர் சூழ்ந்தும் இருந்த திருவரங்கத் தீவின் இயற்கை எழிலில் சிறிது நேரம் கிறங்கிப் போன இளவழுதி, நேராக கோவிலுக்குச் சென்று அரங்கனையும், தாயாரையும் தரிசனம் செய்து எடுத்த காரியம் நல்லவிதமாக முடிய வேண்டுமென்று விண்ணப்பமும் செய்துகொண்டான். மற்ற சன்னதிகளை வணங்கிய பின், வேதாந்த தேசிகர் தங்கியிருந்த மடத்திற்குச் சென்றான்.

அங்கு மாராயர் சொன்னது போல் ஏற்கனவே வல்லாளன் வந்து காத்துக் கொண்டிருந்தான். இருவரும் புன்முறுவலுடன் ஆரத் தழுவிக்கொண்டனர்.

'இவ்வளவு விரைவில் மீண்டும் சந்திப்போம் என்று எண்ணவில்லை இளவழுதி. இங்கே அருகில் தானே உன் ஊர் இருக்கிறது. அரங்கனைத் தரிசிக்க வந்தாற்போலிருக்கிறது" கேள்விக் கணைகளை வீசினான் வல்லாளன்.

'ஆமாம். அத்துடன் வேறு காரியமும் இருக்கிறது. அதில் உன்னுடைய பங்கும் மிக முக்கியம். இவற்றைப் பற்றி தேசிகரிடம் வழி கேட்கவே இங்கு வந்தேன். என் தந்தையார் நினைத்தது போல் நீயும் இங்கிருக்கிறாய்." என்ற இளவழுதி மாலிக்கஃபூரின் விஷயங்களை சுருக்கமாகக் கூறினான்.

பதிலேதும் கூறாவிட்டாலும், இந்தச் செய்தி வல்லாளனை வெகுவாகப் பாதிக்கவில்லை என்பதை அவன் முகம் தெள்ளென எடுத்துக் காட்டியது. "இளவழுதி, உன்னிடம் சொல்வதில் தவறேதும் இல்லை. மேலும் இது அனைவருக்கும் தெரிந்ததுதான். எங்கள் முதலில் பாண்டியர்களை நாங்கள் நேரடியாக எதிர்க்கவில்லை. ஜடாவர்ம சுந்தர பாண்டியர் முதலில் என் பாட்டனாரோடு சேர்ந்து சோழரை எதிர்த்தார். சோழர்கள் வீழ்ந்ததால், நாங்கள் இங்கே சமயபுரம் அருகே படைவீடு அமைத்துத் தங்கினோம். பாண்டியர்கள் சுயராஜ்ஜியம் அமைத்தார்கள்.

ஆனால் முடிவில் எங்களையே தாக்கத் தலைப்பட்டார்கள். அப்போது பலவீனமடைந்திருந்த எங்கள் படை பின்வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை. விடாமல் துரத்திய பாண்டியர்கள், எங்களை முறியடித்ததுடன் எங்கள் தேசத்திலேயே அவரது சகோதரர் வீர பாண்டியரை தளபதியாக நிறுவி எங்களை அவமானப் படுத்தினார். இவையெல்லாம் எங்கள் கோபத்தை அதிகப் படுத்தின. எனவேதான் சமயம் வரட்டுமென்று நான் எதிர்பார்த்திருக்கிறேன்.

அந்த வாய்ப்பு இப்போது கனிந்து வந்திருக்கிறது. இப்போதிருக்கும் சுந்தர பாண்டியனுக்கும் வீர பாண்டியனுக்கும் அரியணைத்தகராறு என்பதை நான் அறிவேன். இந்தச் சந்தர்ப்பத்திற்காகவே காத்திருக்கிறேன். பார்ப்போம் என்ன செய்வதென்று. எதற்கும் தேசிகரின் வழிகாட்டுதலையும் பெறுவோம்." என்று பொதுவாக முடித்தான்.

[ இங்கே வல்லாளன் கூறியிருப்பது அவன் பக்க நியாயம். அரசுகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டாலும், ஜடாவர்மராகிய சுந்தர பாண்டியர் மட்டும் தானாக மோதும் போக்கை ஒரு போதும் கடைப் பிடித்ததில்லை. முதலில், கேரள மன்னனான வீர ரவி, கொற்கை முத்துக்களைக் கைப்பற்றத் திட்டம் தீட்டினான். அவனை அடக்க அவன் மீது படையெடுத்த போது, ஹொய்சளர்கள் பாண்டிய தேசத்தைக் கைப்பற்றவும், வீர ரவிக்கு உதவி செய்யவும் தலைப் பட்டார்கள். எனவே, வீர ரவியை முறியடித்த பின், ஹொய்சளர்களை அடக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது ஜடாவர்மருக்கு.]

இளவழுதிக்கு இரு பக்க நிலவரம் தெரிந்திருந்தாலும் ஒன்றும் சொல்லவில்லை. இருவரும் தேசிகரை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

அரங்கனின் பகல் பொழுது ஆராதனைகளை முடித்துவிட்டு, கோவில் நிர்வாக வேலைகளை மேற்பார்வையிட்டு மடத்திற்குத் திரும்பியபின் இருவரையும் தனது அறைக்கு அழைத்துவரச் செய்தார் தேசிகர். ஆரம்ப நமஸ்கார, குசல விசாரிப்புகளுக்குப் பிறகு தந்தை அளித்த ஓலையை சமர்ப்பித்தான் இளவழுதி. அதைப் படித்த தேசிகர் "வல்லாளனுக்கு நிலையை விளக்கி விட்டாயா இளவழுதி?" என்றார்.

"ஆமாம் சுவாமி. அவனும்..."

"தெரியும். அவன் நிலையில் அதை தற்போது ஆமோதிப்பது சற்று கடினம் தான். வல்லாளா, நீ என்ன நினைக்கிறாய்?"

"சுவாமி, மாலிக் கஃபூரை இங்கே வர விடக்கூடாது என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இருக்க முடியாது. ஆயினும் எங்களிடம் இரு பகைவரையும் தாக்கும் அளவுக்கு படைகள் இருக்கின்றன. ஒரே நேரத்தில் இருவரையும் அழித்து விட முடியும். இதை இப்போது சொல்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. ஆகவே, மாலிக் கஃபூரை அழிப்பதற்காக பாண்டியரை விட்டுவிட முடியாது" என்று கூறினான் உறுதியாக.

இந்த பதிலை ஓரளவு யூகித்திருந்தான் இளவழுதி. தேசிகரின் குறிப்புக்காகக் காத்துக்கிடந்தான். அவர் கண்களை மூடியபடி அமர்ந்திருந்தார். யோசிக்கிறாரா, மோன நிலையில் ஆழ்ந்துவிட்டாரா என்பதை இருவராலும் யூகிக்க முடியவில்லை.

சிறிது நேரத்திற்குப் பிறகு, 'நாராயண' என்ற வார்த்தை உதிர்ந்தது அவர் நாவிலிருந்து. பார்வை நிலைத்தது வல்லாளன் மீது.

"வீர பாண்டியனுடன் இணைய ஒப்புக்கொள்கிறேன் சுவாமி" என்றான் வல்லாளன். ஒரு புன்னகையே பதிலாக வந்தது தேசிகரிடமிருந்து. இளவழுதியின் அதிர்ச்சிஅளவிடமுடியாததாக இருந்தது.

(தொடரும்)

13 comments:

Anonymous said...

நல்ல இருந்துச்சுங்க!!! (ஆனா கொஞ்சம் சின்னதா இருந்ததா தோணுது!! )!! அடுத்த பாகத்துக்கு வெயிட் பண்ணறேன்!!

☀நான் ஆதவன்☀ said...

//சிறிது நேரத்திற்குப் பிறகு, 'நாராயண' என்ற வார்த்தை உதிர்ந்தது அவர் நாவிலிருந்து. பார்வை நிலைத்தது வல்லாளன் மீது.

"வீர பாண்டியனுடன் இணைய ஒப்புக்கொள்கிறேன் சுவாமி" என்றான் வல்லாளன். ஒரு புன்னகையே பதிலாக வந்தது தேசிகரிடமிருந்து. இளவழுதியின் அதிர்ச்சிஅளவிடமுடியாததாக இருந்தது.//

சஸ்பென்ஸா முடிச்சிட்டீங்க....அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்

CA Venkatesh Krishnan said...

நன்றி புவனேஷ்.

பெரிசா போட்டா ப்ளாக்ல படிக்கறது கஷ்டமா இருக்கும்னு நினைக்கிறேன். அடுத்த அத்தியாயத்தில் சரிகட்டிடலாம்.

CA Venkatesh Krishnan said...

நன்றி ஆதவன்.

நசரேயன் said...

வழக்கம் போல அருமை, அடுத்த பாகத்திற்கு காத்து இருக்கிறேன்

CA Venkatesh Krishnan said...

மிக்க நன்றி நசரேயன்

http://urupudaathathu.blogspot.com/ said...

வழக்கம் போல உள்ளே இருக்கிறேன்...

http://urupudaathathu.blogspot.com/ said...

மற்றவர்களை போலவே நானும் அடுத்த பகுதிக்கு வைடிங்

http://urupudaathathu.blogspot.com/ said...

போன அத்தியாயங்கள் போலவே இந்த அத்தியாமும் அருமை நண்பரே..

http://urupudaathathu.blogspot.com/ said...

///திருவரங்கம் சென்ற இளவழுதி, அந்தத் தீவின் அழகில் சொக்கிப் போய் நின்றான். கார்காலம் துவங்கிவிட்டதால் காவிரியும் கொள்ளிடமும் இருகரைகளையும் தொட்டுக்கொண்டு நொங்கும் நுரையுமாக ஓடிக்கொண்டிருந்தன. ஒரு கரையிலிருந்து மறுகரைக்குப் படகுப் போக்குவரத்தே சிரமமாக இருந்தது. ஆயினும் ஒரு சில பெரிய படகுகள் நீரின் வேகத்தைப் பொருட்படுத்தாமல் சென்றுகொண்டிருந்தன.

எங்கும் பச்சையின் வண்ணம் மிளிர்ந்திருந்தது. இதைப் பார்த்துதான் அரங்கனைப் பாடிய ஆழ்வானுக்கும் பச்சை முதலில் ஞாபகம் வந்து பச்சைமாமலை போல் மேனி என்று ஆரம்பித்திருப்பான் போலும் ! என்று எண்ணிக் கொண்டான் இளவழுதி.

மாபெரும் மதில்களும் ஏழு சுற்றுகளும் சேர அமைந்திருந்தது திருவரங்கத் திவ்யக்ஷேத்ரம். அதன் அருகில் அதே தீவில் எப்போதும் ஜலகண்டனாய் ஜம்புகேஸ்வரருடன் வீற்றிருக்கும் திருவானைக்காவல். இப்படி ஒரே தீவில் இவர்கள் இருந்தது எப்போதும் ஹரியும் சிவனும் ஒன்றுதான் என்பதை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது.////


உவமானகள் அருமை நண்பரே..
மேலும் வார்த்தைகள் விளையாடுகிறது ..
கண் முன் விரிகிறது ..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//, ஜடாவர்மராகிய சுந்தர பாண்டியர் மட்டும் தானாக மோதும் போக்கை ஒரு போதும் கடைப் பிடித்ததில்லை. //


நிஜமா..........

CA Venkatesh Krishnan said...

வாங்க அணிமா, ப்ரசெண்ட் போட்டுட்டேன்.

வைடிங்கிற்கும், கருத்துரைக்கும் நன்றி.

உவமானங்களைப் பற்றிய கருத்துகளுக்கு நன்றி. இன்னும் முயற்சிக்கிறேன்.

CA Venkatesh Krishnan said...

///
SUREஷ் கூறியது...
//, ஜடாவர்மராகிய சுந்தர பாண்டியர் மட்டும் தானாக மோதும் போக்கை ஒரு போதும் கடைப் பிடித்ததில்லை. //


நிஜமா..........

///

ஆம் ஆதவன். கிடைத்த குறிப்புகள் அவ்வாறுதான் தெரிவிக்கின்றன. பாண்டிய அரசை நிறுவத் தேவையான போர்களுக்குப் பின் ஏற்பட்ட படையெடுப்புகள் அனைத்தும் 'ரிடாலியேடரி'யாகத் தான் இருந்திருக்கின்றன.