Friday, December 12, 2008

இந்தியா எப்போது வளர்ந்த நாடாகும் ?

இந்தியா ஒரு வளரும் நாடு என்பது அனைவரும் அறிந்ததே. இது பல வருடங்களாக வளரும் நாடாகவே இருந்து வருவதுதான் கவலை அளிக்கும் விஷயம். சரி, இந்தியா எப்போது வளர்ந்த நாடாகும்? இந்தக் கேள்விக்கு பதில் தேடிய போது கிடைத்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில் வளர்ந்த நாடு, வளரும் நாடு, பின் தங்கிய நாடு என்றெல்லாம் சொல்கிறார்களே தவிர அதன் 'டெஃபனிஷன்' என்ன?

உலகில் பல்வேறு நிறுவனங்கள், பல்வேறு வகையில் வளர்ந்த நாடு, வளரும் நாடு என்று நிர்ணயம் செய்கின்றன. ஐ.எம்.எஃப், உலக வங்கி ஆகியவற்றுடன் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வும் இந்த நிர்ணயத்தை வழங்குகிறது.

பொதுவாக ஒரு நாடு வளர்ந்த நாடாக இருக்க கீழ்கண்டவற்றில் பெருமளவு வளர்ச்சியும், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் அடைந்திருக்க வேண்டும்.

1. முழுமையான ஜன நாயக அரசு ( Democratic Governments)

2. தொழில் மயமாக்கம் (Industrialization)

3. கட்டுப்பாடற்ற சந்தைப் பொருளாதாரம் (Free Market Economies)

4. சமூக நலத் திட்டங்கள் செயல் பாடுகள் (Social Programs)

5. மனித உரிமை உறுதிப்பாடு (Human Rights Guarantee)

பெரும்பாலும், யு.எஸ்.ஏ, யு,கே, ஆஸ்திரேலியா, வடக்கு மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், சிங்கப்பூர் ஆகியவை வளர்ந்த நாடுகளாகக் கருதப் படுகின்றன. இந்த நாடுகள் மேலே குறிப்பிட்ட அனைத்து குறியீடுகளிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. இஸ்ரேல், சைப்ரஸ், தென் கொரியா ஆகியவையும் வளர்ந்த நாடுகள் பட்டியலில் உள்ளன.

இவை தவிர மற்ற அனைத்து நாடுகளும் வளரும் நாடுகள் அல்லது பின் தங்கிய நாடுகள். இப்போது வளரும் நாடுகளில் பல்வேறு உட்பிரிவுகள் வந்து விட்டன.

புதிய தொழில் மயமான நாடுகள் (Newly Industrialized Economies), மேலே வரும் நாடு (Emerging Economies) என்று புதிய உட்பிரிவுகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன.

இந்தியா, சீனா, ப்ரேசில், அர்ஜென்டினா, எகிப்து, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் முதலிய நாடுகள் 'Bigger Emerging Economies' என்று வழங்கப் படுகின்றன.

இந்த அளவில் இந்தியா வளரும் நாடுகளில் முன்னணியில் இருக்கிறது. இந்தியாவும், சீனாவும் 2030ல் உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளாக உருவெடுக்கும் என்று ஐ.எம்.எஃப். அறிக்கை கூறுகிறது.

ஆக பொருளாதாரம் தான் ஒரு நாட்டை வளர்ந்த நாடா, வளரும் நாடா என்று முக்கியமாகத் தீர்மானிக்கிறது. இதில் முக்கியமான அளவுகோல் மொத்த உள் நாட்டு உற்பத்தி (Gross Domestic Product). இதையும் மொத்தமாகப் பார்க்காமல் ஒரு மனிதனுக்கு எவ்வளவு உற்பத்தி என்று பார்க்கும் போதுதான் உண்மையான நிலவரம் தெரியும். இதற்குப் பெயர்தான் Gross Domestic Product - Per Capita Level.

இதையும் இரு வகையாகப் பார்க்கலாம். ஒன்று 'நாமினல்' அதாவது உள் நாட்டு கரன்சியின் அளவு கோலில் பார்ப்பது. இது பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. மற்றொன்று, Purchase Power Parity, வாங்கும் சக்தியின் அடிப்படையில் பார்க்கப் படுகிறது. இது சற்று துல்லியமானது.

ஜி.டி.பி. - பெர் கேபிடா (Gross Domestic Product - Per Capita Level) அளவுகோல்.

மொத்த உள் நாட்டு உற்பத்தி (க்ராஸ் டொமெஸ்டிக் ப்ராடக்ட்) என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியின் அளவு கோலாக இருக்கிறது.

ஜி.டி.பி = முதலீடு + அரசு செலவீனம் + (ஏற்றுமதி - இறக்குமதி) + உள் நாட்டு பயனீடு, அதாவது Internal Consumption

இதை நாட்டின் சராசரி மக்கள் தொகையால் வகுத்தால் கிடைப்பது தனி மனித மொத்த உள் நாட்டு உற்பத்தி. பெர்கேபிடா ஜி.டி.பி.

இந்த வகையில் இந்தியாவின் ஜி.டி.பி= 2365 அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. சீனா - 5300 டாலர்கள். இது பர்சேஸ் பவர் பேரிடி (Purchase Power Parity)முறையில் கணிக்கப் பட்டது.

நமது நாட்டின் பிரச்சினைகள் இரண்டு. அதிக அளவிலான இறக்குமதி, அதிக மக்கள் தொகை. இவையிரண்டும் நமது பெர் கேபிடா ஜி.டி.பி-ஐ மேலே வர விடாமல் தடுக்கின்றன.

சரா சரியாக 10000 அமெரிக்க டாலர்களுக்கு மேல் பெர் கேபிடா ஜி.டி.பி இருக்கும் நாடுகள் வளர்ந்த நாடுகளாகக் கருதப் படுகின்றன. நமது நாடு 10000 அமெரிக்க டாலர் பெர் கேபிடா அளவை அடைய என்ன செய்ய வேண்டும்? ஒரு சிறிய கணக்கு.

தற்போதைய பெர் கேபிடா - 2365 அமெரிக்க டாலர்கள்.

தற்போதைய மக்கள் தொகை - 110 கோடி

மொத்த ஜி.டி.பி. = 2,60,150 கோடி அமெரிக்க டாலர்கள்

மக்கள் தொகை இதே நிலையில் இருந்தால், 10000 டாலரைக் கடக்க நமக்குத் தேவையான ஜி.டி.பி. 11 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள்.

இது இந்திய ரூபாயில் 5,50,00,00,00,00,00,00,000 ரூபாய்கள்.

இதுவும் மக்கள் தொகை ஏறாமல் இருந்தால் மட்டுமே.

ஆக நாம் வளர்ந்த நாடாக ஆக வேண்டுமென்றால், ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும், இறக்குமதி குறைய வேண்டும், அரசு செலவீனம் (உள் கட்டமைப்பு சார்ந்து) அதிகரிக்க வேண்டும், உள் நாட்டுப் பயனீடு அதிகரிக்க வேண்டும். முக்கியமாக மக்கள் தொகை குறைய வேண்டும்.

என்னதான் பெரிய ஜன நாயக நாடாக இருந்தாலும், சமூக நலத் திட்டங்கள், தொழில் மயமாக்கல், தனி மனித உரிமைகள் இருந்தாலும், மக்கள் தொகை குறையாத வரையில் நாம் வளரும் நாடாகவே இருப்போம்.

இப்போது சொல்லுங்கள் நாம் வளர்ந்து கொண்டே இருக்கிறோமா இல்லையா? இந்த வளர்ச்சி சரியானது இல்லை தானே.

17 comments:

Sathis Kumar said...

சீனாவும் மக்கள் தொகை அதிகமாகக் கொண்ட நாடுதான். அந்நாடு எப்படி அதீத வளர்ச்சியைக் கண்டு வருகிறது? சற்று விளக்க முடியுமா?

குடுகுடுப்பை said...

இருக்கும் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் திறன் அந்த மக்கள் சக்தியின் மூலம் அடைய வழி காணவேண்டும். அதுதான் தீர்வாக இருக்க முடியும்

கபீஷ் said...

//வருங்கால முதல்வர் கூறியது...
இருக்கும் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் திறன் அந்த மக்கள் சக்தியின் மூலம் அடைய வழி காணவேண்டும். அதுதான் தீர்வாக இருக்க முடியும்
//

வருங்கால முதல்வரை வழிமொழிகிறேன்.

நல்ல informative பதிவு

Anonymous said...

நீங்கள் குறிப்பிடும் வளர்ந்த நாடுகளில் லஞ்ச,ஊழல் மற்றும் கட்டிங்,வெட்டிங் அரசியல் எல்லாம் கிடையாது.

நமது இந்தியாவை அப்படி உங்களால் கற்பனையாவது செய்து பார்க்க முடியுமா?

Anonymous said...

கல்லூரியில் படித்ததை அப்படியே இங்கே ஒப்புவிக்கிறார் என நினைக்கிறேன். அவரை அப்படியே இருக்க விட்டு விடுங்கள்.

அமெரிக்கா அதிகம் இறக்குமதி செய்ததால் தான், பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி இருக்கிறது. ஐரோப்பா கண்டம் இறக்குமதி இல்லாமல் வாழவே முடியாது என்ற உண்மை தெரியுமா?

தென் கொரியா, இஸ்ரேலில் மனிதஉரிமை, ஜனநாயகம் இருக்கிறதா?

ஐயா, இளையபல்லவன் சனத்தொகை அதிகம் என்று கவலைப்படுகிறீர்களே!
ஒரு ஒப்பீடு தருகிறேன். நீங்கள் தலைமுடியை பிய்த்துக் கொள்ளவீர்கள்.

இந்தியாவை விட அதிக சனத்தொகை கொண்ட சீனா எப்படி வளர்ந்த நாடாகியது?
இலங்கையின் சனத்தொகை 17 மில்லியன்.
ஏறத்தாள இலங்கை அளவு பரப்பளவை கொண்ட நெதர்லாந்து, பெல்ஜியம், லக்சம்பேர்க், என்ற மூன்று நாடுகளையும் சேர்த்தால் வரும் மொத்த சனத்தொகை எவ்வளவு தெரியுமா? 30 மில்லியன் மக்கள்!

ஐயா, இளையபல்லவன், உங்கள் தியரி படி இலங்கை தான் வளர்ந்த நாடாக இருக்க வேண்டும்.

நீங்கள் படித்ததில் எங்கோ கோளாறு நடந்துள்ளது.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும், இறக்குமதி குறைய வேண்டும், அரசு செலவீனம் (உள் கட்டமைப்பு சார்ந்து) அதிகரிக்க வேண்டும், உள் நாட்டுப் பயனீடு அதிகரிக்க வேண்டும். //


இந்த விஷயங்களை நாம் சாதிக்க மக்கள் தொகை குறைந்தால் மிகவும் உதவியாக இருக்கும்

CA Venkatesh Krishnan said...

வருகைக்கு நன்றி சதீசு குமார்,

சீனாவில் உள்கட்டமைப்புக்கான அரசு செலவீனம் அதிகம், எற்றுமதி அதிகம்.

மேலும் ஒரு டாலருக்கு 7 யுவான் தான். ஆனால் ஒரு டாலருக்கு 50 ரூபாய்கள்.

இவையெல்லாம் சீனாவின் மக்கள் தொகை அதிகமானாலும் வளர்ச்சியை அதிகப் படுத்துகிறது.

CA Venkatesh Krishnan said...

//
வருங்கால முதல்வர் கூறியது...
கபீஷ் கூறியது...
//

வாங்கும் சக்தியை அதிகரிப்பது என்பது அரசு உள்கட்டமைப்பில் செலவிடும் அளவைப் பொறுத்தது. இதுவும் ஒரு தீர்வுதான்.

CA Venkatesh Krishnan said...

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி அகரன்.


//அமெரிக்கா அதிகம் இறக்குமதி செய்ததால் தான், பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி இருக்கிறது. //

இதைத்தான் இந்தியாவின் பிரச்சனையாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

சீனாவின் வளர்ச்சிக்கான காரணத்தை மேலே விளக்கியுள்ளேன்.

மக்கள் தொகை குறைவாக உள்ளதால் மட்டுமே ஒரு நாடு வளர்ந்த நாடாகி விடாது.

ஆனால் மக்கள் தொகை அதிகரித்தால் வளர்ச்சி இருந்தாலும் ஜி.டி.பி. ஏறாது. டினாமினேடர் அதிகரிக்கும் போது, ந்யூமரேடர் எறினாலும் பயனில்லை அல்லவா. அது போலத்தான்.

CA Venkatesh Krishnan said...

நன்றி பெயரில்லா..

இந்தப் பிரச்சனைகளும் இந்திய வளர்ச்சியைப் பின்னோக்கி இழுக்கின்றன.

CA Venkatesh Krishnan said...

நன்றி சுரேஷ்,

மருத்துவரல்லவா, மக்கள் தொகைப் பிரச்சனையின் முழு பரிமாணம் உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்.

மதிபாலா said...

ஆக நாம் வளர்ந்த நாடாக ஆக வேண்டுமென்றால், ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும், இறக்குமதி குறைய வேண்டும், அரசு செலவீனம் (உள் கட்டமைப்பு சார்ந்து) அதிகரிக்க வேண்டும், உள் நாட்டுப் பயனீடு அதிகரிக்க வேண்டும். முக்கியமாக மக்கள் தொகை குறைய வேண்டும்.
//

மக்கள் தொகை குறைய வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்தில்லை.

நீங்கள் குறிப்பிட்ட படி எல்லாக் குறியீட்டிலும் நாம் உலகளவில் முன்னேறினாலும் இந்தியளவில் சமூக சீர்திருத்தமே முதல் முக்கியம். சமூக சீர்திருத்தமடையாமல் நாம் என்ன கூப்பாடு போட்டாலும் அது வீண்தான்.

அதனால் நாம் துரத்த வேண்டியது ஜி.டி.பி என்னும் டார்கெட் அல்ல ,
சமூக சமத்துவம் என்னும் டார்கெட்தான்...நமக்கும் மற்றவர்களுடைய முன்னேற்றத்திற்கும் பாரிய வேறுபாடு உள்ளது.

நிற்க ,

நீங்கள் குறிப்பிட்ட ஜி.டி.பி பர் கேப்பிட்டாவில் பெரிய தவறிருக்கிறது என்று நினைக்கிறேன்.

CA Venkatesh Krishnan said...

நன்றி மதிபாலா,

ஜி.டி.பி. 2007 எஸ்டிமேட்ஸ் ஆகும். இது ஒரு தளத்திலிருந்து எடுக்கப் பட்டது. எனினும் மீண்டும் ஒருமுறை சரிபார்க்கிறேன்.

சுட்டியமைக்கு நன்றி.

Anonymous said...

இளையபல்லவன்,
உங்கள் ஆசிரியர்களோ, நண்பர்களோ உங்களுக்கு சொல்லாத விடயங்கள் பல இருக்கின்றன. அதனால் நான் இங்கே குறிப்பிடுபவை உங்களுக்கு புதியவையாக தெரிகின்றது அல்லது நம்ப முடியாமல் உள்ளது.

இந்தியா வளர்ந்த நாடாக வேண்டுமானால் முதலாவதாக தனிநபர் வருமானம் உயரவேண்டும். எந்த வளர்ந்த நாடாவது தனது பிரஜைக்கு வறுமையில் கஷ்டப்படுமளவு குறைந்த சம்பளம் கொடுப்பதாக கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

நான் முன்பொரு தடவை ஐ.டி.தொழிற்சங்கம் பற்றிய பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். நீங்கள் கூறியது போல சாதாரண ஐ.டி. தொழிலாளிக்கு 20000 ரூபாய் சம்பளம் கிடைக்கிறதென்றால், அதன் அர்த்தம் இந்தியாவில் வளர்ந்த நாடுகளுக்கு நிகராக ஓரளவு வசதியாக வாழ அந்த அளவு வருமானம் தேவை என்பது தான். ஆகவே இந்தியாவை வளர்ந்த நாடாக்க வேண்டுமானால், இந்திய அரசாங்கம் ஒரு புதிய சட்டம் போட வேண்டும். சாதாரண கூலித் தொழிலாளிக்கும் குறைந்தது 10000 ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் வரவேண்டும். அப்படி கொடுக்க தவறும் முதலாளிக்கு லட்சக்ககணக்கில் தண்டப்பணம் அறவிடலாம். (இது போன்ற தண்டனை வழங்குவதால் அரசாங்கத்திற்கு எக்ஸ்ட்ரா வருமானமும் கிடைக்கும்.) இதைவிட எல்லோருக்கும் இலவச கல்வி, இலவச மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும். அப்படி இலவசமாக கொடுக்க விருப்பமில்லாவிட்டால், காப்புறுதி திட்டம் கொண்டு வந்து, வருமானம் குறைந்தவர்களின் பங்கை அரசாங்கம் செலுத்தலாம். சாதாரண கூலித்தொழிலாளியின் 10000 ரூபாய் சம்பளத்தில் நூறோ இருநூறோ மருத்துவ காப்புறுதிக்கு அறவிடலாம். அதே போல கல்விக் கட்டணத்தை கடனுதவியாக அரசாங்கம் வழங்கலாம்.

எல்லா வளர்ந்த நாடுகளும்,(இந்தப் பதிவில் நீங்கள் குறிப்பிட்ட) இது போன்ற சட்டங்களை வைத்திருக்கின்றன. அதனால் தான் அவை வளர்ந்த நாடுகளாக மதிக்கப்படுகின்றன.

நீங்கள் சொல்வது போல ஏற்றுமதி இறக்குமதி சரி செய்து கொள்வதால் இந்தியா ஒரு நாளும் வளர்ச்சி அடையாது. (இது உங்களது கருத்து அல்ல. இந்திய கல்லூரிகளில் அப்படி தான் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள் ) ஏன் என்று கூறுகிறேன். இது நேர்மையான ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் அல்ல. இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்கள் எல்லாம் மிக குறைந்த விலையில் விற்கிறார்கள். அவற்றை வளர்ந்த நாடுகள் வாங்கி அதிக விலைக்கு விற்கிறார்கள். உதாரணத்திற்கு திருப்பூர் டி-சேர்ட் ஒன்றை ஒரு டாலர் கொடுத்து வாங்கும் அமெரிக்க கம்பெனி அதனை 10 டாலருக்கு விற்கிறது. ஆனால் இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்களை அப்படி குறைந்த விலைக்கு வாங்க முடியாது. ஜப்பானில் விற்கும் அதேவிலைக்கு தான் கார், அல்லது டி.வி. வாங்குகிறீர்கள். பில் கேட்ஸ் அமெரிக்காவில் விற்கும் அதே விலைக்கு தான் Microsoft software இந்தியாவில் விற்பனை செய்கிறார்.(இதனை நம்ம நாட்டு ஐ.டி. பணியாளர்கள் வெறும் 20000 ரூபாய் வாங்கிக் கொண்டு மிகக் குறைந்த விலைக்கு தயாரித்துக் கொடுக்கிறார்கள்.)

இந்த லட்சணத்தில் தான் எல்லா இறக்குமதியும் இருக்கிறது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் ஒரு பொருளை இந்தியாவில் குறைந்த கூலி கொடுத்து உற்பத்தி செய்து விட்டு, பிறகு அதே பொருளை அமெரிக்க விலைக்கு இந்தியர்களுக்கே விற்கிறார்கள். இந்தியா வளர்ந்த நாடாக வரமுடியாதென்றால், அதற்கு இந்த நேர்மையற்ற ஏற்றுமதி, இறக்குமதி தான் காரணம். இதற்குப் பிறகும் உங்களது, நண்பர் அல்லது உறவினர் அமெரிக்காவுக்கு ஆதரவாக பேசினால், அப்படியான ஆட்களை என்ன செய்யலாம்?

CA Venkatesh Krishnan said...

வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி அகரன்.

Anonymous said...

India is still growing. because, India is a child.

It one day will grow. May be in the end of world. This is not the imagination.

CA Venkatesh Krishnan said...

//
பெயரில்லா கூறியது...
India is still growing. because, India is a child.

It one day will grow. May be in the end of world. This is not the imagination.
//

Thanks anony.