அத்தியாயம் 8: திருவரங்கம்
இதுவரை:- காஞ்சிக் கடிகையில் பயின்ற சிறந்த மாணாக்கர்களுக்கு சக்கரவியூகத்தைப் பற்றி அறைகுறையாக எடுத்துரைக்கிறார் ப்ரதானாசாரியாராகிய பாஸ்கராசாரியார். மாணாக்கர்களிடையே எழும் ஆர்வத்தைத் தணிக்கத் தில்லையில் அதைப் பற்றிக் கூறுவதாகச் சொல்கிறான் மாதவன். வீர பாண்டியனும், இளவழுதியும் திருவெள்ளரைக்கு வருகின்றனர். அங்கு மாலிக் கஃபூரும், சுந்தர பாண்டியனும் சதித் திட்டத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வருகிறது.
இனி:-
மேலும் தொடர்ந்த சதியாலோசனையில் முக்கியமாகத் தெரிந்தது இதுதான். மதுரையை எப்பாடு பட்டாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற வெறியில் இருந்தான் சுந்தர பாண்டியன். அதற்குத் தூபம் போட்டுக் கொண்டிருந்தான் மாலிக் கஃபூர்.
இதையெல்லாம் மாராயரிடம் சொன்னாள் தேன்மொழி. அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாராயர், அவர்கள் அறியாவண்ணம் பின் தொடரத் தன் அந்தரங்க ஊழியன் ஒருவனை அவர்களோடு அனுப்பினார்.
இவ்வாறாக அந்த நிகழ்ச்சியை விவரிக்கும் போது வீர பாண்டியன் முகத்தில் சொல்லொணாத் துயரமும் சுயப்பச்சாத்தாபமும் மண்டியது. இடையிடையே கோபமும் கொப்பளித்தது. சற்று நேரம் அவ்விடத்தில் நிலவிய மௌனம் அந்த இரவின் அமைதியை பயங்கரமாக்கிக் காட்டியது.
இறுதியில் மாராயரே அந்த அமைதியைக் கலைத்தார்.
'இப்போது என்ன செய்வதாக உத்தேசம் வீர பாண்டியா?'
உண்மையில் மிக்க வேதனையுடன் அமர்ந்திருந்த வீர பாண்டியன், 'என்ன சொல்வதென்றே தெரியவில்லையே? பிறகுதானே என்ன செய்வது என்பதைக் கூறுவது' என்றான் விரக்தியுடன்.
'வீரா, உன் மனம் எனக்குப் புரிகிறது. ஆனாலும் மனதைத் தளர விடுவது வீரற்கு ஏற்றதல்ல. இது பாண்டிய சகோதரர்களுக்குள் ஏற்படும் சண்டையென்றால் ஒரு விதத்தில் நான் மகிழ்ந்திருப்பேன். ஏனென்றால் நான் சோழர்களின் உப்பைத் தின்று வளர்ந்தவன். ஆனால் இன்று ஏற்பட்டிருக்கும் நிலை அதையும் தாண்டிய ஒன்று. இப்போது நான் வாளாவிருந்தால், இந்தத் தமிழகத்தின் கதி வட தேசத்தின் கதியை விட மிக மோசமானதாகி விடும். ஏனென்றால் இங்கு வட தேசத்து அரசர்கள் போல் வலுவான அரசுகள் இல்லை. இங்கு இருக்கும் கோவில்களில் உள்ள சொத்துக்கள் கணக்கிலடங்காதவை. அவை அனைத்தும் மாலிக் கஃபூருக்கு தாரை வார்க்கப் பட்டுவிடும். தமிழகமும் தமிழும் அழிந்து படும்.' என்று நிறுத்தினார்.
'தந்தையே, சுந்தர பாண்டியனுக்கு மாலிக் கஃபூர் உதவுகிறான் என்பதால் மட்டும் இது மிக ஆபத்தான நிகழ்வு என்ற முடிவிற்கு வந்துவிடலாமா என்ன?'
'இளவழுதி, மாலிக் கஃபூரைப் பற்றி நீங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள். அவனுடைய நோக்கம் தக்காணத்தில் தில்லி சுல்தானின் ஆட்சியை நிறுவுவது. அதற்குத் தடையாக இருப்பவன் வல்லாளன். ஆகவே சுந்தர பாண்டியனை மதுரை அரியணையேற்றி வல்லாளனின் கவனத்தைத் திசை திருப்பப் பார்க்கிறான்.
அவ்வாறே நடப்பதாக வைத்துக் கொள்வோம். பிறகு என்னவாகும். வல்லாளன் மறைந்து விடுவான். தக்காணத்தில் சுல்தானின் ஆட்சி நிறுவப் படும். பிறகு எஞ்சியிருப்பது தமிழகம் தான். அங்கு தான் வலுவில்லாத சுந்தரனை முதலிலேயே இருத்திவிட்டானே, ஆகவே தமிழகத்தைக் கைப்பற்றுவது மாலிக் கஃபூருக்கு சிறுபிள்ளை விளையாட்டைப் போலாகிவிடும். அதற்குப் பிறகு தமிழகம் படப் போகும் பாடு கொஞ்சமா, நஞ்சமா?'
அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருப்பதை உணர்ந்ததால் கல்லாகச் சமைந்து நின்றனர் நண்பர்கள்.
அவர்களிடமிருந்து பதில் வராமல் போகவே, மேலும் தொடர்ந்தார் மாராயர்.
'வீரா, தற்போது காரியம் ஒன்றும் மிஞ்சிப் போய்விட வில்லை. இன்னும் நம் வசம் அவகாசம் இருக்கிறது. ஆனால் அதை சரியாக உபயோகித்துக் கொள்ளவேண்டும். நீ உடனே, மதுரை செல்ல வேண்டியது அவசியமாகிறது. இங்கு வந்ததாகவோ, சுந்தரனின் திட்டத்தை அறிந்து கொண்டதாகவோ காட்டிக் கொள்ளாதே. எப்போதும் போல் இரு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்.
இளவழுதி, நீ உடனே வல்லாளனைச் சந்திக்க வேண்டும். அவன் எங்கிருப்பான் என்ற விவரம் தெரியுமா?'
'தந்தையே அவன் திருவரங்கத்திற்குச் சென்று அரங்கனைத் தரிசித்து விட்டு அவன் தலை நகரம் திரும்பப் போவதாகக் கூறினான்'
'நல்லது, நீங்கள் கிளம்பிய நேரத்தில் அவனும் கிளம்பியிருந்தால் தற்போது அவன் திருவரங்கம் சேர்ந்திருக்கலாம். உடனே, திருவரங்கத்திற்குச் செல். அங்கு ஸ்ரீ வேதாந்த தேசிகர் இருப்பார். அவரிடம் வல்லாளனை அழைத்துச் செல். நான் தரும் ஓலையை ஸ்ரீ தேசிகரிடம் அளித்து, இந்த விவரங்களைத் தெரிவி. மேற்கொண்டு அவர் வழி காட்டுவார். அல்ல அல்ல. அவர் மூலம் அனவரதமும் அரவணை துயிலும் அரங்கன் வழி காட்டுவான்' என்றார் நாத் தழுதழுத்தவாறே.
(தொடரும்)
11 comments:
சிறந்த மாணாக்கர்களுக்கு சக்கரவியூகத்தைப் பற்றி அறைகுறையாக எடுத்துரைக்கிறார் ப்ரதானாசாரியாராகிய பாஸ்கராசாரியார்.
///////////////////////////////////////////////
இப்பவும் அப்படித்தான் நெறயப் பேர் சுத்திட்டு இருக்காங்க
சரித்திரக்கதை எழுதுவது எவ்வளவு சிரமம் என்பது படிக்கும்போது புரிகிறது
நல்லா வந்து இருக்கு, தொடர்ந்து எழுதுங்கள்
SUREஷ் கூறியது...
//இப்பவும் அப்படித்தான் நெறயப் பேர் சுத்திட்டு இருக்காங்க//
சரிதான்..;-)
// குடுகுடுப்பை கூறியது...
சரித்திரக்கதை எழுதுவது எவ்வளவு சிரமம் என்பது படிக்கும்போது புரிகிறது
//
அய்யா குடுகுடுப்பை,
இது பூங்கொத்தா பொடிமட்டையா :)
// நசரேயன் கூறியது...
நல்லா வந்து இருக்கு, தொடர்ந்து எழுதுங்கள்//
நன்றி நசரேயன்.
nice பல்லவன்..keep it up.
//இது பூங்கொத்தா பொடிமட்டையா :)//
அதானே! :-)
// நான் ஆதவன் கூறியது...
nice பல்லவன்..keep it up.//
நன்றி ஆதவன்
///
//இது பூங்கொத்தா பொடிமட்டையா :)//
அதானே! :-) ///
அதானே! ;-)
நல்லா இருக்கு.
வணக்கம்,
அன்பரே, ‘வந்தார்கள்.. வென்றார்கள்' எனும் நூலில் மாலிக் கபூரைப் பற்றி படித்ததும், அவன் எவ்வளவு கொடூரமானவன் என்று அறிய முடிந்தது.
தங்களுடைய சரித்திரத் தொடரிலும் அவனைப் பற்றிய பல சுவாரசியமானத் தகவல்களையும் எதிர்ப்பார்க்கிறேன்.
// சதீசு குமார் கூறியது... //
நிச்சயமாக சதீசு குமார்,
இந்தக் கதையின் முக்கியப் பாத்திரமே மாலிக் கஃபூர்தான். அவன் தமிழகத்தில் செய்தது ஏராளம். மதனின் 'வந்தார்கள் வென்றார்கள்' கூட அதைப் பதிவு செய்யவில்லை. அவரது ஸ்கோப் வட இந்திய வரலாற்றுடன் முடிந்திருக்கலாம். எனினும் மாலிக்கின் தென்னிந்திய 'விஜயம்' நன்றாக எடுத்தாளப்பட்டுள்ளது.
Post a Comment