Friday, December 12, 2008

வாசித்தல் அனுபவம்

என்னை தொடருக்கு அழைத்த நண்பர் குடுகுடுப்பைக்கு நன்றி.

படிப்பது என்பது இப்போது என்னைப் பொறுத்தவரை மூச்சுவிடுவது போல் இயற்கையான செயலாகி விட்டது. சாப்பிடும் போது தட்டில் உணவிருக்கிறதோ இல்லையோ பக்கத்தில் புத்தகமோ, நாளிதழோ இருக்க வேண்டும். அது எத்தனையாவது முறை படிக்கப் படுகிறது என்பது ஒரு பொருட்டல்ல. இதற்காக தங்கமணியிடம் எவ்வளவோ திட்டு வாங்கியும் ஒன்றும் மாறவில்லை. தங்க்ஸ் விக்ரமாதித்தி. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராததால் இப்போதும் திட்டுக்கள் தொடர்கின்றன.

எனக்கு நினைவு தெரிந்து மூன்றாவது படிக்கும் போது அம்புலிமாமா படிக்க ஆரம்பித்தேன். வந்தவாசியில் அண்ணன் (பெரியப்பா மகன்) இருந்தார். அவரும் பெரியப்பாவும் அம்புலிமாமா, பாலமித்ரா தவிர மாயாஜாலக் கதைப் புத்தகங்கள் படித்திருக்கிறேன். மந்திரக் குகை, ஏழுகடல் தாண்டி பூவில் அரக்கன் உயிர் என்று ஞாபகம் இருக்கிறது. ஸ்டார் காமிக்ஸ், லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ் முதலியவை படித்திருக்கிறேன்.

வந்தவாசிக்கு அருகில் ஆரியாத்தூர் என்று ஒரு கிராமம். அங்கு பெரியப்பா இருந்தார். அந்த ஊரில் ஒரு அக்கா இருந்தார்கள். அவர்கள் ராணி முத்து படிக்கத் தருவார்கள். குரும்பூர் குப்புசாமியின் ஒரு கதை படித்தது ஞாபகம் இருக்கிறது. இதெல்லாம் ஐந்தாவது படிக்கும் போது. இவையின்றி திருப்பதிக்குச் செல்லும் போது அங்கு தேவஸ்தானப் பதிப்புகளாக பக்திக் கதைகளும், இராமகிருஷ்ண விஜயமும் பக்தி ரசம் வார்த்தன.

ஆறாவது படித்துக் கொண்டிருக்கும் போது எங்கள் வீட்டில் ஒரு லைப்ரேரியன் குடியிருந்தார். அவர் பலப்பல சிறுவர் கதைப் புத்தகங்கள் படிக்கத் தருவார்.

இப்படியாக எல்லாம் படித்து விட ஏழாவது வகுப்பில் படிக்கும் போது, பெரிய காஞ்சிபுரம் கிளை நூலகத்தில் மெம்பரானேன். அங்கு முதலிலேயே கண்ணில் பட்டது பொன்னியின் செல்வன் நாலாம் பாகம். முதலில் அதைப் படித்து, பிறகு கிடைக்கும் பாகங்களையெல்லாம் முன்னுக்குப் பின் முரணாக படித்தது படித்த மாதிரியே இல்லை. மீண்டும் ஒரு முறை நூலகரிடம் சொல்லி வைத்து வரிசையாகப் படித்து முடித்தேன். இடையே, தமிழ்வாணன், கோவி. மணிசேகரன், ஜெகசிற்பியன், லக்ஷ்மி, எஸ்.வி.வெங்கட்ராம், ராஜேந்திரன், தேவன், பிரபஞ்சன் என்று பலரும் அறிமுகமானார்கள்.

பத்தாம் வகுப்பு படிக்கும் போது, கருத்துத்தாகத்தில் இலக்கியப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து முடியாமல் விட்டுவிட்டேன்.

பனிரெண்டாம் வகுப்பிற்குள், இவையெல்லாம் முடிந்துவிடவே, ஆங்கிலப் புத்தகங்களை முயற்சிக்கலாம் என்று முதலில் ஜேம்ஸ் ஹாட்லி சேசைப் படிக்க ஆரம்பித்தேன். சுத்தமாகப் புரியவில்லை. வீம்புக்காக ராபர்ட் லுட்லும், ஜேனாதன் ப்ளாக் ஆகியோரின் புத்தகங்களை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். புத்தகம்தான் கையில் இருந்ததே ஒழிய, உள்ளே ஒன்றும் ஏறவில்லை.

இதற்குப் பிறகு, ஒரு ப்ரின்டிங் பிரசில் வேலை செய்து கொண்டே, பி.காம் படிக்க வேண்டியிருந்தது. இது மேலும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது. அம்பேத்கார் பற்றிய ஒரு புத்தகம் நான் வேலை செய்த அச்சகத்தில்தான் தயாரித்தார்கள். மற்றொரு புத்தகம் திரு. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியாரின் 'தி ஹிஸ்டரி ஆஃப் சவுத் இந்தியா' இதை படித்த பிறகுதான் சரித்திரத்தில் மிகுந்த ஆவல் ஏற்பட்டது. இப்போது புது எடிஷன் வாங்கியிருக்கிறேன்.

இந்தக் காலத்தில்தான் பட்டாம்பூச்சி (தி பாபில்யான்) தமிழில் கிடைத்தது. அது உண்மைக் கதை என்றாலும் பெரும்பாலும் புனைவாகப் பட்டது. அருமையான புத்தகம். கிடைத்தால் மறக்காமல் படியுங்கள்.

இதனூடே, பாக்கெட் / மாத நாவல்கள் தொட்டுக்கொள்ள ஊறுகாய் போல, 'ஙே' ராஜேந்திர குமார், ராஜேஷ் குமார், புஷ்பா தங்கதுரை, பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ரமணி சந்திரன், தேவிபாலா மற்றும் பலர் ஒன்றையும் விட்டு வைப்பதில்லை. பாலகுமாரன் எழுத்தில் மயங்கிப் போய் இருந்தேன். ஆனால் அவரது எழுத்துக்களில் ஏற்பட்ட மாற்றம் என்னையும் மாற்றிவிட்டது.

இன்னும் நான் சொல்லாத மூவர் கல்கி, சுஜாதா, சாண்டில்யன். என்னுடைய ஆதர்ச எழுத்தாளர்கள் இவர்கள்தான். கல்கியின் எழுத்துக்கள் நாட்டுடைமையாக்கப் பட்ட பின் அவரது பொன்னியின் செல்வன், அலையோசை, பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் அடங்கிய ஒரு கிட் வாங்கினேன். இது வரை பொ.செ. எத்தனை முறை படித்திருப்பேன் என்ற கணக்கையே விட்டுவிட்டேன். இப்போது படித்தாலும் புதிதாக ஒன்று தென்படும்.

சாண்டில்யனின் யவன ராணிதான் நான் முதலில் படித்த நாவல். பிறகு விலை ராணி, ஜலதீபம், ராஜ பேரிகை, ராஜ முத்திரை, கடல் புறா என அனைத்து முக்கிய நாவல்களையும் முடித்து விட்டேன். இவற்றில் பெரும்பாலானவை என்னுடைய அலமாரியை அலங்கரிக்கிறது.

சுஜாதாவை எப்போது படித்தாலும் முடிவில் ஒரு வியப்பு தொங்கி நிற்கும். என் இனிய இயந்திரா. ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் மிகவும் பிடித்தவை. காந்தளூர் வசந்தகுமாரன் கதையைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

சி.ஏ. படிக்கும் போது, சி.ஏ. இன்ஸ்டிடியூட் லைப்ரரியுடன் சென்னை கன்னிமாரா, யு.எஸ்.ஐ.எஸ். லைப்ரரி, ப்ரிட்டிஷ் கவுன்சில் லைப்ரரி மெம்பர்ஷிப்களையும் சேகரித்துக் கொண்டேன். இவற்றில் இருந்து பெரும்பாலும் சி.ஏ. சார்ந்த புத்தகங்கள் தான் படித்தேன். ஆனால் கன்னிமாராவில் நல்ல நல்ல வரலாற்றுப் புத்தகங்களெல்லாம் கிடைக்கும். கவுடில்யரின் அர்த்த சாஸ்திரம் அங்குதான் படித்தேன்.

இடையே, ஆங்கிலப் புத்தகங்களின் பால் மீண்டும் மோகம் கிளம்பியது. இந்த முறை ரேஜ் ஆஃப் ஏஞ்சல்ஸ் நன்றாக இருந்தது. ஜான் க்ரிஷாமின் தி ஃபர்ம், ரெயின் மேகர் ஆகியவை மிகப் பிடித்த நாவல்கள். நார்மன் வின்சன்ட் பீல்-ன் 'த பவர் ஆஃப் பாசிடிவ் திங்கிங்' த பவர் ஆஃப் பாசிடிவ் லிவிங் ஆகியவை படித்திருக்கிறேன். ஐ ஆம் ஓகே யூ ஆர் ஓகே அருமையான உளவியல் புத்தகம். இவ்வளவுதான் என் ஆங்கிலப் புத்தக அறிவு.

இவற்றுடன் வழக்கமாக வாலிப வயதில் படிக்க வேண்டிய புத்தகங்களும் படித்திருக்கிறேன்;).

இணையத்தின் அறிமுகத்திற்குப் பிறகு படிப்பது அதிகமாகி விட்டது. விக்கிதான் முதல் ரெஃபரென்ஸ். பதிவுலகம் பார்த்தபின் சொல்லவே வேண்டாம்.

வரலாறு.காம் என்று ஒரு தளம் இருக்கிறது. அங்கு சே.கோகுல் என்பவர் சரித்திரத் தொடர் எழுதுகிறார். ஒவ்வொரு பத்திக்கும் ஒரு ரெஃபரன்ஸ் கொடுத்திருப்பார். அதுதான் அவர் ஸ்பெஷாலிடி. அவரைப் பார்த்துதான் சக்கர வியூகம் எழுதவேண்டும் என்ற ஆவல் வந்தது.

கவிதைகள் அவ்வளவாகப் பரிச்சயமில்லை. கி.ராஜ நாராயணன், புதுமைப் பித்தன், லா.ச.ரா ஆகியோரை அவ்வப் போது படித்ததுண்டு. ஆனால் எதுவும் நினைவில் இல்லை. மு.வ. வின் அகல் விளக்கு என்னைப் பெரிதும் பாதித்த நாவல். மிகப் புரட்சிகரமான கருத்துக்கள் கொண்டது. பொது அறிவு சம்பந்தப் பட்ட எதையும் படித்து விடுவேன்.

விகடன், குமுதம், கல்கி, துக்ளக், நக்கீரன், ஜூ.வி., மங்கையர் மலர், பக்தி ஸ்பெஷல், சக்தி விகடன், பிசினஸ் இன்டியா, பிசினஸ் டுடே, அவுட்லுக் ஆகிய வார மாத இதழ்களும், கல்கி, விகடன், அமுதசுரபி தீபாவளி மலர்களும் சேர்ந்திசை வாசித்திருக்கின்றன.

ஆக கண்டதையும் படிப்பவன் என்று சொல்லிக் கொள்ளலாம். என்னை உண்மையான வாசிப்பாளி என்று கூறியுள்ளார் குடுகுடுப்பையார். என் அனுபவத்தைப் படித்து விட்டு அவர் சொன்னது சரியா என்று நீங்கள் தான் கூற வேண்டும்.

தொடரைத் தொடர இவர்களை அழைக்கிறேன்.

SUREஷ்
சதீசுகுமார்

7 comments:

குடுகுடுப்பை said...

நல்ல படைப்பு, உங்களை அழைத்ததன் மூலம் தமிழ்ப்பறவையின் அழைப்பு உயிரோடிருக்கிறது. மகிழ்ச்சி

CA Venkatesh Krishnan said...

வாங்க வாங்க குடுகுடுப்பை.

கொசுவத்தி கொடுத்ததுக்கு மிக்க நன்றி :))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ராணி முத்து படிக்கத் தருவார்கள். குரும்பூர் குப்புசாமியின் ஒரு கதை படித்தது///



பரவாயில்லையே

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தொடரைத் தொடர இவர்களை அழைக்கிறேன்.

SUREஷ் //


வம்புல மாட்டி விடறேங்களே பாஸ்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அங்கு முதலிலேயே கண்ணில் பட்டது பொன்னியின் செல்வன் நாலாம் பாகம். முதலில் அதைப் படித்து, பிறகு கிடைக்கும் பாகங்களையெல்லாம் முன்னுக்குப் பின் முரணாக படித்தது படித்த மாதிரியே இல்லை//




நம்ம ரெஃபரன்ஸ் புக் அதுதான். சார்

CA Venkatesh Krishnan said...

சுரேஷ்,

என்னை குடுகுடுப்பை மாட்டிவிட்டாற் போல்தான்.

இந்தத் தொடரின் மூலம் நமக்குத் தெரியாத புத்தகங்களையெல்லாம் தெரிந்து கொள்ள முடிகிறது. கலக்குங்க.

CA Venkatesh Krishnan said...

நல்லா எழுதியிருக்கீங்க சுரேஷ். நன்றி.

சதீசு குமார் அவர்களையும் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.